அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 28, 2008

மறைக்கப்படும் வரலாறுகள் - 4

இளைய தலைமுறைக்கு
நாச சக்திகளில் சிக்கி இன அழிவைத் தேடாதீர்.

தமிழ் இனத்தின் ஒற்றுமையைக் குலைத்து இளைஞர் சக்தியை எமக்கெதிராகத் திசைதிருப்பி தமிழினத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்குப் பல முனைகளிலும் நின்று நாசகார சக்திகள் இயங்கிவருகின்றன. இவைபற்றி மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். அன்று ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் திட்டித் திட்டிப் பேசியே அரசியல் நடத்தி வந்தோம். பின்னர் தமிழினத்திற்கு ஏற்படும் பயங்கர விளைவுகளை சிந்திக்கத் தொடங்கினோம். இதன் விளைவாக பிளவுபட்ட தமிழர் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி ஒரே அணியில் திரட்டினோம். இதன் மூலம் அவ்வப்போது எமக்கெதிராகக் கட்டவிழ்ந்துவிடப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பினோம். இதனால் அரசாங்கம் எமது பிரச்சினைகளை அணுகி முகம் கொடுப்பதற்கு முன்வந்தது. மீண்டும் இப்போது தமிழ் இனத்தின் ஒற்றுமையைக் குலைத்து தமிழினத்தின் விடிவுக்காக நாம் எடுத்துவரும் நடவடிக்கைகளை முறியடித்து இளைஞர்களை எம்மிடமிருந்து பிரித்தெடுத்து அவர்களை எமக்கெதிராக ஏவிவிட்டு அதன்மூலம் தமிழினத்தை அழிவுப் பாதைக்கே அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செயல்களை இனியும் நாம் அனுமதிக்க முடியாது. இதை எப்படியாவது தடுத்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் மாற்றுக்கட்சியினர் எமது தமிழினத்தின் மீது வண்டி ஓட்டிச் செல்வதற்கு நாம் இடமளித்தவர்களாவோம்.
இளைஞர்களின் சக்தி வேகமாகப் பாய்ந்தோடும் ஆற்றைப் போன்றது. இந்த ஆறு காட்டிலே ஓடுமானால் அதனால் ஒரு பயனுமே ஏற்படப்போவதில்லை. வேகமாக ஓடிச் செல்லும் ஆற்றை மண் அணைபோட்டு, வாய்க்கால்கள் அமைத்து நீண்ட தூரத்திற்கு அந்த நீரை ஓட்டிச் சென்று செழித்துப் பயன் தரக்கூடிய பயிரை வளர்க்க வேண்டும்.
பயிர் செழிப்பதால் நாடும் மக்களும் சுபீட்சமடைவர். நாமும் எமது இளைஞர்களின் வேகமாகப் பாய்ந்து செல்லும் சக்தியைப் பல திசைகளிலும் சென்று சிதைந்துபோய்விடாமல் அணைபோட்டு, வாய்க்கால்கள் அமைத்து மிகக் கட்டுக்கோப்பான முறையில் எமது மக்களின் சுபீட்ச வாழ்வுக்காகப் பயன்படுத்தலாம். இதற்காக எத்தனையோ இன்னல்களின் மத்தியிலும் தியாகங்களைச் செய்தோம். ஆனால் இன்று எம் கண்முன்னேயே அவர்களின் வேகமாகப் பாய்ந்து செல்லும் சக்தி, சென்று கொண்டிருந்த பாதையை உடைத்து பலதிசைகளாகப் பாய்ந்தோட முற்பட்டுள்ளது. இதனால் யாது நடக்கும்?
உடைப்பெடுத்து ஓடும் ஆறு அக்கம்பக்கத்திலேயுள்ள குடிமனைகள் எல்லாவற்றையும் அடித்துப் புரட்டிக்கொண்டு எவ்வளவோ அழிவுகளையெல்லாம் ஏற்படுத்துமோ அதேபோலவே பல திசைகளிலும் சென்றுகொண்டிருக்கும் இளைஞர் சக்தியும் இனத்துக்கும் பேராபத்து ஏற்படுத்திவிடும்.
எனவேதான் திசைமாறிச் செல்லும் இளைஞர் சக்தியால் அபாயகரமான நிலை ஏற்படும் என்பதை வழிதவறிச் செல்லும் இளைஞர்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.
நாம் கட்டிக்காத்த ஒற்றுமையை எந்தவொரு நாசகாரசக்தியும் அழித்துவிடுவதற்கு இடமளியாதீர்கள்.

ஆயுதபலத்தின் இறுதி முடிவென்ன?

நாம் சுதந்திர இனமாக வாழ்வதற்கு எம்மிடையே உள்ள பேத உணர்வுகள் அகன்று ஒற்றுமை பலமடைய வேண்டும். சமூகரீதியில் மட்டுமன்றி அரசியல் ரீதியிலும் நாம் கூறுபோடப்படும் கவலைக்குரிய நிலைகள் உருவாகிவிட்டன. இதனையிட்டு மனம்வருந்தாமல் இருக்கமுடியாது. தீவிரவாதம், மிதவாதம் இவையெல்லாம் வேண்டப்படாதவை. எமக்கு வேண்டியது இன ஒற்றுமையே. தீயசக்திகள் எம்மத்தியில் ஊடுருவல் செய்துள்ளன. எமது ஒற்றுமையைச் சிதறடிக்க அவை பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன. இத்தகைய தீய சக்திகளின் முயற்சியைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும். தமிழன் தமிழனாகவே உயிர்விட வேண்டும்.
நம்மை நாமே அழித்துக்கொள்ளும் ஒரு பயங்கர, விரும்பத்தகாத நிலை உருவாகியுள்ளது. இராணுவமோ, பொலிசோ ஒருவரைச் சுட்டுவிட்டால் பதறும்: பதட்டமடையும் நாம் இன்றைய நிலைபற்றி நிச்சயம் சிந்தித்தே ஆகவேண்டும்.
ஆயுத பலத்தை நம்பியவர்கள் அடிச்சுவடே இல்லாது ஒழிந்துபோன நிலையைச் சரித்திரம் காட்டுகிறது. ஆயுதத்தைவிட ஒற்றுமை சக்தி வாய்ந்தது.
நாம் அகிம்சையில் நம்பிக்கை உடையவர்கள். மகாத்மாவால் கையாளப்பட்ட அகிம்சை ஆத்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைவிட சக்திவாய்ந்த ஆயுதம் வேறு கிடையாது.
அன்பு மூலம் அகிம்சை வழியில் சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றி ஒரே அணியாகத் திரண்டு குரல்கொடுக்க அனைவரும் உழைக்க வேண்டும்.

விரக்தியை விட்டெறிந்து எதிர் நீச்சல் போடுவோம்!

எமது இனம் சகிக்கமுடியாத துன்பங்களை அனுபவித்து விரக்தியின் எல்லையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் இந்த விரக்தி மிகவும் அதிகரித்துவிட்டது. நமது மக்கள் விரக்தியினால் தமக்கும் இனத்துக்கும் தீங்கு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாமல் மாறிவரும் சூழலுக்கேற்ப எதிர்நீச்சல் போட்டு வாழப் பழகவேண்டும். வெள்ளத்தோடு அள்ளுப்பட்டுச் செல்லும் வாழ்க்கை வாழக்கூடாது. எதுவந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வாழ்பவன்தான் கெட்டிக்காரன்.
உலகத்தில் யூத இனத்தைப்போல் விஞ்ஞானம், அரசியல், தத்துவம், கல்வி, கலை இப்படி எந்தத் துறையானாலும் ஒவ்வொருதுறையிலும் பெரும் மேதாவிகளைத் தோற்றுவித்த இனம் வேறு எதுவுமே இல்லை. யஸ்டின், கால்மாக்ஸ் போன்ற பல அறிஞர்களை உலகுக்குக் கொடுத்த பெருமை பெற்ற இனம் அது. இப்படி ஒவ்வொருதுறையிலும் பெரும் மேதாவிகள் யூத இனத்தில் தோன்றுவதற்குக் காரணம் என்னவென்பதை ஆராய்ந்த அறிஞர்கள் கண்டறிந்த உண்மை ஒன்றுண்டு. அது இதுதான்.
யூதர்கள் ஒவ்வொருகாலகட்டத்திலும் அவர்கள் வாழ்ந்த ஒவ்வொரு நாட்டிலும் நசுக்கப்பட்டார்கள், பெரும் இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். இதனால் ஏற்பட்ட ஆக்ரோஷம்தான் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியது.
அறிவிலும் புத்திசாலித்தனத்திலும் நாம் யூதர்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர். அதுமட்டமன்றி அவர்களைப் போலவே நாமும் தொடர்ந்து காலம் காலமாக நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதனால் ஏற்படும் உணர்ச்சிகளும் எழுச்சிகளும் எங்களை உயர்ந்த நிலைக்கு நிச்சயமாகக் கொண்டுசென்றே தீரும்.
வாழ்க்கையில் உயர்வடைவதற்குப் பல்கலைக்கழகம் கிடைக்காவிட்டால் கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் விரக்தியடைந்து சோர்ந்துவிடக் கூடாது. வாழ்க்கையைப் போராட்டக் களமாக நினைத்து எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்த்து நின்று உறுதியான நெஞ்சத்தோடு போராடவேண்டும்.
இதே வேளையில் எமது மாணவர்கள் ஒழுக்கத்தைக் கட்டிக்காத்து வாழத் தவறக் கூடாது. ஒழுக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் உயர்ந்த இடம் கொடுத்து வாழ்ந்தது எமது இனம். இந்தப் பாரம்பரியத்தை என்றும் மறக்கவும் கூடாது. இழக்கவும் கூடாது.
வாழ்க்கையில் ஒரு குறிக்கோளோடு இளைஞர்கள் வாழவேண்டும். கடலில் பயணம் செய்கின்ற கப்பல் ஒரு துறைமுகத்தை நோக்கிப் பயணம் செய்தால்த்தான் பயணம் முற்றுப் பெறும். நோக்கமின்றிச் சென்றுகொண்டிருந்தால் கடலில் அலைய வேண்டியதுதான். இதைத்தான் இன்றைய இளம் சந்ததியினருக்கு நான் சொல்கிறேன். இதற்காக எதற்கும் தலையாட்டிக் கொண்டிருக்கவேண்டுமென்று நான் கூறிவிடவில்லை.
பிழையென்று தெரிந்தால் அதை மனத்துணிவோடு சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியாக வேண்டும். ஆனால் சொல்லும் விதமாகச் சொல்லப் பழக வேண்டும். பண்பாகவும், பண்பாடாகவும் சொல்ல வேண்டும். இளம் சமூகம் இளவயதிலிருந்தே பழகிக்கொள்ள வேண்டும்.
உலக அரங்கில் தமிழினத்திற்கு நல்லதொரு எதிர்காலம் நிச்சயமாக உண்டு. அந்த நல்ல எதிர்காலத்திற்கு உரியவர்கள் எமது மக்கள்தான். ஆந்த நல்ல காலம் நிச்சயமாகக் கிட்டும். அதனை நாம் பெற்றுத் தருவோம்.

மீதி பின் தொடரும்.

No comments: