அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, September 17, 2008

ஜூலை 25 சென்னையில் கண்ணீர்நாள்! - பகுதி 2

ஏதோ ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில் - அதே நேரம் தமிழ்ச் சமுதாயத்தின் உறுதிமிக்க பாதுகாப்பு அரண் என்ற நிலையில் - நம்மால் இயன்றதையெல்லாம் செய்தோம்! செய்கிறோம்! செய்வோம்!
இந்தியப் பேரரசு, பேச்சுவார்த்தைகளின் மூலமே இதற்கோர் முடிவு காணலாமென்று விடுத்த அறிவிப்புக்கு ஆண்டுவிழா கூட வரப்போகிறது! பேசி எதுவும் நடக்கவில்லை!
கடுகை, மலையாக ஆக்கிய பிறகு அதனைப் பிளக்கும்! கடப்பாறையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் சாப்பிடும்!
இப்படி முரண்பட்ட நிலைகளை எடுப்பதில் இந்தியப் பேரரசு புகழ் பெற்றது!
எனினும் இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உணர்வு அறவே நசித்துப் போகாமல் - தாயகத் தமிழர்களும், வெளிநாடுகளில் வாழுகிற தமிழர்களும், இலங்கைத் தமிழர் தலைவர்களும், இளைய தலைமுறையினராம் விடுதலை வீரர்களும் தொடர்ந்து செயல்பட்டே வருகின்றனர்!
ஆனால் இந்த உணர்வு படைத்தவரிடையே ஒருங்கிணைப்பு – ஒற்றுமை உணர்ச்சி - இல்லாதது மட்டமல்ல: வேற்றுமை எண்ணங்கள், வெறுப்பு நிலைகள் வேரோடிக் கிடப்பதை மறைத்துப் பயனில்லை!
கந்த ஆண்டு இலங்கையில் நமது இனத்துக்கு நடந்த கொடுமைகளுக்காக இந்த ஆண்டு அந்த நாளைக் கண்ணீர் நாளாகக் கருதி துக்கம் கடைப்பிடிப்போம்!
அதே நேரத்தில் விடுதலை அணிகளாக – புலிப் படைகளாக – சிதறிக்கிடக்கும் வீரர் பாசறைகள் அனைத்தும் ஒரே இலக்கு என்ற உறுதியுடன் ஒன்றுபட்டச் செயலாற்ற வேண்டாமோ?
இங்கிலாந்திலிருந்து படைக்கலன்! இஸ்ரேலின் ராணுவ நிறுவன ரகசிய உடன்பாடு! அமெரிக்காவின் அருள்வாக்கு!
வட்டமேசை – பேச்சுவார்த்தை என்ற இடைவெளியில் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டார் ஜெயவர்த்தனே!
அன்றைக்கே நாம் சொன்னது: அதுதான் இப்போது நடந்திருக்கிறது!
தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது என்பது பழமொழி.
அதற்கு நூற்றுக்குநூறு பொருத்தமாக இந்தியப் பேரரசு நடந்து கொண்டுவிட்டது!
வாலையாவது பிடிப்பார்களா? அல்லது வாய் ஜாலம் பேசி முடித்து விடுவார்களா?
உடன்பிறப்பே, எது எப்படியிருப்பினும் இலங்கைத் தமிழ் இனத்தவருக்காக நம் கடமையை நாம் தொடர்ந்து செய்வோம்!
நான் அடிக்கடி கூறுவதுபோல தாய்த் தமிழகம், கையில்லாத ஊமையின் நிலையிலே இருக்கிறது!
பாறையின் மீது வெண்ணெய்! பாதுகாப்புக்கு இருப்பவனுக்கோ கையுமில்லை: பேச வாயுமில்லை: கடும் வெயிலில் வெண்ணெய் உருகுகிறது! எடுத்துக் காத்திடக் கரமுமில்லை! குரல் கொடுத்து யாரையும் அழைத்துக் காத்திட வாயுமில்லை! அந்த நிலைதான் இன்றைய தமிழகத்துக்கு!
அதனால் கண்ணீர் நாள் நடத்துகிறோம்! கதறியழுகிறோம்! அதற்கும் பயன் உண்டு என நம்புகிறோம்!
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
என்ற வள்ளுவர் வாக்கு, கண்ணீர் விடப் பிறந்த நமக்கு அந்த நம்பிக்கை ஊட்டுகிறது!
ஜூலை 25 சென்னையில் இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர்நாள்!
தலைமைக்கழகச் சார்பில் நடைபெறுகிறது!
சேன்னைப் பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்!
நீயும் நமது உடன்பிறப்புக்களும் ஜூலை 25-ஆம் நாளன்று கருப்புச் சின்னங்களை(பாட்ஜ்) அணிந்து கொள்க!
நமது கண்ணீர், தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்விட்ட தியாகத் தங்கங்களின் கல்லறைகளில் மலர்களாகக் குவியட்டும்!
படுகொலைக்கு ஆளான நமது இன மக்களுக்காகத் துக்கம் கடைப்பிடிப்போம்!
கண்ணீர், கட்டாரியாகும்! மலர்கள் வேல்களாகும்! நாம் கடைப்பிடிக்கும் துக்க நாளே விரைவில் ஈழத் தமிழினத்தின் விடுதலை நாளாக மாறி நம்மை மகிழ்விக்கும்!
அன்புள்ள
மு.க

No comments: