அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, March 7, 2010

வாய்ப்புக்களை தவற விட்டுவீட்டீர்கள் - சம்பந்தனுக்கு சங்கரியின் கடிதம்!

18.01.2005.

கௌரவ. இரா.சம்பந்தன், பா.உ,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழுத் தலைவர்,
கொழும்பு.

அன்புடையீர்,

சுனாமியால் ஏற்பட்ட தேசிய அனர்த்தம் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் மேன்மைதாங்கிய கோபி அனானின் சமூகத்தில் மேன்மைதங்கிய ஐனாதிபதியின் தலைமையில் கடந்த 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்ட கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் என்ற முறையில் தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை எனக்கு பெரும் ஏமாற்றத்தை தருகின்றது. வடக்கிற்கு போதிய நிவாரணம் அனுப்பப்படவில்லையென்கின்ற விடுதலைப்புலிகளின் குற்றச்சாட்டை நீங்கள் சரியென்றோ, தவறென்றோ ஓரு வார்த்தையேனும் கூறவில்லை. இக்குற்றச்சாட்டு உண்மையானதாக இருந்தால், அரசாங்கம் பாகுபாடாக நடக்கின்றது என்பதை அம்பலப்படுத்தும் மிகப் பெரிய வாய்ப்பை இழந்துவீட்டிர்கள். நான் யாருக்கும் வக்காளத்து வாங்கவில்லை. ஆனால் நாம் உண்மை என்னவென்பதை அறிய விரும்புகின்றோம். சகல நாட்டிலும் தன் கட்டுப்பாட்டில் உள்ள சகல ஊடகங்களையும் பாவித்து அரசு பாகுபாடுகாட்டுவதாகவும் வடக்கை புறக்கணிப்பதாகவும் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று அரசியல் வேறுபாடின்றி பிறநாட்டில் வாழுகின்ற எம்மக்கள் தாராளமாக வாரி வழங்கியுள்ளனர். இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழுகின்ற மக்கள் உண்மை நிலை என்ன என்பதை அறிய ஆவலாய் உள்ளனர்.

உலகின் பல நாடுகளில் இருந்தும் அகதிகளுக்கு தேவையான பலதரப்பட்ட பெருமளவு நிவாரணப் பொருட்கள் கப்பல்களிலும் 150க்கு மேற்பட்ட விமானங்களிலும் வந்து இறங்கியுள்ளன. தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கின்றன. 50 நாடுகளுக்கு மேல் பெருமளவில் உதவ முன்வந்ததோடு ஏற்கனவே நிவாரணப் பொருட்களையும் அனுப்பியுள்ளன. அப்படியிருந்தும் எம் மக்கள் முறைப்படி கவனிக்கப்படாமல் இருந்தால் குற்றவாளி யார்? வடகிழக்கை பொறுத்த அளவில் அனர்த்தம் சம்பந்தமாக விவாதிப்பற்காக ஐனாதிபதி பிரதம அமைச்சர் கூட்டிய மாநாடுகளில் வடகிழக்கில் மூன்றில் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுள்ளதாக தம்பட்டம் அடிக்கும் நீங்களும் உங்கள் குழுவினரும் கலந்து கொண்டு அரசாங்கத்தின் குறைபாடுகளை அம்பலப்படுத்தியிருக்கவேண்டும். அந்த வாய்ப்புக்களை தவற விட்டுவீட்டீர்கள் அரசாங்கம் சரியாக நடக்கின்றதா? தவறாக நடக்கின்றதா? என்பதல்ல பிரச்சினை. அரசாங்கத்தை சரியாக செயற்படவைக்கவேண்டிய பொறுப்பில் இருந்து தவறிவிட்டீர்கள். இதுவே நான் கூறும் குற்றச்சாட்டாகும். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் துரோகமாகத் தோன்றவில்லையா?

மேன்மை தங்கிய கோபி அனான், சமூகம் கொடுத்திருந்த கூட்டத்தில் தனியாரிடமிருந்தும், அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் வரும் நிவாரணப் பணிகளில் அரசு தலையீடு இருக்க்கூடாது என்பதையே குறிப்பீட்டுக் கூறியுள்ளீர்கள். இது எவ்வாறு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் என்று நினைக்கீன்றீர்கள். இவ்வனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை செயற்படுத்துவதற்கு வடகிழக்கில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை மறைமுகமாகவும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். மேலும் சொல்லப் போனால் அகதிளைப் பராமரிக்கும் பொறுப்பை விடுதலைப்புலிகளிடம் கையளிக்குமாறு மறைமுகமாக கேட்டுள்ளீர்கள். இவ்வாலோசனையை நீங்கள் மிகவும் புத்திசாதுர்யமாக கூறியிருந்தாலும் கூட உங்களால் அதனை சரியாக நியாhப்படுத்தமுடியவில்லை. மாகாண சபை மூலமாகவோ, மாவட்ட ரீதியாகவோ, பிரதேச செயலாளர்கள் ஊடாகவோ பல தரப்பட்ட ஊழியர்களை இந்தப் பணிக்கு பயன்படுத்தமுடியாதா?

திரு.சம்பந்தன் அவர்களே! இந்த அனர்த்தத்தால் 40,000க்கு மேற்பட்ட மக்கள் இறந்திருக்கின்றார்கள் பல்லாயிரக்கணக்கானோர் விதவைகளாகவும், அநாதைகளாவும் ஆக்கப்பட்டுள்ளார்கள். உயிர் தப்பியவர்கள் வீடு உட்பட அனைத்தையும் இழந்த நிலையில் எஞ்சியுள்ளது அனர்த்தம் நடந்த போது அவர்கள் உடலில் இருந்த உடை மட்டுமே. இன்று அவர்களின் தேவைகள் பலதரப்பட்டவை. சுனாமி அனர்த்த்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உதவுவதற்காக பல கோடி ரூபாவை அந்நியச் செலாவாணியாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சேர்த்திருந்தாலும், இதே போன்று பத்து கழகங்கள் ஓன்றிணைந்து மேலும் பல கோடி ரூபாய்களை சேர்த்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் ஓரு சிறு பகுதியையேனும் பூர்த்தி செய்யமுடியாது. தயவு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு இது ஓரு பகிடியான விடயம் அல்ல என்பதை உணர்த்துங்கள். இன்றைய தேவை அனைவரின் ஓத்துழைப்புடன் கூடிய மிகக் கவனமாக திட்டமிடப்பட்ட செயற்பாடேயாகும்.

திரு.சம்பந்தன் அவர்களே! தாங்கள் நீண்ட அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் கொண்டவர்கள். நீங்கள் வழி நடத்த வேண்டியவரே, பிறரால் வழிநடத்தப்படுபவர் ஆகக் கூடாது. வரலாறு காணாத படுமோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நாட்டு வேற்றுமை, அரசியல் வேற்றுமையின்றி பல்வேறுவகையான உதவிகள் தேவைப்படுகின்றன. இந்த நேரத்தில் அவர்களின் துன்பத்தை உணராது நீரோ மன்னனைப் போல் பிடில் வாசிக்கீன்றீர்கள். இந்த சந்தர்ப்பத்தில் வடகிழக்கு பிரதிநிதித்துவத்தில் மூன்றில் இரண்டு ஆசனங்களை பெற்றது பற்றியும், தமிழ் மக்களின் ஆணைபற்றியும் புழுகுவது தேவையற்றதாகும். இவ்வேளையில் தங்களின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிப்பது அசிங்கமாகத் தோன்றும், தயவு செய்து தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் நான்கின் அறிக்கைகளை இதுவரை படித்திராவிட்டால், தாங்களும் படித்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் காட்டவும். திரு. கோபி அனான் அவர்கள் நிச்சயமாக அதைப் படித்திருப்பார். தயவு செய்து இதைப்பற்றி இனிமேல் பேசி உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளார்தீர்கள். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படாது.

பல்வேறு மருந்துப் பொருட்களுடன் வைத்திய நிபுணர்கள், கனரக வாகனங்கள், வானூர்திகள், கூடாரங்கள் போன்றவற்றையும், சில நாடுகள் நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்காக இராணுவத்தினரையும் அனுப்பியுள்ளன. இந் நிலையில் ஓரு பாராளுமன்ற உறுப்பினர் இராணுவத்தை வடக்கே அனுப்பாதே எனக் கர்சித்து தன் அறியாமையை வெளிப்படுத்தியமையும் நான் அறிவேன். இத்தகைய பேச்சுக்களால் பாதிக்கப்படுவது நானோ, நீங்களோ, அந்த உறுப்பினரோ அல்ல, பாதிக்கப்பட்ட மக்களே!

வெளிநாட்டில் இருந்து வந்து சேர்ந்த மருந்துகளுடன் வைத்திய கலாநிதிகள், வானூர்திகளில் பல்வேறு இடங்களுக்கும் சென்று வைத்தியம் பார்க்கின்றபோது நான் பொறாமைப்படவில்லை. உள்ளதைப் பெற்று எமது மக்களுக்கும் உதவ முடியவில்லையே என வேதனைப்படுகின்றேன். பிற நாட்டு இராணுவம் கொண்டு வந்த கனரக வாகனங்களால், வீதிகள் பாலங்கள் அமைக்கப்படுவதைக் கண்டு நான் பொறாமைகொள்ளவில்லை. எமது பகுதி மக்களுக்கும் அதைப் பெற்றுக்கொடுக்க எமது பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏன் முடியவில்லை என்பதே எனது ஆதங்கம்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள 31 பிரதிநிதிகளில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் தம் தம் கடமையை சரிவரச் செய்கின்றார்கள். எம்மவர்கள் மட்டும் தம்கடமையைச் செய்யாது யார் யாரையோ திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். உடனடியாக வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், ஐனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து தமது பங்களிப்பை செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். தவறும் பட்சத்தில் எதிர்கால சந்ததி எம் எல்லோரையும் சபிக்கும் என்பதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்யும் துரோகம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிள்றேன். அதே நேரத்தில் சகல கரையோரப் பகுதிகளிலும், நிவாரணப் பணியினை மேற்கொள்ள வந்திருப்பவர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பினை பெற்றுக் கொடுக்குமாறும் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி
அன்புடன்,

வீ. ஆனந்தசங்கரி,
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி.

No comments: