அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 9, 2008

யாழ்ப்பாண மாநகரத்தின் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி முதல்வர்களின் ஞாபகார்த்தமாக.......(களத்து மேட்டின் ஈழவனுக்காக இதை சமர்ப்பிக்கின்றேன்)

வலைப்பதிவு நண்பர்களில் ஒருவரான களத்துமேட்டின் ஈழவனை நானறியேன். அவர் எப்படிப்பட்டவர். எத்தனை வயது. எங்கிருக்கிறார். என்ன செய்கின்றார். என்ற எந்த தகவலையும் அறியாத நான் அவர்மீதும் அவரைப்போன்ற வலைப்பதிவாளர்கள் குறிப்பாக இதுவரை நான் பார்த்த பதிவுகளில் முருகப்பெருமான் (கண்ணபிரான் ரவி சங்கர்) நல்லூர்கந்த்சுவாமிகோவில் சென்னைத் தமிழன் (முகுந்தன்) தமிழ்ப் பூங்கா (சர்வேசா) சிவத்தமிழோன் றேடியோஸ்பதி (கானாபிரபா) மாயாஸ்போட்டோபுளொக் (மாயா) ரிஎம்பொலிரிக்ஸ் கடைசிப்பக்கம் இதுதான்உண்மை தமிழ் நெஞ்சம் மகா மதுவர்மன் தெய்வசுகந்தி சரவணகுமரன் சேவியர் மாயா வந்தியத்தேவன் பகீ ரிஷான் போன்ற முக்கியமானவர்களையும் இன்னும் பல பெயர் தெரியாத பார்க்காத வலைப்பதிவர்கள் அனைவரையும் அன்புடன் நேசிப்பவன். மேடை புதியமலையகம் நிர்ஷன் எனது உயிர்த்தோழனின் தம்பி. கணித சமன்பாடுகளின்படியும் அன்பியலின் கோட்பாடுகளின்படியும் ஆத்மார்த்த தொடர்புகளின்படியும் அவரும் எனது உயிர்த்தோழன். அவரது பதிவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் எனது மானசீகமான வழிகாட்டி அன்னை துர்க்காதுரந்தரி பண்டிதை செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மறைவையொட்டி ஏதாவது கட்டுரையை மதிப்புக்குரிய நீதியரசர் சீ.வி. விக்கினேஸ்வரன் எழுதினாரா என்று கேட்கப்போய் அதிலிருந்து நானொரு பகிர்தலை வழங்க அதிலிருந்து தொடங்கியது இந்த வலைப்பதிவுப் பைத்தியம்.
நேரமின்மை ஒருபுறம். எனது தாய்மொழி தமிழையும் எனது நாட்டு மொழி சிங்களத்தையும் சர்வதேச மொழி எனப்படுகின்ற ஆங்கிலத்தையும் அறிந்திருந்தும் புகலிடம் தேடிய குற்றத்தினால் புதிய ஒரு மொழியான ஜேர்மன் மொழியை(டொச் என்பார்கள்) கற்கும் சிரமம் ஒருபுறமாக இருக்கும் எனக்கு வலைப்பதிவு பண்ணுவதும் அதற்கான குறிப்புக்களை தட்டெழுத்திடுவதும்தான் தற்போதைய வேலையும் தொழிலும். எனக்கு இங்கு சுவிற்சலாந்து நாட்டுக்கு வந்த சில காலங்களிலேயே குறிப்பறிந்து எனக்கு ஒரு கணனியைத் தந்துதவிய அன்பான நண்பர் செபஸ்ரியன் இராஜன் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை இவ்விடத்தில் சொல்லவேண்டிய கடமை எனக்குண்டு. துப்பாக்கிச் சூடுபட்ட என்னைக் காப்பாற்றிய எனது கிராமத்து நண்பர்கள் இளைஞர்கள் பெரியவர்களை நான் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். 12.06.2006 திங்கட்கிழமை சூரியன் அஸ்தமனமாகிற வேளையில் அந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதை நான் விலாவாரியாகக் குறிப்பிட வேண்டியவனாயிருந்தும் இன்னொரு இடத்தில் அதை விபரமாகத் தெரிவிக்கின்றேன் என்று கூறித் தற்போதைய விடயத்திற்கு வருகின்றேன்.
நேற்றைய 08.09.2008 பதிவில் களத்துமேட்டின் ஈழவன் ஒரு தகவலைத் தனது பதிவில் தெரிவித்திருந்தார். எனது பதிவிற்கு அவர்களைப்பற்றி எழுதலாம் தானே என்று பதிவிட்டிருந்தார். ஆறுதலாக எழுதலாம் என்றுவிட்டு பதிவுகளில்போய் என்ன போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கப்போனால் இவர் சொல்லியிருக்கிறார். மேலதிக விபரங்களை தங்க. முகுந்தனின் வலைப்பதிவில் எதிர்பார்ப்போம் என்று. எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்னடா செய்யலாம் என்று தலையைப் போட்டுப் பிய்த்தேன். எனக்கு நானே திட்டித் தீர்த்தேன். என்னடைய அலுமாரிகள் கோப்புக்கள் எல்லாவற்றையும் புரட்டிப் புரட்டித் தேடினேன். எந்தத் தகவலும் அவர்களைப்பற்றியது கிடைக்கவில்லை. என்னடா செய்யலாம் என்றிருந்தபோது ஒரு சிறிய குறிப்பொன்று மட்டம் தனியாக உறையிலிட்டு இருந்ததைக் கண்டேன். எடுத்தப் பார்த்தால் திரு. சிவசிதம்பரம் அவர்கள் சொல்ல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் எழுதப்பட்ட குறிப்பு திரு. சிவபாலனைப்பற்றியது. அதை உடனேயே தட்டச்சிலிட்டேன்.
அதன்பிறகு நான் அவர்களுடன் நெருங்கிப்பழகிய நினைவுகளைப் பதிய ஆவலுடன் குறிப்புக்களை எழுதத் தொடங்கினேன். எங்கிருந்த தொடர்வது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பத்தில் மீண்டும் எனது கோப்புக்களைத் துளாவினானேன். சில புகைப்படங்கள் மாத்திரம் பதிவுபண்ணி வைத்திருந்ததை எடுத்து முதலில் அவற்றை வாசகர்களுக்கு முக்கியமாக களத்துமேட்டின் ஈழவனுக்கச் சமர்ப்பிக்கலாம் எனக் கருதி இன்று அவற்றைச் சமர்ப்பிக்கின்றேன். மீதி நாளை ஒரு புதிய தலைப்புடன் தொடராக எழுத விரும்புகின்றேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரின் அனுதாபச் செய்தி.

திரு. பொன். சிவபாலன் அவர்களின் அகால மறைவு பெரும் வேதனையைத் தருகின்றது. குடாநாட்டு மக்களின் துன்ப துயரங்களை நீக்குவதற்குத் தன்னாலானதைச் செய்ய வேண்டும் என்ற பெருநோக்கில்தான் அவர் யாழ் மாநகர முதல்வர் பதவியைப் பொறுப்பேற்றார்.மிகவும் ஆர்வத்தோடு அவர் செயல்பட்டார். அழிந்துபோன நகரைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சர் ஜனாதிபதி பிரித்தானியத் தூதுவர் ஏனைய மாநகர நகர சபை முதல்வர்கள் என்போரையெல்லாம் சந்தித்து நிலைமைகளை எடுத்துரைத்தார். கொள்கைவழி நின்று வடக்குக் கிழக்கு இணைப்புக்கும் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கும் வகையிலான அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக் கொள்வதற்குமெனக் கூடியவரையில் உழைத்தவர். திரு. பொன். சிவபாலன் அவர்கள்.மனித உரிமைகள் தொடர்பாக அக்கறை கொண்டு சர்வதேச மனித உரிமை மகாநாடுகளில் கலந்துகொண்டு இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை எடுத்துரைத்ததுடன் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் விடயத்தில் அந்தந்த நாடுகள் அனுதாபத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி வந்தவர். எமது கட்சியின் சட்டத்துறைச் செயலாளராக இருந்து பலவித சட்ட நடவடிக்கைகளிலும் கரிசனையுடன் ஈடுபட்டவர். இதனால் தனது சொந்தச் சட்டத் தொழிலாற் பெறக் கூடிய சம்பாத்தியங்களைத் தியாகம் செய்தவர். அன்போடும் விசுவாசத்தோடும் பழகும் பண்பும் எடுத்த காரியத்தை விடாப்பிடியாக நிறைவேற்றும் மனத்துணிவும் கொண்டவர். அமரர் அமிர்தலிங்கம் அவர்களிடம் கொண்ட அன்பு காரணமாக அமிர்தலிங்கம் நினைவுப் பணிமன்றத்னை உருவாக்கி வருடாவருடம் அவருக்கு நினைவு விழா எடுப்பதில் அக்கறை காட்டி வந்தவர். யாழ் நகரின் வீதி ஒழுங்குகளைச் சீர் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கையில் அவருக்கு இந்த நிலமை ஏற்பட்டு விட்டது. இத்தகைய உயிரிழப்புகளால் யாருக்கும் நன்மை கிட்டப்போவதில்லை. தம்பி சிவபாலனின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்பதோடு அவரது துணைவியாருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மு. சிவசிதம்பரம்
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி.

மிகுதியை நாளை தொடர்கிறேன்

1 comment:

களத்துமேட்டின் ஈழவன் said...

நன்றி முகுந்தன்.
//வாசகர்களுக்கு முக்கியமாக களத்துமேட்டின் ஈழவனுக்குச் சமர்ப்பிக்கலாம் எனக் கருதி இன்று அவற்றைச் சமர்ப்பிக்கின்றேன்.//

தங்களின் கட்டுரையை வாசித்தேன், இன்னும் தேடல்கள் செய்ய வேண்டுமல்லவா, ஈழவனுக்காக இக் கட்டுரை என்பதை நான் மறுதலிக்கின்றேன், நீங்கள் அவர்களின் நினைவு நாளின், அவர்களைப் பற்றிய பதிவுகளைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்!

அவர்களைப் பற்றி அவர்களுடன் கூடவே இருந்தவர்கள் எழுதினால் அவை எம்மைப் போன்ற வாசகர்களுக்குத் தீனி அல்லவா?
ஸ்ரீலங்காவில், பிரித்தானியாவில் இன்னும் வெவ்வேறு இடங்களில் பொ.சிவபாலனை நினைவு கூர முடியுமாயின் ஏன் தங்கராசா முகுந்தனால் ஓர் பதிவிட முடியாது, அல்லது மறந்து விட்டாரோ எனும் ஆதங்கத்தில் தான் பதிவிட்டேன், சுவிற்சலாந்தின் இயற்கை அழகிலும் மேலானது எம்மவர்களைப் பற்றிய பதிவே!