அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, March 3, 2010

தமிழர் விடுதலைக் கூட்ட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்


பாராளுமன்றத் தேர்தல் - 08.04. 2010

தமிழர் விடுதலைக் கூட்ட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் அரை நூற்றாண்டுக்கு மேலாக அனுபவித்து வரும் துன்பங்களுக்கு இதுவரை நிரந்தரத் தீர்வோ அல்லது தற்காலிக நிவாரணமோ கிட்டவில்லை. இதற்காக காலத்திற்குக் காலம் நற்சிந்தனையுள்ள தலைவர்கள் நியாயபூர்வமாக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தொடர்ந்து சில கடும் போக்காளர்களினால் முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தன. இவற்றைக் கவனத்திற்கொண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி அதன் அடிப்படைக் கொள்கையில் பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்து, முன்னெச்சரிக்கையாக விவேகமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்மையில் யுத்தம் உட்பட நடந்தேறிய பல சம்பவங்கள் சிறுபான்மையினரின் மனிதாபிமான பிரச்சினைகள் மேலும் அதிகரித்துள்ளமையால் அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு - ஒரே விதமான சிந்தனை கொண்ட கட்சிகளினதும், மக்களினதும் பொறுப்பு என தமிழர் விடுதலைக் கூட்டணி உணர்கின்றது.

பல்வேறு திசைகளில் இருந்து கடந்த காலங்களில் நாட்டை குட்டிச்சுவராக்க கங்கணம் கட்டி நிற்கின்ற சில கடும் போக்காளர்கள் உட்பட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் திடீரென தம்மை வெளிக்காட்டிக் கொண்டு நாட்டின் நிலமையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை வெளியிடுவதிலும் அறிக்கைகளை விடுவதிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. இதற்கு சில உள்நோக்கங்கள் இருக்கின்றமையை தெளிவாக உணர முடிகின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெளிப்படையான கருத்து - சகலருக்கும் மனத்திருப்தியை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கி, சிறியவன், பெரியவன் என்ற பேதமின்றி அனைவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே! நம் நாட்டில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்தும் எம் அனைவரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதித்துள்ளன. பல்லாயிரக்கணக்கான உயிர்கள், பல கோடி ரூபா பெறுமதியான தனியார், அரச உடமைகள் என்பன அண்மையில் நடந்து முடிந்த யுத்தித்தில் இழக்கப்பட்டுள்ளன. கற்பனைக் கெட்டாத பெருந்தொகையான பணம் யுத்தத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. பல கோடி ரூபா செலவிலான இராணுவ முகாம்கள், தளபாடங்கள் மற்றும் படையினருக்கு ஏற்படுகின்ற செலவுகள் அத்தனையும் நம் அனைவருக்கும் நல்லதொரு பாடத்தை போதித்துள்ளது. இத்தகையதொரு நிலமை மீண்டுமொரு தடவை ஏற்படக்கூடாது. ஏற்பட விடவும் கூடாது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, சோல்பரி அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இனத்திற்கு ஒரேயொரு பாதுகாப்பாக இருந்த 29வது சரத்திற்கு ஏற்பட்ட கதியை நன்கு அறிந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஒற்றை ஆட்சி அமைப்பின் கீழ் ஏற்பட்டு, அத்தீர்வு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் மீள் பரிசீலிக்க நேர்ந்தால் இதுவரை காலமும் பல உயிரிழப்புகளுக்கும் சொத்தழிவுகளுக்கும் மத்தியில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அத்தனையும் பாழாகிவிடும். கடந்த ஐந்து ஆண்டு காலமாக சமஷ்டி அமைப்பின் கீழ் ஒரு தீர்வை அடைய பெரு முயற்சி எடுத்திருந்தும் - அதற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வொன்றை ஏற்க தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருந்தது. ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வொன்றை ஒரு போதும் அடைய முடியாதென தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையாக நம்புவதால் முற்று முழுதாக ஒற்றையாட்சி முறைமையை கூட்டணி நிராகரிக்கின்றது. வடக்கு கிழக்கு இணைப்பால் இந்நாட்டிற்கும் அன்றி அப்பகுதியில் வாழும் எந்த இனத்திற்கும் எதுவித பாதிப்பும் ஏற்படாது.மாறாக பல்லின மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் சமாதானத்தையும் வளர்க்க அது உதவுவதாக அமையும் என்பதையும் அம்முயற்சிக்கு அப்பகுதியில் வாழும் பல்லின மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதையும் கூட்டணி பூரணமாக நம்புகின்றது. அத்தோடு அரசின் திட்டமிட்ட குடியேற்றம் இன ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதிலாக வேற்றுமையையே வளர்க்கும் என்பதால் இம்மூன்று விடயங்களிலும் மாற்ற முடியாத ஒரே நிலைப்பாட்டை தமிழர் விடுதலைக் கூட்டணி கொண்டுள்ளது.

பின்வரும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இக்கட்டான நிலையில் தள்ளப்பட்டுள்ள இந்த நாட்டை மீட்டெடுத்து இனங்களுக்கிடையே வலுவான ஒரு உறவுப்பிணைப்பை ஏற்படுத்தி சுபீட்சமான வாழ்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி உண்மையாகவும் மிக உறுதியாகவும் நம்புகிறது. அவ்விடயங்கள் தொடர்பாக கூட்டணி அரசாங்கத்தோடு விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும்.

1. இடம்பெயர்ந்த மக்களை- வடக்கு கிழக்குத் தமிழர், இந்திய வம்சாவளித்தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி எந்த இனத்தவராகிலும் அவர்கள் முன்னர் வாழ்ந்த அவர்களின் சொந்த இடங்களிலேயே குடியமர்த்த தமிழர் விடுதலைக்கூட்டணி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்.

2. இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட உயிழப்பு, உறுப்பிழப்பு, சொத்து சேதம்
என்பவற்றிற்கும் இன, மத, சமூக பேதமின்றி முழு அளவிலான இழப்பீடு வழங்கப்பட அரசிற்கு வலுவான அழுத்தத்தை கூட்டணி கொடுக்கும். அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமரும் பகுதிகளில் அவர்களுக்கான போக்குவரத்து மற்றும் மருத்துவ சுகாதார வசதிகள் விரிவு படுத்தப்பட அரசை வலியுறுத்தும்.

3. யுத்தம் ஆரம்பித்த பின்னர் வன்னிப்பகுதியில் உயிழந்தும், காணாமல்போயுமுள்ள குடிமக்களின் பெயர், முகவரி போன்ற விபரங்களைத் திரட்ட நடவடிக்கை எடுக்க அரசிற்கு அழுத்தம் கொடுத்து அதற்கான ஒத்துழைப்பையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வழங்கும்.

4. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிச் சிறுவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக விடுதலைப் புலிகள் என முத்திரைக் குத்தி புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார்கள். அச்சிறுவர்கள் அவரவர் பெற்றோர்களிடம் உடன் கையளிக்கப்பட வேண்டும். அவர்களில் சிலர் தாமாக விரும்பி புலிகள் இயக்கத்தில் இணைந்திருக்கலாம். ஆனால், ஏனைய அனைவரும் பலாத்காரமாக இணைக்கப்பட்டவர்களாவர். இப்போது இச்சிறுவர்களுக்கு அவசியமாகத் தேவைப்படுவது பெற்றோரின் அன்பும் அரவணைப்புமாகும். இந்த அப்பாவிப் பிள்ளைகளை பெற்றோரிடம் கையளிப்பின் அவர்களுக்கு எத்தகைய கல்வியை ஊட்ட வேண்டும் என்பதை பெற்றோர்களே தீர்மானிப்பர் என்பதை அரசிற்கு எடுத்துக்கூறி அதற்கான வழிவகைகளை மேற்கொள்ளும்.

5. வடக்கில் ஆட்கடத்தல், கொலைகள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கு மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வடக்கிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, காணாமல் போனோரைக் கண்டுபிடிக்க தமிழர் விடுதலைக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

6. தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு, அங்குள்ள வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட அரசை வற்புறுத்துவோம். உரியவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் தனியார் வீடுகள் மற்றும் கட்டடங்கள் உடனடியாக உரியவர்களிடமோ அல்லது அவர்களின் வாரிசுகளிடமோ ஒப்படைக்கப்பட தமிழர் விடுதலைக்கூட்டணி அரசை வற்புறுத்தும்.

7. சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு கிழக்கு பகுதிகளில் அப்பாவி மக்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவு தங்கம் பின்னர் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற உறுதியோடு பெறப்பட்டது. ஒரு சிலருக்கு தங்கம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. பலருக்கு கொடுக்கப்பட வில்லை. இது தவிர மக்கள் தங்கள் தங்க நகைகளை புலிகளின் வங்கிகளில் ஈடுவைத்திருந்தனர். அத்துடன் தங்கள் பணத்தையும் அவ்வங்கிகளில் வைப்புச் செய்திருந்தனர். வன்னியில் மீட்கப்பட்ட தங்கமும் பணமும் உரிய மக்களுக்கே சொந்தமானவை. ஆகவே அங்கு மீட்கப்பட்ட நகைகளும் பணமும் உரிமை கோருபவர்களுக்கு வழங்கப்பட தமிழர்விடுதலைக் கூட்டணி அரசை வற்புறுத்தும்.

8. உயர் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்று யுத்தம் காரணமாகவும், பலவந்தமாக பிடிக்கப் படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளவுமான செயற்பாடுகளில் ஈடுபட்டு, கல்வியைத் தொடர முடியாமல் பலர் இருப்பதால் அவர்கள் கல்வியைப் பெறவும், வன்னிப்பகுதிக்கென பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அங்கு விவசாயம், கலைப்பிரிவு போன்ற துறைகளை இயங்க வைக்கவும் தமிழர் விடுதலைக்கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

9. வன்னி வர்த்தகர்களில் பலர் அனைத்து சொத்துக்களையும் இழந்துள்ளனர் என்பதால் இடம்பெயர்வதற்கு முன் அவர்கள் பெற்றிருந்த உரிமைகளான- ஏக விநியோக உரிமை, உத்தரவு பெற்ற வர்த்தக உரிமை, எரிபொருள் நிலையம் நடத்தும் உரிமை போன்றவற்றை வழங்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வலியுறுத்தும்.

10. இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்தும் போது, இரு விசேட பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். முதலாவதாக 1992ஆம் ஆண்டு வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நலன்கள் பேணப்பட வேண்டும். இரண்டாவது- 1958 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்தும், நாட்டின் பல வேறு பகுதிகளிலிருந்தும் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் குடியேறிய மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கூட்டணி இவ்விரண்டு விடயங்கள் குறித்தும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.

11. கணவன் தடுப்பு முகாம்களிலும், மனைவி மக்கள் வீடுகளிலும் என ஆதரவற்ற நிலையில் வாழும் குடும்பங்களை ஒன்று சேர்த்து வைக்க தமிழர் விடுதலைக்கூட்டணி நடவடிக்கை எடுக்கும். அத்துடன் ஊனமுற்றோர், உடலில் துப்பாக்கி ரவைகள், குண்டுச்சிதறல்கள் தைக்கப்பட்டு உடல் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட அரசாங்கத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தும். உடல் ஊனமுற்று இயங்க முடியாமலுள்ளவர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருப்பது வேதனைக்குரியதாகும். இது நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் விடயம் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசிற்கு உணர்த்துகிறது.

12. வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், வடக்கு - கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகளை புனரமைத்து மீள இயங்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொள்ளுவதோடு, அரசுத் துறைகளிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலும் இதுவரை இழந்தவற்றை சீர்செய்து, கணிசமான பங்கினை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்க வழங்க அரசை வற்புறுத்தும்.

13. வடக்கில் மூன்றில் இரண்டு பகுதி கடலால் சூழப்பட்ட பகுதியாகும். கடற்றொழில் எமது மக்களின் பாரிய தொழில் வளமாகவுள்ளது. தற்போது கடற்றொழிலாளர்கள் தங்கள் தொழிலில் எதிர்நோக்கும் சிக்கல்களை அரசாங்கத்திடம் விளக்கி கடற்றொழிலாளர்களுக்குள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க தமிழர் விடுதலைக் கூட்டணி நடவடிக்கை எடுக்கும். விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி, விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் சிக்கல்களையும், சவால்களையும் நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை கூட்டணி மேற்கொள்ளும்.

14. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் தன்னிச்சையாக ஒரு சிலரின் விருப்பத்திற்கு இணங்கச் செயற்படுத்தாமல் சம்பந்தப்பட்ட பிரதேச மக்கள், அரச அதிகாரிகள், நன்கொடை வழங்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆகியோரின் ஆலோசனைகளையும் பங்களிப்புகளையும் பெற்று செயற்படுத்த வேண்டும். அவ்வாறில்லாவிடில், உண்மையான அபிவிருத்திப்பணிகளை அரசினால் தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகின்றது.

15. போர்ச் ழலாலும், பொருளாதார நிலைமைகளாலும் வழிதவறிப்போன இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்தும் செயற்திட்டங்களையும் கூட்டணி மேற்கொள்ளும்.

16. மனிதஉரிமை விதிமுறைகளை மீறுவோருக்கு கடும் தண்டனை வழங்க வலுவுள்ள ஓர் அடிப்படை சாசனம் சட்டமாக்கப்பட தமிழர் விடுதலைக்கூட்டணி முயற்சி எடுக்கும்.

17. யுத்தம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட கல்வித்தரத்தனை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், அதே போல் விளையாட்டுத்துறைகளை உயர்த்த சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் கூட்டணி முயற்சியெடுக்கும்.

18. புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு உள்ளூரில் உறவுகள் சொத்துக்கள் போன்ற பல்வேறு தொடர்புகள் இருப்பதால் அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு வந்து செல்லவும், மீளக்குடியேறவும் வழிவகை செய்ய கூட்டணி பாடுபடும்.

தமிழ் பேசும் மக்களின் எதிர்கால நலன்களில் இதயபூர்வமான, உள்ளார்ந்த அக்கறை கொண்டுள்ள முதிர்ந்த அரசியல் கட்சி என்பதாலும், சொந்த நலன்களை ஈட்டுவதற்காக அரசியல் நடத்துபவர்கள் அல்லர் என்பதாலும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக மிளிர்வதாலும், தமிழ் மக்களுக்கு கௌரவத்துடன் கூடிய சமாதானத் தீர்வும், ஏனைய மக்கள் சகலருக்கும் நீதி, நியாயமும் விரைவில் கிடைக்கின்ற சூழ்நிலை உதயமாவதற்கும் தமிழர் விடுதலைக்கூட்டணி தம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன் போல தொடர்ந்து மேற்கொள்ளும்.

எனவே, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தமிழர் விடுதலைக் கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

No comments: