அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, August 11, 2008

அருளுபதேசங்கள்

அருளுபதேசங்கள் - மனப் பாடப்பகுதி


சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள்

1. நான் என் மூதாதையரின் காரணமாகவே பெருமை கொள்கிறேன். பழமையைப் படிக்க படிக்க பின்நோக்கிப் பார்க்கப்பார்க்க இந்தப் பெருமை இன்னும் அதிகரிக்கிறது. அது எனக்கு வலிமையையும் வீர நம்பிக்கையையும் தருகிறது. இறைவனருளால் உங்களுக்கும் அதே பெருமிதம் உண்டாகட்டும். உங்களது முன்னோர்களிடமிருந்து அந்த நம்பிக்கை உங்கள் உதிரத்தில் கலக்கட்டும். அது உங்கள் வாழ்க்கையோடு பிரிக்க முடியாத பகுதியாக விளங்கட்டும். அது உலகை உய்விக்கத் தொண்டு புரியும்படி உங்களைத் தூண்டட்டும்.

2. நமது சக்தித் துடிப்பு நமது பலம் ஏன்? நமது தேசிய உயிர் நாடியே நமது சமயத்தில் தான் உறைந்துள்ளது. அதனைக் கைவிட்டால் உருக்குலைந்து சிதறிப் போவோம். அதுதான் நமது இனத்தின் ஜீவன். ஆதனைப் பலப்படுத்தியே தீரவேண்டும்.

3. ஓ பாரத நாடே! சீதை சாவித்திரி தமயந்தி முதலிய கற்பில் சிறந்த உத்தமிகளை மறவாதே! உனது பெண்மையின் லட்சியத்துக்கு அவர்களே உதாரணம். யோகிகளுக்கெல்லாம் யோகியும் எல்லாவற்றையும் துறந்தவருமான உமாபதியாம் சங்கரனே நீ வணங்கும் கடவுள் என்பதை மறவாதே!

உனது திருமணம் உனது செல்வம் உனது உயிர் முதலானவை உனது தனித்த இந்திரிய சுகபோகத்திற்கும் உனது சொந்த நன்மைகளுக்கும் ஏற்பட்டவையல்ல என்பதை மறவாதே!

நீ தேவியின் பலிபீடத்துக்கான ஒரு யாகத்திரவியமாகப் பிறந்திருக்கிறாய் என்பதை மறவாதே. தாழ்த்தப்பட்டவர்களும் அறியாத மூடர்களும் ஏழைகளும் எழுத்துவாசனையற்றவர்களும் சண்டாளர்களும் தோட்டிகளும் உன் இரத்தக் கலப்புள்ளவர்கள் என்பதையும் மறவாதே!

4. தீரனாக இரு. கோழைத்தனத்தை அகல ஓட்டு. நீ ஒரு பாரத வாசி என்பதில் பெருமைகொள். நான் ஒரு பாரதவாசி ஒவ்வொரு பாரதீயனும் என் சகோதரன் என்று பெருமையுடன் உரக்கக் குரல் எழுப்பு!

5. பாரத நாட்டில் சோஷலிஸ அரசியல் கருத்துக்களைப் பரப்புமுன் ஆன்மீகக்கருத்துக்களின் வெள்ளம் இங்கே பெருக்கெடுத்தோடச் செய்யுங்கள். எந்தப் பணி நம் கவனத்தை முதலில் கவரவேண்டும் தெரியுமா? நம் உபநிடதங்களிலும் மதநூல்களிலும் புராணங்களிலும் பொதிந்து கிடக்கிற அற்புதமான கருத்துக்களை வெளிக்கொணர வேண்டும். மடங்களிலிருந்தும் காடுகளிலிருந்தும் சங்கங்களிலிருந்தும் அவ்வுயர்ந்த கருத்துக்களை வெளிக்கொண்டுவந்து நாடு முழுவதும் வாரி இறைக்க வேண்டும்.



பகவான் ரமணரின் உபதேசங்கள்

1. முடியுமா? முடியாதா? என்கிற சந்தேக நினைவுக்கு இடங்கொடாமல் சொரூப தியானத்தை விடாப்பிடியாய்ப் பிடிக்க வேண்டும் ஒருவன் எவ்வளவு பாவியாயிருந்தாலும் நான் பாவியாயிருக்கிறேனே எப்படிக் கடைத்தேறப் போகிறேன் என ஏங்கி அழுது கொண்டிராமல் நான் பாவி என்னும் எண்ணத்தை அறவே ஒழித்து சொரூப தியானத்தில் ஊக்கமுள்ளவனாக இருந்தால் அவன் நிச்சயமாக உருப்படுவான்.

2. நல்லமனமென்றுமம் கெட்டமனமென்றும் இரண்டு மனங்கள் இல்லை – மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டு விதம். மனம் சுபவாசனைமயமாய் நிற்கும்போது நல்லமனமென்றும் அசுபவாசனைமயமாய் நிற்கும்போது கெட்டமனமென்றும் சொல்லப்படும். மனத்தை அடக்கிக்கொண்டிருந்தால் எங்கே இருந்தாலும் இருக்கலாம்.

3. கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலிவாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ அவ்வாறே குருவின் அருட்பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரட்சிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முத்தியடையவேண்டும்.

4. சுகமென்பது ஆத்மாவின் சொரூபமே. சுகமும் ஆத்ம சொரூபமும் வேறன்று. பிரபஞ்சப் பொருள் ஒன்றிலாவது சுகமென்பது கிடையாது. அவைகளிலிருந்தும் சுகம் கிடைப்பதாக நாம் நமது அவிவேகத்தால் நினைக்கின்றோம். மனம் வெளிவரும்போது துக்கத்தை அனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்தத்தியாகும்போதெல்லாம் அது தன்னுடைய யதாஸ்தானத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது. உண்மையில் உள்ளது ஆத்மசொரூபமொன்றே.

5. நான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மௌனமெனப்படும். சொரூபமே ஜகம். சொரூபமே நான். சொரூபமே ஈஸ்வரன். எல்லாம் சிவசொரூபமே.


(இவ்விரண்டு பகுதிகளும் சுவாமி ஸ்ரீ மதுரானந்த மகராஜ் அவர்களால் தொகுத்து கன்னியாகுமரி வெள்ளிமலை ஸ்ரீ ஹிந்து தர்ம வித்யாபீடம் வெளியிட்ட இந்து சமயம் வளர்நிலை 3 என்ற நூலிலிருந்த தற்போதைய தலைவர் ஸ்ரீ சைதன்யானந்த மகராஜ் அவர்களுடைய அனுமதியுடன் பிரசுரிக்கப்படுகிறது)

No comments: