அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, September 20, 2008

தொல்லை தீர்ந்ததென்று போய்விடுவேன் - தருமர் ஆலால் நினைவுக் கூட்டத்தில் அமிர்

அமிர்தலிங்கம் சகாப்தம் நூலில் அத்தியாயம் 44ல் இந்தத் தலைப்பில் அமரர்கள் தருமலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரின் படுகொலைகளுக்கு இரங்கல் தெரிவித்து சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய பேச்சு குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதில் ஓரிடத்தில்
கொலை புதுடில்லியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளத்திலும், புதுடில்லியிலும் ஸ்ரீ ராஜிவ் காந்தி அவர்கள் ஆற்றிய உரை, இந்த இருவரது கொலைகளும் அவரது உள்ளத்தில் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தைக் காட்டுகிறது. சிலர் தமிழர் விடுதலைக் கூட்டணிலைப் பயப்படுத்த இக்கொலை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதனைக் கண்டு நாம் பின்வாங்குவோம் என்று கூறினால் நாம் எப்பவோ ஒதுங்கியிருப்போம். 1972ஆம் ஆண்டு, சிங்கக் கொடியை எரித்த இளைஞர்களைத் துரத்தி வந்த பொலிஸ்காரனைத் தடுத்து சேட் பட்டனைக் கழற்றி என் நெஞ்சைக் காட்டி இயலுமானால் சுட்டுவிட்டுப் போ என்று தெரிவித்தவன் நான். நாங்கள், என்று விடுதலைக் களத்தில் இறங்கினோமோ அன்றே மரணம் வரும் என்றுதான் இறங்கினோம். எனக்கு ஏதும் நடந்தால் என் தொல்லை முடிந்தது என்று போய்விடுவேன். எனக்கு என்ன நட்டம்? தர்மலிங்கம் மரணித்துவிட்டார். அவருக்கு என்ன நட்டம்? ஆலாலசுந்தரத்துக்கு என்ன நட்டம்? மரணத்தைக் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி எம்மை வெருட்ட நினைக்கக் கூடாது. அங்கே யாழ்ப்பாணத்தில் இலட்சியத்தைக் கடந்து வெறியாட்ட நிலை நடக்கிறது,என்றுள்ளது.
இதைக் குறிப்பிடுவதன் காரணம் இன்று மக்கள் அல்லோல கல்லப்பட்டுக்கொண்டிருக்கும் நிலைக்கும் அன்றைய அவரது பேச்சுக்கும் தீர்க்கதரிசனமான தொடர்பு இருப்பதைக் குறிப்பிடவே!
இது 1985ல் நடந்தது. இந்நிகழ்வுக்குப் பின்னர் 1988ல் செனட்டர் நடராசா (படுத்திருந்த வேளையில் சுடப்பட்டார்) வேல்முருகு மாஸ்டர் எஸ். சம்பந்தமூர்த்தி 1989ல் அ. அமிர்தலிங்கம் வி. யோகேஸ்வரன் 1990ல் சாம். தம்பிமுத்து திருமதி. கலா தம்பிமுத்து 1997ல் அ. தங்கத்துரை (இவருடன் தமிழறிஞர்கள் ஐவர்) 1998ல் திருமதி. சரோஜினி யோகேஸ்வரன் நமசிவாயம் பொன். சிவபாலன் (இவருடன் மாநகரசபை ஊழியர்கள் பலர்) பொன். மதிமுகராஜா 1999ல் கலாநிதி நீலன் திருச்செல்வம் 2000ல் நிமலன் சவுந்தரநாயகம் 2004ல் ஜோசப் பரராஜசிங்கம் அரியநாயகம் சந்திரநேரு 2006ல் ந. இரவிராஜ் சி.சிவமகாராசா போன்றோர் கொல்லப்பட்டது அனைத்துமே என்ன பலனைத் தந்தன. மக்களுக்காக இன்று துணிந்து குரல் கொடுப்பது யார்? மாற்றுக் கருத்தடையவர்களும் கொல்லப்படுகிறார்கள். படித்த சமூகத்தில் வாழும் சான்றோரையும் கொன்றுதீர்க்கிறார்கள்.
விடுதலை இதனால் வருமா? அறிவிலும் மக்களிடத்தில் துணிந்து கருமம் ஆற்றும் ஆற்றலும் அனுபவமும் கொண்ட பலர் இருந்த இடத்தை விட்டு தமதுயிரைக் காக்க வெளிநாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். யாருக்கான போராட்டம் இப்போது நடைபெறுகிறது? சற்று நிதானமாக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஆராயவேண்டிய விடயங்கள்!

ஓவ்வொரு தடவையும் நடைபெற்ற சம்பவங்களை சற்று விபரமாக இனிவரும் தொடர்களில் நான் அப்பாவிப் பொது மக்களின் நன்மைகருதி எழுதவிருக்கின்றேன்.
பத்திரிகைகள் அனைத்துமே ஒருபக்கச் சார்பாக அரசைச் சாடி அரசுக்கு யோசனைகள் சொல்கின்றன.
நான் ஏதோ அரசுக்கு ஆதரவாக கருத்து வெளியிடுகிறேன் என்ற எண்ணம் வாசகர்களுக்கு ஏற்படுமானால் அது ஒரு மிகமிக முட்டாள்தனமான எண்ணமெனவே நான் குறிப்பிடுவேன். இதற்காக நான் எவரையும் கோபிக்க முடியாது. அவரவர் அறிவு அவ்வளவுதான் என்பதை மாத்திரம் என்னால் சொல்ல முடியும்.
இதற்காக நான் சில விடயங்களை ஆதாரங்களுடன் சில மேற்கோள்கள் காட்டி எழுதவிழைகிறேன்.
வாசகர்கள் வெறுமனே கூப்பாடுபோடும் ஒரு தலைப்பட்சமான நபர்களுக்கோ அல்லது பத்திரிகைகளுக்கோ அல்லது பக்கச் சார்புடைய இணைய வலைத் தளங்கள் மற்றும் பதிவுகள் இவற்றுக்குச் செலவிடும் நேரத்தை நியாயமான நடந்த உண்மைகளை எதுவும் திரிக்காமல் எழுதும் என்னுடைய பதிவில் ஒரு சில நிமிடமாவது செலவிட்டுத் தங்கள் கருத்துக்களை பெயர் குறிப்பிட விரும்பாவிடினும் உள்ளத்தைத் தொட்டு மனச்சாட்சிப்படி தமது கருத்தக்களைத் தெரிவிக்க வேண்டும் எனத் தயவாக வேண்டிக் கொள்கின்றேன்.
நான் தவறாக ஏதாவது கருத்துக்களைத் தெரிவிக்கிறேன் அல்லது மேலதிக பொய்யான தகவலைத் திணிக்கின்றேன் எனக் கருதினால் உடனடியாக சுட்டிக் காட்டலாம். இந்த விடயத்தில் நான் கடந்த 01.09.2008 ஆந்திகதி எழுதிய வாசகர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் என்பதில் எழுதிய சொற்களை மீள நினைவுபடுத்த விரும்புகிறேன். அதில் தமது கருத்துக்களை மற்றவர்கள் மனது புண்படாத விதத்தில் இடுவது நலமென நான் கருதுவதால் என்று குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் எப்டியானாலும் என்னை விமர்சிக்க நான் இந்தத் தொடரில் வாசகர்களுக்கு முழு உரிமையும் அளிக்கின்றேன். ஆனால் அதற்காக மோசமான வார்த்தைகளைப் பாவிக்காமலிருக்கவும் தயவுடன் வேண்டுகிறேன்.
காரணம் இன்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களில் பலருக்கு (ஒரு சிலரது நடத்தைகளால் அனைத்து வீரர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது ஒருபுறம் சில வேளைகளில் பொறுப்புமிக்கவர்களாலும் அப்படிப்பட்ட செய்கைகள் நடைபெற்ற சம்பவங்களும் நிறைய உண்டு) மக்களுடன் செவ்வையாகப் பேசவே தெரியாது என்பது எனது கருத்து. அது எந்த இயக்கமாக இருந்தாலும் சரி மேலிடத்திலுள்ளவர்கள் இதுபற்றி அலட்சியமாக இருப்பதே மிகவும் வேதனை. சில வேளை அவர்களும் அப்படியோ தெரியாது.


மீதி பின் தொடரும்

No comments: