அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, August 18, 2008

இசைஞானி இளையராஜா அவர்கள் திருவாசகத்தின் - சிவபுராணத்தில் தவறு இழைக்கலாமா?

நான் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கும் இசைஞானி சிவத்திரு. இளையராஜா அவர்களின் திருவாசகம் ஒலிப்பதிவு நாடாவை அண்மையில் கேட்டேன். மிக ஆத்மார்த்தமாகப் பாடியிருக்கும் சைவத் திருமுறையில் 8ஆந் திருமுறையிலடங்கிய மணிவாசகப் பெருமானுடைய திருவாசகம் அவரது இசையினுடைய ஆற்றலை வெளிப்படுத்திநிற்கிறது. அதற்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எனினும் சைவ சமயத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு உண்மையான சமயநம்பிக்கையுடையவன் என்ற வகையில் மணிவாசகப் பெருமானுடைய திருவாசகத்தில்

சிவபுராணத்தை தனது இசை மெட்டுக்காக வெட்டியும் முறையற்ற வகையில் மாற்றியும் ஒரு சொல்லை மேலதிகமாக இணைத்தும் பாடியது மிகவும் மனவேதனையை அளிக்கிறது.

சைவ சமயத்தவர்களே எமது சனாதன மார்க்கத்தையும் அதன் அடிப்படையையும் மாற்றுவதும் திரிவுபடுத்துவதும் கவலையளிக்கிறது. அதிலும் மிகுந்த இறைபக்தியுடைய இசைஞானியினுடைய இச் செய்கை அவர் தெரிந்து செய்தாரா? அல்லது தெரியாமல் செய்தாரா? தெரியவில்லை.

சிவபுராணம் முழுவதையும் முழுமையாகப் பாடியிருந்தால் மிகவும் அருமையாயிருந்திருக்கும். அதை விடுத்து இடையில் ஆரம்பித்து முறை தவறி முன்னுக்குப் பின்னாக தனது இசை ஆலாபரணத்துக்காகவும் தனது வித்வத்துவத்தை வெளிப்படுத்தவும் சமய குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமானுடைய திருவாசகத்தில் சிவபுராணத்தை துண்டிப்புச் செய்ததே மனக் கவலையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் சமயம் எந்த வகையில் கைக்கொள்ளப்படுகிறது என்பது யாவரும் அறிவர். ஆனால் இலங்கையில் நாம் சிவபுராணத்தை ஒவ்வொரு சைவ சமயத்தவனும் மனப் பாடம் செய்து தினமும் இல்லாவிடினும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளில் பாடசாலைகளில் - கல்லூரிகளில் - ஆலயங்களில் பாடி வருவதும் அதனால் எமக்கு மனப்பாடமாயிருக்கும் இச் சிவபுராணம் இசைஞானி அவர்களால் எங்கே மாற்றமடைந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகவே இவ் வேண்டுகோள் சமர்ப்பிக்கப்படுகிறது.

நீண்ட நாள் ஆத்ம விசாரணையின் பின்னர் இதனை வாசகர்களின் கவனத்துக்கும் கொண்டுவர விரும்புவதுடன் இதை நேரடியாக இசைஞானி சிவத்திரு. இளையராஜா அவர்களுக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அதற்கு அவருடைய முகவரியும் தொலைபேசி இலக்கமும் தேவை. யாராவது இதற்கு உதவவேண்டும். அவரது இரசிகர்கள் அபிமானிகள் இதனால் கோபமடைந்தால் அதற்கு நான் காரணமாயிருக்க மாட்டேன். காரணம் சைவ சமயம் அல்லது இந்து சமயம் தழைத்தோங்கிய இடத்தில்தான் இன்றும் அதற்கு எதிரான வாதங்களும் எதிர்ப்புக்களும் தாராளமாக இருக்கின்றன. எமக்கு (சைவ சமயத்தவர்களுக்கு) நாயன்மார்கள் அருளாளர்களுடைய தோத்திரங்களுடன் ஆழ்வார்கள் போன்றோர் பாடிய பாடல்கள் இருக்கின்ற அதே வேளையில் புதிதாக தோன்றியிருக்கும் சத்சங்க - குரு பரம்பரைப் பாடல்களும் அதிகரித்துவரும் வேளையில் பழமைபேணும் அடியார்கள் மனதில் இது ஒரு மன வேதனையை மேலும் அழுத்தி கனமான பாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே பல தேவார திருவாசகப் பாடல்கள் சினிமாப் பாடல்களுள் புகுத்தப்பட்டு எமது சமயத்தை கொச்சைப்படுத்துவதற்கு மேலாக நாம் இலங்கையர்கள் பெரிதும் போற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுடைய சிவபுராணத்தை மூன்றிலொரு பங்கு நீக்கி – அடிப்படை ஒழுங்கான வரிகளை மாற்றிப் பாடியதுடன் கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க என்ற வரியில் இன்னொரு வாழ்க என்ற சொல்லை மேலும் புகுத்தி எம்மை மனம் நோகப் பண்ணியிருப்பது தான் வேதனை.

சகிப்புத் தன்மையை அதிகமாகக் கொண்டதன் காரணமோ அல்லது தென்னாடுடைய சிவனே போற்றி – எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற பரந்த மனப்பாங்கோ எமக்கு சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

எமது வேண்டுகோள் தயவுசெய்து சிவபுராணத்தை முழுமையாக இதே ஆலாபரணத்துடனும் வித்வத்துவத்துடனும் ஆங்கில பொருள் வசன இசை நடையுடன் திருப்பித் தரவேண்டும் என்பதே! இதை இசைஞானி இளையராஜா அவர்கள் செய்வாரா?

2 comments:

Anonymous said...

ஒருவர் கொஞ்சம் புகழடைந்துவிட்டால் அவர் சொல்வது செய்வதெல்லாம் சரியென்று ஆகிவிடாது.

இது எல்லாருக்கும் பொது.

தங்க முகுந்தன் said...

கருத்துக்கு நன்றி. ஏன் பெயர் சொல்ல விரும்பவில்லை? ஏன் தயக்கம்.
உண்மைதான்.

ஆனாலும் எமது மரியாதைக்கும் இசைத் துறையில் பிரபல்யமாயுமிருக்கும் இசைஞானி இப்படிப் பண்ணலாமா என்பதே என்னுடைய ஆதங்கம்.