அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, August 7, 2008

சாதகர்களுக்கு வழிகாட்டி !

இமயமலை இருஷிகேசத்து சுவாமி சிவானந்தரின் சீரிய போதனைகள்

1.உன்னுடைய தேவைகளை மிகவும் சுருக்கிக்கொள்.
2.நிலைமைக்குத் தக்கபடி நடந்துகொள்.
3.எப்பொருளிலும் யாரிடத்திலும் ஒருபோதும் பற்று வைக்காதே.
4.உன்னிடமிருப்பதை மற்றவர்களோடு பங்கிட்டுக்கொள்.
5.எப்பொழுதும் பணிசெய்யச் சித்தமாயிரு. சமயத்தை நழுவவிடாதே. ஆத்மபாவத்தோடு தொண்டுசெய்.
6.நான் செய்பவனல்ல. நான் சாட்சி மாத்திரமே என்னும் எண்ணத்தைக் கொண்டிரு.
7.இனிய சொற்களை அளந்து பேசு.
8.கடவுளை அடைவதற்குத் தீவிரமான ஆவல்கொள்.
9.உனது சொத்துக்கள் யாவற்றையும் துறந்து கடவுளிடம் பூரணமாகச் சரணமடை.
10.ஆத்மீக பாதை என்பது கத்தியைப்போல் கூர்மையானது. ஒரு குரு அவசியம் வேண்டும்.
11.மிகுந்த பொறுமையும் விடாமுயற்சியும் கொள்.
12.ஒரு நாள் கூடப் பயிற்சியைக் கைவிடாதே.
13.குரு உனக்கு வழிதான் காட்டுவார். அவ்வழி நடக்கவேண்டியவன் நீயே.
14.ஆயுள் குறுகியது. மரணநேரம் நிச்சயமற்றது. ஆகவே யோகாசனத்தை ஊக்கமாகத் தொடங்கு.
15.தினந்தோறும் ஆத்மீக தினசரியை வைத்து அதில் உன் முன்னேற்றத்தையும் தவறுதல்களையும் சரியாகக் குறி. தீர்மானங்களைக் கடைப்பிடி.
16.சாதனைசெய்ய நேரமில்லையென்று முறையிடாதே. தூக்கத்தையும் வீண் பேச்சையும் குறை. பிரம்ம முகூர்த்தத்தைக் கடைப்பிடி.
17.உண்மையாகிய கடவுளின் எண்ணம் உலகம் என்னும் எண்ணத்தை அகற்றுவதாக.
18.இடைவிடாத பிரம்ம சிந்தனையினால் நீ இன்னாரென்பதை உணர். ஆண் பெண் என்னும் எண்ணத்தை மற.
19.இன்று செய்யக்கூடியதை நாளைக்கு என்று தள்ளிப்போடாதே.
20.தற்புகழ்ச்சி செய்து கொள்ளாதே. உன் வல்லமைகளைக் காட்டிக் கொள்ளாதே. எளிமையாகவும் அடக்கமாயும் இரு.
21.எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இரு. கவலைகளைவிடு.
22.உனக்கு அவசியமில்லாதவற்றைப்பற்றி அசட்டையாக இரு.
23.கூட்டங்களையும் விவாதங்களையும் விட்டுத் தூரவிலகு.
24.தினமும் சிலமணி நேரம் ஏகாந்தமாக இரு.
25.பேராசை பொறாமை பணத்தை அபரிமிதமாகச் சேர்த்தல் ஆகியவற்றை விட்டுவிடு.
26.பகுத்தறிவினாலும் வைராக்கியத்தினாலும் உனது உணர்ச்சிகளை அடக்கு.
27.எப்பொழுதும் மனதைச் சமநிலையில் வைத்துக்கொள்.
28.நீ பேசுவதற்கு முன் இருமுறை யோசி. ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன் மும்முறை யோசி.
29.புறங்கூறுதல் தூஷித்தல் தப்புக்கண்டுபிடித்தலை ஒழி. பிற்போக்கைப்பற்றி எச்சரிக்கையாக இரு.
30.உனது தப்புக்களையும் பலவீனங்களையும் கண்டுகொள். மற்றவர்களின் நன்மையையே நோக்கு. பிறரின் நற்கருமங்களை மெச்சிப்பேசு.
31.பிறரால் செய்யப்பட்ட கெடுதிகளை மன்னித்து மற. உன்னைப் பகைப்பவர்களுக்கும் நன்மையே செய்.
32.ஆசை, கோபம், அகம்பாவம், மோகம், லோபம் ஆகியவற்றை விஷப்பாம்பை விலக்குவதுபோல் விலக்கு.
33.எவ்வளவு துன்பங்களையும் சகிக்கத் தயாராக இரு.
34.வைராக்கியத்தைத் தூண்டும்பொருட்டு சில கோட்பாடுகளை அமைத்துக்கொள்.
35.சிற்றின்பங்களை விஷம் - வாந்திபண்ணிய உணவு அல்லது சிறுநீர்போல் கருது. அவை உனக்குத் திருப்தியளிக்கா.
36.உனது வீரியத்தைக் காத்துக்கொள். எப்பொழுதும் தனியாகவே படுத்துக்கொள்.
37.ஸ்திரீகளைத் தேவதைகளாக வழிபடு. ஆண் பெண் என்னும் பேதபுத்தியை வேரறு. யாவரையும் வணங்கு.
38.ஒவ்வொரு முகத்திலும் - ஒவ்வொன்றிலும் கடவுளைக் காண்.
39.மனது இழிகுணங்களில் வசப்படும்போது திவ்வியநாம பஜனை - சத்சங்கம் - ஸ்தோத்திரம் ஆகியவற்றைக் கைக்கொள்.
40.சாந்தமாகவும் தைரியமாகவும் தடைகளை எதிர்த்து நில்.
41.நீ சரியான மார்க்கத்தில் இருக்கும்போது ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தாதே. முகஸ்துதிக்கு வசமாகாதே.
42.போக்கிரிகளுக்கும் துர்மார்க்கர்களுக்கும் மரியாதை செய்து தொண்டு செய்.
43.உனது குற்றங்களை நேர்மையாக ஒப்புக்கொள்.
44.உனது தேகசுகத்தைப் பாதுகாத்துக்கொள். தினசரி ஆசனங்களையும் தேகப் பயிற்சிகளையும் கைவிடாதே.
45.எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் ஊக்கமாகவும் இரு.
46.கொடுப்பதனால் உனது இதயத்தை மேம்படுத்து. ஏராளமாகத் தருமம் செய். எதிர்பார்த்ததைவிட அதிகமாகக்கொடு.
47.ஆசைகள் துக்கத்தைப் பெருக்குகின்றன. திருப்தியை மேற்கொள்.
48.புலன்களை ஒவ்வொன்றாக அடக்கு.
49.இடைவிடாதசிந்தனையினால் பிரம்மாகார விருத்தியை அதிகரிக்கச்செய்.
50.உனது எண்ணங்கள் யாவற்றையும் கட்டுப்பாட்டில் வை. அவைகளைத் தூய்மையாகவும் உன்னதமாகவும் வைத்துக்கொள்.
51.யாராவது உன்னை அவமதித்தாலும் பரிகாசித்தாலும் கண்டித்தாலும் கோபம் கொள்ளாதே. அது வெறும் சொற்களே. ஒலிபேதமே.
52.உன்மனதைக் கடவுள்பால் செலுத்தி உண்மையான வாழ்வை மேற்கொள்.
53.பூரணத்தை அடையும் பாதையில் தீவிரமாகச்செல்.
54.உனது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கடைப்பிடித்து நிதானமாக முன்னேறு.
55.ஆஸனத்தின் நன்மைகள் அனந்தம். ஒருபோதும் பயிற்சியைக் கைவிடாதே.
56.மனதில் சிற்றின்பஆசை நுழைவதற்கு சப்தம் ஸ்பரிசம் ரூபம் எண்ணங்கள் ஆகியவை நான்கு சாதனங்கள் - ஜாக்கிரதையாயிரு.
57.கடவுளைத் தவிர வேறு யாரிடமும் அந்நியோன்யமாக சேர்க்கை வைத்துக் கொள்ளாதே. மற்றவர்களோடு மிகக் குறைவாகப் பழகு.
58.எதிலும் மிதமாயிரு. அமிதம் எப்போதும் ஆபத்தானது.
59.ஒவ்வொருளும் சுய ஆராய்ச்சியும் சொந்த சோதனையும் செய்துகொள். உனது முன்னேற்றத்தை தெரிந்துகொள்.
60.ஆத்மீக மார்க்கத்தைத் தெரிந்துகொள்ளும் ஆசைகளைசச் சேர்த்து ஒருமுகப்படுத்து. உனது உணவு தேகம் உறவினர் இவற்றைப்பற்றி எண்ணாதே. ஆத்மாவைப்பற்றி சிந்தி. இப்பிறப்பிலேயே நீ மோட்சத்தை அடைய வேண்டும்.

மில்க்வைற் அதிபர் தேசாபிமானி கலாநிதி. க. கனகராசா அவர்களின் 70து பிறந்ததின ஞாபகார்த்தமாக அண்ணா தொழிலதிபர் திரு. எஸ்.பி. நடராசா அவர்களால் வெளியிடப்பெற்றது. (2-11-97)

2 comments:

Anonymous said...

அருமையான நற்சிந்தனை மொழிகள். இளையோர் படித்துப் பழகவேண்டியது அவசியம்.
தகவலுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

-ம.சுதன்

தங்க முகுந்தன் said...

அன்புக்குரிய சுதனுக்கு

தங்களின் வருகைக்கும்
தகவலுக்கு நன்றிகள் தெரிவித்தமைக்கும்
பாராட்டுக்களுக்கும்
என் பணிவான மனம் நிறைந்த அன்புடனான நன்றிகள்.

என்றும் அன்புடையவன்.