அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, September 6, 2008
யாழ் பொது நூலக வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

யாழ் பொது நூல் நிலையம் சம்பந்தமாக வெளிவந்த பத்திரிகை அறிக்கைகள் மற்றும் செய்திகள் கையளிக்கப்பட்ட அல்லது வெளியிட்ட கோரிக்கைகள் பற்றி மாநகர சபை முதல்வரும் உறுப்பினர்களும் பத்திரிகைகளுக்கு கொடுத்த விளக்கங்கள் அறிக்கைகள் முழுமையாக அல்லது பகுதியாக யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் சரி கொழும்பிலும் சரி வெளிவரவில்லை என்பது ஒருபுறமிருக்க குறிப்பிட்ட ஒருசிலரது அறிக்கைகளும் கருத்துக்களும் தொடர்ந்தும் வெளிவந்து தமது நிலையை நியாயப்படுத்திக் கொண்டு இருப்பதுதான் வேதனையை அளிக்கின்றது. இன்று 22.02.2003 உதயனில் 9ம் பக்கத்தில் மாவட்டக் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அறிக்கை படித்த தமிழரையெல்லாம் முட்டாள்களாக்கச் செய்வதுபோலத் தெரிகிறது. இந்தச் செய்திகள் உண்மைச் சம்பவங்கள் பலவற்றை மறைக்கவும் மறக்கவும் ஏதுவாக அமைகிறது. எமது நியாயமான கருத்துக்கள் குறைந்தது நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்களுக்காவது தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இதனை எழுதவேண்டியவனாக இருக்கின்றேன். நூலகத்தைப் பயன்படுத்தம் வாசகர்களாகிய நீங்கள் உங்கள் சுயமான கருத்தக்களை எனக்கோ அல்லது பிரதான நூலகருக்கோ அல்லது நூலக ஆலோசனைக் குழுவினருக்கோ தெரியப்படுத்தி இந்நூலகம் எவ்வளவு விரைவாகத் திறக்கப் படமுடியுமோ அவ்வளவு விரைவாகத் திறந்த வைக்கப்பட அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். மேலும் இதனை உபயோகப் படுத்துபவர்கள் நல்ல பலனை அடைய வேண்டும் என்பதே எனது உண்மையான ஆதங்கமும் தயவான வேண்டுகோளுமாகும்.

பூரணப் படுத்தப்படாத நிலையில் நூலகம் திறந்து வைக்கப்படுவதால் நூலகத்தின் எதிர்கால பணிகள் கேள்விக்குரியதாகிவிடும் என நினைப்பதே தவறாகும். நூலகம் திறக்கப்படுவது சம்பந்தமாக உதயன் பத்திரிகையில் கடந்த 10.11.2002ன் 12 ஆம் பக்கத்தில் யாழ் பொது நூலகம் எப்போது திறக்கப்படும் எனவும் 16.11.2002ன் 9ம் பக்கத்தில் யாழ் பொது நூலகம் ஜனவரியில் திறப்பு – அமைச்சர் ஜயலத் அறிவிப்பு எனவும் 06.12.2002ன் IIIம் பக்கத்தில் அடுத்த வருடம் ஜனவரியில் யாழ் நூலகம் திறக்கப்படும் அமைச்சர் ஜயலத் கூறுகிறார் என்றும் உள்ளது. இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள் முன்னரே தமது கருத்தக்களைத் தெரிவித்திருக்கலாம். ஏற்பாடுகள் செய்யப்பட்டு அழைப்பிதழ்கள் அச்சிட்டு திறக்கப்படவிருப்பதற்கு முதல்நாள் வந்து பொதுமக்களின் பெயரால் ஒவ்வொரு அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்ததுதான் விந்தையாயிருக்கிறது. 1974ல் நடந்தது போன்ற இரத்தக்களரி ஒன்று ஏற்படக் கூடாது – கல்விக்குப் பெயர்போன யாழ்ப்பாணத்தில் அப்படிப்பட்ட ஓர் சம்பவம் இடம்பெற்றதாக இருக்கக் கூடாது என்பதற்காகவே நாம் நிகழ்வை இரத்தச் செய்ததுடன் எங்கள் பதவிகளிலிருந்தும் ஒட்டுமொத்தமாக விலகிக்கொண்டோம்.

வாசிக்கும் பழக்கமுடையவர்களுக்குத்தான் நூலகம் தேவை. அதை விடுத்து வீணே கூக்குரலிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தம் மனிதருக்கு கடந்த தினமுரசு 500வது இதழில் காதில பூ கந்தசாமி சொன்னதுபோல கன்ரீனில போய்க் குந்தியிருந்து அரட்டையடிக்கிறதுதான் உடனடி முக்கியமெண்டு நிக்குதுகள்.

ஆரம்பத்தில் 1959ம் ஆண்டளவில் நூலகத்தில் இடநெருக்கடி காரணமாக மாடியீறாகக் கட்டிமுடிக்கப்படாத நிலையிலேயே அன்றைய மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா குடிபுகும் வைபவத்தை நடாத்தினார். அதன் பின்னர் நூலகம் படிப்படியாகவே பூரணப்படுத்தப் பட்டது. இது இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியாது.உலகப் புகழ் பெற்ற ஒப்பற்ற எமது உயிர்போன்ற நூலகம் ஆனி 1ம் திகதி இரவு பொலிசாரால் தீயிடப்பட்டது. ஏறத்தாள 97,000 பெறுமதிமிக்க நூல்கள் முற்றாக எரிந்து சாம்பலானது.

வணக்கத்திற்குரிய தாவீது அடிகள் சுவாமி ஞானப்பிரகாசரின் மாணவர் ஒப்பியல் ஆய்வாளர் பொது நூலகம் எரிகிறது என்ற தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்து மாரடைப்பால் உயிர் துறந்தார். புத்தகங்களின் பெறுமதி அவருக்குத் தெரியும் என பாராளுமன்றத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம் தெரிவித்தார். 04.06.1984ல் மீளளிக்கப்பெற்ற கட்டிடித்தை அவர் திறந்து வைக்கும் போதும் பகுதி பகுதியாகவே நூலகம் இருந்தது. அப்போது விசேட ஆணையாளராக இருந்த திரு. சி.வி.கே. சிவஞானம் அவர்கள் அன்று வெளியிட்ட மலரில் இந்த அழிவைக் கண்டு அசந்து விடாமல் அதையே ஆக்கமாக மாற்றி இந்நூலகத்தை மீளமைக்கவும் மூன்றாம் கட்டமாக மேற்குப்புறமாக இப்பொழுது திறந்து வைக்கப்படும் கட்டடத்தை அமைக்கவும்…… கீழ்த்தளத்தில் வாசிகசாலைப்பகுதி சிறுவர்பகுதி உடனுதவும்பகுதி ஆகியன இடைக்கால ஒழுங்காக 10.12.1982ம் திகதியிலும் 14.07.1983ல் இரவல் கொடுக்கும் பகுதியும் திறந்துவைக்கப்பட்டன….. இப்போது புதிய கட்டடமும் சிறுவர்பகுதியும் திறந்துவைக்கப்படுகின்றன. … இம்முயற்சியில் முக்கிய பங்கு கொண்டவன் என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைவது போல…. இந்நூல் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் உரிமையும் இந்த மாநகராட்சி மன்றத்திற்கு உரித்தாகியது பெருமைக்குரியது … என்கிறார். ஆனால் கடந்த 13.02.2003 உதயனில் ஒரு தடவையல்ல இருமுறைகள் யாழ்நூலகம் அழிக்கப்பட்டது என்ற தகவலைத் தெரிவித்து திறப்பு விழாவை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரினார்.

16.11.2002 உதயன் 5ம் பக்கத்தில் ஜீ.ஜீ யின் சிலையை நூலகத்தில் நிறுவ அனுமதி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஆ. விநாயகமூர்த்தி அவர்கள் அதற்கு புலிகளின் ஆலோசனையைப் பெற்றாரா? 13.02.2003 உதயன் 2ம் பக்கத்தில் பத்திரிகை வாயிலாக திறப்புவிழா பற்றி அறிந்ததாக பொய் சொல்கின்றார். அதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் அவரால் எழுதப்பட்ட மேற்குறிப்பிட்ட கடிதம் ஆவணமாக இருக்கின்றது. நூலகம் திறக்கப்படவிருப்பதால்தானே அமரர் ஜீ.ஜீ யின் சிலை வைப்பதுபற்றி எழுதியிருப்பார். யாரை முட்டாள் என நினைக்கின்றாரோ தெரியவில்லை.

தந்தை செல்வா அறங்காவல் குழு மாநகராட்சி மன்றத்திற்குச் சொந்தமான இடத்தில் அதுவும் பொதுநூலகத்திற்கும் சமாதிக்குமிடையில் முன்னர் விளையாட்டு கிளப்பாக இருந்த இடத்தின் பிற்பகுதி தமக்கரியதெனவும் அதில் தந்தை செல்வா நினைவாக ஓர் நூலகத்தை அமைக்க அந்த இடத்தைத் தமக்கத் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்ததைத் தொடர்ந்து நாம் கூட்டணி உறுப்பினர்கள் இதுபற்றி மாநகர சபைக் கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் குடாநாட்டுப் பத்திரிகைகளில் வெளிவராததும் கவலைக்குரியதே. அன்றைய கூட்டத்தில் நான் பொதுநூல் நிலையத்துக்கு அருகில் தனது பெயரில் நூலகம் அமைவதை பெரியவரின் ஆத்மாகூட ஏற்றுக்கொள்ளாது எனவும் அத்துடன் அவரது ஆவணங்களையும் அவர் சம்பந்தப்பட்ட சகல விடயங்களையும் தனியாக பொது நூலகத்தில் தந்தை செல்வாவின் பெயரில் ஒரு தனியான பகுதியாக ஏற்படுத்தவதற்கு சபை சகலவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் தெரிவித்தேன். மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றம் சென்றால் மாநகரசபையால் வழங்கப்பட்ட சமாதி அமைந்திருக்கும் பகுதியை மாநகர சபையே பொறுப்பெடுத்தச் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் கூறினேன்.

பத்திரிகைகள் தமது பத்திரிகை தர்மத்தை சரியாகக் கைக்கொள்ளவில்லை என்றும் நீதியாக நடக்கவில்லை என்றும் பகிரங்கமாகவே தெரிவிக்கின்றேன். இதைப்பற்றி கடந்த 13.02.2003ல் மாநகரசபையில் குடாநாட்டுப் பத்திரிகைகளின் நிருபர்களுடனும் கடந்த 16.02.2003ல் யாழ் தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் பீடத்தினருடனும் வாதப்பட்டதை யாரும் அறிய மாட்டார்கள். பத்திரிகைகள் நாம் கொடுத்த சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் 8 முக்கிய குறிப்புக்களுக்கான விளக்கங்களை பிரசுரித்திரித்திருக்கலாம். பத்திரிகையாளர் மாநாட்டில் நான் கூறியதுபோல யாராவது நூலகத்தை திறக்காமல் செய்வதற்கு ஏதேனும் விபரீதங்களை ஏற்படுத்துவார்கள் என எச்சரித்திருந்தேன். அதேபோல 12ஆந் திகதி நள்ளிரவு நூலகத் திறப்புக்கள் அபகரிக்கப்பட்டன. நடந்தது என்ன? 1981ல் நூலகத்தை தீக்கிரையாக்கிய இலங்கைப் பொலிசார் யாழ்ப்பாணத் தமிழர்களில் ஒருசிலரிடமிருந்து நூலகத்தைப் பாதுகாக்க காவலிருந்ததுதான். இவர்களுடன் இராணுவமும் இணைந்ததும் குறிப்பிடத் தக்கது. இதனை யாரிடம் கூறுவது?

14.02.2003 வீரகேசரி முற்பக்கத் தலைப்புச் செய்தியில் என்னையும் முதல்வரையும் விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் இளம்பரிதியையும் தொடர்புபடுத்தி பூட்டிய அறைக்குள் சில நிமிட நேரம் உரையாடினர் என்று செய்தி வெளியிட்டது. தொடர்ந்து முதல்வர் கூறியதாக த ஐலன்ட் பத்திரிகையும்(17.02.2003) தினமுரசும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

நூலகத்தின் மேல் எனக்கு தீராத பற்று இருக்கிறது. மாநகரசபை உறுப்பினர்களில் எத்தனைபேருக்கு வாசிக்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு சிறுவயதிலிருந்தே அந்தப் பழக்கம் இருப்பதுடன் எரிக்கப்பட்ட பெரிய நூல்நிலையத்தில் 1981க்கு முன்னரே அம்புலிமாமா நட்சத்திரமாமா போன்ற புத்தகங்களை வாசித்தவன் என்ற வகையிலும் நூலகத்தின் அருகிலிருந்த சுப்பிரமணியம் பூங்காவில் விளையாடியவன் என்ற ரீதியிலும் எனக்கு இவை மீண்டும் இருந்ததுபோல உடனேயே கட்டப்பட வேண்டும் என்ற ஆதங்கம் உண்டு. இதை நான் எமது மாநகரசபை பொன் விழா மலரின் வாழ்த்துச் செய்தியில் - மீண்டும் யாழ் நகர் தனது பழைய பொலிவைப் பெற்றால் அந்த மன நிறைவை நீண்ட நாட்கனவை அடையும் ஒருவனாக நானும் இருப்பேன். கனவு நனவாவது காலத்தின் கடமை. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மூலரின் மந்திரத்தை தெய்வம்தான் நிலைநிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்துவது பொருந்தம் என நினைக்கின்றேன்.

நூலக வாசகர்கள் முடிந்தால்
யாழ்ப்பாண பொதுநூலகம் மீளளிக்கப்பெற்ற கட்டடத் திறப்பு விழா மலர், யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு, மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது
என்ற புத்தகங்களை வாசித்தால் எமது நூல் நிலையத்தின் முன்னைய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்.

இன்று நூலகக் கட்டடத்தைப் பார்க்கும் எந்த ஒரு பாமரனும் கட்டி முடிக்கப்படாத கட்டடம் என்று சொல்ல மாட்டான். அப்படிச் சொன்னால் அது முட்டாள்தனமானதாகும். அப்படியானால் பிரான்ஸ் நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நூலகத்துக்கு வழங்கிய ஒரு தொகுதி நால்களை தற்பொழுது யாழ் கச்சேரிக்கு முன்னர் இயங்கும் பொது நூலகத்தில் அல்லது நல்லூரிலுள்ள மாநகர சபை அலுவலகத்தில் வைத்தே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் புதிய கட்டடத்திலேயே வழங்கினார். பத்திரிகைகளும் இதைப் படம்பிடித்து செய்திகள் வெளியிட்டிருந்தன. அதே பத்திரிகைகள் கட்டடத்தின் உட்பகுதியை அழகாகப் படம் எடுத்துப் பிரசுரித்திருக்கலாம். பத்திரிகைகள் இந்த விடயத்தில் நீதியாக – நடுநிலையாகச் செயற்பட்டிருந்தால் மறுப்பறிக்கைகள் வருவது நின்றிருக்கும். அத்துடன் நூலகத்தையும் திறந்து வைத்திருக்கலாம். ஆனால் எல்லாம் தலைகீழாக நடந்து முடிந்துவிட்டது. வரலாற்றில் கறைபடிந்த ஒரு நிகழ்வாக பொது நூல்நிலையத் திறப்புவிழா அமைந்து விட்டது. கல்வியறிவற்ற – பண்பாடு தெரியாத ஒரு கூட்டத்தின் கங்கணம் கட்டிய வரலாறு மாறாத உட்காயமாக அமையும். இவற்றையெல்லாம் தீர்க்கதரிசனத்தால் அறிந்தோ என்னவோ தந்தை செல்வா தமிழரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நூலகம் எப்போது திறக்கப்படும் என ஏங்கும்

தங்க. முகுந்தன்.முன்னாள் மாநகர சபை உறுப்பினன்
தமிழர் விடுதலைக் கூட்டணி

தந்தை செல்வா அகம்
57/48 ஸ்ரான்லி வீதி
யாழ்ப்பாணம்.
22.02.2003
இந்த அறிக்கையையும் அனைத்துப் பத்திரிகைகளுக்கு கொடுத்திருந்தும் தினமுரசு மாத்திரம் தனது 502வது இதழில் யாழ் நூலகத் திறப்பு விழாச் சர்ச்சை – உண்மைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டன – தங்க. முகுந்தன் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் - (TULF) என்ற தலைப்பிட்டு திறப்புவிழா அழைப்பிதழையும் அக்கட்டுரையுடன் பிரசுரித்தது.
அவர்களுக்கு 08.03.2003ல் எழுதிய கடிதம்

ஆசிரியர்
தினமுரசு
கொழும்பு
அன்புடையீர்,
வணக்கம். தங்களின் 502வது இதழில் எனது யாழ் பொது நூலக வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற அறிக்கையைப் பிரசுரித்திருந்தீர்கள். நன்றி. உண்மைகள் என்றோ ஒருநாள் வெளிவரும் என்பதைத் தங்கள் பத்திரிகை மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டியமைக்கு எனது இதய பூர்வமான நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொண்டு கடந்த இதழில் என்னால் குறிப்பிடப்பட்ட அறிக்கையின் இறுதிப் பந்தியில் ஒரு விடயம் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன் அதைப்பற்றி யாரும் வாசகர்கள் குறைப்படுவதற்கு முன்னர் நானே ஒத்துக்கொள்வது அழகாகும் என்பதற்காக இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகின்றேன். தயவுசெய்து பிரசுரிக்கும் வண்ணம் அன்புடன் வேண்டுகிறேன்.
அப்படியானால் பிரான்ஸ் நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நூலகத்துக்கு வழங்கிய ஒரு தொகுதி நால்களை தற்பொழுது யாழ் கச்சேரிக்கு முன்னர் இயங்கும் பொது நூலகத்தில் அல்லது நல்லூரிலுள்ள மாநகர சபை அலுவலகத்தில் வைத்தே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் புதிய கட்டடத்திலேயே வழங்கினார் என்றிருப்பது தவறு.
ஏனெனில் அன்று 11ந்திகதி. முதல்நாள் 10.02.2003 திங்கள் புதிய நூலகத்தில் வைத்தே இந்நிகழ்வு இடம்பெறும் என எமக்குக் கூறப்பட்டது. ஆனால் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் புத்தகக் கண்காட்சி ஒன்று நடத்த வேண்டும் எனவும் தாம் புத்தகங்கள் வழங்கும்போது நூலகத்தில் தமதுநாட்டுக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து திறப்பு விழாவுக்கு முன் புதிய கட்டடத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்பதற்காக கச்சேரியடி பொதுநூலகத்துக்கு முதல்வரால் இப்புத்தகக் கையளிப்பு மாற்றப்பட்டதும் இதனால் பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் முகம் சுழித்தார்கள் என்பதும் எனக்கு நேற்று 07.03.2003 எமது மாநகர சபை உத்தியோகத்தர்கள் கூறித்தான் தெரியும். ஏனெனில் சென்ற மாதம் 10ந்திகதி நண்பகலில் இருந்தே திறப்பு விழா குறித்த நெருக்கடிகள் எமக்குப் பெரிதும் தலையிடியாக இருந்தமையே. இதனால் பத்திரிகைகளைக் கவனமாக வாசிக்காமல் மேலோட்டமாக பார்த்தமையால் ஏற்பட்ட தவறு என்று கூறவேண்டியவனாகின்றேன். இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் குடாநாட்டுப் பத்திரிகைகளும் படங்களில் விளக்கமாகக் குறிப்பிடவில்லை. அருகருகே இருபடங்களில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் பிரசுரித்தபொழுது அவை வௌ;வேறு இடங்களில் எடுக்கப்பட்டிருக்கும் என நான் அறிய முடியாது போய்விட்டது. எனவே இதனால் ஏற்பட்ட தவறான செய்திக்கு எனது மனம் வருந்துகிறேன்.

தயவுசெய்து மன்னிக்கவும்.
நன்றி.
தங்களுண்மையுள்ள
தங்க. முகுந்தன்.
4.7.2003
சக்தியின் தேடலில் இன்று 4-7-2003 இரவு 8.00மணி தமிழிலும் 9.00 மணி ஆங்கிலத்திலும் வெளிவந்த செய்தி யாழ். நூலகம் பற்றியது.
திறப்பு விழாவுக்கு கொழும்பிலிருந்து செய்தி சேகரிக்க வந்த தங்கள் ஒளிப்பதிவுக் கூடத்தைச் சேர்ந்தவர்கள் அன்றைய தினம் 14.02.2003 நூலகத்தையும் உறுப்பினர்கள் விளக்கமளித்த பின் இராஜினாமாச் செய்த செய்திகள் மக்கள் அபிப்பிராயம் என்பவற்றை விரிவாகச் சேகரித்தார்கள்.
மேல்நாட்டுமுறைப்படி நாம் ஒருபோதும் திறப்புவிழா செய்வது கிடையாது. குடிபுகுதல் பால் காய்ச்சுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்ற பின்பே திறப்புவிழா இடம்பெறுவது வழக்கம். நூலகப் பிரதேசம் உள்ளேயும் வெளியேயும் வாஸ்து சாந்தி செய்யப்பட்ட பின்பே திறப்புவிழா நடாத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நானும் ஒரு ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்தேன்.
தொடர்ந்து நூலகம் பற்றிய அலசல் ஒளி பரப்ப ஏற்பாடு செய்தால் தயவுசெய்து எமது கருத்தையும் நீங்கள் ஏற்க வேண்டும். என்னால் எழுதப்பட்ட ஓர் அறிக்கையை இத்தடன் இணைத்துள்ளேன். இதில் ஒருசில பகுதிகள் தவிர்த்து தினமுரசு மட்டும் செய்தியைப் பிரசுரித்தது குறிப்பிடத் தக்கது.
நன்றி
உண்மையுள்ள
தங்க. முகுந்தன்.

No comments: