அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 2, 2008

அமரர்கள் தருமர் - ஆலால் - 23வது வருட நினைவஞ்சலி

முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் படுகொலை செய்யப்பட்ட நாள். (02-09-1985)

செப்டெம்பர் 2ந்திகதி மாலை சென்னையில் இருந்த ஓர் இயக்கத்தினருக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிடைத்தது. திரு. யோகேஸ்வரன் மூலம் இந்தச் செய்தி எமக்கெல்லாம் தெரியவந்தது. திரு. தர்மலிங்கமும் திரு. ஆலாலசுந்தரமும் யாரோ சிலரால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டனர் என்பது அந்தச் செய்தி ஆகும். அடுத்த நாள் காலையில் இலங்கை வானொலியில் இலங்கையிலிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கடத்திச் செல்லப்பட்டதாகவும் திரு. தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோர் கொலை செய்யப்பட்டு அவர்கள் உடல்கள் வீதியில் வீசப்பட்டுக் கிடந்ததாகவும் ஏனையோர் எக்கதியாயினர் என்று தெரியவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு சில மாதங்களுக்குமுன் அனுராதபுரத்தில் சில சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெடுந்தீவிலிருந்து வள்ளத்தில் வந்த 47 தமிழ் மக்கள் இலங்கைக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டும் பலர் குற்றுயிராகப் படுகாயப் படுத்தப்பட்டும் விடப்பட்டபோது இரவும் பகலும் உழைத்து மரண விசாரணையின் பின் உடல்களை உரிய இடங்களுக்கு அனுப்பவும் காயமடைந்தோரைக் கவனிக்கவும் ஆலாலசுந்தரம் செய்த சேவைக்கு நன்றி தெரிவித்து தீவுப்பகுதி மக்கள் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு இருந்தனர்.

1972ஆம் ஆண்டு முதல் சிறைப்பட்ட தமிழ் இளைஞர் வீடுகளுக்கெல்லாம் தேடிச்சென்று உதவி புரிந்தவர் திரு. தர்மலிங்கம். இவர்களுக்குக் கிடைத்த பரிசு எம்மவர்களாலேயே படுகொலை செய்யப்பட்டு வீதியில் வீசப்படுதல். கட்சி மாறி ஆட்சியில் சேர்ந்து அமைச்சர் பதவி பெற்றவர்கள் உல்லாசமாக வாழ அன்று முதல் இன்று வரை நின்ற நிலை வழுவாத உத்தமர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த லட்சணத்தில் நாமெல்லாம் அங்கு வாழாது தமிழ் நாடு சென்றதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அங்க வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சகாக்களை யாராவது பார்த்தாலே விசாரணை. இந்நிலையில் நிராயுத பாணிகளாக நிற்கும் நாம் அங்கு ஒரு மூலையில் முடங்கிக் கிடந்து தமிழ்நாட்டிலிருந்து ஆற்றிய அத்தனை பணிகளையும் ஆற்றி இருக்க முடியுமா?

ஆயுத பாணிகள் ஆயிரம்பேர் தம்மைப் பாதுகாக்க இருப்போரே தம் பாதுகாப்புக்காகப் பெரும்பகுதி நாள் தமிழ் நாட்டிலிருக்கையில் நிராயுதபாணிகளான நாம் சகாக்கள் படுகொலைசெய்யப்பட்ட நாம் அங்கிருக்கும் ஏனையோர் இயங்க விடாது தடுக்கப்பட்டதைக் கண்ட நாம் அதே கதியை ஏற்று மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை மறந்து இந்திய அரசோடு தமிழ்நாட்டு அரசோடு இங்குள்ள தலைவர்களோடு உலக நாடுகளோடு எமது மக்கள் படும் துயரை எடுத்துக் கூறி பரிகாரம் காணத் தவறினால் மக்கள் எம்மை மன்னிப்பார்களா? எது தவறு? அறிவு படைத்தோர் அறிவர்.

(செல்வா ஈட்டிய செல்வம் - இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு என்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெளியீட்டலிருந்து)
குறிப்பு - இவர்களது படங்கள் இருந்தால் தயவுசெய்து அனுப்பவும்.

No comments: