அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, August 19, 2008

மனிதத்துவம் - பகுதி 1

அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட எமது தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியின் உண்மையான உறுப்பினன் என்ற வகையில் அப்பாவிப் பொதுமக்களாயிருந்தாலும் சரி மக்கள் பணிபுரிந்த எமது தலைவர்களாயினும் சரி அரச படையினராலும் எம்மவர்களாலும் கொல்லப்பட்ட வேளைகளில் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களையும் பத்திரிகைச் செய்திகளையும் இப்பகுதியில் முடியுமானவரை சேர்க்கவுள்ளேன். கையெழுத்தாயுள்ளதையும் பதிவு பண்ணப்படாத தட்டச்சுப்பண்ணிய தாள்களையும் திரும்ப கணனியிலிட்டு வெளிக்கொண்டுவர போதிய கால அவகாசம் வேண்டுவதால் பதிவில் பகுதி பகுதியாக இடப்படும் என்பதை வாசகர்களுக்கு முன்பே சொல்லிவைக்க விரும்புகிறேன்.

06.01.2000.

பத்திரிகைச் செய்தி

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் சிறந்த சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களைப் பற்றி பலரும் பேசியும் பத்திரிகைகள் மூலமும் அறிந்து கொண்ட நான் அவரது தாயாரின் மரணச்சடங்கின்போது முதன்முதல் அவரது இல்லத்துக்குச் சென்று பேசக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் இனிமையாகவும் உரிமையுடனும் பழகிய அண்ணர் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு மிகவும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். கொலை செய்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
மிகவும் துணிச்சலுடன் தனது கருத்துக்களைப் பகிரங்கமாக வெளியிடுவதில் அவருக்கு நிகரானவர்கள் எவருமேயில்லை. முன்னைய ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க அவர்கள் செடிகொடி என சிறுபான்மையினரை விமர்சித்த வேளையிலும் சரி, தற்போதைய ஜனாதிபதி தென்னாபிரிக்காவில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தமிழர்களை வந்தேறு குடிகள் என விமர்சித்ததையும் மிகவும் துணிவுடன் சுட்டிக்காட்டி எதிர்த்த வீர மறவனை கோழைத்தனமாகச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் மன்னிக்க முடியாதது.
கடந்த 1994 பொதுத்தேர்தலில் சுயேட்சைக்குழுவாக போட்டியிட்ட சமயத்தில் மிகவும் அன்னியோன்னியமாகப் பழகிய அண்ணரின் பிரிவினால் துயருறும் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அவரது சகாக்களுக்கும் இறைவன்தான் சாந்தியை அளிக்க வேண்டும்.
நிறைந்த கடவுள் நம்பிக்கை கொண்ட அண்ணரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இச் செய்தியை வீரகேசரி தமிழர்கள் விமர்சிக்கப்பட்ட வேளைகளில் குரல் கொடுத்தவர் குமார் - யாழ் மாநகரசபை உறுப்பினர் முகுந்தன் என்ற தலைப்பிலும் தினக்குரல் மாநகரசபை உறுப்பினர் அனுதாபம் என்ற தலைப்பிலும் செய்தியை (முழுவதுமல்ல) பிரசுரித்தன.
----------------------------

பத்திரிகைச் செய்தி

புதிய நீதி அமைச்சர் பற்றி வீரக்கோன் அவர்களின் பயங்கரவாதச் சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் யுவதிகள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தி வெளிவந்த இரண்டு தினங்களுக்குள் அப்பாவித் தமிழ்க் கைதிகள் 25பேர் படுகொலை செய்யப்பட்டதும் 20 பேர் படுகாயமடைந்ததும் இந்நாட்டில் நீதிக்கும் உயிர் வாழும் அடிப்படை உரிமைக்கும் இடமிருக்கிறதா என்ற சந்தேகத்தை எழ வைக்கின்றது.
சுதந்திரமடைந்த நாள் முதல் ஆட்சிபுரிந்த அரசுகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளால் பாதிப்படைந்துவரும் தமிழ்ச் சமூகம் சொல்லொணாத வேதனைகளையும் சோதனைகளையும் தொடர்ந்து முகம் கொடுத்து வருகின்றது.
புதிய நாடாளுமன்றத் தேர்தலின்பின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் விமலராஜனின் கோரக் கொலையும் பின் பண்டாரவளை பிந்துனுவௌவில் இடம்பெற்ற கொன்றொழிப்பும் இந்நாடு பழிச்சொல்லுக்குள்ளாக்கப்படுவதற்கும் நம்பகத்தன்மையற்ற நிலைக்கு இந்த அரசு உதாசீனப்படுத்தப்படும் அளவிற்கும் உலக அரங்கில் திகழ்கிறது.
நாட்டின் தலைவி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சுக்குப் பொறுப்பானவர் என்ற வகையிலும் ஜனாதிபதி இந்தப் பாவச் செயலுக்கு என்ன காரணம் கூறப் போகின்றார்? என அறிய விரும்புவதுடன் இறந்தவர்களின் உறவினர்களுக்கும் அப்பாவித் தாய் தந்தையருக்கும் எந்த வகையில் நியாயம் வழங்க இருக்கின்றார் என்பதையும் அறிய விரும்புகின்றேன்.
கடந்தகால ஆட்சியில் காணாமற்போன அல்லது கொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு எதுவித நியாயமான பதிலும் அளிக்காத ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்தும் இப்பதவியில் இருந்தால் நாடு மிகவும் மோசமான நிலைக்குப் போவதுடன் மக்களின் உயிர்வாழும் உரிமையும் கேள்விக்குறியாகிவிடுமென அஞ்சுகின்றேன்.
பௌத்த தர்ம போதனைகளை தெளிவாக அறிந்தவர்கள் ஒருபோதும் இப்பேர்ப்பட்ட அரக்க செயல்களைச் செய்ய முன்வரமாட்டார்கள். இனவாதத்தைத் தூண்டிவிடும் பௌத்த மகா சங்கங்களும் தலைவர்களும் இதற்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகின்றார்கள்?அடிப்படை உரிமைகள் மீதே அராஜகம் பண்ணும் அரசும் மக்களும் அவர்களுக்குத் துணைபோவோரும் என்றோ ஒருநாள் நீதிக்கும் தர்மத்துக்கும் பதில் கூறியே ஆகவேண்டும்.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற முதுமொழியை நினைவுபடுத்தி உயிரிழந்த அனைவருக்கும் நல்லூரான் முத்தியை அளிக்கவும் படுகாயமடைந்தவர்களுக்கு பூரண சுகத்தை அளிக்கவும் பிரார்த்திக்கின்றேன்.
(இந்த அறிக்கையின் கடைசிப் பந்தி தவிர்ந்த ஏனைய பகுதியை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை வெளியிட்டது.)
------
27.12.1998

பத்திரிகைச் செய்தி

மக்கள் மத்தியில் அன்பையும் சேவையையும் வாரிவழங்கிய நேர்மையான சேவகன் ஒருவனை கயவர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளமை நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு துக்ககரமான நிகழ்வாகும். யாருக்கும் எந்தக் கெடுதலையும் நினைக்காமல் முடிந்தவரை இயன்ற உவிகளைச் செய்து வந்த அண்ணன் மதிமுகராசாவின் பிரிவு ஈடுசெய்ய முடியாதது. இலக்கணச் செறிவு நிரம்பிய தொடரான பேச்சாற்றல் மிக்க ஒருவரை நாம் இழந்தது மட்டமல்ல தமிழுலகம் சிறந்த ஒரு தமிழ் மகனை இழந்துள்ளது.
எந்நேரமும் சிரித்த முகமும் தம்பி அல்லது கண்ணா என்று அன்புததும்ப அழைக்கும் அவரது குரல் எம்iமையெல்லாம் மறந்துவிட்டது.
தனது தலைவனுக்கு விழா எடுத்த நேரத்தில் அவர் மறைக்கப்பட்டுள்ளார். நன்றியைக் கொன்ற பாவிகள் எம்மவர்கள் என்று நாளை எம்மையே கேட்பதற்கு ஆள் எவருமில்லாமல் அனைவரையுமே கொன்றொழிக்கும் இக்கொடிய செயல் வீரர்கள் எவராயினும் அவனுக்கு மன்னிப்பே கிடையாது.
கடந்த ஏழு மாதங்களில் எமது தமிழர் விடுதலைக் கூட்டணியின் நான்கு துணிவும் இலட்சியமும் எளிமையாகப் பழகும் இயல்பும் கொண்ட மாமேதைகள் அழிக்கப்பட்டுள்ளார்கள்.
மக்களுடன் மக்களாக இருக்கும் மனிதருக்கு இதுதான் பரிசென்றால் அப்பரிசை நாம் விரும்பி வரவேற்கிறோம். ஆனால் செய்பவன் ஏன் எதற்காக என்று ஒரு பதில் தந்தால் நன்றாக இருக்கும்.
ஒரு புல்லையோ பூண்டையோ உருவாக்கத் தெரியாத மனிதன் எந்த ஒரு உயிரையும் கொல்லுவதற்கு அருகதையற்றவன்.
தமிழ் மக்களுக்கு நேர்மையுடனும் உண்மையுடனும் பலனை எதிர்பாராது பணிபுரியும்; எமது தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இப்படியான நிகழ்வுகள் ஏற்படும் என்பதை அறிந்துதான் தந்தையவர்கள் தமிழர்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினாரோ எனச் சிந்திக்கத் தோன்றுகிறது.
மதியண்ணனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் மன ஆறுதலையும் தைரியத்தையும் இறைவன் அளிக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்.
(குறிப்பிட்ட பொன். மதிமுகராசா அவர்கள் எம். ஜி. ஆர் பேரவையின் தலைவராக இருந்து அவருக்கு விழா எடுத்த போதே நல்லூர் முருகனுடைய வீதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த அறிக்கையை தினகரன் யாழ் மாநகர உறுப்பினர் முகுந்தனின் அனுதாபம் என்றும் வீரகேசரி ஏழு மாதங்களில் நான்கு நல் இதயங்களை இழந்து விட்டோம் கூட்டணிப் பிரமுகர் இரங்கல் என்றும் தினக்குரல் மதிமுகராசா கொலைக்கு தமிழ்க் கட்சிகள் கண்டனம் என்றும் தலைப்பிட்டுப் பிரசுரித்தன.)

No comments: