அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 28, 2008

இசைப் பேரரசி அமரர் திருமதி. சாரதா பரம்சோதி அவர்களின் மறைவுக்கு கிருத்தியத்தின் நினைவஞ்சலி

திருமதி. சாரதா பரம்சோதி அவர்கள் சித்தங்கேணிச் சந்திக்கருகில் குண்டுவெடிப்பில் காயம்பட்டதும் தகவல் சுவிசுக்கு எனக்கு சில நண்பர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதுடன் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல ஏதாவது செய்யமுடியுமா என்று கேட்டிருந்தும் எதுவுமே செய்ய முடியாத நிலையில் மனிதாபிமானமற்ற அரக்கர்கள் கூட்டத்தால் அவரது உயிர் அநியாயமாக எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாம் யாரை எப்படி எந்த வகையில் திட்டித் தீர்த்தாலும் போன சாரதா அக்கா திரும்பி வரப்போவதில்லை. ஆனால் விடுதலைக்காகப் போராடுவோர் வீதியல் போவோர் வருவோரைக் கருத்தில் கொள்ளாமல் வீணாக மறைந்திருந்து அரச படையினர்மீது மேற்கொள்ளும் குண்டெறிதல், துப்பாக்கிப்பிரயோகம் செய்தல் என்பவற்றால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே! தாம் ஏதோ பெரிய வீர சாகசம் நடத்திவிட்டோம் என்று கூறித் தம்பட்டம் அடிப்போர் சற்று சிதானமாக எது வீரம் என்பதைச் சிந்திக்க வேண்டும். மக்களோடு மக்களாக இருந்துவிட்டுச் சடுதியாக ஏதாவதொரு அசம்பாவிதத்தை ஏற்படுத்திவிட்டு தாம் தப்பித்துக்கொள்ள முட்டாள்படை என்ன செய்யும்! அப்பாவிப் பொதுமக்களைத்தான் கிடைத்த வேகத்திற்கு கண்முடித்தனமாகச் சுட்டம் அடித்தும் துன்புறுத்தும். இது நீண்ட நாட்களாகவே நடைபெற்றுவருகிறது. இதை வைத்துக் கொண்டு இது வீரமென்று இங்கு வெளிநாடுகளிலுள்ள மற்ற முட்டாள்கள் கூட்டம் பணம் சேகரித்து அவர்களுக்கு அனுப்ப இது தொடர் படுகொலைகளிலேயே முடிவுறும். எல்லோரும் சற்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும். இவர் மாத்திரமல்ல இன்னொரு வயதில் இளைய வாலிபனொருவரும் அன்றைய சம்பவத்தில் உயிர் நீத்தார்.
சாரதா அக்காவைச் சிறுவயதிலிருந்தே எனக்கு நன்கு பழக்கம். அவரது தந்தையார் சச்சி மாஸ்டர் எங்கள் பெரியப்பா வீட்டுக்கு அடிக்கடி வருபவர். தாடியை இரப்பர் பாண்டால் சுற்றி வைத்திருப்பார். சுhரணர் ஆசிரியரான அவர் சற்றுக் கண்டிப்பாகவே பார்ப்பதற்கு இருப்பார். நாங்கள் சிறுவயதில் அவரைக் கண்டால் ஒரு பயம். மரியாதை இருக்கும்.
இவரது இன்னொரு மகளான செல்வி யசோதா எம்முடன் முதலுதவிப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டதுடன் பல முதலுதவிகளையும் செய்தவர். தியாக உணர்வுடையவர் அவரும் அகாலமானார். தற்போது சாரதா அக்காவும் இப்படி ஒரு துக்ககரமான முறையில் மரணமடைந்தது மனதுக்கு மிகவும் சரியான வேதனையை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கும்.
எங்கள் மூளாய்ப் பிள்ளையார் கோவில் முருகன் கோவில் திருவிழாக்களின்போது பிரசங்கமாயிருந்தாலும் சரி கலை நிகழ்வாக இருந்தாலும் சரி அவரது குடும்பத்தவர்கள் தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றிய சிறப்பை நாம் வார்த்தைகளால் சொல்லமுடியாது. தனது குரலிலேயே வதிரன்புலோ சித்திவிநாயகப் பெருமானுக்கு பாடல்கள் பாடி ஒரு தனியான இடத்தையும் அவர் தக்கவைத்திருந்தார். தனது மாணவர்களையும் பாடவைத்து தானும் பாடி மற்றவர்களையும் அழைப்பித்துப் பாடச் செய்த நிகழ்வுகளை சுலபமாக யாரும் மறுக்க முடியாது. பிள்ளையார் கோவில் திருவிழாவில் நானும் ஒருதடவை எனது மனைவிக்குப் பாடமுடியாத சூழ்நிலையில் (எனது மனைவியின் பெண் பக்க வாத்தியக் கலைஞர்கள் சகிதம்) பாட ஒரு பெரும்பேறு கிடைத்ததையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானதென நினைக்கின்றேன்.
இவருடன் பல தடவைகள் இசைக் கச்சேரிகளுக்கும் 1980களில் மாணவர்களைப் போட்டிகளில் பங்குகொள்ள வைப்பதற்கும் பல நிகழ்வுகளில் ஒன்றாக பங்குகொண்ட சந்தர்ப்பங்களை மறக்க முடியாது. நல்லூர்த் திருவிழாவானாலும் சரி இளங்கலைஞர் மன்ற நிகழ்வானாலும் சரி வேறு அரங்கேற்றங்கள் நிகழ்வுகளுக்கும் வான் வசதி செய்து இசை ஆசிரியர்களையும் ஆர்வலர்களையும் ஒன்றுதிரட்டி வீட்டுக்கு வீடு சென்று அவர்களை ஏற்றி நிகழ்வுக்கு முன்னர் செல்வதும், பின்னர் திரும்ப ஒவ்வொரு வீடுவீடாகப் போய் இறக்குவதும் மறக்கமுடியாது. அமரர் சந்திரராசா அவர்கள் மோட்டார் விபத்தில் கொல்லப்படுவதற்கு முதல் நாள் நாம் ஒரு நாட்டிய நிகழ்வுக்காக நல்லூர்க் கம்பன் கழக மண்டபத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பியபோது மினி பஸ் பழுதடைந்து ஆனைக்கோட்டையில் திருத்தம் செய்வதற்காக நள்ளிரவு நேரம் கலைஞர்களுடன் நடுரோட்டில் நின்றிருந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கவையே.
பெருமளவு மாணவர்களைப் பங்கு கொள்ள வைப்பதற்காக போட்டிகளில் இந்து இளைஞர் மன்றமும், மாதர் சங்கமும் விண்ணப்பத்தை வின்னப்பிக்கும்வகையில் நாம் சிறந்த மாணவமாணவியர்களை இரு பகுதியாக அனுப்பிவைப்பது வழக்கம். காலையிலிருந்து போட்டிகளுக்குச் சென்றால் மாலை வரை மாணவர்களுக்காக அவர்கள் இசையிலும் ஏனைய துறைகளிலும் முன்னுக்குவர தன்னுடைய தேவைகளை அறவே ஒதுக்கிப் பணியாற்றிய ஆசிரியப் பெருந்தகையின் அர்ப்பணிப்பை நான் கட்டாயம் குறிப்பிட்டேயாகவேண்டும். எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வு பருத்தித்துறைக்கு நாம் மாணவர்களைக் கூட்டிச்சென்று திரும்பிய நிகழ்வு ஒருபோதும் மறுக்கமுடியாது. பல மணிநேரம் கால நிலை பசி களைப்பு ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து வசதியுமின்றி நாம் பட்டபாடு ஏன் போட்டிக்கு இப்படிப் போக வேண்டும் என்ற சலிப்பைக் கூட ஏற்படுத்தும். எனினும் ஏதோ எம் மாணவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தலாமே என ஒரு பொது நோக்குடன் செயற்பட்ட அவர்களது சேவையை யாரும் எளிதில் மறந்துவிடமுடியாது. தனது இசைப் பயணத்தை இடையில் விட்டுவிட்டு விண்ணகம் சென்றது ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இழப்பு இசை உலகிற்கு பாரிய பேரிழப்பு!
எம்மக்கள் அனைவரையும் கடவுள் தான் காக்க வேண்டம் என்று தந்தை செல்வா கூறிய வார்த்தைகளை மீண்டும் தெரிவித்து அவரது குடும்பத்தவர்களுக்கு இது ஒரு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இசை ரசிகன் என்ற கோதாவிலும் மனைவி வழியில் உறவினன் என்ற வகையிலும் எனது இதய அஞ்சலியாக ஓராண்டு நிறைவில் அவருடைய இசைப் பயணத்தை மீள நினைவுபடுத்திக் கொள்வதில் மன ஆறுதல் அடைகின்றேன்.
அன்னாரின் குடும்பத்தவருக்கும் இன்றைய நாளில் எனது மறக்கமுடியாத நினைவுகளைப் பகிர்வதாக இந்தக் கிருத்தியத்தின்மூலம் செய்தி தெரிவிக்கின்றேன்.
இசையை உயிர்மூச்சாகக் கொண்டிருக்கும்
தங்க. முகுந்தன்.

No comments: