இலங்கைத்தமிழர்கள் சொல்லமுடியாத வேதனையில் உள்ள இவ்வேளையிலே எந்த தலைவர்களிடமோ அல்லது எந்த நாட்டிடமோ ஆசீர்வாதத்தையோ உதவியையோ நாடிப்போனால் அவர்கள் தருவதற்கு மறுக்கிறார்கள். இதற்கான காரணத்தை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. இதைப்பற்றி சிந்திக்க வேண்டியவர்கள் 1. தமிழ் அரசியல்வாதிகள் 2. தமிழ் ஊடகவியலாளர்கள் 3. தமிழ் புத்திஜிவிகள் 4. சகல தமிழ் மக்கள்
முதலாவதாக தமிழ் அரசியல்வாதிகளைப் பார்போமானால் திரு. சம்பந்தன் அவர்கள் தலைமையில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கையறு நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. சந்திரிகா பதவியில் இருந்த வேளையிலும் அதற்கு முன்பும் திரு. சம்பந்தன் அவர்கள் அதிகார வர்க்கத்துடன் விவாதித்து தமிழர் துயரங்களை ஒரளவு தீர்த்து வைத்திருந்தார். இப்போதுள்ள அரசாங்கம் இவரை எதிரியாகவே பார்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 22 எம்பிக்களும் இலங்கை அரசாங்கத்துடனோ அதிகாரிகள் மட்டத்துடனோ தொடர்பு கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் கத்துவதும் அதை தமிழ் ஊடகங்களுக்கு பரப்புவதுமே இவர்களுடைய தொழிலாக இருக்கிறது. இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் மற்றைய தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றியும் பின்பு விரிவாக ஆராய்வோம்.
இரண்டாவதாக தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரையில் மக்களுக்கு அறிவையும் நல்ல செய்திகளையும் தரவேண்டியவர்கள் மக்களை உணர்ச்சியூட்டி அறிவுமயக்கத்தை ஏற்படுத்தி அதில் இலாபத்தையும் விளம்பரத்தையும் பெற முயற்சிக்கிறார்கள். வீரகேசரி, தினக்குரல், உதயன், சுடரொளி போன்ற தினசரிகள் நமது அயல் நாடான இந்தியாவுக்கு அறிவுரை சொல்லி ஆசிரிய தலையங்கங்கள் தீட்டுகிறார்கள். இதிலிருந்து வடக்கத்தையான் என்ற நினைப்பு இப்பொழுதும் இவர்களுக்கு இருக்கின்றது போலும். அமெரிக்காவிலும் ஜரோப்பாவிலும் இந்தியர்களுக்கு மதிப்பு அதிகம். நிலைமை இப்படியிருக்க கிணற்று தவளைபோல் இவ்வுடகங்கள் எழுதித் தள்ளுகின்றன. எங்களுடைய சமயம், மொழி, கலாச்சாரம் அனைத்திற்கும் மூலம் தமிழகம் என்பதை மறவாதீர்கள். ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் நட்பு வலயம் ஒன்றை உருவாக்க பத்திரிகைகள் முயற்சிக்க வேண்டும். இன்று(25.09.08) கூட கலைஞர் கருணாநிதி தவறு இழைக்கிறார் என்று உதயன் பத்திரிகை ஆசிரிய தலையங்கம் தீட்டியுள்ளது. கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல நீதி தெரிந்த இலங்கைத் தமிழர்கள் பலர் நீணட காலமாகவே மௌனமாக இருந்து வருகிறார்கள் என்பது உதயன் ஆசிரியருக்கு தெரியாது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைக்கே இனிக் கனவுதான் காணவேண்டும்.
அடுத்தாக தமிழ் புத்திஜிவிகள் பலர் நாட்டின் நிலைமை காரணமாக புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இனிவரும் காலங்களில் சமூகத்திற்கான கடமைகளை செய்வதற்கு முன்வர வேண்டும். சும்மா இருக்காமல் உதவி செய்யப்போய் ஏன் சோதனைகளையும் வேதனைகளையும் படுவான் என்று நினைக்காதீர்கள். புத்திஜிவிகள் ஒன்று சேர முயற்ச்சி செய்யுங்கள். உங்களால் தான் தமிழ் சமூகத்தை மாற்றி அமைத்து முன்னேற்ற முடியும். தமீழீழ போராடடம் தொடங்கி 25 ஆண்டுகளின் பின்பு தமிழர்களின் பிற்போக்கு தனங்கள்(தொழில், சாதி நையாண்டிகள்) இன்னும் மாறவில்லை என்று அடேல் பாலசிங்கம் நூல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா, ஜரோப்பிய நாடுகளில் கூட்டுதல், துப்பரவாக்குதல் போன்ற வேலைகளுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். நாட்டையும் அழகாக வைத்திருக்கிறார்கள். நாமும் நமது நாட்டுக்கு திரும்பிச் சென்று வீட்டையும் நாட்டையும் அழகுபடுத்துவோம். தமிழர்களின் கல்வி கலாச்சார பொருளாதார மையங்கள் எங்கெங்கே உள்ளன அவற்றை யார் உறிஞசுகிறார்கள் என்பதை இனிவரும் பகுதிகளில் விரிவாக பார்போம்.
இன்றைய நிலையில் தமிழ் மக்கள் நிறைய சிந்திக்க வேண்டியிருக்கிறது. 1985 இலிருந்து இன்றுவரை ஜெனிவாவில் ஜக்கிய நாடுகள் சபையின் முன்னால் எத்தனை ஊர்வலங்கள் ஒன்றுகூடல்கள் செய்திருப்போம். அத்தனைக்கும் ஏதாவது ஒரு பலன் தான் கிடைத்ததா? இன்று வன்னியில் ஜக்கிய நாடுகள் நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கு உதவி செய்கின்றதா? வன்னி மக்கள் செய்வறியாது நிற்கிறார்கள். தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் தங்கள் வேலைகளையும், இலாபங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவே கிடையாதா?
ஏன் கிடைக்காது, நான் ஒருவன் சிந்திப்பதால் இக்கட்டுரையை எழுத முடியுமென்றால் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்தால் நாட்டையே முன்னேற்றிவிடலாம். நாம் நீதியோடும், மனிதநேயத்தோடும் நடந்தால் தான் ஆசீர்வாதமும், உதவியும் நாம் கஷ்டப் படும்போது கிடைக்கும். நன்றி.
Monday, September 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஈழத் தமிழர்களின் இன்னல்களில் நாங்களும் பங்கு கொள்வோம். தமிழக அரசியல்வாதிகள் எக்கேடு கெட்டுப் போனாலும் தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் தமிழீழப் போரை ஆதரித்தே வருகிறோம்.வருவோம்.
மற்ற நாடுகளின் ஆதரவைத் திரட்ட அண்ணன் பாலசிங்கம் அவர்களின் இடத்தினை வேறு ஒருவரால்(சிரமம்தான் என்றாலும்) நிரப்ப வேண்டும்.
Post a Comment