அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, March 12, 2010

வரும் தேர்தலில் - உருப்படியான முடிவெடுக்க முடியாத கூட்டமைப்பா? ஆலோசனை சொல்லிய கூட்டணியா? சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே!


உலக அரங்கில் ஒரு நன்மதிப்பைப் பெற்ற - நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்தும் தலைவரை -விடுதலைப் புலிகளும் - கூட்டமைப்பினரும் மிகமோசமாக விமர்சித்திருந்தாலும் இன்றும் தனது அதே கொள்கையுடன் எந்தக் கருத்துக்களை கடந்த தேர்தலில் முன்வைத்தாரோ அதே வழியில் மாறாமல் தெட்டத்தெளிவான உறுதியோடு நடைபோடுபவர் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்கள்.

விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமைவாக கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து அவரை வெளியேற்ற மாவட்டக் கிளைகள்மூலம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்த சிலர் இப்போது உயிருடன் இல்லை. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. எந்த ஒரு தீர்மானத்துக்காக அவரை வெளியேற்ற முற்பட்டார்களோ அன்றே அந்த அமைப்பும் தன் நிலையிலும் ஆட்டம் கண்டது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கு ஏற்ப அவர்களது அமைப்பு இரண்டாகப் பிளந்து பல அழிவுகளை ஏற்படுத்தியது. யாரும் செய்யத் துணியாத செயலை துணிந்து செய்தார் பிரிந்தவர். இதனால் அந்த அமைப்பு அடியோடு இன்று அழிவைத் தேடியது.

ஒற்றுமையே பலம் என்று பலரும் பலவிதமாகச் சொல்லுவார்கள். உண்மையான நேர்மையான ஒற்றுமை இங்கு காணப்படவில்லை. அதனால்தான் ஒன்றுபட்ட 4 கட்சிகளுள்ளும் இன்று பிரிவுஏற்பட்டுள்ளது. எந்த ஏகப் பிரதிநிதிகள் தமக்குக் கட்டளையிட்டரோ அவர்களது ஆதரவாளர்களை நிராகரித்தது ஒரு பிரிவு. ஜனாதிபதித் தேர்தலிலேயே பல முரண்பாடுகள். ஒருவர் தனித்துப் போட்டியிட இன்னொருவர் அவருக்கு குடைபிடிக்க - காங்கிரஸ் பகிஸ்கரிக்க - மக்களைக் கொன்ற மகா சேனாதிபதிக்கு வாக்களிக்க பலர் எதிரணியுடன் கைகோர்த்தனர்.

இந்த நேரத்தில் எனக்கு ஒரு பழைய யோசனை - இதற்கும் ஏதோ முட்டாள்தனமான கருத்தை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். அதாவது இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். கூப்பிட்டவுடன் ஓடிச் சென்று குந்தியிருந்து அவர்கள் சொல்லுவதைக் கேட்டு - தலையாட்டிவரும் முட்டாள்கூட்டம் ஏதாவது உருப்படியான காரியத்தைச் செய்ததா? அவர்களை ஏகப் பிரதிநிதிகளாக்கி - தாம் பாராளுமன்றத்தில் ஏதோ வீரவசனம் பேசியதுதான் மிச்சம். உருப்படியாகச் செய்திருந்தால் அன்று 2005இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திய ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவு அளித்திருந்தால் இன்று ஜனாதிபதியாக மகிந்த வந்திருக்கவும்மாட்டார் - இப்படியொரு யுத்தமும் நடந்திருக்காது - இவ்வளவு மக்கள் நடுத்தெருவுக்கும் வந்திருக்கார். மந்திரியாயிருந்து ஆலோசனை சொல்பனும் உம்மாண்டியாயிருந்திருந்திருக்க முடியாது. இந்த உம்மாண்டிகளுக்காகத்தான் பல கடிதங்களை ஆலோசனையாக எழுதினார் தலைவர் ஆனந்தசஙகரி. இதில் ஒன்றையாவது செவி மடுத்திருந்தால் எவ்வளவு நடந்திருக்கும்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த ஒரேயொரு வன்னிப் பிரஜைக்கும் என்ன நடந்ததென்பதை உலகறியும். 22 முட்டாள்களின் தலைவிதியை மட்டுமல்ல 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நிர்ணயிப்பதே ஜனாதிபதி தேர்தல் முடிவில் வரும் ஜனாதிபதியின் கைகளில் என்பதை எந்த ஒரு பாமரனும் அறிவான். இதை இதுவரை மறுதலித்து ஒரு வார்த்தை சொல்லாமல் - இப்போது சொல்வதன் அர்த்தமும் புரியவில்லை. இவற்றுக்காகத்தான் எப்போது ஏகப் பிரதிநிதிகள் என்று அலம்பத் தொடங்கினார்களோ - அன்றே தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஆனந்தசங்கரி தலைமையில் சிலர் வெளிப்படையாகவே எதிர்த்து வெளியேறினர்.

இன்று கூட்டமைப்பில் இவர்கள் செய்தவேலையைத் தெரிந்து ஏற்கனவே ஏகப்பிரதிநிதிகளுக்கும் ஒரு கடிதத்தையும் எழுதினார் . தீர்க்கதிரிசனமான நோக்கில் திரு. ஆனந்தசங்கரி தெரிவித்த கருத்துக்களை ஏகப்பிரதிநிதிகள் வாசிக்காவிட்டாலும் மக்கள் ஆற அமர இருந்து படிப்பது இன்றைய காலகட்டத்துக்கு அவசியம். கொஞ்சம் நிதானமாக அறிவை உபயோகிப்பது நன்று.

------
25-10-2007

திரு. வே.பிரபாகரன்
தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள்
கிளிநொச்சி

அன்புள்ள பிரபாகரன்,


கொலைகளை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு செல்லவும்


கடந்த திங்கட்கிழமை அனுராதபுரத்தில் உம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நான் மிக வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த சம்பவம் யாரும் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு நிகழ்ச்சியல்ல. நியாயமாக சிந்திக்கும் ஒவ்வொருவரும் உமது கொடூரமான இச் செயலுக்கு உம்மை திட்டத்தான் செய்வார்கள். இருப்பினும் மனைவி மக்களுடன் பாதுகாப்பாக வாழ்கின்ற ஒரு சிலர் உமது செயலை மிகைப்படுத்தி பாராட்டும் தெரிவிப்பர். உமக்கு பாராட்டு தெரிவிக்குமளவுக்கு உமது செயல் தகுதியானதல்ல. இந்த நடவடிக்கையில் 35 உயிர்கள் பலிகொள்ளப்படுவதற்கு காரணமாய் இருந்திருக்கிறீர். அவற்றில் 14 பேர் ஏழை சிங்கள குடும்பங்களில் இருந்து பிழைப்புக்காக விமானப்படையில் சேர்ந்துள்ளனர். மிகுதி 21 பேரும் உம்மால் கரும்புலிகளின் தற்கொலை படைக்கு பலாத்காரமாக இணைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாவர். அவர்கள் கூட தத்தம் குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். பத்திரிகைகளில் உம்மை நடுவில் வைத்து எடுக்கப்பட்ட 22 பேரடங்கிய போட்டோவில் உள்ள 22 பேரும் இறந்திருந்தால் உம்மை உண்மையான வீரனென பாராட்டியிருப்பேன். ஆனால் உம்முடன் படத்தில் தோன்றும் 21 ஏழைப்பெற்றோரின் பிள்ளைகளை பலியெடுத்தது வருத்தத்திற்குரியதாகும் .

உமக்கு பொருந்தக்கூடிய ஒரு பொருத்தமான தமிழ் பழமொழி “காது கேளாத ஒருவரின் காதில் சங்கு ஊதுவது” போலாகும்.

நான் எவ்வளவு புத்திமதி கூறினாலும் நீர் அதை செவிமடுப்பதில்லை. தமிழ் ஈழம் அடைய முடியாததென்றும் அப்படி அடைந்து விட்டால் கூட ஒரு நாள்தன்னும் அதை காப்பாற்ற முடியாது என்றும் உமக்கு தெரியும். சர்வதேச சமூகமும் அதை ஒருபோதும் ஆதரிக்காது. அப்படியிருந்தும் ஒருபோதும் அடைய முடியாததும், கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அடைய முடியவில்லை என அறிந்திருந்தும் பல மனித உயிர்களை பலியிடுவதில் என்ன பயனை அடைய போகின்றீர். 70-80 ஆயிரம் உயிர்கள் இழக்கக் காரணமாக இருந்து பல்லாயிரக்கணக்கான விதவைகள், அநாதைகள் ஊனமுற்றோரை உருவாக்கவும், பல கோடி ரூபா பெறுமதியான சொத்து அழிவுக்கும் காரணமாக இருந்த நீர், இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துள்ளீர். கிழக்கு மாகாணத்தை முற்று முழுதாக இழந்து விட்டீர். வட பகுதியையும் நீர் இழப்பது உறுதி.

ஆனால் சில காலம் செல்லலாம். தமிழீழம் அடைவதற்கல்ல. உமது சுய கௌரவத்தை பாதுகாப்பதற்கான அம் முயற்சியில் வட பகுதியில் வாழும் தமிழினத்தை முற்றாக அழித்து விடுவீர். தமிழ் சமுதாயமோ அல்லது சர்வதேச சமூகமோ உமது இத்தகைய வழிமுறைகளை பாராட்டப் போவதுமில்லை, அங்கீகரிக்கப் போவதுமில்லை. தயவு செய்து எனது ஆலோசனைகளை தீவிரமாக பரிசீலிக்கவும். இன்னும் காலம் கடந்துவிடவில்லை. இந்திய முறையிலான அல்லது நீர் விரும்பும் ஏதோவொரு வகையான ஒரு நியாயமான தீர்வுத் திட்டம் ஏற்படுவதற்கு உடனடியாக உடன்படவும். நாம் காணும் தீர்வு தவணை முறையில் அமையாமல் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வழிவகுக்காது ஒரு நிரந்தர தீர்வாக அமைய வேண்டும். மதி கெட்ட இத்தகைய செயல்களில் ஈடுபட முடியுமாக இருந்தால் கணக்கற்ற முறையில் தினமும் நடைபெறும் கொலைகள், ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு ஏன் முடியவில்லை. அண்மையில் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்க சமாஜ தலைவர் வெட்டிக் கொலை செய்யபட்டது நீர் அறிந்ததே. அத்தகையவொரு ஆட்கடத்தல், கொலை சம்பவத்தை காட்டிக்கொடுத்து எத்தகையவொரு குற்றச் செயல்களிலும் உங்களுக்கு சம்பந்தமில்லை என்பதை நிரூபித்துக் காட்டவும்.

தயவு செய்து ஒரு விடயத்தை உணரவும். நான் எந்தக் கொலையையும் கண்டிக்க தவறவில்லை என்பதோடு எக் காரணம் கொண்டும் கொலைகளை மறைக்க உதவுபவனும் அல்ல. எந்தவிதமான கொலைகளாக இருந்தாலும் அவற்றை நீர் நிறுத்தும் மறுகணமே ஏனைய கொலைச் சம்பவங்கள் தானாகவே நின்றுவிடும்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

மீண்டுமோர் பொன்னான வாய்ப்பு

26-07-2008

வேலுப்பிள்ளை பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
கிளிநொச்சி

அன்புடைய தம்பி,


மீண்டுமோர் பொன்னான வாய்ப்பு


எனது கடிதங்கள் எதையும் நீர் இதுவரை பொருட்படுத்தவில்லை. நீர் உட்பட மக்களுக்கு தேவையான அமைதியை கொடுக்கக்கூடிய இனப்பிச்சனைக்கு ஓர் நிரந்தரமான தீர்வை எட்டக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென்பதை உமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இக் கடிதத்தை எழுதுகிறேன். எமது நாட்டையும் அதன் மக்களையும் அழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். உமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள மக்களை விடுவிக்க வேண்டிய தார்மீக கடமை எனக்குண்டு. கிளிநொச்சி மக்களோடு வாழ்ந்து வளர்ந்து அம் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி கிராமசபை தலைவராகவும், கிளிநொச்சியின் நகரசபையின் முதல் தலைவராகவும் பணியாற்றியதை நீர் அறிவீர். ஆகவே வன்னிப்பகுதி மக்கள் மீது எனது அக்கறை எவ்வளவு என்பதையும் நீர் விளங்கிக் கொள்வீர். தினமும் அரிய உயிர்கள் யுத்தகளத்தில் இழக்கப்படுகின்ற அதேவேளை உமது போராளிகளால் பிரயாணிகளின் பேரூந்துகள், படையினரின் பேரூந்துகள், புகையிரதம் ஆகியன கிளேமார், கண்ணிவெடி, கைக்குண்டு, குண்டு ஆகியவற்றால் இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலும் பலர் உயிர் இழக்கின்றனர். எரியும் பேரூந்துகளிலிருந்து அதிஷ்டவசமாக தப்பியோடும் அப்பாவிகளையும், சேனை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஏழை அப்பாவிகளையும் உமது போராளிகள் விட்டு வைக்கவில்லை. காரியாலயத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுவர், சிறுமியர், கர்ப்பிணிகள், முதியோர் ஆகிய இவர்களும் இதில் அடங்குவர். உமது அர்த்தமற்ற எவருக்கும் எதுவித பிரயோசனமும் தராத யுத்தத்தால் 70 ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளன. அனேகர் தமது கணவரையோ, மனைவியையோ பிரதான உழைப்பாளியையோ இழந்துள்ளனர். சிலர் கண் பார்வையும், கை கால்களையும் இழந்துள்ளனர். உம்மால் உருவாக்கப்பட்ட அநாதைகள் குறைந்த எண்ணிக்கையல்ல. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் எத்தனை பேரை பலி எடுத்துள்ளீர்? தமது முன்னாள் பிரதமரை கொடூரமாக படுகொலை செய்தமையை இந்தியா என்றும் மன்னிக்குமா? பல சமூகத்தையும் சேர்ந்த பல்வேறு தலைவர்களை நீர் படுகொலை செய்தமையை இலங்கை மக்கள் மன்னிப்பார்களா? உம்மால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் உம்மை மன்னிப்பார்களா? உம்மால் அழிக்கப்பட்ட பல பல கோடி பெறுமதியான தனியார், பொது சொத்துக்கள் பற்றி என்ன கூறுகிறீர்? உம்மால் அழிக்கப்பட்ட, ரயில்பெட்டிகள். எஞ்ஜின்கள், பஸ்கள், தொலைபேசி கம்பங்கள், மின்சார கம்பங்கள் கேபிள்கள், என்பவற்றின் பெறுமதி என்ன? தலைமன்னார் தொடக்கம் மதவாச்சி, காங்கேசன்துறை தொடக்கம் வவுனியா, மட்டக்களப்பு பாதையிலும் மொத்தம் 200 கி.மீ தூரத்திற்கு மேற்பட்ட பாதையில் தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள், கற்கள் எதையும் நீர் விட்டுவைக்கவில்லை. பல வருட காலமாக பிள்ளைகள் குப்பி விளக்கு வெளிச்சத்திலும், நிலவு வெளிச்சத்திலும் படிக்க விட்டீர். ஆறு மணித்தியால நேரத்தில் கொழும்புக்கு வர வேண்டிய நேரத்தை 36-48 மணி நேரம் வரை நீடிக்க வைத்துவிட்டீர். மக்களை பட்டினி போட்டீர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு பெரும் தொகையான மக்கள் இடம்பெயரும் போது இறந்தவர்கள் எததனை பேர்? சுதந்திரமாக வாழ்ந்த மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக கூறி அவர்களை அடிமைப்படுத்தினீர் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு இனியும் இழப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. ஏழைகள் படு ஏழைகளாகவும:, பணக்காரர் பிச்சைக்காரர்களாகவும் ஆக்கப்பட்டனர். பல லட்சக்கணக்கான மக்கள் தங்க ஆபரணங்கள், வீடுகள் உட்பட அத்தனையையும் இழந்தனர். சிலர் கணவன்மாரை இழந்தனர், பலர் தம் பிள்ளைகளை இழந்தனர். ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளை நீர் பலாத்காரமாக பிடித்துச் சென்று அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துவிட்டு அவர்களை மனித குண்டுகளாக்கி அவர்களின் உடல்களை சிதற வைத்தீர். இவை அனைத்தும் தமிழ், முஸ்லீம் மக்கள் பட்ட துன்பத்தில் ஒரு சிறு பகுதியே. அகதி முகாம்களில் முஸ்லீம் சகோதரர்கள் பலர் 15 ஆண்டுகளுக்கு மேல் வாடுகின்றனர். அதேபோல சில தமிழர்களும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்கு கொடுக்கும் பெரும் வேதனை இத்தனை துன்பங்களை அனுபவித்த பின்பும் ஆங்கிலத்தால் எழுதக்கூடிய சில சிங்கள எழுத்தாளர்கள் என்றோ மறைந்து போன சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சினைப் பற்றி கூறுவதாகும். சிலர் நான் எவரிடமும் காணாத யாழ்ப்பாண மக்களின் உயரிய பாகுபாடு மனப்பான்மை பற்றிப் பேசுகின்றனர். இன்று யாழ்ப்பாணத்து மக்கள் மிகக் கீழ்மையான நிலையில் இருந்து கொண்டு அனுதாபத்துக்கும் ஆதரவுக்கும் ஆளாகியுள்ளனர்.இதைத் தவிர ஓர் சாதாரண சிங்கள மகனை சட்டத்திற்கு பயந்த நல்லடக்கமும், மரியாதையுள்ள மனிதனாகத்தான் நான் காண்கிறேன். அவர்கள் தமிழ் மக்கள் மீது எந்தவிதமான விரோதமும் காட்டுவதில்லை. தமிழர்கNhடு சம உரிமையுடன் வாழ விரும்புகின்றனர். தென்னிலங்கையில் வாழ்கின்ற அரைவாசிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் மீது முழு அனுதாபத்துடனும் நட்புடனும் சமாதானமாகவும், அமைதியாகவும் உமது கட்டுப்பாட்டில் இருந்தபோது வாழ்ந்த நிலையிலும் பார்க்க மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர்.

தயவு செய்து உமது நடவடிக்கைகள் அத்தனைiயும் நிறுத்தவும். யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் அமைந்திருந்த சிங்கள மகா வித்தியாலயங்களில் ஆயிரக்கணக்கான சிங்கள மாணவர்கள் கல்வி கற்றனர். சிங்களப் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான தமிழ் பாடசாலைகள் அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. அன்று எங்கும் சமாதானம் நிலவியது. யாழ் மாநகர சபையில் சிங்கள உறுப்பினர்களும், முஸ்லீம் மேயர்களும் இருந்திருக்கின்றனர். சிங்களவர், தமிழர், முஸ்லீம் மக்கள் மத்தியில் எதுவித முரண்பாடுகளும் இருக்கவில்லை. நாம் சமாதானமாகவே வாழ்ந்தோம். நாடு முழுவதும் பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் அங்கத்தவர்கள், உப தலைவர்கள், தலைவர்கள் அனேகர் பணியாற்றுகின்றனர். 1983 ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் நாட்டின் வரலாற்றில் ஒரு கறுப்பு புள்ளியே. அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட ஒரு செயலாகும். இன்றும் நாடு முழுவதிலும் பல்லின மக்களும் பூரண சமாதானமாக வாழ்கின்றனர். தமிழர்கள் இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை. உமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறீர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மக்களில் அரைவாசி பேர் இன்று இல்லை. இந்த வருடம் மட்டும் யுத்த முனையில் 5000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை நீர் பலி கொடுத்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிங்களவரோ, தமிழரோ, முஸ்லீம்களோ எவரிலும் ஓர் உயிரைத்தானும் இனி இழக்க நாம் தயாரில்லை. நம் இலங்கையரே தவிர உலகம் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது. உமது நடவடிக்கைகள் தமிழ் மக்களின் முன்னேற்றத்தை பூரணமாகவும், சிங்கள, முஸ்லீம் மக்களின் முன்னேற்றத்தையும் பெருமளவிலும் பாதித்துள்ளது.

இதோ மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு உம்மை தேடி வருகிறது

இந்த வாய்ப்பு ஆண்டவனால் அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை இறுகப் பற்றிக்கொளளவும்;. கொழும்பில் விரைவில் கூடவுள்ள சார்க் நாடுகளின் மாநாட்டில் சார்க் நாட்டுத் தலைவர்கள் ஒன்று கூடி தத்தம் நாடுகளிலுள்ள பிரச்சினைகள் பற்றி சந்தித்து பேசவுள்ளனர். அதில் மிக முக்கிய பிரச்சினை பயங்கரவாதப் பிரச்சினையாகும். எனது கருத்தின்படி நீர் ஒருவர் மட்டும் தீர்மானித்தால் பயங்கரவாதத்தை ஒரு நாளைக்குள் அற்றுப் போகச் செய்யலாம். சார்க் மாநாட்டு நேரம் உமது ஒருதலைபட்சமான யுத்த நிறுத்தத்தை பெரும் கேலிக்கூத்தாகவே எடுத்துக் கொள்வர். என்னுடைய ஆலோசனையை ஏற்று பின்வரும் ஐந்து பிரகடனங்களை உடனடியாக மேற்கொள்வீரானால் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட அனைவரும் எமது பிரச்சினையில்அக்கறை கொள்வர். சார்க் மாநாட்டுத் தலைவர்களுக்கு இலங்கை இனப்பிரச்சினையிலும் பார்க்க வேறு முக்கிய பிரச்சினை இருக்குமென்று நான் நம்பவில்லை. ஆகவே அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் இனப்பிரச்சினை இடம்பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எது எப்படியிருப்பினும் பயங்கரவாதம் விவாதிக்கப்படவிருக்கும் ஒரு விடயமாக இருப்பதால் எமது இனப்பிரச்சினையும் விவாதிக்கப்படலாம். ஆகவே பின்வரும் பிரகடனத்தை செய்யுமாறு உம்மை கேட்டுக் கொள்கிறேன்.

01. ஒருதலைபட்சமாக ஓர் நிரந்தர போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி இலங்கை அரசையும் அவ்வாறு செய்ய கோரவும்,

02. இறுதியாக இனப்பிரச்சினை தீரும் வரை ஆயுதத்தை எந்தவிதத்திலும் உபயோகிக்கமாட்டேன் என்று கூறி ஆயுதத்தை கீழே வைப்பதாகவும்,

03. பிரிவினை கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண சம்மதிப்பதாகவும்,

04. சார்க் நாட்டுத் தலைவர்களை மத்தியஸ்தர்களாக ஏற்பதாகவும்,

05. சார்க் நாட்டு தலைவர்களின் சிபாரிசை தீர்வாக ஏற்பதாகவும்

பிரகடனப்படுத்தவும். சர்வதேச சமூகம் முற்று முழுதாக உமது தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்திருப்பதை நீர் அறிவீர். பிரிவினை கோரிக்கையை கைவிட சம்மதிக்கும் பட்சத்தில் முழு உலகும், குறிப்பாக சார்க் நாடுகள் இந்தியாவின் தலைமையில் எமது பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவ முற்படுவர். இது ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கு நல்லதோர் வாய்ப்பாகும். நீர் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கு கிழக்கு மாகாணத்தில் நடப்பவையை நல்ல முன்னுதாரணமாக கொள்ளலாம். நிர்வாகத்தில் பங்கு கொள்வதற்கு உமக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். என்னைப் பொறுத்தவரையில் நீர் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கு வேண்டிய சகல உதவியையும் மேற்கொள்ள முடியும். இந்த விடயத்தில் நிர்வாகத்தில் பங்கெடுப்பது உட்பட நான் எந்தவித நன்மையையும் பெறப்போவதில்லை. நாட்டின் கடும் போக்காளர்கள்கூட தமது நிலைப்பாட்டை மாற்றி திருப்திகரமான தீர்வை காண மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பர் என்பதை நம்பிக்கையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எமது இனப்பிரச்சினை சார்க் உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுமா என்பது தெரியாது. ஆனால் நிச்சயமாக பயங்கரவாதம் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் இனப்பிரச்சினை பற்றி பேசுவது தவிர்க்க முடியாததாகும்.

ஆகவே எனது ஆலோசனையை ஏற்று உமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும். அதேநேரம் இனப்பிரச்சினை சம்பந்தமாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பேச வேண்டுமென்று ஜனாதிபதி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.; கொள்கிறேன்.



இப்படிக்கு
அன்புடன்


வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ

பத்திரிகைச் செய்தி 10.08.2008


அரச படைகளும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அண்மையில் இராணுவம் மேற்கொண்ட செல் தாக்குதலால் ஒன்றரை வயது குழந்தையை பலி கொண்டதோடு 18 அப்பாவி பொது மக்களும் படுகாயமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதாகவும், சில வீடுகள் சேதத்துக்குள்ளானதாகவும் அறிய வருகிறது. இதேபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு குழந்தையை அல்லது தமது உறவினர் ஒருவரை இழப்பவர்களாலேயே இந்த இழப்பின் வேதனையை உணர முடியும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் யார்? விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்டார்கள் என்பதைத் தவிர இவர்கள் சமூகத்திற்கு செய்த குற்றம் என்ன? இவ்வாறு துன்பப்படும் மக்களின் துன்பத்தை போக்கி நிம்மதி பெருமூச்சுவிட வைக்க முடியாவிட்டால் நாம் பௌத்த தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழ்கிறோம் என்று எவ்வாறு கூற முடியும்? எது நடப்பினும் யுத்தம் தொடர வேண்டுமென்று வாதாடுகின்றவர்கள் இன்றும் நம் நாட்டில் வாழ்கின்றார்கள். இனப்பிரச்சனை தீர்விற்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருப்பவர்களும் அவர்களே.

துரதிஷ்டவசமாக நம் நாட்டின் நிலைமை இதுதான். இந் நாட்டையும் அந்த நாட்டின் மக்களையும் நேசிக்கும் நாட்டுப்பற்றாளனாகிய நான் ஓர் உயிரைத்தன்னும் வீணாக இழக்க விரும்பவில்லை. நம் நாட்டில் சரியாக கணிப்பிடின் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளார்கள். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற இந்த யுத்தத்தில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வடகிழக்கில் இடம்பெயர்ந்து பல துன்பங்களை அனுபவித்துள்ளனர். முறையான உணவு, உடை, இருப்பிடம், சுகாதார வசதி அன்றி வாழ்வதோடு தமது சொத்துக்களை முற்றாக இழந்தும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பாவி பொது மக்களே. விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் அனைவரையும் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றதுபோல் ஆகிவிட்டது. இன்று தாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என நன்கு அறிந்தும் உண்மை நிலையை நேர்மையாக மக்களுக்கு தெரிவித்து ஒருதலைபட்சமாக வேனும் யுத்த நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி, ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும். அதேபோன்று அரசும் செயற்பட்டு விமானத் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுடன் செயற்படாத பட்சத்தில் அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் அரசாங்கம் தம் மக்கள் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறுமேயானால் அரசாங்கம் தனது மதிப்பை இழந்து விடும்.

மிக விரைவில் கிளிநொச்சியிலும் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலைமை உருவாகும். ஏற்கனவே பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் பலாத்காரமாக கிளிநொச்சிப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்காக இடம்பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம், உணவு, சுகாதார வசதி ஆகியவை செய்யப்பட வேண்டும். அதேவேளை விடுதலைப்புலிகள் தமது இரும்பு கதவை திறந்து மக்கள் தம் இஷ்டம்போல் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும். குடாநாட்டில் இருந்து வன்னியில் பலாத்காரமாக குடியேற்றப்பட்டவர்கள் அனுமதி வழங்கப்பட்டால் தம் சொந்த வீடுகளுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு உண்டு. அதேபோன்று அரசும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் மக்கள் தமது பகுதியை வந்தடைய ஏதுவாக ஆதரித்து உதவ வேண்டும்.

ஆகவே யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் இக்கட்டான இக் கட்டத்தில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கும் தொடர்ந்து பிறநாட்டில் சுற்றுலா செய்வதற்கும் ஏதுவாக அண்மையில் பாராளுமன்றத்தில் மூன்றுமாதகால விடுமுறை கேட்டுப் பெற்றமை கண்டிக்கப்பட வேண்டும்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

No comments: