அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 13, 2008

இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திற்கு எழுதியவை

ஓம்
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”

410/27, பௌத்தலோக மாவத்தை,
கொழும்பு - 7.
02.06.1990.

திருவருளும் குருவருளும் முன்னிற்க,

பேரன்புக்குரிய பதிற் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் அவர்கட்கு,

வணக்கம். சென்ற 27.05.90 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சின் பரிசளிப்பு விழாவில் அடியேனும் பங்குகொண்டவன் என்ற முறையில் இக்கடிதத்தை வரைகின்றேன். தாங்கள் அகில இலங்கை ரீதியாக நடாத்திய போட்டிகளில் தங்களுடன் மிகவும் தொடர்புடைய அமைப்புக்களே பங்குபற்றாமை குறிப்பிடத்தக்கது. மொத்தம் 25 மாவட்டங்கள் இருக்கின்ற எமது நாட்டில் அமாத்தம் 17 மாவட்ட மட்டத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதும், தங்களுடைய தொடர்புடைய அமைப்புக்களுக்கு எவ்வித அறிவித்தலும் தெரிவிக்காததும் எனது காரணங்களாகும். தங்கள் அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கு அறிவிப்பு வழங்காமையை அடியேன் ஒரு பாரிய தவறு என்றே குறிப்பிட விரும்புகிறேன். சென்ற மகாசிவராத்திரி தினத்தன்று காலி ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோவிலில் பங்குபற்றிய காலி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு போன்ற பகுதிகளிலுள்ள அமைப்புக்கள் மிகச்சிறப்பாக சமய அறிவை விருத்தி செய்யக்கூடிய முயற்சிகளில் பங்குகொள்ளக்கூடியதாக “இந்து சமய ஒற்றுமைப் பேரவை” என்ற ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் எடுத்தமையை இங்கு அடியேன் குறிப்பிட விரும்புகிறேன். அங்கு எம்மால் நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டியில் மாத்தறை மாணவிகள் முதலிரு பரிசுகளைப் பெற்றமையை நான் பெருமையாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அறங்காவலர்கள் அமைச்சு நடாத்தும் மேற்படி போட்டிகளுக்கு தாராளமாக உதவிசெய்தமையைப் பாராட்டும் அதேவேளை இப்படியான நிகழ்ச்சிகளின்போது பரவலான முறையில் போட்டிகள் நடாத்தப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். மன்னார் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருக்கேதீஸ்வரம் எனப்படும் சிவத்தலம் இருக்கிறது. அங்குள்ள மாணவர்களிடையே சமய அறிவு தாராளமாக இருக்கும். அந்த ஆலயத்திற்கு ஒரு அறிவித்தல் அனுப்பியிருப்பின் எத்தனை மாணவர்கள் போட்டியில் பங்குகொண்டிருப்பார்கள் என்பது கூறவேண்டிய அவசியமில்லை. அதேபோல பண்டாரவளையில் இந்துசமயக் கருத்தரங்கில் பங்களித்தவர்களுக்கு இப்போட்டிபற்றி இன்னமும் தெரியாது. கேகாலை, மொனராகலை மாவட்டமும், அனுராதபுரம், காலி, களுத்துறை, மாத்தறை போன்ற மாவட்டங்களையும் குறிப்பிடலாம். ஏன் நான் முன்பு தலைவராக இருந்த மூளாய் இந்து இளைஞர் மன்றமோ அல்லது எமது தொடர்புகளைப் பெற்றிருந்த ஏனைய அமைப்புக்களோ இதில் பங்குகொள்ளாதது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. அமைப்புக்களைப் பதிவுசெய்வது ஏன் எனவும் உங்களை அத்தால் தயவாக வேண்டி, இதேபோன்ற தவறுகள் மேலும் நடைபெறாவண்ணம் பார்த்துக்கொள்வது அமைச்சின் முக்கிய கடமை எனவும் கூற விரும்புகிறேன். இது எனது பாரிய முதலாவது குற்றச்சாட்டாகும்.

இரண்டாவது தங்களால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை நினைவுபடுத்த விரும்புகின்றேன். மாத்தறை அருந்ததியார் நற்பணி மன்றம் அனுப்பிய கடிதத்திற்கு தாங்கள் எழுதிய பதிலில் நிதிபற்றித் தெரிவித்திருந்தீர்கள். 27.05.90 திகதி நடைபெற்ற விழாவில் பங்குபற்றிய அனைவருக்கும் குளிர்பானம் வழங்கிய செலவை அவர்களுக்கு ஒதுக்கியிருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அடுத்தது “சிறப்பு மலர்” வெளியிட்டீர்கள் அதுவும் அவசியமற்றது.
மூன்றாவது பரிசளிப்புக் கூட ஒழுங்காக நடாத்தப்படவில்லை. அழைப்பிதழ் அச்சேற்றவேண்டிய தேவையேயில்லை. நிகழ்ச்சிகளை மாற்றினாலும் பரவாயில்லை. ஆவலோடு அமைச்சர்களுடைய முன்னிலையில் பரிசுபெற விரும்பி அழகாக உடையணிந்து வந்த மாணவர்களுக்கு நீங்கள் செய்தது உண்மையிலே பாரிய தவறு. அமைச்சினுடைய கௌரவத்தையும், நம்பிக்கையையும் நீங்களே கெடுக்கும் காரணத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எமது சமயம் இன்று பல்வேறுபட்ட எதிர்ப்புக்களைத் தாங்கவேண்டிய நிலையில் தங்களைப் போன்ற பொறுப்புமிக்க அமைச்சும் சமய அறிவை வளர்க்கும் சிறார்களுக்கு இதுபோன்ற தவறுகளைத் தெரிந்து செய்யும்போது எம்போன்ற சமய அமைப்புக்களில் இருப்பவர்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

குறிப்பாக எம்மால் எழுதப்படும் கடிதங்களுக்கு பதில்தரக்கூட சிலவேளைகளில் அமைச்சினால் முடிவதில்லை. நான் எமது மூளாய் - இந்து இளைஞர் மன்றத்தின் சார்பில் வேண்டுவது யாதெனில் எமது முன்னைய கடிதங்களில் குறிப்பிட்டபடி இந்து சமய ஒற்றுமைப் பேரவையை ஆரம்பித்து தற்போது அதனுடைய நடவடிக்கைகளைச் செய்து வருகின்றோம். தங்கள் அமைச்சில் இதனைப் பதிவுசெய்ய விரும்புகின்றோம். அதற்கான படிவங்களைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும் மலையக இந்து கலாச்சாரப் பேரவை - தலவாக்கொல்லை தங்களமைச்சில் பதிவுசெய்யக் கடிதம் எழுதியதாகவும் இன்றுவரை எவ்வித பதிலும் தங்களிடமிருந்து (அமைச்சில் இருந்து) வராமையையும் நினைவுபடுத்தி இக்கடிதத்தினை நிறைவு செய்கின்றேன்.


தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப்போல வியாபகமாகுக
கண்ணைப்போலக் காக்க அறத்தை - யோகர் சுவாமிகள்.

என்றும் பணியில் - உண்மையுள்ள,

த. முகுந்தன்,
அமைப்பாளர்,
இந்து சமய ஒற்றுமைப் பேரவை.

ஓம்“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”
கொழும்பு - 07.
03.06.1990.

பேரன்புடையீர்

வணக்கம். இலங்கை ரீதியாக இந்து கலாச்சர அலுவல்கள் அமைச்சு நடாத்திய போட்டிகளில் அம்பாந்தோட்டை அநுராதபுரம் களுத்துறை காலி கேகாலை மன்னார் மாத்தறை மொனராகலை ஆகிய 8 மாவட்டங்கள் பங்குபற்றாத காரணத்தினை நாம் அறியவும் இதுபற்றி அமைச்சுக்கு நேரில் எமது வருத்தத்தைப் பகிரவும் விரும்புவதால் தயவுசெய்து தாங்கள் 10.08.1990 ஞாயிறு காலை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கு தவறாது வருகை தரவேண்டும் என இத்தால் தயவாக வேண்டுகிறேன். முக்கியமாக காலி களுத்துறை அம்பாந்தோட்டை மாத்தறை ஆகிய பகுதிகளில் முதல் ஒரு போட்டி நடாத்தப்படவேண்டும் என்பதும் எமது பெரு விருப்பாகுமம். தாங்கள் இதுபற்றி நடைபெறவுள்ள கூடட்டத்தில் மேலும் பல ஆலொசனைகளைத் தெரிவித்து தங்கள் பகுதிச் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். தற்போது நடைபெறும் தமிழ்த்தின விழாக்கள் மூலமாகவும் தமிழர்கள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் இருப்பது உறுதி செய்யப்படுவதும் குறிப்பிடத் தக்கது.

நன்றி.

என்றும் பணியில்
த. முகுந்தன்.
அமைப்பாளர்
இந்து சமய ஒற்றுமைப் பேரவை.

பிரதிகள்

தலைவர் இந்து இளைஞர் மன்றம் களுத்துறை.தலைவர் இந்து கலாச்சார மன்றம் காலிதலைவர் குருப்பிரவேசம் கேகாலைதலைவர் அருந்ததியார் நற்பணி மன்றம் மாத்தறைபதில் பணிப்பாளர் இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சு

ஓம்
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”
கொழும்பு - 07.18.06.1990.

திருவருளும் குருவருளும் முன்னிற்க,

பேரன்புக்குரிய பதிற் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் அவர்கட்கு,

வணக்கம். சென்ற 02.06.90 திகதியிட்டு அடியேனால் எழுதப்பட்ட கடிதம் குறித்து தாங்கள் இந்து கலாச்சார மன்றத்தின் செயலாளர் சிவத்திரு. துரைசாமி அவர்களோடு அளவளாவியதுடன் இதுகுறித்து கவலை தெரிவித்ததாகவும் அவர் அடியேனிடம் தெரிவித்தார். எமது கடிதத்தின்படி நாம் அமைச்சில் பதிவு செய்தமைக்கான விளக்கத்தையே தங்களிடம் கேட்கின்றோம். தவறு ஏதாவது இருப்பின் மன்னிக்கவும். தலவாக்கொல்லை இந்து கலாச்சாரப் பேரவை பற்றிக்; குறிப்பிட்டிருந்தேன். அதற்குரிய நடவடிக்கை எடுத்திருப்பீர்கள் என நம்புகின்றேன். மேலும் மாத்தறையில் இந்து இளைஞர் மன்றம் ஒன்று ஆரம்பிக்க உள்ளதால் அதற்கும் பதிவு செய்வதற்கான படிவம் அனுப்பப்பட வேண்டும் எனவும் வேண்டி நிறைவு செய்வதோடு எமது மூளாய் இந்து இளைஞர் மன்றத்தின் சார்பில் ஒரு கடிதத்தினையும் இத்துடன் இணைத்துள்ளேன். அதற்கும் உரிய பதிலை உடன் தெரிவிக்கவேண்டும் என வேண்டி அமைச்சின் பணிகள் திறம்பட அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனைசெய்து முடிக்கின்றேன்.

எங்கும் ஈசனைக் காணுதல் இன்பமே ஏதிலார் பால் இரங்குதல் இன்பமேபொங்கு கோபத்தைப் போக்குதல் இன்பமே என்றும் வாழக் கருதுதல் இன்பமே.

எனக்கு ஏற்பட்டது கோபமல்ல. எனினும் அதற்கடுத்த வாக்கியத்தால் தான் அந்தக் கோபம் வந்தது. இத்துடன் சென்ற 31.03.1990, 01.04.1990 ஆகிய இரு தினங்கள் கொழும்பு 10 டீன்ஸ் வீதியிலுள்ள சமூக சமய நிலையத்தால் நடாத்தப்பட்ட இன ஒற்றுமை பற்றிய கருத்தரங்கில் எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையையும் இணைத்துள்ளேன்.
கூடிய விரைவில் தங்கள் பதில் கிடைக்கும் என எதிர்பார்த்து அமைகின்றேன்.
வுணக்கம்.

என்றும் பணியில் - உண்மையுள்ள
த.முகுநந்தன்.அமைப்பாளர்
இந்து சமய ஒற்றுமைப் பேரவை

No comments: