அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, March 15, 2010

யோகி அல்லது துறவியின் பக்குவம் - காஞ்சி மஹா பெரியவர்

கடந்த சில காலமாக துறவிகள் ஒரு சிலருடைய நடத்தைகளினால் - சனாதன தர்மம் எனப்படுகின்ற எமது பாரம்பரிய வழிமுறைகளில் ஏதோ தவறுகள் இருப்பதாகவும் - அதனைக் கண்டிக்கின்ற போர்வையில், ஒட்டுமொத்த தர்மப் பாரம்பரியத்தையுமே அவதூறாக விமர்சிப்பதைக் கண்ணுற்று - சகிக்க முடியாமல் இக்கட்டுரையை எழுத முற்படுகிறேன். நானும் திரும்பத்திரும்ப - பலர் சொல்லியபடி - புதிதாக எதையும் சொல்ல வரவில்லை. இருப்பதில் சிறப்பானதும் -தேவையானதும் - உண்மையானதுமான கருத்தை முன்வைக்க விரும்புகின்றேன். இதற்கு நான் உதாரணபுருஷராக முன்னிறுத்துவது எம்மவர்களால் காஞ்சி மஹா பெரியவர் என வாஞ்சையோடு அழைக்கப்படும் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களையே!

அவரை மாத்திரமல்ல பல உண்மைத் துறவிகளையும் இதில் நான் குறிப்பிடுவது அவசியமாகிறது! யாழ்ப்பாணத்து சித்தர் பரம்பரை எனப்படும் சிவயோக சுவாமி குரு பரம்பரையில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரொபேர்ட் ஹன்சன் என்ற பிள்ளைத்திருநாமம் கொண்ட ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள், ஈழத்தில் நுவரெலியா இலங்காதீஸ்வரர் ஆலயத்திலிருந்த ஸ்ரீ காயத்திரி சித்தர் தவத்திரு முருகேசு சுவாமிகள், இன்றும் கொழும்பு - மட்டக்களப்பு இராமகிருஷண மிஷன்களில் சேவைபுரியும் ஸ்வாமிகள் போன்றோர் நான் நேரடியாக தரிசித்த பெரியார்களாவார். இவர்களைவிட ரமணமகரிஷி, சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்களையும் பட்டியலிடலாம்.

சனாதன தர்மம் எனப்படும் எமது சைவ அல்லது இந்துப் பாரம்பரியத்தில் நான்கு ஆச்சிரம தர்மங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவை பிரமச்சரியம் - கிருகஸ்தம் - வானப்பிரஸ்தம் - சந்நியாசம் என்பவையாகும். சந்நியாசம் என்கிற துறவு முறையை எடுப்பதற்கு - மேற்குறித்த 3 முறையிலும் படிப்படியாக பயிற்சி அடைந்தபின்பே - காவியைப் பெறுவதற்கு தகுதியடைகின்றனர்.

யோகி அல்லது துறவியின் பக்குவம் பற்றி காஞ்சி மஹா பெரியவர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சொல்லியதை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்!


துக்கம் என்பது தன்னைத் தொடாமல் எவன் ஒருத்தன் இருக்கிறானோ அவனே யோகி. பாவம் - அதாவது மனஸில் அசுத்தம்தான், துக்கத்துக்குக் காரணம். மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீக்கினால், அதுதானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும். ஒழுங்கினாலும் கட்டுப்பாடிட்டினாலும் தான் மனஸில் அசுத்தங்களை அகற்ற முடியும். இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு சரியான கல்வியின் மூலமும். அப்பியாசத்தின் முலமும், கட்டுப்பட்டு ஒழுங்காக வாழ்ந்து, அசுத்தங்களைப் போக்கிக்கொண்டு விட வேண்டும். அப்படிச் செய்து ஜயித்தால், கடைசீயில் தேக வியோகமே பரமாத்மாவுடன் பிரியாமல் சேர்ந்து விடுகிற யோகமாகிவிடும்.


யோகிக்கு அடையாளமென்ன. பரமாத்மாவைச் சேர்ந்துவிட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.

மனசு அதற்கப்புறம் ஒடவே முடியக் கூடாது. அப்படி ஒடாமல் ஆகிவிட்டதால்தான், அதற்கப்புறம் இந்த மனசினால் நமக்கு உண்டாகியிருக்கிற அத்தனை தொந்தரவுகளும் தொலைந்துபோகும். அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும். மனசு எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேரவேண்டும். மனசு அதன் மூலத்தில் சேர்த்துவிட்டால், அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஒடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்து விடுபட்ட நிலை.

நதி இருக்கிறது. அதன் மூலம் - உண்டான இடம் - என்ன? சமுத்திரம் - சமுத்திர ஜலம் தான். ஜலம் ஆவியாகிப்போய் வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஒடாத இடமில்லை. இப்படி ஒடி ஒடித்தான் கடைசீயில் தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது. அப்புறம் அதற்குத் தனி ரூபம் உண்டா. ஒட்டம் உண்டா. ஒன்றும் இல்லை. இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் இவற்றைத் தன்னிலேயே சேர்த்துக் கொள்கிற மாதிரி, நம் மனசுகளை எல்லாம் முடிவான சேர்க்கையில், யோகத்தில் தன்னோடு கரைத்துக் கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது. சமாதி நிலையில் ஞானிகள், யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்துவிட்டு வெளிப் பிரக்ஞையே இல்லாமல் இருக்கும்போதே, இந்த வஸ்துவிடம்தான் சேர்ந்திருக்கிறார்கள். சமாதி நிலைக்கு அப்புறம் ஒரு யோகி அந்த நிலையை விட்டு விட்ட மாதிரி நமக்குத் தோன்றினால்கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கைதான். உள்ளூர அவருக்கு அந்தச் சேர்க்கையின் அநுபவமேதான் இருந்து கொண்டிருக்கும். அதனால்தான் அவர் வெளிப் பிரக்ஞையோடு இருக்கிற மாதிரி நமக்குக் தோன்றுகிற போதுகூட, அதை அடைய வேண்டும். இது அடைய வேண்டும் என்ற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று கொஞ்சம் கொஞ்சம் ஒருத்தனுக்குத் தோன்றிவிட்டாலும்கூட அவர் யோகி இல்லை. அவன் ஸ்வாமியைச் சேரவில்லை என்றுதான் அர்த்தம்.

யோகியின் அடையாளத்தை வேறுவிதமாகவும் சொல்லலாம். அதாவது அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்துவிட்டது என்றால், அதற்கப்புறம் எந்தப் பெரிய துக்கம் வந்தாலும் அது துளிக்கூட ஆகக் கூடாது. அசையக் கூடாது, அழக்கூடாது, இப்படி இல்லைமல், சித்தம் துளித்துளி சலித்து விட்டால்கூட அவன் பரமாத்மாவை அடையவில்லை என்ற அர்த்தம்.
யோகிக்கு அநேக துக்கம் வரும். அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா! யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும். இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்து விட்டால் அதுதான் யோகம்.
அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும். யாரிடத்திலும் கோபம், வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்கு தன்னால் இம்மியும் ஹிம்ஸை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டும் இருக்கும். வெளி உலகத்தின் பார்வைக்கு அவன் என்னென்ன காரியம் செய்தாலும், அதெல்லாம் அவனுக்குத் தான் செய்கிறோம் என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப் பற்றே இல்லாமல், பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். சில சமயங்களில் வெளியிலே பார்க்கிற காரியம் நமக்குக் கடுமையாக இருந்தாலும்கூட, உள்ளுக்குள்ளேயே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது. மஹா யோகியான பரமேசுவரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம். ஆனால் ஒவ்வொரு ஜீவனும் எத்தனை பாப ஜீவனாக இருந்தாலும் சிறிய காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்காகவே அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்குத் தூக்கத்தைக் கொடுத்து அந்த வேளையில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி. இந்தச் சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார். தினம் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக் கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி, இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல் - புனரபி ஜனனம், புனரபி மரணம் - கூடாது. இந்தச் சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான். குழந்தையாக இருக்கிற காலத்திலிருந்தே இவற்றில் எல்லாம் பழகினால்தான், கோடாது கோடி ஜனங்களை இந்தமாதிரி, படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால்தான், எங்கேயானாலும் ஒரு யோகி, ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவதுதான் இத்தனை மநுஷ்ய சிருஷ்டிக்கும் பலன்.
(http://www.kamakoti.org/tamil/part1kural17.htm)

1 comment:

vjvrk said...

மிக மிக அருமையான பதிவு நன்றி