அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 13, 2008

சைவமஞ்சரி

மூளாய் இந்து இளைஞர் மன்றத்தின் (இந்து சமய மன்றம் பின்னர் இந்து சமய மன்றத்துடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.)சார்பில் சைவமஞ்சரி என்ற ஒரு கையெழுத்துப் பிரதியை 1984 - 1985ஆம் ஆண்டுகளில் எழுதிவந்தோம். அதில் எழுதப்பட்ட ஆசி – வாழ்த்துக்கள் - ஆசிரியர் கருத்துக்கள் என்பவற்றில் என்னிடமிருக்கும் ஆதாரங்களைப் பதிவுக்காகவும் - இன்றைய காலகட்டத்திற்கு ஓரளவு உபயோகமானது என்பது கருதியும் இதனைப் பதிவிடுகிறேன்.


குருபாதம்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்
இரண்டாவது குருமஹா சந்நிதானம் - ஆதீன முதல்வர்
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த
பரமாச்சார்ய ஸ்வாமிகள்
மனமுவந்தளித்த
ஆசியுரை

அன்புடையீர்,
மூளாய் இந்து இளைஞர் மன்றம் ‘சைவ மஞ’சரி’ என்ற சஞ்சிகையை வெளியிடுவதறிந்து பெருமகிழ்ச்சியடைகிறோம். இக்கால கட்டத்தில் மனிதமனம் நாடுவது அமைதி, சுகம், சாந்தி. இதற்கேதுவான வழி ஒன்றே ஒன்று. மனம், வாக்கு, காணம் இவற்றை இறை சிந்தனையில் ஒருவழிப்படுத்துவதான வழிபாடாகும். லௌகிக இன்பங்களில் மனதைச் சிதறுறவிடாமல் எல்லாம் ஈசன் செயல், எம் செயலாலாவது ஒன்றுமில்லை எனப் பரம்பொருளின் பாதாரவிந்தங்களில் சரணடைவதே, மானுடப் பிறப்பின் முழுநோக்கமாக இருக்கவேண்டும்.

இளைஞர்களின் உள்ளங்களிலே தெய்வ நம்பிக்கை, தெய்வ உணர்வு வளர வேண்டும். இதற்கான கட்டுரைகள், அருள்வாக்குகள், கதாரூபமான தத்துவக் கருத்துக்கள் ‘சைவ மஞ்சரி’யில் வெளிவரவேண்டும்.

தெய்வ நம்பிக்கை இல்லாத உள்ளத்தில் மனச்சாட்சி வேலைசெய்யாது. நீதி உயிரற்றுப் போகும். பண்பாடு புதைந்துவிடும். தங்களது சைவப்பணி மேன்மேலும் வளர்ந்தோங்க வேண்டுமென இறையருளைச் சிந்தித்து உளமார ஆசீர்வதிக்கின்றோம்.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

11.01.85. ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரியசுவாமிகள்

-----
ஓம்

Balar Gnanothaya Sabai பாலர் ஞானோதய சபை
(Estd: 1946) (ஆரம்பம்: 1946)
Kasivinayaga Devasthanam காசிவிநாயக தேவஸ்தானம்
Tellippalai தெல்லிப்பழை
Sri Lanak ஸ்ரீலங்கா
President தலைவர்
Bramma Sri S Ganeshalinnga Kurukkal பிரம்மஸ்ரீ சி. கணேசலிங்கக்குருக்கள்
30.05.1984

ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்ஞான குரு வாணிபதம் நாடு.

ஆசிச்செய்தி

மூளாய் இந்து மா மன்றம் பயனள்ள பல சைவப்பணிகள் செய்து வருவது போற்றத்தக்கது. அதன் கையெழுத்துப்பிரதியாகச் சைவமஞ்சரி வெளிவர இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். சமய வளர்ச்சிக்குச் சஞ்சிகைகள் அருந்தொண்டாற்ற முடியும். ஆந்த வகையில் சைவமஞ்சரியும் சமய விஷயங்களை எடுத்து விளக்கவேண்டும். செல்வன் த. முகுந்தன் அவர்களின் சமயப்பற்றும் அயராத உழைப்பும் போற்றத்தக்கது. மன்ற உறுப்பினர்கட்கும் தலைவர் செயலாளர் ஆகியோருக்கும் எமது பாராட்டுக்கள். மேலும் சைவமஞ்சரி நல்லவிஷயங்களுடன் சிறப்பாக வெளிவருவதற்கு விநாயகப் பெருமானை வேண்டுதல் செய்து எனது நல்லாசிகளைத் தெரிவிக்கின்றேன்.

சி. கணேசலிங்கக்குருக்கள்
தலைவர்

------தேவி துணை
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்தெல்லிப்பழை
Sri Durka Devi Devasthanam, Tellippalai, Sri Lannka.
T’phone: 243 Chunnakam

ஆசியுரை

இன்று நம் நாட்டிலே திருக்கோயில்களும் சமய மன்றங்களும் சைவ சமய வளர்ச்சியில் பெரும்பங்கெடுத்து வருவதை யாபேரும் அறிவர். இவ்வடிப்படையில் மூளாய் இந்து சமய மன்றம் கடந்த 1978ம் ஆண்டிலே ஆரம்பமாகி பல சிறப்பான பணிகளை ஆற்றி வருகிறது. இப் பணியின் ஒரு சின்னமாக சைவமஞ்சரி என்னும் சஞ்சிகை கையெழுத்துப்பிரதியாக வெளி வருவது பாராட்டுக்குரியது. இம்மன்றத்தின் புனிதமான சேவைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

இம்மன்றத்தையும் சஞ்சிகையையும் வாழ்த்துவதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் மன்றப் பணியில் மிக ஈடுபாடு கொண்டுள்ள செல்வன். த. முகுந்தன் அவர்களைப் பாராட்டுவதும் எனது கடனாகும்.

தன் கடன் அடியேனையுந் தாங்குதல்ஏன் கடன் பணி செய்து கிடப்பதே என்பதற்கிணங்கப் பணிபுரிந்து பக்தி செலுத்தி வாழ்வது மன்றத்தினரது தலையாய கடனாகும்

தங்கம்மா அப்பாக்குட்டி
தலைவர் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை

நிர்வாகசபை Managing Committee

தலைவர் துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி JP
உப தலைவர்கள் திரு. நம. சிவப்பிரகாசம் திரு. ந. பொன்னம்பலம்
இணைக் காரியதரிசிகள் திரு. சு. சிவவாகீசர் டீயு திரு. க. தணிகாசசலம்
தனாதிகாரி திரு. அ. சண்முகநாதன்
உப தனாதிகாரி திரு. ச. ஆறுமுகநாதன்

----

“மில்க்வைற் செய்தி ஆசிரியர்”
சைவப் புலவர், பண்டிதர்
திருவாளர் க.சி. குலரத்தினம் அவர்கள்
ஆசிச் செய்தி

மூளாய் சித்தி விநாயகப் பெருமான் திருவருளால் அங்கே சைவப்பிரகாச வித்தியாசாலை மலர்ந்து பெருமளவில் சைவத்தமிழ் பரந்து வளர்ந்தோங்க வசதியும், வாய்ப்பும் செய்தது எனலாம். சைவத் தமிழ்ப் பண்ணையாகச் செழித்த அந்தவூ10ரிலே பாரம்பரியமாகப் புலவர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள் தோன்றி முத்தமிழ் வளர்த்து வந்துள்ளனர். அந்தப் பரம்பரையில், இன்று முளைகொண்ட சமுதாயம் இளம்பருவத்திலேயே நல்லமுறையில் செந்தமிழ்ப் பற்றுக்கொண்டு சிறந்த சேவை செய்வது கண்ணாற் காணக்கூடியதாகவுள்ளது. குழந்தைகள், சிறுவர்களுக்கான பத்திரிகைகள், நு}ல்கள் அதிகம் நிலவாத எங்கள் நாட்டில், கையெழுத்துப் பிரதியாக ஆங்காங்கே சில ஊர்களில் இளைஞர்கள் பத்திரிகைகள் தயாரித்துத் தங்கள் உள்ளக் கருத்தை வெளியிட வாய்ப்புச் செய்தமை பெருமகிழ்ச்சிக்கு உரியதாகும். இவர்களை நாம் வெகுவாகப் பாராட்டுவதோடு எம் ஆசிச் செய்தியாக இதனை அவர்களுக்காக எழுதுகிறோம். இவர்கள் முயற்சி நன்றாக எல்லாம் வல்ல சித்தி விநாயகப் பெருமான் திருவருள் முன்னிற்பதாக.

கந்தர்மடம், இவண்,
யாழ்ப்பாணம், க.சி.குலரத்தினம்.
11.1.85.

-----

ஆசிரியர் முகவுரை

சமய நம்பிக்கை நாளடைவில் பின்செல்லப்படுவதை நான் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. நாட்டின்நிலை ஒருபுறமும், கேளிக்கை நிகழ்ச்சிகள் ஒரு புறமும் மனதை சலனப்படுத்துகிறது. மனம் சாந்தி பெறுவதற்கு சமய அறிவு நு}ல்களை வாசித்து அமைதி பெறல் அவசியம். கந்த புராணம், திருவிளையாடற் புராணம், பெரிய புராணம போன்ற புராணங்கள் மிகவும் அறிவு பொருந்திய நு}லாகும். நாட்டின் நிலை மோசமடைவது ஏனெனில் உலகில் அநீதி தாண்டவமாடுவதையே குறிக்கிறது. நாடு செழிக்க வேண்டுமாயின் ஒவ்வொரு ஊரும் சிறக்கவேண்டும். ஊர் சிறக்க வேண்டுமாயில் ஆலயங்கள் சிறக்க வேண்டும். மூளாயைப் பொறுத்தவரை சுமார் இரண்டாயிரம் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் ஆலய வழிபாடு செய்வோர் மிகமிகக்குறைவு. ஆதலால் யாவரும் ஆலய வழிபாடு செய்தல் அவசியம்.தவறாது ஆலய தரிசனம் செய்துவரல் மனதிற்கு அமைதி மட்டுமல்லாது பாவங்களைப் போக்கவும் உதவும். மக்கள் தினமும்ஆலய வழிபாடு செய்யமுடியாது விடின் விசேட தினங்களிலாதல் சென்று வழிபாடு செய்து மனச்சாந்தி பெறுவீர்களாக.

த. முகுந்தன் (ஆசிரியர்)

-----

ஆசிரியர் அரங்கு - இதழ் 5 (17.10.1984) இரத்தா~p ஆண்டு ஐப்பசி மீ

ஆங்கில மாதந்தோறும் வெளிவந்த இதழை திடீரென தமிழ்மாதந்தோறும் வெளிவர ஏற்பாடு செய்தமை, “வாணி விழா” நடைபெற்றமையால் ஏற்பட்ட சில நிகழ்ச்சிகளால்தான். அத்துடன் தமிழ்மாதம் சமய வைபவத்திற்கு ஏற்றது எனக் கருதியமையாலும்.

சைவமஞ்சரி இதழை மாணவர்களைவிட அதிகமாகப் பெரியோரே அக்கறையாக வாசிப்பதை எமது குழு கண்கூடாகப் பார்க்க முடிந்துள்ளது. தற்போதைய காலகட்டத்திலே சமய, கலை கலாச்சாரப் பண்புகள் மாறிவருவதும் ஓர் எடுத்துக்காட்டு. எனவே அப்பண்புகளை மாறாது நாமே பேணிப்பாதுகாத்தல் மட்டுமல்லாது ஏனைNயுhரையும் அவ்வழியிலே செயற்பட நல்லுரை கூறவேண்டும்.

மலர் தனது நலத்தைத் தனக்கென்று வைத்திராதது போல நல்லவர்கள் தம்மிடமுள்ள நற்குணங்களை மற்றயவருக்கும் தெரியப்படுத்தி நல்லுரை வழங்கலவசியம்.

த. முகுந்தன் (ஆசிரியர்)

-------

ஆசிரியர் கருத்து - இதழ் 8 (14.01.1985) இரத்தாசி ஆண்டு தை மீ


“குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்று அருணகிரிநாதர் கந்தரநுபூதியிலும்,
“இறவாமற் பிறவாமல் எனையாள் சற்குருவாகிப் ...” என்று திருப்புகழிலும்,
“கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க” என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்திலும் குருவினுடைய அருளை மிகவும் திறமையாகக் கூறுகின்றார்கள்.

திருப்பெருந்துறையிலே, குருந்தமர நிழலிலே குரு அருளைப்பெற்ற மணிவாசகர், அவர்தம் புகழைத் தம் திருவாசகத் தேனிலே மிகச் சிறப்பாகச் செப்புகின்றார். இதே போலத்தான் குமரக் கடவுளாகிய முருகனிடம் அருணகிரிநாதரும் தமது குருவைச் சிறப்பாகத் திருப்புகழில் இயம்புகிறார்.

அப்படியான ஒரு குருவை நாம் தேடி எமது அறியாமை என்னும் கொடிய இருளை நீக்கி மெய்யுணர்வை அறிதல் அவசியம். இந்த விடயத்தில் மாணிக்கவாசகரது திருவாசகத் தேனிலுள்ள சிவபுராணத்தின் ஒரு சில அடிகளை நாம் விளங்கிக் கொள்ளல் அவசியம்.

“மறைந்திட மூடிய மாய இருளை அறம், பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி ...” என்னிடத்தே வெளிப்பட்டும் மறைந்தும் இருக்கின்ற மாயா இருளாகிய மலங்களை அழித்து, எளியேன் அறம், மறம் என்பவற்றைப் பயின்று, அறஞ் செய்தலினால் விருப்பமும், மறம் செய்தலில் வெறுப்புமுடையவனாகி, அந்நல்வினை தீவினைகளை ஒத்த பண்பினவாக்கிக் குரு தரிசனம் பெற்றுத் தன் திருவடிக் காட்சி பெற்று, ஆனந்தத்தில் மூழ்கிய விதத்தைத் தம் நாவினால் செப்புகிறார் மணிவாசகர். மணிவாசகப் பெருமான் இறைவனால் பலமுறை சோதிப்புக்குள்ளானார். எனினும் அவர் இறைவனை அடையும் வழியிலே மிகுந்த அக்கறையுடையவராகவே இருந்தார். ஆனால் எம்மைப் பொறுத்தவரையிலே எம்மவரிற் பலர் இடர்களையும், துன்பங்களையும் கண்டு அஞ்சி தமதியல்பினை மாற்றுகின்றனர். “எல்லாம் அவன் செயல்” என்றும், “அவனன்றி அணுவும் அசையாது” என்பதற்கும் ஏற்றவகையிலே, எம்மை இரட்சிக்கும் அந்தப் பரம் பொருளை அடைதலே இவ்வாழ்வின் நோக்கம் என்பதற்கேற்ப அதற்கேற்ற சுலபமான வழியாகிய குருவருளைப் பெற்றுய்வோமாக!

அப்படிப்பட்ட ஒரு குருதேவரை நான் இதுவரை என்கண்களாலே காணவில்லை. ஆயினும் எனது மெய்யுணர்வினாலே ஒருசிலரின் உதவியோடு எனது குருவின் தீர்க்கமான தரிசனத்தை அறிய முடிந்தது. அந்த ஒரு சிலர் வேறுயாருமல்ல, அளவையூர் ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமத்தினரும், கோப்பாய் ஸ்ரீ சுப்பிரமுனிய கோட்டத்தினருமேயாவர். குருதேவர் ஸ்ரீ சுப்பிரமுனிய சுவாமிகளுடைய வழியிலே சைவசமயத்தை வளர்க்கவும், அதன்வழியிலே செல்லவும் நான் என்றென்றும் உறுதி செய்வேன் என்று நான் சென்ற 5ந்திகதி (05-01-1985) அளவெட்டியில் எனது அங்கத்துவப் படிவத்தை நிரப்பியும், யோப்பாயில் சத்தியப் பிரமாணஞ் செய்தும் ஏற்றுக்கொண்டேன். அன்றிலிருந்து நான் விடுதலை பெற்ற ஒரு மனிதனாக வாழ்கிறேன் என்பதில் சற்றேனும் ஐயமில்லை.

எனது வாழ்விலே என்றும் மறக்கமுடியாத இச்சம்பவம் உங்களுக்கும் தெரிய வேண்டும் என்ற வகையில் எனது கருத்தாக சமர்ப்பிக்கின்றேன்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

த. முகுந்தன் (ஆசிரியர்)

1 comment:

Anonymous said...

Amiable post and this enter helped me alot in my college assignement. Say thank you you as your information.