அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, September 10, 2008

மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற புனிதக் கொள்கைகள் கொண்ட மாமேதைகள் - 1.

நான் 14.11.2006ல் யுனெஸ்கோ அமைப்பு 2006 ம் ஆண்டுக்கான சகிப்புத்தன்மைக்கும் அஹிம்சைக்குமான மதன்ஜீத்சிங் உயர்விருதை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கு வழங்கியதை முன்னிட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் கொல்லும் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழங்கும் “மாமனிதர்” பட்டத்தை விட என்று ஒரு வரியை எழுதியதன் காரணத்தால் இங்கு மாமேதைகள் என்று எமது மக்களுக்காக தம்மை அர்ப்பணித்த அனைத்துத் தலைவர்களையும் குறிப்பிடுகின்றேன்.தந்தை செல்வா வழியில் தமிழரசுக் கட்சியில் மாத்திரமல்ல அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்க் கட்சியிலும் இந்திய இலங்கைக் காங்கிரஸ்க் கட்சியிலும் (தற்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்க் கட்சியாக இயங்குகிறது) இருந்த மதிப்புக்குரிய தலைவர்களை நான் முன்னரே நினைவு கூர என்னாலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். இதற்காக எமது கடசியின் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களைக் கொண்டு தேர்தல் திணைக்களத்திற்குக் கடிதம் எழுதி 1947ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வெற்றிபெற்ற கட்சித் தலைவர்களினது பெயர் விபரங்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை என்பவற்றை சேகரிக்க முயற்சித்தேன். 1947ல் மலையகத்தில் போட்டியிட்ட இந்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்க்கட்சி பெற்ற வாக்குகளையும் பெற்றுக் கொண்டேன். எமது பகுதிகளில் வாழும் அப்பாவி மக்களினதும் எமது கட்சித் தலைவர்களினதும் படுகொலைகளாலும் விண் மற்றும் பீரங்கி ஷெல்த் தாக்குதல்களினால் ஏற்பட்ட பேரிழப்புக்கள் போன்றவற்றாலும் அது தடைப்பட்டுக்கொண்டிருந்தது. இருக்கிறது. எனினும் தந்தை செல்வாவைப்பற்றி ஏப்ரல்1994ல் ஒரு கட்டுரையை எழுதி; பல பத்திரிகைகளுக்கு அனுப்பியிருந்தும் வீரகேசரி ; “தமிழ் மக்களின் உரிமைக்காவலனாக விளங்கிய தந்தை செல்வநாயகம்” என்ற தலைப்பிட்டு 26.04.1994ல் 2 ம் பக்கத்தில் அவரது நினைவு தினத்தன்றும் தினகரன் 28.04.1994ல் “எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவு” என்ற தலைப்பிட்டு 3ம் பக்கத்திலும் கட்டுரையைப் பகுதியாக பிரசுரித்தன. தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் அவர்களால் இந்தியாவில் வெளியிடப்படும் “ஈழ சுதந்திரன்”; வைகாசி – ஆனி இதழில்; “தந்தை செல்வாவை நினைவு கொள்வோம் - செந்தமிழ் ஈழம் வெல்வோம்” என்ற தலைப்பிட்டு கட்டுரை முழுவதையும் வெளியிட்டது. அதைவிட அமரர்களான அ. அமிர்தலிங்கம் வெ. யோகேஸ்வரன் அ. தங்கத்துரை கலாநிதி நீலன் திருச்செல்வம் பொன். மதிமுகராசா குமார் பொன்னம்பலம் மு. சிவசிதம்பரம் ந. இரவிராஜ் ஆகியோருக்கும் எனது அஞ்சலி நினைவுகளை எழுதியுள்ளேன்.குறிப்பாக எழுதவேண்டியவர்களது எனது பட்டியலில் பின்வருவோர் மிகமுக்கியமானவர்களாக இருந்தார்கள். தற்போதும் இருக்கிறார்கள். 1. ஜீ.ஜீ. பொன்னம்பலம் 2. சா.ஜே.வே. செல்வநாயகம் 3. கு. வன்னியசிங்கம் 4. வி.ஈ.கே.ஆர்.எஸ். தொண்டமான் 5. டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன் 6. செனட்டர் நடராசா 7. வேல்முருகு மாஸ்டர் 8. எஸ். சம்பந்தமூர்த்தி 9. அ. அமிர்தலிங்கம் 10. மு. சிவசிதம்பரம் 11. வி. தருமலிங்கம் 12. மு. ஆலாலசுந்தரம் 13. சாம். தம்பிமுத்து 14. திருமதி. கலா தம்பிமுத்து 15. தா. திருநாவுக்கரசு 16. வி. யோகேஸ்வரன் 17. அ. தங்கத்துரை 18. திருமதி. சரோஜினி யோகேஸ்வரன் 19. பொன். சிவபாலன் 20. பொன். மதிமுகராஜா 21. கலாநிதி நீலன் திருச்செல்வம் 22. குமார் பொன்னம்பலம் 23. ஸ்ரீபாஸ்கரன் 24. நிமலன் சவுந்தரநாயகம் 25. சி. சிவமகாராசா 26. ந. இரவிராஜ்
இவர்களில் தற்போது நினைவு கூரப்படுகின்ற திருமதி. சரோஜினி யோகேஸ்வரன் திரு. பொன். சிவபாலன் ஆகிய யாழ்ப்பாண முன்னாள் முதல்வர்கள் இருவரைப்பற்றிக் களத்துமேட்டின் ஈழவன் தனது வலைத்தளத்தில் செய்தியைப் போட்டுவிட்டு மேலதிக விபரங்களை என்னுடைய வலைப்பதிவில் எதிர்பார்ப்பதாகத் தகவல் சொல்லியுள்ளார். அவரது கட்டளை என்றுகூட நான் கூறலாம். காரணம் இவர்கள் இருவருடன் மாத்திரமல்ல மேலே குறிப்பிட்ட 26 பெரியவர்களில் நான் நெருங்கியும் ஓரளவும் பழகியுமுள்ள 21 பேரை நான் ஒரு போதும் மறந்துவிட முடியாது. இந்த ரீதியில் என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே என்று திருமூலர் கூறியபடி - நெஞ்சில் கழுத்துக்குக்கீழே எமது விடுதலைப் போராட்ட வீரர்கள் என்ற மனிதாபிமானமற்ற கொடியவர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானேன். குண்டு பாய்ந்து முதுகுப்புறமாக வெளியேறிய பின் இரத்தம் சிந்திய நிலையில் ஒரு மணிநேரத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட என்னை இறைவன் இன்றும் வாழவைத்துக் கொண்டிருப்பதே இப்படிப்பட்ட பெரியார்களை - மாமேதைகளை நினைவு படுத்தவே என்று நான் தற்போது கருதவேண்டியவனாகின்றேன். இதில் எனது பங்கினை விட மேற்குறிப்பிட்ட சகலரினதும் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் மனிதநேயமிக்க இவர்களை அறிந்து வைத்திருப்பவர்கள் தமது அனுபவங்களையும் அவர்களைப்பற்றி அறிந்தவற்றையும் எழுதி எனக்கு உந்துதல் அளித்தால் அதைவிட மகிழ்ச்சி கிடையாது. தயவுசெய்து இவ்விடயத்தில் உதவும்படி அனைத்து வாசகர்களையும் அன்போடு வேண்டுகிறேன்.திருமதி சரோஜினி யோகேஸ்வரனின் அகால மரணத்தின்போது நான் எனது ஊரில் இருந்தேன். மதியம் 1 மணியளவில் நான் கிணற்றடியில் நீராடிக்கொண்டிருந்தபொழுது 2 வீடு தள்ளியிருக்கம் ஒரு நண்பர் ஓடோடி கிணற்றடிக்கே வந்துவிட்டார். என்ன விடயம் என்று கேட்டபொழுது முதல்வர் அம்மா இறந்தவிட்ட செய்தி வானொலியில் தெரிவிக்கப்பட்டதாகவும் அதைத் தெரிவிக்கவே வந்ததாகவும் சொன்னார். உடனேயே அவசர அவசரமாக உடைமாற்றிக்கொண்டு சாப்பிடவும் போகாமல் நேரடியாக 786 இலக்க பேரூந்தில் யாழ்ப்பாணம் சென்று பின்னர் அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் ஒரு ஓட்டோவில் கைலாசபிள்ளையார் கோவிலுக்கருகிலுள்ள முதல்வருடைய வீட்டிற்குப் போனேன். சில கட்சி ஆதரவாளர்களும் வீட்டில் குடியிருந்தவர்களுமாக வீட்டைக் கழுவ ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். வீடு முழுவதும் ஒரே இரத்தக்கறை. எனக்கு உடனேயே பழைய ஞாபகம் நினைவுக்கு வந்தது. 1989.7.13 மாலையில் கொழும்பு பௌத்தலோக மாவத்தையிலுள்ள 410ஃ27 இலக்க இல்லத்தில் திருவாளரகள். அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் ஆகியோர் கொல்லப்பட்டும் சிவசிதம்பரம் அவரஇகள் படுகாயப்பட்டும் சுட வந்தவர்கள் மூவரும் கொல்லப்பட்ட இரத்தம் சிந்திய வீட்டிலும் நான் போன சமயத்தில்தான் கழுவிக் கொண்டிருந்தார்கள். முதல்வருடைய இல்லத்தில் தொலைபேசி வசதி இருந்ததால் உடனேயே நான் கொழும்பு அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள்பற்றி பேசினேன். யாழ் மாநகராட்சி மன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி 9 ஆசனங்களையும் புளொட் 6 ஆசனங்களையும் ஈபிடிபி 6 ஆசனங்களையும் ஈபிஆர்எல்எப் 2 ஆசனங்களையும் பெற்றிருந்தது. சபை நடவடிக்கைகளில் கூட்டணியினருடன் கருத்துவேறுபாடு கொண்டிருந்தாலும் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி மனிதத் தன்மையுடன் செயலாற்றினோம். வைத்தியசாலையில் எல்லாக் காரியங்களும் முடிந்தபின்னர் முதல்வரின் பூதவுடல் இரவுதான் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
மேலதிக விபரங்களை இணைப்பில் காண்க.

(http://www.spur.asn.au/sarojini.htm

தொடரும்)

1 comment:

Unknown said...

நன்றி முகுந்தன்.