அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 13, 2008

குருஸ்வாமி சிவத்திரு. எம். என். நம்பியார் அவர்கள் கருத்தும் எமது கடிதங்களும்

நாம் குருஸ்வாமி சிவத்திரு. எம். என். நம்பியார் அவர்களுக்கு எழுதிய கடிதத்தையும் அவரது பதிலையும் இங்கு அனைவருக்காகவும் இணைக்கின்றேன்.

25.01.2007

திருவருளும் குருவருளும் முன்னிற்க!

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய குருஸ்வாமி எம். என். நம்பியார் அவர்களுக்கு,

வணக்கம். இலங்கையிலிருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களில் அடியேனும் ஒருவன். தங்களை நேரில் சந்திக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. எனவே இக்கடிதமூலமாக தங்களிடம் எமது கோரிக்கையை முன்வைக்கின்றோம். தயவுசெய்து இந்நூலில் 41ஆம் பக்கத்தில் உள்ள 18 வினாக்களுக்கு தங்களிடமிருந்தும் பதில்களை எதிர்பார்க்கின்றோம். தயவுசெய்து சிரமத்தைப் பாராமல் நேரமுள்ள வேளையில் பதிலை எழுதி அனுப்பி வைக்குமாறு தயவாக வேண்டுகின்றேன்.

நன்றி.

என்றும் பணியிலுள்ள
தங்க. முகுந்தன்.

----

07-02-2007.

உயர்திரு. தங்க. முகுந்தன் அவர்கள்

-ஸ்வாமி சரணம்-

பேரன்புடையீர் வணக்கம். தாங்கள் அனுப்பிய ஜோதி நிதர்சனம் புத்தகமும் தங்கள் கடிதமும் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி.

ஐயனின் 18 படிகள் போல் 18 கேள்விகள் கேட்டு இருக்கிறீர்கள். நான் 60 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலை சென்றாலும் இன்னமும் என்னை கன்னி சாமியாகத்தான் பாவிக்கிறேன். என்னை விட அனுபவமும் ஆற்றலும் மிக்க பல குருசாமிகள் தங்கள் கருத்துக்களை மிக அழகாக கூறியுள்ளார்கள். அவர்களின் பல கருத்துக்கள் என் கருத்துகளோடு ஒத்துப் போவதால் நான் தனியாக கூற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

என்னை பொறுத்தவரை சபரிக்கு செல்லும் வழிகளும் பாதைகளும் இப்போது வசதியாக செய்து விட்டார்கள். வசதி பெருகிவிட்டது. பக்தி குறைந்து விட்டது. ஐயப்பமார்கள் விரதகாலத்தில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது – நல்லதையே நினைத்து நல்லதையே பேசி நல்லதையே செய்து வரவேண்டும். ஒரு மண்டலம் இவ்வாறு விரதம் மேற்கொண்டால் அதன் பிறகும் அதையே கடைப்பிடிக்க சிரமமிருக்காது.

எல்லாம் நல்லதாக செய்தால் தவறு இழைக்க வேண்டிய சந்தர்ப்பமே வராது.

தங்கள் தொண்டு சிறக்கட்டும். தாங்களும் தங்கள் குழுவினரும் எல்லா நலனும் பெற்று வாழ எல்லாம்வல்ல ஐயப்பனை வேண்டுகிறேன்.

ஸ்வாமி சரணம்

அன்புடன்
M.N.நம்பியார்

-----

19.02.2007.

குருஸ்வாமி சிவத்திரு. எம். என். நம்பியார் அவர்கள்,
இல. 4, கோபாலபுரம் 6வது தெரு,
சென்னை – 86.

திருவருளும் குருவருளும் முன்னிற்க,

பேரன்புக்கும், மதிப்புக்குமுரிய குருஸ்வாமி அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் மிகவும் பொறுமையுடன் - குருஸ்வாமிக்குரிய பண்புகளுடன் எழுதிய 07.02.2007 திகதியிட்ட கடிதம் 12.07.2007ல் கிடைத்தது. தங்களுடைய வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடிதம் கிடைத்ததுபற்றி தங்களின் அருமைத் துணைவியாரிடம் செய்தி கூறினேன். பதில் எமுத தாமதித்தமைக்கு மன்னிக்கவும். சிரமத்தைப் பாராது பதில் எழுதியமைக்கும் எமது பணிவான மனம்நிறைந்த நன்றிகள்.

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நாம் ஸ்ரீ தர்மஸாஸ்தாவினுடைய படிப்பூஜையை எமது ஆலயத்தில் செய்து வருகின்றோம். தங்களின் கடிதம் கிடைத்த செய்தியறிந்து தங்களை நேரடியாகவே தரிசித்த உணர்வடைவதாக எமது குழுவினர் தங்களுக்குத் தெரியப்படுத்தச் சொன்னார்கள். தாங்கள் சிறிது உடல் நலம் குன்றியிருப்பதாக அறிகிறோம். தங்களின் உடல்நலம் பூரணமடைய எல்லாம்வல்ல காந்தமலை வாசனை மனதார இங்கிருத்தவண்ணம் இறைஞ்சுகின்றோம்.

தாங்கள் குறிப்பிட்ட பிரகாரம் நல்லவற்றைப் பேசி, நல்லவற்றை நினைந்து, நல்லவற்றையே பேசி வருவோமாயின் எமது மனம் வாக்கு காயம் என்ற திரிகரணங்களும் சுத்தமடையும். இதுவே த்தவமஸி என்ற தத்துவத்தை எமது ஆத்மா அடையக்கூடிய எளிய படிமுறை.

அடுத்த தடவை நாம் எமது யாத்திரையின்போது எல்லாம்வல்ல ஸ்ரீ சபரிகிரீஸன் தங்கள் பாதகமலங்களை தரிசிக்கும் வாய்ப்பைத் தரவேண்டும் என்று வேண்டுவதுடன், தாங்களும் கங்கள் குடும்பத்தவரும் எல்லாம்வல்ல ஸ்ரீ ஹரிஹரசுதனின் கிருபையால் தேகாரோக்கியத்துடன் விளங்கவேண்டும் எனவும் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன்.

ஏதேனும் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.

நன்றி.

என்றும் பணியிலுள்ள,


தங்க. முகுந்தன்.

No comments: