அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, August 11, 2008

பிரச்சனைக்கு ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும்

அன்பே கடவுள்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

இநது சமய ஒற்றுமைப் பேரவை
410-27 பௌத்தலோக மாவத்தை
கொழும்பு 7
28.06.1990

பத்திரிகைச்செய்தி

வடக்குக் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சண்டைகளை உடனடியாக நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பிரச்சனைகளுக்குத் தீர்வை உடனடியாகக் காணமுன்வரவேண்டும் என்று சகல தரப்பினரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். இரு பகுதியினரும் விட்டுக்கொடுக்காது போர்புரிவதை மனிதாபிமானம் கொண்டுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். இச்சண்டைகளின் நிமித்தம் இருதரப்பினருக்கிடையிலான சேதங்களைக் காட்டிலும் அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழப்பும் உடமைகள் அழிவும் அதிகமாயுள்ளதை எவரும் மறுக்கமுடியாது. குறிப்பாக விமானங்களிலிருந்து குண்டுகள் போடுவதும் பரல்கள் போடுவதும் முகாம்களிலிருந்து ஷெல்த் தாக்குதல்களை மேற்கொள்வதும் தமிழ்மக்களுக்கு மாத்திரம் உரிய தண்டனையோ அல்லது அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட கொடையோ தெரியாது. 1985ம் ஆண்டிலிரு;து தமிழ்ப் பேசும் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் உட்பட இத்தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாயிருப்பினும் 1981ம் ஆண்டிலேயே தமிழ் மக்களுடைய பகுதிகளில் அவர்களுடைய உடமைகள் அழிப்பது ஆரம்பமாகி இன்றும் தொடர்ந்து வருகிறது. 1949ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச்சட்டம் முதற்கொண்டு இந்நாட்டில் பிரச்சனைகள் ஆரம்பித்து இன்று முற்றாக தமிழ் மக்களை அழிக்கும் நிலைக்கு நாட்டில் வன்செயல்கள் அதிகரித்துள்ளதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பேச்சுவார்த்தை மூலமாகப் பிரச்சனைகள்; தீர்க்கப்படுவதையே மக்களில்; பெரும்பாலானோர் கருதுகின்றபோதிலும் நடைமுறையில் சாத்தியப்படுவது கடினமாக இருப்பதையும் மறக்கமுடியாது. காரணம் இனப்பிரச்சனை குறித்துப் பல பேச்சுவார்த்தைகள் கொழும்பிலும் இங்கு சரிவராத பட்சத்தில் திம்புவிலும் பெங்களுரிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதையும் வரலாறு கூறும். ஓப்பந்தங்கள் பல செய்யப்பட்டு அவை நிறைவேறாமல்; கிழிக்கப்பட்டதையும் இந்நேரத்தில் நினைவு கூரவேண்டிய கடமையுள்ளது.

இன்றைய நிலையில் மக்களுடைய தேவைகள் என்ன என்பதை அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியகடமை மக்களால் தெரிவான அரசிற்குள்ளது. பிரச்சனைகளுக்கு மத்தியில் அல்லலுறுகின்ற மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். திரிகரண சுத்தியோடு மக்கள் பணிசெய்ய அனைவரும் முன்வரவேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை சமர்ப்பித்த இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதியின் ஆணைக்குழுவினரின் முடிவகளைச் செயற்படுத்தி கடந்த 41வருடங்களாக இழுபறிப்படுகின்ற தமிழ் மக்ககளின் குறிப்பாக சிறுபான்மையினரின் பிரச்சனை ஒரு நிரந்தர முடிவை எட்டவேண்டும் எனவும் இதற்கான பூரண ஒத்துழைப்பை சகல அரசியற் கட்சிகளும் போராட்டக்குழுக்களும் முக்கியமாக இலங்கை நாட்டின் சகல பிரஜைகளும் நல்கி இந்நாடு ஒரு சமாதான ஐக்கிய நாடாக மிளிர வழியமைக்க எல்லோரும் ஒருமித்து செயற்படவேண்டும் எனவும் இவ்வறிக்கை மூலமாக வேண்டுகின்றேன்.

விவேகானந்தர் கூறியதுபோhல ஒருவருக்கொருவர் குறைகள் கண்டுபிடித்துக்கொண்டும் தூஷித்துக்கொண்டும் இருந்த காலம் தீர்ந்துவிட்டது. நம் சமூகத்தைத் திருத்தியமைக்கக் கூடிய நிர்மாணவேலை செய்யவேண்டிய காலமிது. சிதறுண்டு கிடக்கும் சக்தியனைத்தையும் ஒன்றுசேர்த்து இப்பணியில் செலுத்தி நம்தேசத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்தச் செல்லவேண்டிய தருணமிது. அதில் நாம் முன்செல்வோமாக என்று கூறி இனியும் தாமதிக்காது பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து எமது நாட்டில் அமைதியும் சமாதானமும் அன்பு வழிகொண்ட வாழ்க்கையும் ஏற்பட நாம் ஒருவரையொருவர் புரிந்துணர்ந்து வாழ இன்றே பங்கெடுக்க வேண்டும் எனவும் வேண்டி ஈற்றில் கிராம எழுச்சித் திட்டங்களை நடாத்தும் அரசு இனி எக்காலத்திலும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் விமானத் தாக்குதல்கள் பீரங்கித் தாக்குதல்கள் ஷெல்த் தாக்குதல்களை நடாத்த இடமளிக்கவோ எண்ணவோ கூடாது எனவும் தெரிவித்து இவ்வறிக்கையை நிறைவு செய்கின்றேன்

ஒற்றுமை இந்த ஊரிடை ஓங்குக.

என்றும் சமாதானத்திற்காக
இந்து சமய ஒற்றுமைப் பேரவை அமைப்பாளரும்
தேசிய ஒருமைப்பாட்டிற்கான இளைஞர் குழு உறுப்பினருமான
தங்கராசா முகுந்தன்

(இவ்வறிக்கையின் கடைசிப் பந்தியைத் தவிர்த்து வீரகேசரி – 03.07.1990 2ஆம்பக்கத்தில் சிறுபான்மையினரின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும் போர் தொடர்வதை மனிதாபிமானம் கொண்ட எவரும் ஏற்க மாட்டார்கள் என்ற தலையங்கம் இட்டு பிரசுரித்தமை குறிப்பிடத் தக்கது.)

No comments: