அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, March 17, 2010

மூன்றில் இரண்டு பங்கு பெறுவது இலகுவானதா?

ஒரு காலத்தில் 5 இலிங்கங்கள் உயர்பதவிகளில் இருந்தது ஞாபகமிருக்கிறதோ தெரியவில்லை! சட்ட மா அதிபராக – பொலிஸ் மா அதிபராக தமிழர்கள் இருந்த காலமும் மலையேறிவிட்டது! பொதுவாக இன்றைக்கு சாதாரண பதவிகளில்கூட தமிழர்கள் மிகச் சொற்ப வீதமாகவே இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் கைப்பற்றலுக்கு முன் முத்துக்குமாரிலிருந்து முருகதாசன் வரையில் தம் உயிரைத் தியாகம் செய்தவர்களின் செயலும் வீணானதுதான் மிச்சம். புலம்பெயர் சமூகம் ஆர்ப்பரித்த போராட்டங்களும் எங்கே போனதென்று தெரியாமல் - ஒரு பாரிய இன அழிப்பை, புலிகளை அழிப்பதாகச் சொல்லி - சர்வ சாதாரணமாக செய்துவிட்டு இப்போது 3இல் 2 பங்கு பெரும்பான்மை பெறுவதில் முனைப்புக் காட்டும் அரசுக்கு எதிராக தற்போதுதான் ஐக்கிய நாடுகள் சபை ஒரு நிபுணர்குழுவை நியமிக்க (அதுவும் முடிவல்ல) ஆலோசிக்கிறது. இதுவரை மௌனம் காத்த சர்வதேச சமூகம் இனி எம்மீது அக்கறை கொள்ளும் என்று நாம் எண்ணுவது பெரும் மடைத்தனம். இருக்கும் எஞ்சிய மக்களையாவது இனிமேல் ஒருவித பாதிப்புக்கும் உள்ளாக்காமல் உருப்படியான செயற்திட்டங்களை தீட்டுவதுதான் இன்றைய அவசியமான தீர்மானமாக இருக்கிறது. இதை தமிழ்க் கட்சிகள் உருப்படியாகச் செய்ய வேண்டும்.

புலம்பெயர் சமூகம் சும்மா கொக்கரிக்காமல் அமைதியாக இருந்தாலே இப்போதைக்கு நல்லது.செய்த ஆர்ப்பாட்டங்கள் போரை நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால் எதையும் சாதித்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்கூட எல்லா அழிவையும் கணக்கெடுக்க வந்ததுபோல 23இல் முகாம்களைப் போய் வேடிக்கை பார்த்தார். அவர் அப்படி வந்ததுக்கு வராமல் விட்டிருக்கலாம். மே 23ல் வந்தவர் மார்ச் நிபுணர்குழு அமைக்க ஆலோசிக்கிறார் என்றால் எவ்வளவு காலதாமதம் - அதற்கும் அணிசேரா அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறதாம்.

ஐக்கிய தேசியக் கட்சி 1977இல் அமோக ஆதரவுடன் அன்றைய தொகுதித் தேர்தல் முறையில் 168 மொத்தத் தேர்தல் தொகுதிகளில் 140ல் வெற்றிபெற்றது. 18 தொகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் 8 தொகுதிகளில் சுதந்திரக் கட்சியும் நுவரெலிய மஸ்கெலியா தொகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொண்டமான் அவர்களும் கொழும்பு மத்தியில் சுயேட்சையாகப்(எந்தக் கட்சி எனத் தெரியவில்லை) போட்டியிட்ட எம் ஜாபிர் ஏ. காதர் அவர்களும் வெற்றிபெற்றனர். 1972இல் சுதந்திரக் கட்சி தலைமையிலான கட்சிகளினால் தயாரித்த அரசியல் சாசனத்தை 1977இல் தன்னாதிக்க முறையில் ஜனாதிபதி ஆட்சிக்கு மாற்றி அமைத்து ஏறக்குறைய 17 ஆண்டுகள் சொகுசான ஆட்சியைக் கையாண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1994இன் பின் ஜனாதிபதி ஆசனம் கைக்கெட்டவில்லை. 1994இலிருந்த 2010 வரையில்லாமல் 2016வரை ஜனாதிபதியாயிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தைவிட(17) அதிக காலம்(26) கைப்பற்றிய பெருமை மக்கள் ஆணைபெற்ற தற்போதைய அரசுக்கிருக்கிறது. இந்த சமயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி முறையை ஏற்படுத்தப் போவதாக இப்போது தெரிவித்தாலும் ஆட்சியில் ஏறிய பின் என்ன செய்வார்களோ அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நடப்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு 3இல் 2 பங்கு முதலில் பெற வேண்டும். கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் பொது சன மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான வித்தியாசம் அதிகமானதாக இல்லை. எனவே தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமூலம் 3இல் 2பங்கு பெறத் தக்கதான சாத்தியமில்லை. இரண்டு அணிகளுக்குள்ளும் கிடைத்த வாக்குகள் இந்தத் தேர்தலில் பிளவுபடப் போகிறது. வடக்கு - கிழக்கிலும் மலையகத்திலும் இது தமிழ் முஸ்லிம் கட்சிகளிடமும் ஏனைய இடங்களில் சில பெரும்பான்மைக் கட்சிகளிடமும் பிரிகின்ற வாக்குகளை கணக்குப் பார்த்தால் அரசு சொல்வதைப் போல 3இல் 2 பங்கு பெறுவது என்பது வெகு சுலபமானதல்ல. அத்துடன் இம்முறை தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையாமல் தனித்துப் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சிங்களவர்களுக்குள்ளும் - ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறித்து பிரச்சனைகள் அதிகரித்திருப்பதும் - அவர்களது கலவரங்களை அடக்க கண்ணீர்புகைக் குண்டுத் தாக்குதல்கள், கைதுகள் இடம்பெறுவதை நோக்கும்போது எல்லாமே கேள்விக்குறிதான்.

நிலைமைகள் மேலும் இறுகும் பட்சத்தில் முன்னர் ஏற்பட்டதுபோல சிறுபான்மைக் கட்சிகளின் உதவியை நாட வேண்டிய இக்கட்டான நிலை வரலாம். எல்லாவற்றுக்கும் விடை இன்னும் 3 வாரங்களில் கிடைத்துவிடும்தானே!

No comments: