அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, August 26, 2008

மறக்க முடியாத நண்பர் அமிர்தலிங்கம் - கலைஞர் மு.கருணாநிதி
(இன்று (26.08.2008) தமிழர் விடுதலைக் கூட்டணின் செயலாளர் நாயகமும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமாகிய மறைந்த தலைவர் அ. அமிர்தலிங்கம் அவர்களுடைய 81வது பிறந்த நாள் நினைவையொட்டி இக்கட்டுர பிரசுரமாகின்றது.)

நாவலர் என்றவரிசையில் அந்த நாவலர் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட பெருமகன்தான் ஈழுத்தமிழர்களுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்டு உழைத்து இறுதியிலே அந்தப் பணி காரணமாக சகோதர யுத்தத்தில் தம் உயிiயே தியாகம் செய்த திரு. அமிர்தலிங்கம் அவர்கள். 1972 ஆம் ஆண்டிலே ஈழத்தமிழர் தந்தை செல்வநாயகம் அவர்கள் சென்னைக்கு வந்த என்னைச் சந்தித்தபோது செல்வா அவர்களுடன் திரு. அமிர்தலிங்கம் அவர்களும் வந்திருந்தார்கள். அதுதான் நான் அவர்களைச் சந்தித்த முதல் சந்திப்பு. அப்படி வந்தபோது செல்வா அவர்களால் உரக்கப் பேச இயலாது. மெலிந்த குரலில்தான் பேச இயலும். அப்படி மெலிந்த குரலிலே பேசுவதையெல்லாம் அமிர்தலிங்கம் அவர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து ஓர் ஒலிபெருக்கியைப்போல எங்களுக்கு உரத்த குரலில் கூறியதோடு தந்தை செல்வா அவர்களுக்கு ஓர் அணுக்கத் தொண்டராக அத்யந்த சீடராக விளங்கியதை நான் கண்டேன்.

மிகுந்த எளிமையும் அமைதியும் கொண்டவராக மென்மையாக அதே நேரத்தில் உறுதி தொனிக்கின்ற அளவிற்கு பேசக் கூடியவராக பேசும்போதே அன்பும் பாசமும் வெளிப்படுகின்ற அளவிற்கு இதயத்தைத் திறந்து காட்டுபவராக பழகிய அவரை எப்படித்தான் மறக்க முடியும்? 1977 ஆம் ஆண்டு தந்தை செல்வா அவர்கள் மறைந்த பிறகு அமிர்தலிங்கம் மற்ற நண்பர்களோடு இணைந்து தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி இயக்கத்தை அண்ணல் காந்தியடிகளைப் போல அமைதி வழியிலே நடத்திட அரும்பாடுபட்டார்.

செல்வா அவர்களின் மறைவுக்குப்பிறகு அமிர்தலிங்கம் அவர்களால் நடத்தப்பட்ட இயக்கம் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக தாங்கள் ஏற்றிருந்த பாராளுமன்றப் பதவிகளைக் கூட உதறி எறியத்தயாராக இருந்தது என்பதும் அப்படியே உதறி எறிந்தது என்பதும் சரித்திரத்திலே இடம்பெற்றுவிட்ட உண்மைகளாகும்.
13-7-1989 அன்று மாலையில் தான் அருமை நண்பர் அமிர்தலிங்கம் அவர்களும் அவருக்கும் எனக்கும் இனிய நண்பர்களாக இருந்த யோகேஸ்வரன் சிவசிதம்பரம் ஆகியோரும் அமிர்தலிங்கம் அவர்களின் இல்லத்திலே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது போலிஸ் காவலையும் மீறி மூன்றுபேர் இயந்திரத் துப்பாக்கிகளோடு வீட்டுக்குள் புகுந்து சரமாரியாகச் சுட்டதில் அமிர்தலிங்கம் அவர்களும் யோகேஸ்வரன் அவர்களும் அந்த இடத்திலேயே இயற்கை எய்தினார்கள். இந்தக் கொடுமையான செய்தி எனக்கு அறிவிக்கப்பட்டதும் இதயத்திலே வேல் பாய்ந்ததைப் போன்ற நிலைக்கு நான் ஆளானேன். மறுநாள் 14ஆந் தேதியன்று சென்னைத் தலைமைச் செயலகத்திலே மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டுக்கு நான் தலைமை தாங்கிய போதுகூட திரு. அமிர்தலிங்கம் அவர்களுக்கும் திரு. யோகேஸ்வரன் அவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து விட்டுத்தான் நிகழ்ச்சிகளைத் தொடங்கினேன்.

அமிர்தலிங்கத்தின் இறுதிச் சடங்கிற்கு இந்திய அரசின் சார்பில் இந்தியாவிலிருந்து செல்லும் விமானத்தில் தி.மு.க. சார்பில் நானோ அல்லது வேறு யாரோ செல்வது குறித்து என்னுடன் மத்திய அமைச்சர் நட்வர் சிங் பேசுவார் என்று காலையில் டெல்லியிலிருந்து தொலைபேசி மூலம் செய்தி வந்தது. நான் அதனை எதிர்பார்த்து அன்று காலை முதல் மாலை வரையில் தலைமைச் செயலகத்தில் இருந்தேன். ஆனால் காலையில் வந்த தகவலின் படி யாருமே தொடர்பு கொள்ளவில்லை. எனவே அந்தப் பெருமகனாரின் இறுதி நிகழ்ச்சியிலே தி.மு.கழகத்தின் சார்பில் யாரும் கலந்து கொள்ள முடியாமலே போய்விட்டது.
19.7.1989 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த இரண்டு தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னையிலே அமைப்புச் செயலாளராக இருந்த நீலநாராயணன் தலைமையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதிலே நானும் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றினோம்.

நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோதும் இல்லாதபோதும் திரு. அமிர்தலிங்கம் எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் ஒவ்வொரு முறையும் தமது துணைவியாரோடும் குடும்பத்தினரோடும் என்னை வந்த சந்திக்காமல் சென்றதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பமும் ஏதோ உறவுக்காரக் குடும்பம் என்பதைப் போல பாச உணர்வோடு பழகி வந்தார்.
அமிர்தலிங்கம் அவர்களும் அவரது துணைவியாரும் தம்பதிகள் என்பதைவிட உற்ற தோழர்கள் என்ற முறையிலே பழகி வந்த நிலைகளை எல்லாம் நான் நன்கறிவேன். துணைவியார் இல்லாமல் அவர் எந்த நிகழ்ச்சிக்கும் தனியாகப் பெரும்பாலும் செல்வதில்லை. என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் கூட தம்பதியர் இருவரும் சேர்ந்து தான் வருவர்கள்.
1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் கடைசி நாளன்று மும்பாய் நகரில் தமிழ்ப் பேரவையின் சார்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நாவலர் அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி நான் எடுத்துக் கூறிய வார்த்தைகள் இன்னமும் என் நினைவில் இருக்கக் கூடியவை. அது - இதோ –
அமிர்தலிங்கம் இலங்கையில் இருக்கின்ற ஈழத் தமிழகம் வேண்டுமென்று கோருகின்ற தமிழர்களுடைய தலைவர். அமிர்தலிங்கம் மிக மென்மையான இதயம் படைத்தவர். முரட்டுக் குணம் வாய்ந்தவர் அல்லர்.அவர் மீது கண்டனத் தீர்மானம் இலங்கை ஆளுங்கட்சியின் சார்பிலே அளிக்கப்பட்டு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள். என்ன பேசுகிறார்கள்? இந்த அமிர்தலிங்கத்தைக் கொலை செய்ய வேண்டும் எங்கே நாடாளுமன்றத்திலே பேசுகிறார்கள். இந்த அமிர்தலிங்கத்தை இரண்டு பாக்கு மரங்களுக்கிடையே கட்டி இரண்டாகக் கிழித்தெறிய வேண்டும் என்று பேசுகிறார்கள். இந்தப் பேச்சை பத்திரிகைகளிலே படித்துப் பார்த்துவிட்டும் நாம் ஆமைகளாய் ஊமைகளாய்த்தான் வாழவேண்டுமென்று சொன்னால் தமிழன் சோற்றாலடித்த பிண்டம் அல்ல என்பதை இலங்கைக்கு உணர்த்திட வேண்டாமா?

1981 ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி நான் இவ்வாறு பேசினேன். ஆனால் 1989ல் அவரை இல்லாமல் செய்துவிட்டார்கள்.

அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறும்போது புதிதாக இணைக்கப்பட்டு ஆதான்றியுள்ள வடகிழக்கு மாகாணத்தில் தற்போது தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை காணப்படவில்லை. அங்கு கவர்னர் ஆட்சியை நிறுவும்படி அதிபர் ஜெயவர்த்தனேயை கேட்டுக்கொள்வேன். மாகாணக் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்துவது என்ற ஜனநாயக முறையை எங்கள் கட்சி எதிர்க்கவில்லை. அதே சமயத்தில் இத்தகைய சூழ்நிலையில் தேர்தல் நடத்துவது என்பது குறித்த காலத்துக்கு மிகவும் முந்தைய செயலாகும். அப்படி தேர்தல் நடத்தினால் தமிழர் வாழும் பகுதிகளில் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்று சொன்னார். ஆனால் அவருடைய ரத்தமே ஆறாக ஓடிய செய்தியைத்தான் கேள்விப்பட்டோம்.

ஆயுதங்களை ஒப்படைத்தவிட்டு பேச்சு வார்த்தைக்கு வருவதற்கு விடுதலைப் புலிகளுக்கும் இதர போராளிகளுக்கும் மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றார் அமிர்தலிங்கம். அவரின் வார்த்தைகளின்படிதான் தற்போது நீண்ட அவகாசத்திற்குப் பிறகு அவரின் எண்ணப்படி பேச்சுவார்த்தைக் கட்டத்திலே இப்போது ஈழத்தமிழர் பிரச்சினை உள்ளதை நேரடியாகக் காண்கிறோம். அந்தப் பெருமகன் போன்றவர்கள் செய்த தியாகத்திற்கு தற்போது வெற்றி கிடைக்கும் நிலையில் இந்த மலர் அவர் பெயரால் வெளிவரவிருப்பது முற்றிலும் பொருத்தமான ஒன்றாகும்.

(22.08.2002ல் அவரது வரலாற்றின் மனிதன் (பவழ விழா) மலருக்கு வழங்கிய கட்டுரை.)

No comments: