அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, March 4, 2010

உதயசூரியன் வீறுகொண்டு எழுவான் என்ற நம்பிக்கையில் உங்கள்முன் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன் - வீ. ஆனந்தசங்கரி (2004.10.24).

2004 தேர்தலின்போது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை - தேவை கருதி பதிவிடப்படுகிறது.

பத்திரிகைச் செய்தி - உதயசூரியன்

தமிழர் விடுதலைக் கூட்டணி தந்தை செல்வா அவர்களால் உயர்ந்த இலட்சியத்துடன் பல சிரமங்கள், விட்டுக்கொடுப்புக்கள் மத்தியில் சகலரினதும் மனப்பூர்வமான சம்மதத்துடன் உருவாக்கப்பட்டது. தமிழ்ப் பேசும்மக்களால் மிகவும் மதிக்கப்பட்டுவந்த, தானே உருவாக்கிய தமிழரசுக்கட்சியையும் அக்கட்சியின் சின்னமாகிய “வீடு” சின்னத்தையும் எக்காலத்திலும் எத்தேர்தல்களிலும் பயன்படுத்தக்கூடாது என எண்ணி முடக்கிவைத்துவிட்டு அன்றைய அரசின் அடக்குமுறைக்கு விடிவுகாணவும், அரசிற்கு சவாலாகவும் தமிழினத்தின் விடியலின் சுடராக, வீறுகொண்ட கதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியையும், அதன் சின்னமாகிய உதயசூரியனையும் தேர்ந்தெடுத்து தந்தையாலேயே கட்சி உருவாக்கப்பட்டது.

தந்தை அவர்களின் தியாக உணர்வுக்கு மதிப்பளித்து, அன்னாரின் முயற்சியின் தமிழின விடுதலையின் அப்பழுக்கற்ற எண்ணங்கள் உள்வாங்கப்பட்டிருந்ததன் உண்மையும், யதார்த்தத்தையும், விசுவாசத்தினையும் கண்டுகொண்ட அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களும் தாம் உருவாக்கிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியையும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைத்துக்கொண்டார். இரு பெரும் தலைவர்களும் கடந்தகால மனக் கசப்பான சம்பவங்கள் அனைத்தையும் மறந்து மனம்விட்டுப்பேசி இதயசுத்தியுடன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களையும் தம்முடன் இணைத்து தமிழினத்தின் விடியலுக்காய் முக்கூட்டுத் தலைவர்களாக மூவரும் தமிழினத்தின் முன்னால் பகிரங்கப்படுத்தினர்.

பல்வேறு கட்சிகளில் இருந்த பல தமிழர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையினை ஏற்று 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் உயர் அரசியல்பீடமாக திகழ்ந்தது. தமிழ் மக்களின் உயர்பீடம் அண்மைக்காலமாக படிப்படியாக சிதைக்கப்பட்டமைக்கு முதலடி எடுத்துவைத்த பிரமுகர் யார் என்பதையும், இரண்டாவது அடிஎடுத்து வைத்த பிரமுகர் யாரென்பதையும் மக்கள் நன்கறிவர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும், தமிழரசுக் கட்சியும் மீள இயங்கவைக்கப்படவேண்டும் என மனதார நினைப்பதே அமரர்களான தந்தை செல்வா அவர்களுக்கும், சட்டமேதை ஜீ.ஜீ. பொன்ன்மபலம் அவர்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும். இத் துரோகத்தினைச் செய்பர்களை எண்ணி வேதனைப்படுவதா? வேட்கப்படுவதா? என ஏங்கும் மக்களுள் நானும் ஒருவனாக இருப்பதை மக்கள் நன்கு அறிவர். பட்டம் பதவிக்காக பலதும் செய்யும் சிலர் எதையும் செய்யத் துணிவர். ஆனாலும் உள்ளதை,உண்மையை உரிய நேரங்களில் வழிதவறும் சந்தர்ப்பங்களில் சொல்லவேண்டியதும், செய்யவேண்டியதும் என்கடமை என நான் கருதுகின்றேன். அதனை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.

ஏறக்குறைய 50ஆண்டுகள் அரசியலில் இணைத்துக்கொண்டுள்ள நான் என்றும், இன்றும், இனியும் இனவாதிகளுக்கோ, பேரினவாத சக்திகளுக்கோ விலை போனவனுமல்ல. விலைபோகப்போகிறவனுமல்ல. 1961ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் முதல் இன்றுவரை இனத்தின் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவன் நான். பதவிக்காக பறந்து திரிந்து அலைந்து திரியாதவன் நான். எமது சுய ஆசை எமது இனத்தின் விடுதலைக்கு விலையாகிப்போய்விடக்கூடாது என்ற கண்ணியத்துடன் எனக்கு மக்கள் தந்த ஆணையினை இன்றுவரை ஒருஇலட்சியத்துடன் அரசியல் நடத்துபவன், பேசுபவன் நான். உள்ளதை உள்ளபடி நேருக்குநேர் சொல்பவனும் அதனையே செய்பவனும் நான். எக்காலத்திலும் எம்மினத்தைக் காட்டிக்கொடுத்து வாழ்வதை கனவிலும் நினையாதவன். சுதந்திரக்காற்றை முற்றுமுழுதாக சுவாசிக்க விருப்பம்கொண்டு இருக்கும் எம்மினத்தினுள் நானும் ஒருவன். நாம் பிறந்த மண்ணில் சுதந்திரமாக நடமாட, கூட்டமாக நின்று உரையாட, களங்கமற்று சிரித்துவாழ ஆசைப்படும் உங்களில் நானும் ஒருவன். சமாதான முயற்சிக்கோ, அதற்கு ஊறுவிளைவிக்கவோ எச்சந்தர்ப்பத்திலும் உடந்தையாக நான் இருக்கமாட்டேன். ஏனெனில் மக்களாகிய உங்களைவிட பெரும்பாலான சுதந்திரங்கள், உரிமைகள், மறுக்கப்பட்ட. தடுக்கப்பட்ட நிலையில் இருப்பவன்நான். எனக்கே இந்நிலையாயின், உங்கள் நிலை எவ்வாறானதாயிருக்கும் என்பதை தெரியாதவன் நானல்ல.

நாம் பிறந்தமண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற பெரும் விருப்புடன் எம்மை வழிநடத்திய பெருந் தலைவர்களின் வழிகாட்டலில் கால்பதித்து நடந்துவந்து - இன்று அவர்கள் கண்ட இலட்சியக் கனவு கனிந்துவரவேண்டும் என்ற கொள்கைப்பற்றுடன் தந்தை வழிநின்று சிந்தை சிதறாது செயலாற்றவேண்டிய தேவை என்மீது சுமத்தப்பட்டுள்ளது.

என் அருமைத் தம்பிகள் மாவை. சேனாதிராசா, ரவிராஜ் போன்றவர்களில் நம்இனத்தின் எதிர்காலத்தினை ஒப்படைத்து மறைந்த தலைவர்களுக்கு துரோகம் செய்யவிரும்பாது துணிவுடன் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

தேர்தல்காலம் என்பதால் பலரும், பலவிதமான கருத்துக்களை இட்டும், வைத்தும் சொல்வார்கள். நான் எதனையும் இட்டுக்கட்டிச் சொல்லவேண்டிய தேவையில்லை. எனது அத்தனை செயற்பாடும் திறந்த புத்தகமாகவே உங்கள்முன் பரந்து விரிந்து இருப்பதும், அதன்மூலம் நீங்கள் என்மீது வைத்துள்ள பற்றுதலுக்கும் எச்சந்தர்ப்பத்திலும் குந்தகம் ஏற்படாது செயற்படுவேன் என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன்.

தமிழ் மக்களின் உயர் அரசியல்பீடமாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெரும் விருட்சம் அடியோடு வெட்டித்தறித்து விறகாகிவிடக்கூடாது என்பதற்காகவே எக்கட்சிச் சின்னத்திலும் போட்டியிடவிரும்பாது எம்மூத்த தலைவர்களின் ஆத்ம ஆசியுடன் சுயேட்சையாக இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

உதயசூரியன் அஸ்தமனமாகிவிட்டான் என செய்திகள் வெளிவந்தபோது எம்கட்சியில் ஒருவர் சிரித்துக்கொண்டாலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்கள் வேதனைப்பட்டு உங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தி என்ன சொன்னீர்கள் என்பதை நான் மறக்காது மீண்டும் உதயசூரியன் வீறுகொண்டு எழுவான் என்ற நம்பிக்கையில் உங்கள்முன் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

மறைந்த அமரர்களான தந்தை செல்வா அவர்கள், சட்டமேதை ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள், தலைவர் சௌ. தொண்டமான் அவர்கள் எம்முடன் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதை அடையாளப்படுத்தும் உதயசூரியனை புகார்கள், முகில்கள், மேகங்கள் மறைத்தாலும் அது தற்காலிகமானதே. சகலதையும் உடைத்தெறிந்து மீண்டும் உதயசூரியன் பரிசுத்தமாக பிரகாசிப்பான். அதனை நிறைவேற்றும் கடமை உங்களின் ஆதரவுடன் எம்கைகளுக்கு மீண்டும் வரும் - அதுவரை ஓயாது அம்முயற்சியில் நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம். வாருங்கள்.

நன்றி


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி,
24.10.2004.

No comments: