அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, March 7, 2010

நாம் எங்கே செல்கிறோம்? - பிரபாகரனுக்கு சங்கரியின் கடிதம்

10.09.2006

திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன்;
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
கிளிநொச்சி


நாம் எங்கே செல்கிறோம்?


அன்புடைய தம்பி,

பெற்றோர்களுடைய ஆட்சேபணை, அழுது புலம்பல் முதலியவற்றை பொருட்படுத்தாது போருக்குச் சேர்ப்பதற்காக வீடு வீடாக சென்று உங்கள் போராளிகள் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதிகளில் பிள்ளைகளை பலாத்காரமாகப் பிடித்துச் செல்வதாக நம்பிக்கையுடைய வட்டாரங்களிலிருந்து எனக்குச் செய்திகள் வந்துள்ளன. இச்செயலை நான் வன்மையாக கண்டிப்பதோடு தொடர்ந்து பிள்ளைகளை பிடிப்பதை நிறுத்தி பிடித்தவர்களையும் தாமாகச் சேர்ந்தவர்கள் யாரும் இருப்பினும் அவர்களையும் உடன் விடுவிக்குமாறு மிக அன்புடன் வேண்டுகிறேன். இந்த நிலை தொடருமாயின் தமிழர்கள் இலங்கையில் மிகச்சிறிய சிறுபான்மையினராக ஆகிவிடுவதோடு விரைவில் தனித்துவத்தையும் இழந்து விடுவார்கள்.

உண்மையில் தற்போது நீங்கள் போரில் தோல்வியை தழுவி வருகின்றீர்கள். எனது கணிப்பின் பிரகாரம் உங்களின் ஈழத்திற்கான போர் எதுவித பயனுமின்றி சடுதியான ஒரு முடிவைக் காணப்போகின்றது. எப்பக்கம் திரும்பினாலும் அழிவையே காணக்கூடியதாக இருக்கின்றது. மொத்தத்தில் உங்களது 23வருட ஆயுதப்போர் எமது மக்களையும் மாட்டுவண்டிக்காலத்துக்குப் பின்தள்ளியுள்ளது. மேலும் தற்போதுள்ள நிலமைகளை இன்னும் மோசமடையச் செய்ய விடாது உங்கள் போராட்டத்தை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலம் ஓர் தீர்வைக் காண்பதற்கு ஏதுவாக அனுபவம் வாய்ந்த மூத்தோர்களிடம் விட்டுவிடுங்கள்.

இலங்கையில் பிரிவினையை அனுமதிக்கப்போவதில்லையென இந்தியா பலதடவையும் வற்புறுத்திக் கூறியுள்ளது என்பது மட்டுமல்ல அதைத் தடுப்பதற்காகவும் உறுதியும் ப+ண்டுள்ளது. இலங்கையில் வாழும் இனங்கள் எதிலும் அன்பு கொண்ட காரணத்தாலோ அல்லது வெறுப்பு காரணமாகவோ இந்நிலைப்பாட்டை இந்தியா விடுக்கவில்லை. தன்னலங்கருதியே அவ்வாறு செய்கின்றது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது நாட்டில் எழுப்பப்பட்ட பிரிவனைக்கோஷத்தை அது புதுப்பிக்க விரும்பவில்லை.

சர்வதேச சமூகத்தின் உற்சாகம் குன்ற முன்பும் யுத்தத்தால் சிதைந்து போன பகுதிகளை மீளக்கட்டி எழுப்பவும் அபிவிருத்தி செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகைப் பணத்தை மீளப்பெற முன்பும் ஒருதலைப்பட்சமாகவேனும் யுத்தநிறுத்தத்தை பிரகடனப்படுத்துங்கள். எதிர்கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஓர் இடைக்கால நிர்வாகத்தைக் கூட பேசிக்பெறமுடியும். ஆனால் நாட்டு நிலைமை தெரியாத சில நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையை ஒத்ததாகவல்ல. இக்கட்டத்திலாவேனும் எனது ஆலோசனையைக் கேட்டு யுத்தத்தை கைவிட்டு மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்களேயானால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுவதோடு பலகோடி பெறுமதியான சொத்துக்களும் காப்பாற்றப்படும். அதைவிட யுத்தத்திற்காக செலவிடப்படும் பலகோடிக்கணக்கான பணம்கூட யுத்தத்தினால் சிதைந்து போயிருக்கும் பகுதிகளை அபிவிருத்தி செய்யப் பயன்படும்.

என்மீது உங்களுக்கு நம்பிக்கையிருப்பின் எது எவ்வாறு செய்யப்பட வேண்டுமென நீங்கள் கூறலாம். இந்தியர்கள் எதுவித பிரிவினைக்கும் எதிர்ப்புத்தெரிவிக்கும்பட்சத்தில் உங்களுக்கு எஞ்சியுள்ள ஒரே ஒருவழி அவர்களுடன் முரண்படுவதை விடுத்து இந்திய முறையிலான ஓர் தீர்வுக்கு உடன்படுவதே. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமயப்பெரியோர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் பலருடன் நான் பேசியுள்ளேன். எனது அபிப்ராயப்படி அனேக இலங்கையர்கள் எனது ஆலோசனைக்கேற்ப ஓர் தீர்வை ஏற்பார்கள். நீங்களும் சம்மதிக்கும் பட்சத்தில் இத்திட்டத்திற்கு இருக்கும் சிறு எதிர்ப்புக்களும் அற்றுப்போய்விடும் என உறுதியாக நம்பகிறேன். பெரும்பகுதியான மக்கள் இந்திய முறையை ஏற்பார்கள். நூறு ஆண்டுகள் நீங்கள் தொடர்ந்து போரிட்டாலும் இந்தியாவின் எதிர்ப்புள்ளவரை தனிநாடு சாத்தியமானதல்ல. எனவே பிரயோசனமற்ற முறையில் மேலும் பல உயிர்களை பலிகொடுக்காது யுத்தத்தை நிறுத்தி ஓர் தீர்வுக்கு சம்மதம் தெரிவியுங்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான ஆரம்பவேலைகளை மேற்கொள்ள நான் உட்பட பல நம்பிக்கையுரியவர்கள் உள்ளனர். நான் எமது மக்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் மீளக்கொண்டுவர உண்மையாகவும் விசுவாசமாகவும் உழைக்கின்றேனே அன்றி அதிகாரத்தை பெறவோ அல்லது இலாபம் சம்பாதிக்கவோ அல்ல என்பதை உறுதியாக நம்புங்கள்.

எமது பிரச்சினைகளுக்கு விரைவான நல்லதோர் தீர்வைக் காணக்கூடிய நல்ல ஆலோசகர்களை நான் உமக்கு எழுதிய பல்வேறு கடிதங்களில் குறிப்பிட்டுள்ளேன். அவைகள் எதற்கேனும் பதிலோ வேறு எதுவிதத்திலுமோ தொடர்பு கொள்ளப்படவில்லை. இன்றைய இக்கட்டான நிலைக்கு காரணம் யார் என எண்ணுகின்றீர்கள்?.

உங்களது செயற்பாடுகள் அத்தனைகளையும் என்றும் தப்பவிடாது மிகைப்படுத்திப் பாராட்டுபவர்கள், உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டாது உங்களை உயர்வாக பேசுபவர்களும் எழுதுபவர்களும,; உங்களைப் போற்றியும் அரசியல் விரோதிகளை தூற்றியும் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்கள், எதுவித நியாயம் இன்றி கொலைகள் செய்பவர்கள், இடம் பெயர்ந்த தமிழர்களில் சிலர் சுயநலம் கருதி கண்மூடித்தனமாக உங்கள் புகழ்பாடுபவர்கள், பிறநாடுகளில் இருந்து தம்மை நிபுணர்கள் எனக்கூறிக்கொண்டு உங்களுக்காகப் பேசவருபவர்கள, எல்லாவற்றிற்கு மேலாக சு.ப.தமிழ்ச்செல்வன், கலாநிதி அன்ரன் பாலசிங்கம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் காரணமாவார்கள்.

திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகள் பல சர்வதேச சமூகத்தினரின் கிண்டலுக்கு வழிவகுக்கின்றன. உதாரணமாக தாமே தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பது மற்றும் பொதுமக்களே கோபம் கொண்டு கிளைமோர், கைக்குண்டு தாக்குதல்கள் போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்பன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மோசடிகள் மூலம் தேர்வானவர்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் திரு. தமிழ்ச்செல்வன் உங்களின் மற்றும் சில அரசியல் தலைவர்கள் போல இவர்களும் தமது பலத்தினை அறியாது அடிக்கடி போரை ஆரம்பிக்க வேண்டிவரும் என்று மிரட்டுகிறார்கள். ஓர் அரசுடன் போர் என்பது முழு சர்வதேச சமூகத்துடனும் போரிடுவதற்கு ஒப்பாகும் என்பதை இவர்கள் உணர்வதில்லை. அன்ரன பாலசிங்கத்தின் மாவீரர் தின உரைகளைப்படித்துப்பாருங்கள். பொருத்தமான பேச்சுக்கள் அல்ல. அத்தோடு மாவீரர்களை அவமதிப்பதாகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களையும் கொண்டுள்ளன.

சிலர் திரு. அமிர்தலிங்கம் தமது தலைவர் என்றும் அதன்பின் நீர்தான் தலைவர் என்றும் கூறி வருகின்றனர். இவர்கள் உங்களுடைய உண்மையான ஆதரவாளர்களாக இருக்க முடியுமா?. முன்னைநாள் இந்தியப் பிரதமர் கௌரவ ராஜீவ் காந்தி, எதிர்கட்சித் தலைவர் கௌரவ திரு. அமிர்தலிங்கம், ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா, ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசநாயக்கா, வெளிவிவகார அமைச்சர் திரு. லக்ஷ்மன் கதிர்காமர், ஆகியோரின் படுகொலைகளும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா ஆகியோர் மீதான கொலை முயற்சிகளும் உங்களையும் உங்கள் இயக்கத்தையும் மவுசு இழக்கச்செய்தது. முதற்கொலையுடன் தவறை உணர்ந்து ஏனைய கொலைகளையும் நீங்கள் நிறுத்தியிருக்க வேண்டும்.

பல தமிழ் இளைஞர்கள் சரியோ தவறோ விடுதலைப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆர்வத்துடன் பல்வேறு குழுக்களில் சேர்ந்தனர். உங்கள் இயக்கம் முன்னிலை வகிக்க விரும்பியிருந்தால் ஏனைய இயக்க உறுப்பினர்களை வென்றெடுத்திருக்கலாம். அதை விடுத்து உங்கள் போராளிகள் அவர்களை வேட்டையாடித் தீர்த்தனர். தம்மைப் போன்று தமிழ்த்தாய்மார் பெற்றெடுத்த பிள்ளைகள் என அவர்கள் உணரத்தவறிவிட்டனர். இச்செயல்கள் உங்களைப் பலப்படுத்தாது பலவீனமடையச்செய்து விட்டது. இன்றுவரை உங்கள் போராளிகள் தமது தவறுகளை உணரவில்லை. தமது இயக்கங்களை விட்டு வெளிவந்து விவாகம் செய்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்களைக்கூட விட்டுவைக்காது அவர்களின் மனைவி பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்கின்றனர். அனுபவமோ, போதிய கல்வியறிவோ அற்ற இளைஞர்கள் சிலர் கைத்துப்பாக்கியுடன் விடுதலைப்புலிகளின் பிஸ்டல் குழுவெனக் கூறிக்கொண்டு கண்மூடித்தனமாக மக்களைச் சுட்டுதள்ளுவதை எம்மக்கள் விரும்புவார்களா?. உங்களின் பிஸ்டல் குழு எனக்கூறிக்கொள்ளும் ஒரு கோஷ்டி அதிபர்களை, ஆசிரியர்களை, சட்டத்தரணிகளை, அறிவாளிகளை என எவரையும் விட்டு வைக்கவில்லை. யாழ்பல்கலைக்கழகத்துக்கு சிறந்ததோர் துணைவேந்தர் டாக்டர் ரட்ணஜீவன் கூலை வரவிடாது நாடுகடத்தியதோடு சிறந்ததோர் மேதை திரு. கேதீஸ்வரன் லோகநாதனையும் அண்மையில் கொலை செய்ததை நாடே அறியும். தமிழ்ச்சமூகம் பெருமைப்படும் இவர்கள் சிறந்த தேச பக்தர்கள் மட்டுமல்ல பெரும் தியாகிகளும் கூட. வெறும் வேலை தேடி அலைபவர்கள் அல்ல.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் மக்களோடு பழகி அரசகட்டுப்பாட்டு பிரதேச மக்களை தம்பக்கம் வென்றெடுக்கும் வாய்ப்பையும் மக்களுக்கு அரசியல் போதிக்கும் நல்வாய்ப்பையும் தந்தது. உங்களால் வெளியேற்றப்பட்டு நொந்து போய் உள்ள இஸ்லாமிய சகோதரர்களைச் சாந்தப்படுத்தி மீண்டும் அவர்களை மீளக் கூடியமர்த்தும் வாய்ப்பையும் தந்தது. இவற்றைச் செய்யாது உமது போராளிகள் தம் அதிகாரத்தை பாவித்து எம்மக்களுக்கு பயத்தையும் பீதியையும் உண்டு பண்ணி உங்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ளது போன்று அரசகட்டுப்பாட்டுப்பிரதேசத்திலும் சர்வதிகார ஆட்சியை ஏற்படுத்தியது, 23ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அத்தனை உரிமைகளையும் 1983ம் ;ஆண்டிலிருந்து ஆரம்பித்த போராட்டத்தினால் இன்று இழந்து நிற்கின்றனர் எமது மக்கள்.

இன்று எம்மக்கள் அரசகட்டுப்பாட்டு பகுதியிலும் சரி, உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் சரி அடிமைகள் போல் வாழ்கின்றனர் இந்த நிலமை மாறவேண்டும்-. நிலைமை கட்டுமீறீச் செல்வதாக நாம் முழுவதுமாக நம்புகிறேன். தோல்வியை தழுவியுள்ள உங்கள் போராட்டத்திற்காக தமிழ்மக்கள் பெருமளவில் இளைஞர்களையும் யுவதிகளையும் பலி கொடுத்துள்ளனர். மேலும் மேலும் பலி கொடுத்து வருகின்றார்கள். உங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு அரசுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து தீர்வைக் காண உதவுங்கள். அன்றேல் உங்கள் போராளிகளை சரணடைய வைக்கவேண்டிய காலம் வந்துவிட்டதாக கருதுகிறேன். பொதுமன்னிப்பு வழங்கவேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதுடன் தமிழ்மக்களுக்கு ஏற்புடையதான ஓர் தீர்வு திட்டத்தைக் காணமுடியும் என எண்ணுகிறேன்.

இந்தியாவை உள்ளடக்கிய சர்வதேச சமூகம் எமக்கு ஏற்புடையதான ஓர் தீர்வு திட்டத்தை ஆதரிக்கும். உங்களை ஆதரிக்கின்ற இடம்பெயர்ந்த தமிழர்கள் விசுவாசமாக உங்களை ஆதரிக்காது சுயலாபம் கருதியே ஆதரிக்கின்றனர். வடகிழக்கு வாழ் எமது மக்கள் நிறையத் துன்பத்தை அனுபவித்துவிட்டதுமல்லாமல் மிகப்பெரியளவு தியாகங்களையும் செய்துள்ளனர். இனியேனும் அவர்களை அமைதியாகவும் மனநிறைவுடனும் வாழவிடவேண்டும். இடம்பெயர்ந்த முதியவர்கள் தாம் பிறந்த நாட்டுக்குத் திரும்ப வந்து பிறந்த மண்ணில் மரணிக்கவே விரும்புகின்றனர்.

நன்றி.

அன்புடன்,


வீ. ஆனந்தசங்கரி,
தமிழர் விடுதலைக் கூட்டணி.

No comments: