மக்களாலே மக்களிலிருந்து மக்களுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சிமுறை – மக்களாட்சி(ஜனநாயக ஆட்சி) நடைபெறும் எமது நாட்டில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட பிரச்சனைகள் நிமித்தம் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிய மக்கள்(குறிப்பாக விதவைப் பெண்கள் அநாதைக் குழந்தைகள் அங்கவீனர்கள் மனநோயாளர்கள்;) சேதமாக்கப்பட்ட அரச தனியார் சொத்துக்கள் கொல்லப்பட்ட மக்களுடைய உயிர்கள் எண்ணிலடங்கா அளவுக்கு அதிகம்.
ஆக்கத்திற்கு வழிவகுக்க வேண்டிய அறிவியல்
அச்சத்திற்கு வழிவகுத்துவருகின்றது.
யாரால் எங்கே எப்போது என்ன நிகழும் என்ற பீதியுடன் மக்கள் வாழ வேண்டிய நிலை தொடருகின்ற நிலையையும் நாம் சிந்திக்கவேண்டும். கொலை கொள்ளை கடத்தல் இப்படி அளவுக்கதிகமான அராஜகச் செயல்கள் தொடர்ந்து நடைபெற மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். மக்கள் பேச்சுரிமை கட்டுண்டநிலையில் செய்வது அறியாது ஏங்குகின்றார்கள்.
தான் வாழ வழிகாண வேண்டிய மனிதன்
பிறர் வீழ வழிகாணத் துடிக்கின்றான்.
மக்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பயனுள்ள சட்டங்களை ஏற்படுத்த வேண்டும். மக்களுடைய நன்மைக்காகச் சட்டங்கள் இருக்கவேண்டுமேயன்றி சட்டத்திற்குள் மக்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கக்கூடாது. மக்கள் சுதந்திரமாக நீதிநெறி முறைகளோடு வாழவேண்டும்.
சுதந்திரமடைந்தபின் எமது நாட்டில் பிரச்சனைகள் அதிகரித்த வரலாறு மாற்றப்படவேண்டும். இரண்டாவது உலகப்போரின் பின்பு உலக நாடுகள் பெற்ற அனுபவத்தின் காரணமாக உலக அமைதியைப் பேணவேண்டி ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்தையும் இந்நேரத்தில் நாம் எடுத்து நோக்க வேண்டும். சிறய நாடாகிய எம் நாட்டில் இவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருக்கும்போது எப்படி உலக சமாதானம் அமைதி ஏற்படும். சிந்தனைக்கு விடப்படவேண்டிய ஒரு வினாவாக அமைகிறது.
உலகில் தோன்றிய உயிரினங்கள் யாவும் சுதந்திரமுடையன. ஏந்த உயிரையும் கொல்லுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. இது இறைவன் ஆணை. இதை மீறுவோர் தண்டனைக்குரியோரே. ஓர் உயிரை அழிப்பவன் அதை ஆக்க முடியுமா? ஏன்ற விசாரணை மூலம் உயிர்களிடத்து இரக்கமும் அன்பும் உடையவனாக வாழவேண்டும். தான் வாழ்வதோடு உலகத்தையும் வாழவைக்கவேண்டும். இதுவே மனித நியதி.
மானிடஜாதியில் பண்பியல் வளர்ச்சிக்கு சமயவாழ்வே அடிப்படை. சமுதாயத்தில் அன்பு அறம் பண்பாடு சமுதாய ஒற்றுமை என்பவற்றை ஆட்சியால் சட்டத்தால் ஆக்கமுடியாது. சமயம் ஒன்றே மனித சமுதாயத்தினுடைய வளர்ச்சிக்கு உற்றதுணையாகிறது. சமயம் என்பது ஒரு வாழ்க்கைமுறை மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் சாதனமாக சமயம் அமையவேண்டும். புலன்கள் தூய்மையடையவும் இதயம் விரிவடையவும் அன்புபெருகி வேறுபாடுகள் மறையவும் ஒருமை தோன்றவும் ஓருலகம் மலரவும் வழிகாட்டுவதே சமயத்தின் தேவையும் பயனுமாக இருக்கவேண்டும். அந்த வழிமுறைகள் ஏற்கனவே வாழ்க்கையை செவ்வனே நடாத்தி பேரானந்தப் பெருவாழ்வு கண்ட மகான்கள் ஞானிகள் மூலம் எமக்குக் காட்டப்பட்டுள்ளன. புதிதாக நாம் ஒன்றும் ஏற்படுத்தவேண்டிய தேவையில்லை.
பௌத்த சமயம் - அன்புச் சமயம். அறியாமைக்கு எதிராக அறிவை உபதேசிக்கும் சமயம். சாதிப் பிரிவினைகளையும் பிறப்பால் ஏற்படும் உயர்வு தாழ்வுகளையும் உடைத்தெறியும் சமயம். சமதர்மத்தையும் ஜீவகாருணியத்தையும் பெண்ணுரிமையையும் அறிவையும் அன்பொழுக்கத்தையும் வற்புறுத்திக்கூறும் பஞ்சசீலம் - அஸ்டசீலம் - தசசீலம் என்ற கொள்கைகள்மூலம் அன்புவழிதான் உலகிற்குத் தேவையென்று உறுதிசெய்யும் பௌத்தசமயம். துக்கத்திற்குக் காரணம் ஆசை. ஆசையைத் துறந்து நிர்வாணம் என்ற முத்திநிலையைத் தானே கண்டு தெளிந்து அவ்வுண்மைகளை உலகிற்கு உபதேசித்த பௌத்தசமய ஸ்தாபகரான புத்தர் பெருமானின் சமயமும்
கடவுள் ஒருவரே – அவரே அல்லா – அவர்முன் எல்லா மக்களும் ஒருவரே என்ற உயரிய தத்துவத்தையுடைய இஸ்லாமிய நெறியும்,
ஒருவரே கடவுள் ஒருவரே மக்கள் என்ற பத்துக் கட்டளைகளை வாழும் மனிதஇனம் முழுவதற்கும் வழங்கிய யேசுபெருமானின் கிறீஸ்தவ மார்க்கமும்,
சமயச்சார்புடையவர்கள் குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளும் உணர்வுடையவர்களாக கிணற்றுத் தவளைகளாக ஒருபோதும் வாழாது தத்தமக்குரிய மனஆற்றலால் மக்கள் ஒருவரே என விளங்கும் இப்பரந்து விரிந்த உலகைக் காணவேண்;டும் எனத் துணிந்து சிக்காக்கோவில் கூடிய சர்வசமயமாநாட்டில் அனைத்துலக சகோதரத்துவத்தைப்பற்றி முதல்முதல் பேசிய விவேகானந்தர் தோன்றிய இந்துதர்மமும்
இந்நாட்டில் கைக்கொண்டுவருகின்றவேளையில் நமது உடனடித்தேவை – ஒற்றுமையே என உணர்ந்து நாமிங்குகூடி எமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றோம். ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமாயின் முதலில் எம்மிடமுள்ள வேற்றுமைகளை விலக்கிக்கொள்ளவேண்டும். தன்னைப்போலச் சகல மற்றவர்களையும் நோக்கும் தன்மைபெறவேண்டும். பிறரது உணர்ச்சிகளுக்குப் பங்கம் ஏற்படா வண்ணம் வாழத்தெரிந்துகொள்வதற்கு ஆழ்ந்த அன்பும் உயர்ந்த எண்ணமும் பரந்த உள்ளமும் எம்மிடத்தில் குடிகொள்ள வேண்டும்.
சிந்தனை என்ற பேரறிவைக் கொண்ட மனிதன் எதிரில் வருபவனைச் சந்தேகக்கண் கொண்டு பார்க்கின்றான். எங்கே தன்னைக் கொன்றுவிடுவானோ என்று அஞ்சுகின்றான். இந்நிலை மாறவேண்டும். எம்மத்தியயில் அன்பும் அறமும் ஓங்கவேண்டும்.
சமூக ஒற்றுமைக்கு சமயங்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். திரிகரணசுத்தியோடு (அதாவது மனம் வாக்கு காயம்) எல்லோரும் வாழவேண்டும் என்ற உயரிய கொள்கையை ஏற்கவேண்டும்.
எங்கும் ஈசனைக் காணுதல் இன்பமே
ஏதிலார்பால் இரங்குதல் இன்பமே
பொங்கு கோபத்தைப் போக்குதல் இன்பமே
ஏன்றும் வாழக் கருதுதல் இன்பமே
என்ற யாழ்ப்பாணத்துச் சுவாமியினுடைய பாடலை நினைந்து நாமனைவரும் ஒருபரம்பொருளுடைய குழந்தைகள் என்ற உண்மையான சகோதர உணர்ச்சியில் நல்வாழ்வு வாழவேண்டும். அதற்காக இன்று மேற்கொள்ளப்படும் இச் சமூக சமய நடுநிலையத்தின் முயற்சிகள் மேன்மேலும் தொடரவும் அதன்மூலம் நற்பெறுபேறுகளைப் பெறவும் எல்லாம் வல்ல அந்த உண்மைப்பொருளைப் பிரார்த்தனை செய்து மனித சமூகநலனுக்கு இவ்வுமைப்பு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு எம்மால் முடியுமான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்க நாம் ஆயத்தமாக இருப்பதையும் தெரிவித்து எமது கருத்துக்களைச் சமர்ப்பித்து அமைகின்றோம்.
ஓற்றுமை இந்த ஊரிடை ஓங்குக
மற்றும் நற்குணம் முற்றும் ஆகுக
கற்றும் கேட்டும் கழலடி போற்றுக
நற்றவம் இந்த நாட்டில் நிலவுக.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.
வணக்கம்.
(மேற்படி 31.03.1990 01.04.1990 ஆகிய 2 தினங்கள் மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூக சமய நடுநிலையத்தினரால் நடத்தப்பட்ட இன ஒற்றுமை பற்றிய கருத்தரங்கில் மூளாய் இந்து இளைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் என்ற ரீதியில் தங்கராசா முகுந்தன் ஆகிய அடியேனால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.)
Sunday, August 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment