சகோதரி நிவேதிதைக்கு சுவாமிஜியின் எழுச்சிய10ட்டும் கடிதம்
ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம் தை – 2007 இதழில் வெளியானதை காலத்தின் தேவை கருதி பதிவிடுகிறேன்.
லண்டன்
7 ஜூன் 1896.
அன்பார்ந்த மிஸ். நோபிள்
எனது லட்சியத்தை ஒரு சில வார்த்தைகளில் கூறி விடலாம். அது இதுதான்.
மனித இனத்திற்கு அவர்களின் தெய்வீகத் தன்மையைப் போதிப்பதும் வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் அத்தன்மை வெளிப்படுமாறு செய்வது எப்படி என்பதைச் சொல்வதும்தான்.
மூட நம்பிக்கைகளாலான ஒரு சங்கிலியால் இந்த உலகம் கட்டப்பட்டுள்ளது. ஆணானாலும் பெண்ணானாலும் துன்பப்படுபவர்களிடம் நான் அனுதாபம் கொள்கிறேன். துன்புறுத்துபவர்களிடம் இன்னும் அதிகமாக அனுதாபம் கொள்கிறேன்.
துக்கத்திற்கு காரணம் அறியாமையே. வேறு எதுவுமல்ல என்பதைப் பட்டப்பகல் போல் தெளிவாகக் காண்கிறேன்.
உலகத்துக்கு யார் ஒளி தருவார்? பண்டைக்காலத்தில் தியாகமே வாழ்க்கை நியதியாக இருந்தது. வரப்போகின்ற யுகங்களுக்கும் அதுவே நியதியாக இருக்கும். எல்லோரின் நன்மைக்காகப் பூமியின் சிறந்த வீரர்கள் தங்களைத் தியாகம் செய்தேயாக வேண்டும். நிலைத்த அன்புடனும் இரக்கத்துடனும் நூற்றுக்கணக்கான புத்தர்கள் தேவை.
தீவிர வீரியம் கொண்ட அன்புள்ள சுயநலமற்ற வாழ்க்கை உடையவர்களே உலகிற்குத் தேவை. அத்தகைய அன்பு ஒவ்வொரு சொல்லையும் இடிபோன்று இறங்கச் செய்யும்.
உன்னிடம் மூட நம்பிக்கை இல்லை என்பது நிச்சயம். உலகையே அசைக்கவல்ல ஆற்றல் உன்னிடம் உள்ளது என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியும். வேறு ஆற்றல்களும் உன்னிடம் வந்து சேரும். தைரியமான சொற்கள் அவற்றைவிட தைரியமிக்க செயல்கள் இவையே வேண்டியவை.
உன்னதமானவர்களே விழித்தெழுங்கள். விழித்தெழுங்கள்.
துன்பத் தீயில் உலகம் வெந்து கொண்டிருக்கிறது. நீங்கள் தூங்கலாமா?
தூங்குகின்ற தெய்வங்கள் விழித்தெழும்வரையில் உள்ளேயுள்ள தெய்வம் நமது அழைப்பிற்குச் செவிசாய்க்கும் வரையில் கூவி அழைப்போம். இதை விட வாழ்வில் வேறு என்ன உள்ளது? இதை விடப் பெரிய செயல் வேறு எது?
நான் வேலை செய்யச் செய்ய விவரங்கள் வந்து சேர்கின்றன. நான் ஒரு போதும் திட்டங்கள் தீட்டுவதில்லை. திட்டங்கள் தாமாக உருவாகின்றன. தாமாகச் செயல்படுகின்றன. விழித்தெழுங்கள் விழித்தெழுங்கள் என மட்டுமே நான் கூறுகிறேன்.
எல்லா ஆசிகளும் உன்மீது பொழியட்டும்.
அன்புள்ள
விவேகானந்த.
Thursday, August 21, 2008
உன்னதமானவர்களே விழித்தெழுங்கள் - சுவாமி விவேகானந்தர்.
அனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு,
ஆன்மிகம்,
சுவாமி விவேகானந்தர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment