அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, September 27, 2008

மறைக்கப்படும் வரலாறுகள் - 3

தொழிலாளி வர்க்கமும், தமிழ்த் தேசியமும்
உலகெங்கும் உழைக்கும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் மேதினத்தை நாம் இனரீதியில் தமிழ்த் தொழிலாளர்கள் என்ற வகையில் கொண்டாடுவதற்கு திரண்டு நிற்கின்றோம்.
ஒரு காலத்தில் சிவப்புச் சட்டைபோட்டு கைகளில் சம்மட்டிகளுடன் செல்வோர் மாத்திரமே மேதினத்தைக் கொண்டாடலாம். எமக்கெல்லாம் மேதினத்தைக் கொண்டாட உரிமையில்லை என்று அத்தகையோர் கூறிவந்தார்கள். அவ்வாறு கூறியவர்கள் இன்று எங்கே என்று தெரியாது.
இன்றைய நாளில் மேதினத் தத்துவத்தை நினைவுகூருவது அவசியம். முதன்முதலில் சிக்காக்கோ தொழிலாளர் இரத்தப் போராட்டம் நடத்தினார்கள். இரத்தத்தில் கைக்குட்டையைத் தோய்த்தெடுத்து அதனையே செங்கொடிபோல் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள். இன்று உலகெங்கும் உரிமை மறுக்கப்பட்ட தொழிலாளர்கள் மேதினத்தைக் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்டில் தமிழர் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் தமிழர்களே என்ற உண்மை பலருக்குத் தெரியாது. அவர்களை நினைத்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
அவர்களது இரத்தம் வியர்வைகள் பசளையாக வைத்து இந்த நாடு முன்னேறியது. ஆனால், அதே தொழிலாளர்கள் இன்று கப்பல் கப்பலாக இங்கிருந்து அனுப்பப்படுகிறார்கள். கேரளாவில் அனாதரவான நிலையில் இறக்கிவிடப்படும் இத் தொழிலாளர்கள் அங்கு பிச்சை எடுக்கும் நிலையில் பல கஷ்டங்களுக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதெல்லாம் எதற்காக? தமிழன் என்ற ஒரேஒரு குற்றத்திற்காகத்தான் இத்தொழிலாளர்களை அலட்சியப்படுத்துகிறார்கள். அவர்களுக்குப் பக்கபலமாக நிற்க இம்மேதினத்தில் நாம் உறுதி பூணவேண்டும்.
மலையகத்திலிருந்து அகதிகளாக வந்து வவுனியா, கிளிநொச்சிப் பகுதிகளில் குடியேறிய தோட்டத் தொழிலாளர்களைப்பற்றி சந்தேகமான கருத்துக்கள் கிளப்பப்பட்டன. இந்நேரத்தில் தமிழ்மக்களுக்கு குறிப்பாக யாழ் தமிழ்மக்களுக்கு ஒற்றுமைபற்றி வலியுறுத்த விரும்புகிறேன். யாழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கை முழுவதிலுமுள்ள தமிழர்களுக்கு ஒற்றுமை அடிப்படையில்தான் கூட்டணி இயங்குகிறது. இதனைப் புரிந்துகொள்ளமுடியாத சிலர் திரு. தொண்டமானுடன் இரகசிய உறவு என்றும் துண்டுப்பிரசுரமூலம் விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் யு.என்.பிக்கும் எமக்கும் இடையிலுள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை அக்கட்சியினர் என்னைப்பற்றிக் கூறுவதிலிருந்து புரிந்துகொள்ளமுடியும்.
என்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது என்னவெல்லாம் கூறினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது எல்லா சிங்கள எம்.பிக்களும் பலவாறாக விமர்சித்துத் தாக்கியபோது ஒரேஒருகுரல் அதாவது திரு. தொண்டமான் மாத்திரமே நீதிக்காகப் பேசினார். அச்சந்தர்ப்பத்தில்தான் எமக்கு ஆபத்து நேரத்தில் உதவக் கூடியவர் யார் என்பதை என்னால் உணரமுடிந்தது.
இனரீதியிலான பிரச்சினை எழும்போது அவற்றிற்குத் தீர்வுகாணவே அதாவது தமிழ்த் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே மொழிவழித் தொழிற்சங்கங்கள் உருவாகின.
இன்று பரந்தனிலுள்ள இரசாயனத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பலமாதகாலமாக வேலையின்றி சம்பளம்இன்றி கஷ்டப்படுகிறார்கள். இக் கூட்டுத்தாபனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் இலங்கை வர்த்தக ஊழியர் தொழிற்சங்கத்தில் இருக்கிறார்கள். இத்தொழிற்சங்கம் வேலைநீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு ஆதரவு கோரி அகில இலங்கை ரீதியில் போராட்டம் நடத்தமுடியாத நிலையில் இருக்கிறது. ஏனெனில் ஏனையபகுதிச் சிங்களத் தொழிலாளர்கள் தமிழ்த் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கத் தயாராக இல்லை. இவர்களுக்கு தமிழ்மொழிவழித் தொழிற்சங்கங்களே உதவவேண்டும்.

ஒற்றுமை – ஒற்றுமை ஒன்றே தமிழினத்தின் விமோசனம்!

இங்குள்ள தம்பிமார் சிலர் இப்போது எம்மில் குறைகாண முற்பட்டுள்ளார்கள். பலஸ்தீன பிரச்சனை குறித்துப் பேச நாங்கள் யார் என்று தம்பிமார் சிலர் கேட்கிறார்கள்.
எம்மைப் போன்ற விடுதலைக்காகப் போராடும் அந்த இயக்கத்தை எமது இயக்கத்துடன் ஒப்பிட்டு அவர்களுக்கு இருக்கும் வசதிகள், சோதனைகள், பிரச்சினைகளை ஆராய்ந்து நாமும் அவர்களது அனுபவத்தைப் பாடமாகக் கொள்ளவேண்டும் என்று கூறினேன். ஆனால், தம்பிகள் மாக்சியவாதிகளின் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றார்கள். பலஸ்தீன இயக்கத்தின்கீழ் எத்தனையோ இயக்கங்கள் செயற்படுவதை அவர்கள் அறிவதில்லை.
மாக்சிய இயக்கம் முதல் தீவிரவாத இஸ்லாமிய இயக்கம்வரை எத்தனையோ இயக்கங்கள் யசீர் அரபாத்தின் தலைமையின்கீழ் செயற்பட்டு வந்தன. தமிழ் மக்கள் மத்தியில் பிளவுபட்ட தலைமைகள் அவ்வப்போது இருந்தன. முதலில் தந்தை செல்வா, அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆகியோரது பிரிவுகளும், பின்னர் தலைவர் சிவசிதம்பரம் தலைமையிலும், எனது தலைமையிலும் வௌ;வேறு இயக்கங்கள் இருந்தன. ஆனால் ஒற்றுமையே தமிழினத்தின் விமோசனம் என்பதை நாம் உணர்ந்து கொள்வதில்லை.
1974ஆம் ஆண்டு பொலிசாரின் துப்பாக்கிகளுக்குப் பயந்து ஓடிவந்த இளைஞரை நானே காப்பாற்றினேன். எம்மிடம் உயிர் ஒன்றுதான் உள்ளது. அதுவும் ஒரு தடவையே போகும். எமது உயிரைத் தமிழினத்திற்கு அர்ப்பணித்தபின்னர் எப்போது போனாலும் கவலையில்லை. ஆனால், இத்தகைய பயமுறுத்தலுக்கு நாம் பணிந்தவரல்ல. தம்பிகள் தவறான பாதையில் செல்வதைக் கைவிடவேண்டும்.
எம்மைவிட்டப் பிரிந்து போகவேண்டுமென்றால் போங்கள். ஆனால், உங்களுக்கு வில்லங்கம் ஏற்படும்போது சிவாவின் குரலே நீதிமன்றத்தில் எதிரொலிக்கும் என்பதை மறக்காதீர்கள். இதை நான் மிகவும் துக்கத்துடன் குறிப்பிடுகிறேன்.
வெளிநாடு சென்ற இளைஞர்கள் அனுப்பும் பணம் இப்போது எமக்கெதிரான நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படுகிறது. இதே இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கு நானே சிபார்சு செய்தேன் என்பதை மறக்க வேண்டாம். இவ்வாறு அனுப்பப்படும் பணத்தைக்கொண்டு எம்மை எதிர்க்க முனைந்தால் அது பகற்கனவாகவே முடியும்.
நாம் ஏன் பாராளுமன்றத் திறப்புவிழாவுக்குச் சென்றோம் என்பதை அங்கு நான் பேசிய பேச்சு விளக்கியிருக்கும். இலங்கைத் தீவில் மூன்று அரசுகளே ஆட்சிசெய்தன. அவ்வாறு அன்று ஆண்ட தமிழினம் இழந்த இறைமையை மீட்கவேண்டுமென்பதை திறப்பு விழாவில் வலியுறுத்தினேன் இதை அரசாங்க தரப்பினர், வெளிநாட்டுத் தூதுவர்கள், பத்திரிகையாளர்கள் அறிந்து கொண்டனர். இக்கருத்தை வேறு எங்கும் சொல்வதைவிட அவ்விடத்தில் சொல்வதில் தாக்கமுண்டு என்பதை எனது தம்பிமார்கள் அறிவதில்லை. பாராளுமன்றத் திறப்புவிழாவைத் தொடர்ந்து நான் மட்டக்களப்பு சென்றிருந்தபோது தீவிரவாத இளைஞர் ஒருவர் என்னைச் சந்தித்து பாராளுமன்றம் சென்றதன் அவசியத்தை வானொலிப் பேச்சைக் கெட்டுத் தெரிந்துகொண்டதாகச் சொன்னார்.
பிரதி அமைச்சர் ஒருவர் எனது பேச்சின் பிரதியைத் தருமாறு வேண்டினார்.
ஹன்சார்ட் வரும்வரை பொறுத்திருங்கள் என்றேன். மேற்கு ஜேர்மன் பத்திரிகையாளர் ஒருவர் தனது முகவரியைத் தந்து பேச்சின் சாரத்தைத் தருமாறு கேட்டுக் கொண்டார். எப்போதும் உற்சாகத்துடனும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசும் இராஜாங்க அமைச்சர் திரு. ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் மனதில் எனது பேச்சு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவரது பேச்சிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
தம்பிமார் வரலாறு தெரியாமல் கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்று போட்டியில் எமக்கெதிராக இயங்க ஆரம்பித்துள்ளனர்.

மீதி பின் தொடரும்.

No comments: