அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, September 27, 2008

ஒக்டோபர் 02. மகாத்மா காந்தி ஜனனதினம் - கட்டுரை வேண்டும்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி இன்றைய ஆசிய நாடுகள் மாத்திரமல்ல உலக நாடுகளே எதிர்நோக்கும் வன்முறைக் கலாச்சார - யுத்த அழிவுகளால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களை முற்றாக ஒழிப்பதற்கு முடியாவிடினும் அதைத் தவிர்ப்பதற்கும் குறைப்பதற்கும் ஏதுவான ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கிருத்தியம் விரும்புகிறது. காந்தீய வழிமுறைகளால் இவற்றை எப்படி ஏற்படுத்தலாம் என்ற ரீதியில் வாசகர்கள் தாமே ஒரு தலைப்பிட்டு எதிர்வரும் ஒக்டோபர் 02 அவரது ஜனன தினத்தன்று கட்டுரை பிரசுரமாகக்கூடியவகையில் அனுப்பிவைக்கும்படி வலைப் பதிவாளர்களையும் வாசகர்களையும் அன்போடு கிருத்தியம் வேண்டுகிறது.
விஜயதசமிலியிருந்து கிருத்தியத்தின் பதிவிலுள்ள அரசியல் கட்டுரைகள் அனைத்தும் வேறொரு பதிவுக்கு மாற்றப்பட்டு கிருத்தியம் முற்று முழுதாக சமயப் பணிகளுக்கென ஒதுக்கப்படவிருக்கிறது என்பதை வாசகர்களுக்கு முன் கூட்டியே அறியத் தருகின்றேன். இதனால் ஏற்படும் அகௌகரியங்களுக்கு தயவுசெய்து அடியேனை மன்னிக்குமாறு தயவாக வேண்டிக் கொள்கின்றேன். நான் காந்திய வாதியாக இருந்தாலும் என்னுடைய கொள்கைகளை எவர்மீதும் நான் திணிக்க மனதாலும் விரும்பவில்லை. சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவை மேற்கொண்டுள்ளேன்.
தனிமனிதனுக்கு சமயம் எவ்வளவு முக்கியமோ அதேயளவு சமூகத்தில் பொதுப்பணி அரசியலாகிறது. ஆனால் அரசியல் என்ற அந்த புனிதமான சேவை இன்று மக்களையே கொல்லுமளவிற்கு திரிவுபடுத்தப்பட்டு வேறாயிருக்கிறது. இதை எவ்வளவுதான் அடித்துக் கூறினாலும் ஒரு கை தட்டி என்ன பயன். சிலர் அரசியல் கதைக்கவே முகத்தைச் சுளிக்கிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் தீட்டைப் போல ஓடிவிடுகின்றனர். எனக்கென்ன நானும் என்பாடும் என்று சுயநலவாதியாக இருப்பதற்கு என்மனம் இடம்கொடுக்கவில்லை. ஏதாவது வாழும் போது செய்துவிட்டுப் போய்விடவேண்டும். அல்லாமல் பூமிக்குப் பாரமாய் - கடனாளியாய் இருப்பதை நான் விரும்பவில்லை. சுற்றாடலையும் சூழலையும் அதிகாரம் பண்ணும் நாம் அதற்கும் ஏதேனுமொரு பணிவிடை செய்ய வேண்டும் என்பது எனது ஆசைமட்டுமல்ல. கடமையும் கூட. இடம்பெயர்ந்து வந்த எனக்கு இந்த சுவிற்சர்லாந்து தேசம் பிராணிகளின்மீதும் இயற்கையின்மீதும் காட்டும் அக்கறை - ஏதோ - கடவுள் - என்னை இங்குதான் நீ வாழ வேண்டும் - உனக்குரிய இடம் இது - என கட்டளை பிறப்பித்ததுபோல - என் மனச்சாட்சி - ஒவ்வொரு கணமும் சொல்கிறது. மனிதாபிமானம் ஜனநாயகம் இங்கு தாராளமாக தற்பொழுது இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னர் இதுவும் எம்மைப் போன்றுதான் யுத்தபூமியாயிருந்தது. ஆனால் இன்று உணர்ந்து விட்டார்கள். நாம் படிப்பினை கொள்ள சில நாட்கள் மாதங்கள் வருடங்கள் யுகங்கள் செல்லலாம்.
நீதி நியாயத்திற்காக - ஏதோ எழுத வேண்டும் போலத் தோன்றியதால் - எழுதினேன். அடியேனது தவறுகளை முடியுமானால் மன்னியுங்கள். குறையிருந்தால் உரிமையோடு சொல்லுங்கள்.
எப்பவோ முடிந்த காரியம்.
ஒரு பொல்லாப்புமில்லை.
யாமறியோம்.
முழுதும் உண்மை.

அவனே நான் - தங்க. முகுந்தன்.

No comments: