அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, September 15, 2008

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் பொன் சிவபாலனின் 10வது நினைவு தினம் இன்று - பகுதி 2

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் தொடர்பான சில பதிவுகளை ஈழத் தமிழர் மனசாட்சி என்ற தலைப்பில் ஒரு நினைவு மலரை கூட்டணியின் ஐக்கிய இராட்சியக் கிளை(London Branch) 2003 ஓகஸ்டில் வெளியிட்டது. அதில் எனது நிகரற்ற தலைவர் என்ற கட்டுரையின் 6வது பந்தியில்
1989இல் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்ற சிவாஐயா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று அதன் பின் இந்தியாவில் தங்கியிருந்து 1991இல் கொழும்பு திரும்பினார். சுpல நாள்கள் ராணி வீதியிலுள்ள விடுதி இல்லத்திலும் பின் சில நாள்கள் டியூறோ ஹோட்டலிலும் தங்கியிருந்தார். தனித்திருந்த சிவா ஐயாவை எமது ஹவ்லொக் வீதி அலுவலகத்தில் திரு. தங்கத்துரை திரு. வீ. ஆனந்தசங்கரி திரு. பொன் சிவபாலன் திரு. க. சின்னத்தரை ஆகியோருடன் நானும் ஒரு கூட்டுக்குடும்பமாக வசித்தோம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
நான் இத்தொடரின் முதற்பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததுபோல 1989.07.13 பௌத்தலோக மாவத்தையில் பேசவென வந்த 3 விடுதலைப் புலி உறுப்பினர்களால் திருமதி சரோஜினி யோகேஸ்வரனின் கையால் பிஸ்கட்டும் தேநீரும் அருந்திக் கொண்டிருந்துவிட்டு தேநீர்க் கோப்பையை வைக்கப்போகும் சாட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளால் எனது பெரியப்பா அமிர்தலிங்கம் அவர்களும் மாமா என அன்புடன் அழைக்கப்பட்ட (விடுதலைப் புலிகளால் ஏற்கனவே வன்னியில் சில விரும்பத்தகாத நடவடிக்கைகளால் மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சுகமடைந்திருந்த) திரு. யோகேஸ்வரன் அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிவாஐயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் வாகசர்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். இச்சம்பவம் நடைபெற்ற போது நான் சென்னையில் குளோபல் தொலைத் தொடர்பு நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கப்பநாயக்கன் தெருவில் எமது அலுவலகத்திலேயே நாம் தங்கியும் இருந்தோம். அக்காலகட்டத்தில் சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த எமது நிறுவனத்தின் தலைவர் அமரத்துவமடைந்த சண்முகராஜா அவர்களது நண்பர் மலே முஸ்லிம் இனத்தைச்சேர்ந்த திரு. காசிம் குடும்பத்தினர் எமது அலுவலகத்திலேயே தங்கிநின்று தமது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பினர். சிறுவயதிலிருந்து எல்லோருடன் அன்பாகப் பழகும் குணமுடைய நான் என்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருவது இன்றும் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. இவர்கள் சென்னைக்கு வந்து தங்கியிருந்தபோது முடிந்த உதவிகளைச் செய்ததும் மறக்காது போனவுடனேயே அவர்கள் நன்றியுடன் ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். 13.07.1989 வியாழக்கிழமை இரவு 10.00 மணிபோல் எனக்கு தொலைபேசியில் அவர்கள் செய்தி அறிந்தும் எனக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் கொழும்பு அலுவலகத்தில் நடந்திருப்பதாகவும் உடனடியாக அங்கு ஒருக்கால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படியும் சொன்னார்கள். நானும் உடனேயே தொடர்புகொள்ள முயற்சித்தும் நீண்ட நேரத்தின்பின் இணைப்புக்கிடைத்தது.
இந்நிகழ்வகளை நான் எனது பெரியப்பா என்ற கட்டுரையில் விரிவாகத் தெரிவித்திருப்பதால் அதிகம் இத்தொடரில் எழுதாது ஏனையவற்றை எழுதுகிறேன். வாசகர்கள் அத்தகவல்களை அறிய விரும்பி வேண்டினால் அதை தனியாகப் பதிவிடலாம். 1989.07.14 வெள்ளிக்கிழமை நான் கொழும்பு அலுவலகத்திற்குப் போனபோது எனது கண்ணில் முதலில் தென்பட்டவர் அண்ணன் சிவபாலன் அவர்களே! அங்குமிங்கும் ஓடியவண்ணம் அவரும் மாவை. சேனாதிராசா அவர்களும் மரணச் சடங்குக்கு வேண்டிய ஒழுங்ககளை மேற்கொண்டதும் மறக்கமுடியாது.
நான் அங்கு சென்ற சமயம் அமரர்களுடைய பூதவுடல்கள் கொண்டுவரப்படவில்லை. வீடு கழுவப்பட்டுக் கொண்டு இருந்தது. இரவு சடலங்கள் கொண்டுவரப்பட்ட பின்னர் அடுத்த நாள் காலைவரை இருவரது பூதவுடல்களும் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அடுத்தநாள் சனிக்கிழமை நண்பகல் இரத்மலானை விமான நிலையத்திற்கு எடுத்தச் செல்லப்பட்டு முதலில் திருகோணமலைக்கும் பின்னர் மாலையில் மட்டக்களப்பு நகருக்கும் எடுத்தச் செல்லப்பட்டது. அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை காலையில் மட்டக்களப்பிலிருந்து பலாலிக்கு எடுத்தச் செல்லப்பட்டு அதன் பின் ஒரு இந்திய விமானப்படை ஹெலியில் அமிர்தலிங்கம் அவர்களின் பூதவுடலும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் செல்ல மற்றொரு ஹெலியில் யோகேஸ்வரனின் பூதவுடலும் அவரது மனைவி மற்றும் சிலரும செல்ல முறையே வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி மைதானத்திற்கும் யாழ் முற்ற வெளி மைதானத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது. நானும் வட்டுக்கோட்டை செல்லும் ஹெலியில் பயணித்தேன். இதை இலங்கைத் தமிழருக்காக 20 ஆண்டுகள் என்ற நூலில் டாக்டர் ஜனார்த்தனன் மிக அருமையாக அண்ணன் அமிரை இழந்தோம் என்று 54ஆம் பக்கத்திலிருந்து கட்டுரை அமிரின் மரணச்சடங்குபற்றி அவர் இந்தியாவிலிருந்து இறுதிக்கிரியைகளில் பங்குபற்றியதை மிக அழகாக வர்ணித்துள்ளார்.
அண்ணன் சிவபாலனின் நினைவுகளை எழுதம்போது அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுடன் மேலும் பல விடயங்கள் எழுதவேண்டிய கட்டாய நிலை இருப்பதால் தொடர் நீண்டுகொண்டு போகிறது. வாசகர்கள் அதற்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் இதனை ஒரு வரலாற்றுக் குறிப்பாக பதிவிட விரும்புவதால் எனது அனுபவங்களை விபரமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். இதனால் எனது மனம் நிறைவடையும் ஒரு திருப்தியை நான் அடைகிறேன்.(மீதி பின் தொடரும்)

1 comment:

களத்துமேட்டின் ஈழவன் said...

தொடருங்கள் முகுந்தன்.