அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, September 21, 2008

தொல்லை தீர்ந்ததென்று போய்விடுவேன் - பகுதி 2

ஏற்கனவே இவர்களுக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை. தாமாக கையில் எடுத்தக் கொண்ட ஒரு உலோகத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு எத்தனை ஆரவாரம். அட்டகாசம். மிரட்டல். மிஞ்சினால் சுட்டுக் கொலை. யாரும் கேட்கத் தைரியமில்லை. கேட்டால் அவருக்கும் அதே கதி. அதோ கதி.
ஆனால் இன்று கடந்த 2004 பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை என்ன?
ஏகப்பிரதிநிதிகள் - இதனால்தான் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிக்குள்ளே பிளவு ஏற்பட்டது. சரி மக்கள் தான் ஏற்றுக் கொண்டு விட்டார்களே! இனி அவர்கள் எது செய்தாலும் மக்கள் அதற்கு ஆதரவுதானே என்று எல்லோரும் பேசாமல் இருக்கலாம்தானே! அதுதானே மக்கள் ஆணையளித்துவிட்டார்களே!
சில பழைய சம்பவங்களை நான் மீட்டுப் பார்க்க வேண்டியவனாக இருக்கின்றேன்.
கோயிலுக்குக் கும்பிடப் போன துரையப்பாவும் சுட்டுக்கொலை. கிறிஸ்மஸ் ஆராதனைக்குச் சென்ற ஜோசப் பரராஜசிங்கமும் கொலை. புதுவருடத்தன்று கும்பிடப்போன மகேஸ்வரனும் கொலை.
அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். ஆண்டவனை தரிசிக்கச் சென்றவர்களைக் கொன்றது நியாயமானதெனச் சொன்னாலும் - நீதி என்று ஒன்றிருக்கிறது அல்லவா? அது தன்கடமையைச் செய்ய நாம் இடம் தரத்தானே வேண்டும்.
தமது விடுதலைப் புலி உறுப்பினர்கள் 9 பேரை புளொட் கொலை செய்தமைக்கு ஒரு உண்மைகள் உறங்கவதில்லை கையேடு வெளியிட்டவர்கள், தங்களால் கொல்லப்பட்டவர்களுக்கு யாராவது ஏதாவது செய்தால் துரோகம்! இது எங்கு உருவாகிய சட்டம்?
தொழுகையிலே இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்? யாத்திரை செய்து மீண்டவர்கள் கொல்லப்பட்டார்கள்? ஏன்?
உண்ணாவிரதம் கூட்டணி செய்தால் குழப்பம். பல்கலைக் கழக மாணவன் விஜிதரனும் அவரது நண்பர்களும் செய்தால் கடத்திக் கொலை. அது எப்படி திலீபனும் அன்னை பூபதியும் உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடையலாம் இது எங்கு எழுதப்பட்ட நீதி?
கேட்டது தமிழீழம் வாங்கினது ஜப்பான் ஜீப், என்று நான் பார்த்தது தெல்லிப்பழை அரச வைத்தியசாலைச் சுவரில். இன்று ஏகப் பிரதிநிதிகள் என்று தமது பிரதிநிதிகள் வைத்திருக்கும் இன்டர்கூலர் எப்படி? அரசாங்கத்தடன் கூட்டணி பேசுவது துரோகம்! தாங்கள் பேசினால் அது எப்படி?
திம்புவில் பேச்சுவார்த்தை நடைபெறப் போகும்போதே வில்லுப்பாட்டிலும் தெருக் கூத்திலும் கொச்சைப்படுத்தினால் எப்படி பேச்சுவார்த்தை சரிவரும்.
இந்திய இராணுவம் அமைதிப்படையாக வரும்போது வரவேற்பு. பின்னர் ஏன் ஏற்பட்டது தகராறு? கொலைகளும் கற்பழிப்புக்களும் ஏற்படாமல் தடுத்திருக்கலாம் தானே!
ஒன்றுமேயறியாத யாழ்ப்பாணத்து அப்பாவி முஸ்லிம்கள் தமது உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு 24 மணிநேர அவகாசத்திலே வெளியேறினார்களே! என்ன தருமம் இது? யாரோ ஒருவன் ஏதோ குற்றம் எங்கோ செய்தமைக்காக (நான் இதுவரை உண்மை அறியவில்லை என்ன நடந்தது என்று) இவர்கள் எப்படித் தண்டிக்கப்படலாம்? யாருடைய நீதி?

இன்னும் எத்தனையோ இன்றைக்கு இவ்வளவும்தான். மீதி பின்னர்.

No comments: