அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, March 17, 2010

யாழ் மாநகர சபை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

கடந்த 22.2.2010இல் சுற்றுலா வரும் பெரும்பான்மையினப் பயணிகளால் யாழ் பொது நூலகத்தின் அமைதி பாதிப்பு – வாசகர்கள் படிப்பதில் சிரமம் - நூலகர் நெஞ்சம் குமுறுகிறார்! என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதினேன்.

1998 முதல் 2003வரை தமிழர் விடுதலைக் கூட்டணி(9) - புளொட்(6) -ஈபிடிபி(6) - ஈபிஆர்எல்எப்(2) ஆகிய நான்கு கட்சிகளும் மாநகரத்தை மிகவும் கெடுபிடிகளுள்ள நிலையில் ஏதோ நிலமைக்குத் தகுந்தபடி பராமரித்து வந்தோம்.

இன்று மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி(13), தமிழரசுக் கட்சி(8), சுயேட்சை(1), தமிழர் விடுதலைக் கூட்டணி(1) என இயங்குகிறது.

அன்றைய காலகட்டத்தில் நடைபாதை வியாபாரிகள் மீதும், யாழ்ப்பாணப் பேரூந்து நிலையத்தின் அருகிலிருந்த மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல், டீசல் வியாபாரிகளை வேறு இடங்களுக்கு அப்புறப் படுத்தி வீதியை நிர்வகிக்க நாம் போதிய பெரும்பான்மைப் பலமின்றி ஏனைய கட்சிகளின் ஆதரவோடு - பலத்த விமர்சனங்களுடன் செயற்பட்டோம். நாம் அன்று விடுதலைப் புலிகளுடைய பலத்த தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த நிர்வாகத்தை நடத்தி வந்தமை யாவரும் அறிந்ததே. அன்றைய பொழுது மிகவும் அவலநிலையிலிருந்தது. மாநகரத்துக்கு அறவிடும் வரியைக்கூட நாட்டு நிலைகருதி அறவிடுவதிலும் தளர்வுநிலை காட்டப்பட்டது. தமிழ் வியாபாரிகளை நாம் நிர்வாக ஒழுங்குக்காக தனியாக ஒதுக்கி நடவடிக்கை எடுத்தமையை - தற்போதைய நிர்வாகத்தினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இன்று முன்னரைப் போல ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லை. யாரும் வரலாம் போகலாம். அழிந்து போயிருக்கும் மாநகர சபையை மீள நிர்மாணிக்க இப்போது ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கொழும்பில் மாநகர சபை வரிகள் அறவிடுவதுபோல - யாழ் மாநகரத்துள் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் - வியாபாரிகளிடம் வரி அறவிடவும், நல்லூர் ஆலய சுற்று வட்டாரத்தை துப்பரவாக வைத்திருக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.


யாழ்ப்பாணத்திற்கு(மாநகர சபை எல்லைக்கு) வெளியிலிருந்து ஒருவர் தனது பொருட்களை நடைபாதையில் விற்க ஒரு காலத்தில் பெரிய சட்டம் பேசிய நாம் எதற்காக இன்று தென்னிலங்கையிலிருந்து வருபவருக்கு எதுவும் செய்ய முடியாதுள்ளது. நிர்வாகம் அரசகட்சிப் பெரும்பான்மை என்பதாலா என்ற ஒரு வினா எழுகிறது.


பண்ணையில் மீன்சந்தை - றீகல் தியேட்டருக்குப் போகும் ஒழுங்கையில் நடைபாதை வியாபாரிகளுக்கு கடை அமைத்துக் கொடுத்ததுபோல - திறந்த வெளியரங்குக்கு அருகில் அல்லது பண்ணை தொலைத் தொடர்பு நிலையத்திற்கு முன்பாக இருக்கும் வெளியான பகுதிகளில் அவர்கள் தமது விற்பனையை நடத்த ஏதேனும் ஒழுங்குகளைச் செய்து குறுகிய யாழ்ப்பாண நகர வீதிகளில் இன்னும் மக்கள் அல்லது வாகன நெருக்கத்தை அதிகரிக்காது குறைக்க முறையான ஒரு ஒழுங்கைச் செய்வது அவசியமென அங்கு நடைபெறும் நிகழ்வுகளிலிருந்த அறிந்து கொண்டு இந்தக் கருத்தை முன்வைக்கின்றேன்.

இராணுவக் கெடுபிடிகள் - ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த ஒரு கால கட்டத்தில்தான் வீதிப் போக்குவரத்து பற்றிக் கலந்துரையாட ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் அன்றைய முதல்வர் பொன். சிவபாலன் மற்றும் மாநகர ஊழியர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கொல்லப்பட்டதையும் நினைவுபடுத்தி இன்று இப்படியானதொரு ஏற்பாடு கட்டாய தேவை என்பதையும் உரியவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

எங்கிருந்தாலும் நான் யாழ்ப்பாண நகரின்மீது ஒரு தனியான அக்கறையோடுதான் இருக்கிறேன் என்பதையும் சொல்லி இதை முடிக்கிறேன்.

என்றும் யாழ் நகரின்மீது அக்கறையுள்ள
தங்க. முகுந்தன் (முன்னாள் மாநகர சபை உறுப்பினன் - TULF)

No comments: