அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, September 18, 2008

அமிர்தலிங்கம் சகாப்தம் - கதிர். பாலசுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல்.(13.07.2004)

இந்நூலுக்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ்கட்சியின் தலைவர் முனைவர் குமரிஅனந்தன் அவர்கள் வழங்கிய அணிந்துரை.

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்கள் சகாப்தம், மீண்டும் உயிர்த்தெழும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் எழுத்துருவாக்கம் பெற்றுள்ள இந்த நூல், காலத்தின் கட்டாயம். நூலாசிரியர் திரு. கதிர். பாலசுந்தரம் அவர்கள் ஈழத் தமிழர்களின் நான்கு தசாப்த அரசியல் வரலாற்றை, ஒரு பார்வையாளனாகக் கண்டுணர்ந்த நிலையில் உண்மைத் தகவல்களை ஆதாரங்களுடன் நிறுவி இந்நூலைப் பேசவைத்துள்ளார். மிகவேகமான ஓர் உன்னத அரசியல் சக்தியாகப் பிரவேசித்த அமிர்தலிங்கம் அவர்கள், ஈழத் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக நாற்பது ஆண்டுகள் மணிமுடிதரித்த வரலாறு சிறப்பாக எடுத்துரைக்கப்படுகிறது. ஆமிர்தலிங்கம் சகாப்தம் வரலாறாகிவிட்ட இத்தருணத்தில் இது ஒரு வரலாற்று ஆவணமாக வெளிவருகின்றது.
மூன்று பாகங்களைக் கொண்ட அமிர்தலிங்கம் சகாப்தம் நூல் அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் பிரவேசம், வட்டுக்கோட்டையில் வெற்றியெனத் தொடங்கி, வேறுயாரும் பதிவுசெய்ய இயலாத எண்ணற்ற சம்பவத் தொகுப்புகளோடு உயிரோட்டமாக நகர்கின்றது. ஆசிரியர் அண்ணலின் மனிதநேயப் பண்புகளையும், தமிழர் மீதும் தமிழ் மீதும் அவர்கொண்ட தணியாத ஈடுபாட்டையும் செம்மையாகப் படம்பிடித்துள்ளார்.இலக்கிய நயமிக்க அவர்தம் உரை வீச்சு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர் ஒலித்த பாங்கினையும், வரலாற்று ஆவணங்களாகத் திகழும் அவர்தம் உரைகளின் முத்திரை பதிக்கக் கூடிய பகுதிகளையும் இந்நூலில் பார்வைக்கு வைத்துள்ளார். எதிரிகளையும் நட்பாக்கி ஈழத்தமிழ் மக்களின் நலன் ஒன்றே குறிக்கோளென்று வாழ்ந்த அரிய மனிதர் அமிர்தலிங்கம் அவர்கள். அன்னாரின் கொலை ஒரு தொடர் கதையென்று ஆசிரியர் ஆதாரங்கள் சமர்ப்பிக்கின்றார். அண்ணலின் அரசியல் கொலை, ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்ப இயலாதோர் கையாண்ட யுக்திகளில் ஒன்றுதான் அவர்மீது புழுதிவாரி இறைத்தல். அவ்வாறு விமர்சனத்துக்கு உட்பட்ட பல நிகழ்வுகளை ஆசிரியர் முன்வைத்து, மக்கள் மனதில் உள்ள மயக்கங்களைத் தெளிவுபடுத்துவதை அவதானிக்க முடிகின்றது. காலம் ஒருபோதும் கறைபடிந்ததல்ல. நிதர்சன உண்மைகள் ஒருபோதும் ஒட்டுத்திரைகளினால் மறைந்து போவதில்லை என்று அடித்தக் கூறுகின்றார்.
அமிர்தலிங்கம் அவர்களது அரசியல் அணுகுமுறைகள் எப்பொழுதும் ஒட்டுமொத்தத் தமிழர்களின் பிரதிபலிப்பாகவே அமைந்தன. கடல் பல கடந்து ஈழமக்களின் இன்னல்களைப் பறைசாற்றிய அமிர்தலிங்கம் அவர்களின் எதிர்கால நோக்கும், அவர் கடைப்பிடித்த இந்திய மைய வெளிநாட்டுக் கொள்கையும் வரலாற்றில் வியக்கத்தக்க சாதனைகளாகப் பதிவாகியுள்ளன. நேற்று இன்று நாளையும் அவர்தம் வெளிநாட்டு அணுகுமுறை சிரஞ்சீவித்தியமுடையது. ஈழம்தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகமயப்படுத்த அரும்பாடுபட்ட அண்ணல் அவர்களின் நெடிய அரசியல் வரலாற்றுப் பயணத்தின் விழுதுகள் அமிர்தலிங்கம் சகாப்தம் என்னும் இந்நூலில் ஆசிரியர் திரு. கதிர். பாலசுந்தரம் அவர்களின் எழுத்தோவியமாகக் காட்சி தருகின்றன.
அண்ணல் தனது காலத்திலேயே தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளுக்கம் தீர்வுகண்டுவிட்டதாக மூன்றாம் பாகத்தில் ஒரு பட்டியலைப் பார்வைக்குச் சமர்ப்பித்திருக்கும் ஆசிரியர், சமஷ்டி அரசியல் தவிர்ந்த இன்றுள்ள பிரச்சினைகள் அஹிம்சையில் நம்பிக்கை வைக்காதவர்களால் முகிழ்த்தவை என்ற கருத்தை முன்வைக்கிறார். உண்மைகள் கசக்கின்ற சமூகத்துக்கு இது ஒரு சவாலாக அமைகிறது.
படிப்போர் நெஞ்சம் நெகிழ்ந்திடும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ள அமிர்தலிங்கம் சகாப்தம் ஒரு முழுமைபெற்ற அரசியல் வரலாற்றின் மூச்சாகவும் சதையாகவும் இரணமாகவும் அமைந்துள்ளது. அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களது வாழ்க்கை வரலாறு, ஈழத்தமிழ் மக்களின் நாலு தசாப்த விடுதலைப் போராட்ட வரலாறாகவும் அமைகின்றது. ஈழச் சமூக, அரசியல் வரலாற்று ஆய்வாளர்களை ஈர்க்கும் வகையில், பல்வேறு தரவுகள் ஆசிரியரின் சொந்த அனுபவத்தின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் அழியாப் புகழுக்கு அணிசேர்க்கும் விதமாக இந்நூல் வெளிவருகின்றது.
உலகெங்கும் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழ் மக்கள் தம் மழலைகளுக்கத் தமிழையும் போதித்து, அமிர்தலிங்கம் அவர்களின் விடுதலை வரலாற்றையும் கூறிவைக்க வேண்டியது, அவர்களின் தவிர்க்க முடியாத கடமை. இல்லையெனில் விக்கிரமாதித்தன் என்றொரு பேரரசன் ஆண்டான்….. நலம் பலவும் செய்தான் என்று காற்றோடு காற்றாய் ஈழத் தமிழர் வரலாறு நாடற்ற, மொழியற்ற, கலாச்சாரம் மறைந்த வரலாறாகிவிடும். ஈழத்தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்த போதிலும் ஈழமண்ணின் இறையாண்மை போற்றிடும் வகையில் அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாற்றை அடித்தளமாகக் கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் தமிழ் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் சிறப்பாகப் போற்றிவரும் - புதிய சூழலில் எழுதப்பட்டுள்ள - இந்நூல் எதிர்காலச் சந்ததிகளுக்கு வரலாற்றுக் கதாநாயகன் அமிர்தலிங்கம் அவர்களின் மகத்துவங்களைச் சொல்ல உதவும் என்பது திண்ணம். அமிர்தலிங்கம் சகாப்தம் தமிழர் தம் வரலாற்றுப் பொக்கிசமாக வெளிவரத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ள நூலாசிரியர் திரு. கதிர். பாலசுந்தரம் அவர்கள் தமிழ் மக்களின் பாராட்டதலுக்கும் போற்றுதலுக்கம் உரியவர்.
நம்முன்னே அமிர்தலிங்கத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறார் திரு. கதிர். பாலசுந்தரம். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், பேச்சையும், மூச்சையும் அர்ப்பணித்தவர் அமிர்தலிங்கம் அவர்கள். வாழ்க்கைத் துணையாக அமைந்த மங்கையர்க்கரசியார் வீராங்கனையாக தமிழ்ப் பெண்ணிற்கேயுரிய நற்பண்புகளோடு துணை நின்றார்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் விடுதியில் அவர்கள் தங்கியிருந்த போது நாங்கள் உணவருந்தி உரையாடியதெல்லாம் மனக்கண்முன்னால் வந்து நிற்கிறது.
அமரத்துவம் தரும் அமிர்தம், குழையும் தன்மையுடையது. லிங்கம் குழைவார்க்கு அருள் தருவது. ஆனால் குலைக்கக் கருதுவோருக்கு குலை நடுக்கம் செய்ய வல்லது.
அமிர்தலிங்கனாரிடம் நட்போடு பழகுகின்றவர்களுக்கு அமிர்தமாகவும், தமிழுக்குப் பகைவரிடம் சிறிதும் வளைந்து கொடுக்காத லிங்கமாகவும் காட்சியளித்தார்.
அவர் மரணம் கேட்டு நெஞ்சம் நொறுங்கி கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியவர்களுள் யானும் ஒருவன்…
புன்னகைக்கும் முகம் எங்கே
பொங்கி வரும் தமிழ் தந்த உருவம் எங்கே எங்கே என்று அழுது அரற்றியது இதயம்.
நன்மகன் ஒருவரை வன்முறை பலிகொண்டதே என்று பொருமிக்கொண்டே அவருடைய உருவப்படத்தை ஏந்தி ஆலங்குளம் என்ற ஊரிலிருந்து ஆறுமுகன் கொலுவீற்றிருக்கும் திருச்செந்தூர் வரை பாதயாத்திரை செய்தோம்.
வழியெல்லாம் நின்ற மக்கள் விழியெல்லாம் நீர்மல்க அவருடைய படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நூல் வெளிவரும்வேளை ஈழத்தமிழ் மக்களின் தீராப் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுமாயின், அதுவே அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய அரசியல் போராட்டங்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாக அமையும். அண்ணலின் அரும் பெரும் பணிகளை ஒன்று திரட்டி, வரலாற்றை மீள்பார்வைக்குத் தரும் அமிர்தலிங்கம் சகாப்தம் ஈழத்தமிழர் நலனில் அக்கறைகொண்ட ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத கையேடாகும்.
தமிழுக்கு உயிர் ஈந்தவர் வாழ்க்கையை உயிரோட்டமாக எழுதியுள்ள திரு. கதிர். பாலசுந்தரம் அவர்களின் எழுத்தாற்றலைப் போற்றுகின்றேன்.
தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தன் இன்னுயிர் நீத்த அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களின் சகாப்தம் மறுமலர்ச்சிபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. பொன்னான அந்தக் காலத்தின் எழுந்தருள்கையை எதிர்பார்த்து வாழும் ஈழத்து உறவுகளுக்கு தமிழ் மக்களின் இதயம் நிறைந்த ஆசிகளும் வாழ்த்துக்களும்.

குமரிஅனந்தன்

முகவுரை

ஈழத் தமிழ்ச் சமூகம் வாய் திறக்க அக்கம் பக்கம் பார்க்கிறது. ஈழத் தமிழர் அரசியல் வானில் மக்கள் தலைவனாகக் கோலோச்சியவர் அமிர்தலிங்கம் அவர்கள். அவர் 1989 யூலை 13ந் திகதி பலிகொள்ளப்பட்டதை அடுத்துத் தமிழ்ச் சமூகம் அவரது கொலை பற்றி மௌனம் சாதிக்கிறது. நான்கு தசாப்தங்கள்(1949 – 1989) தலைக்குமேல் தூக்கிவைத்துப் போற்றிய தலைவனது புகழ் சொல்லவும், நாமம் சொல்லிப் பேசவும், அவனது அளப்பரிய சாதனைகளைப் பதிவு செய்யவும் சமூகம் மிரளுகிறது. இது புலம் பெயர்ந்து வாழும் நாடுகளுக்கும் பொருந்தும். புத்திஜீவிகள் என்று தம்மை அடையாளப்படுத்துவதில் பெருமை கொள்பவர்கள், தபசிகளாக மாறிவிட்டார்கள். எதிர்கால வரலாற்றாசிரியர்கள், வரகவிகள், இரத்த வாரிசுகள் ஈழத் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை முழுமையாகப் பார்க்க இந்த நூல் உதவும்.
1996ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் ரி. சபாரத்தினம் அவர்கள் ஒரு மிதவாதியின் கொலை என்ற அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய அரசியல் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலையடுத்து வரலாற்றின் மனிதன் என்னும் நூல் 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது பல பிரமுகர்களின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு நூலாகும். கணினி இணைய தளங்களில் பத்திரிகையாளர் கே.ரி.இராசசிங்கம், பேராசிரியர் சச்சி சிறீகாந்தா ஆகியோர் வெளியிட்ட நூல்களில் குறித்த ஓரிரு அத்தியாயங்கள் அவர் பற்றிப் பேசுகின்றன. அவரது சொற்பொழிவுகளைக் கொண்ட பல ஒலி, ஒளி நாடாக்களும், பிற பிரசுரங்களும் கனடா தமிழர் விடுதலைக் கூட்டணிக் கிளையிடம் உள்ளன.
ஈழத் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் ஜென்ம எதிரிகள் அவரைச் சுயநல அரசியல் வாதியாகவும், உரிமைப் போராட்டத்தில் அவர் புரிந்த சாதனைகளை மூடிமறைத்தும் அல்லது அவர் செய்த சாதனைகளை வேறுநபர்களின் தலையில் சுமத்தியும், அவர் செய்யாதவற்றை அவர் செய்தார் என்று கதை கட்டியும் அவரது அரசியல் வரலாற்றைக் கயிறு திரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.இன்னும், இளைய தலைமுறையினர் அமிர்தலிங்கம் அவர்கள் பற்றி அறியாதவர்களாக உள்ளனர். கேட்டது தமிழ் ஈழம் கிடைத்தது ஜப்பான் ஜீப் என்ற கவிதை அடிகளை வைத்து இளைய தலைமுறை ஏதோ லஞ்சம் பெற்றவர், சிங்களவனிடம் கையுறை பெற்றவர், பேரினவாதச் சிங்களவரின் கையாள் என்று அவரைத் தப்பாக நினைக்கிறார்கள். 1990 மார்ச் மாதம் மாத்தையா லங்கா காடியன் பத்திரிகை ஆசிரியர் மேவின் டி சில்வாவுக்குக் கொடுத்த பேட்டியில் அமிர்தலிங்கம் ஒரு தமிழ் ஈழ எதிரி. தமிழ்த் துரோகி. இந்திய ஏஜன்ட் என்று சொன்னதை ஒரு பகுதி மக்கள் நம்புகிறார்கள். ஆதனால்தான் கொலை செய்யப்பட்டார் என்றும் தப்பாக நினைக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அமிர்தலிங்கம் அவர்களது அரசியல் சரித்திரம் தெரியாது. இந்த நூல் நாங்களும், எங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், பீட்டப்பிள்ளைகளும், சந்ததிகளும் ஒரு உத்தம புருசனது புனித நோக்கத்தைக் கொண்ட வாழ்க்கை வரலாற்றை அறியவும், அவரைப் போல உயர்ந்த எண்ணங்களுடன் மனித குலத்துக்குத் தொண்டாற்றவும் வழிசெய்யும். அவரது அரசியல் வாழ்க்கை வரலாறு பாரத காவியம் போல நீண்டது. அதனை மிகச் சுருக்கமாகவே சொல்லியுள்ளேன்.
அன்னாரது பாராளுமன்றப் பேச்சுக்கள் பல வரலாற்றுப் பொக்கிசங்களாகும். இலக்கிய நயம் இழையோடும் உணர்ச்சி கக்கும் உரிமைக் குரல்கள் அவை. அவரது நாடாளுமன்றப் பேச்சுக்கள் மேடையில் பார்த்த அமிர்தலிங்கனாரைவிடஉன்னதமான இன்னொரு மகாமேதை அமிர்தலிங்கனாரை வாசகன் முன் நிறுத்தும். மாதிரிக்காக அவற்றில் ஒரு சில பேச்சுக்களின் சில பாகங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. அவை அவர் தமிழ் இனத்தின் விடுதலைமீது வைத்திருந்த புனித தீவிர பற்றைக் காட்டும்.
அமிர்தலிங்கம் அவர்களின் கொலைக்கான காரணத்தை அவர் பற்றிய நூல்கள் தெளிவாகச் சொல்லாவிட்டால் அவர் ஏதோ தவறிழைத்தமைக்காகவே கொலை செய்யப்பட்டார் என்றே இனிவரும் இளைய தலைமுறைகள் நம்ப இடம் வைக்கம். அப்படி அவர்கள் கருதுவதற்கு அமிர்தலிங்கம் அவர்கள் பற்றி வெளியிடப்படும் நூல்களே துணை போகும். ஈழத் தமிழ் மக்கள் தலைவனின் மேலான பங்களிப்பைத் தமிழினம் மீட்டுப் பார்க்க இந்த நூல் துணைசெய்கிறது. முதல் பாகத்தில் அரசியல் வாழ்க்கையைச் சொல்லி, இரண்டாம் பாகத்தில் கொலைக்கான காரணங்களும், கொலை செய்தவர்கள் செய்வித்தவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய செய்திகளும், கொலை தொடர்பாக இதுவரை சொல்லப்படாத செய்திகளும் கொலை பற்றிப் பலர் ஆங்காங்கு எழுத்தில் தெரிவித்த மக்களை அடையாத செய்திகளும், கண்கண்ட சாட்சிகளும் உள்ளன.
மூன்றாம் பாகத்தில் ஈழத்தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையை – சாணக்கியத்தைப் பறக்கணித்ததால் ஏற்பட்ட விளைவுகள் சொல்லப்பட்டுள்ளன. 1987 – 2001 வரையான 14 வருடப் போர்களின்போது மக்கள் அனுபவித்த அவலங்கள் துயரங்கள் துன்பங்கள் கொடுமைகள் இழப்புக்கள் அத்தனையும் அமிர்தலிங்கம் அவர்களின் தீர்க்க தரிசனத்தை இடறியதன் விளைவுகள், மக்களின் உயிருடைமைகளை முதன்மைப்படுத்தி உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற மனிதநேயமுள்ள தீர்க்க தரிசனம் நிறைந்த அமிர்தலிங்கம் அவர்கள் போன்ற தலைவர்கள் சமுதாயத்தின் சொத்து. அத்தலைவர்களின் உயிரைப் பறித்தெடுப்பது அச் சமுதாயத்துக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.
அமரர்கள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் அவர்களின் அரசியற் படுகொலைகளையடுத்துத் தமிழ்நாடு சென்னையில் உள்ள பெரியார் திடலில் அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய உரை, அவரது இளமைக்கால உணர்ச்சி பொதிந்த தர்க்க வாதங்களை ஒட்டாத செய்தியாகவும் - எனக்கு ஏதும் நடந்தால் என் தொல்லை முடிந்ததென்று போய்விடுவேன். எனக்கு என்ன நட்டம்? தர்மலிஙஇகம் மரணித்துவிட்டார். அவருக்கு என்ன நட்டம்? ஆலாலசுந்தரத்துக்கு என்ன நட்டம்? என்ற அவரின் வாய்மொழிகளும் - வாழ்க்கையில் நொந்திருந்த சமயம் அன்றைய உழைப்பைத் தானம் செய்தவிட்டு அவர்வீடு வேறு? என்னுடைய வீடு வேறோ? என்று மொழிந்தமையும் - யாழ் பல்கலைக் கழக வாயிலில் நின்று மாணவர்கள் கைகளால் மரணித்தால் எனக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று பகிர்ந்தமையும் பிறவும் ஆன்மீகத்தை நோக்கிய சிந்தனையாகவும் அமைந்து – அவரை அடிமுடிகாண முடியாத விஸ்வருபியாகத் தரிசனத்துக்கு வைக்கிறது.
எங்கள் மண்ணில் ஜனநாயக தர்மங்கள் கண்கலங்குகின்றன. கோயபல்ஸ் பிரசாரம் சூடாகவே இருக்கிறது. எனினும் ஜனநாயக மாதாவை அமுக்கி வைத்திருந்த இரும்பு மேகங்கள் கலைய ஆரம்பித்துள்ளன. இனி அடக்கத்தில் புதைகுழியில் நாறும் உண்மைகள் கசியத் தொடங்கும். அந்த அலங்கோலங்களைக் கண்டும் கேட்டும் சகித்தும் மௌனிகளாக முன்னர் வாழ்ந்த மந்தைகள் மீண்டும் மேய்ச்சல் தரவவைகளில் இறங்கிச் சுயரூபத்தைக் காட்டும். அப்பொழுது அண்ணல் ஈழத்தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து காட்சி தருவார்.

கதிர். பாலசுந்தரம்.

நூலாசிரியரைப்பற்றி – யாழ்ப்பாணம் ஆவரங்காலில் பிறந்தவரான திரு. கதிர். பாலசுந்தரம், பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரி. ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்த காலம் நிருவாக சேவை அதிபராக இருந்தவர். சிறுகதை, நாவல், வானொலி நாடகம், மேடை நாடகம் எனப் பல்துறை சார்ந்த எழுத்தாளர். அந்நிய விருந்தாளி என்ற சிறுகதைத் தொகுப்பையும் மறைவில் ஐந்து முகங்கள், கனடாவில் நவீன சாவித்திரி என்னம் நாவல்களையும் எழுதியுள்ளார். திரு. பாலசுந்தரம் அவர்கள் பொது வாழ்விலும் அரசியல் வாழ்விலும் அமரர். திரு. அமிர்தலிங்கம் அவர்களை நன்கு அறிந்தவர். அவருடன் நன்கு பழகியவர். யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும்படை நிலைகொண்டிருந்த காலப்பகுதிக்கும் பின்னரும்வரை யாழ்ப்பாணத்து அரசியலை நன்கு அவதானித்தவர்.

No comments: