அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, September 29, 2008

மறைக்கப்படும் வரலாறுகள் - 5

தந்தையின் சிந்தனையும் தரங்கெட்டோர் புளுகுகளும்

யேசுபிரானை எதிர்த்தவர்கள், அவருடன் நெருங்கிப் பழகாதவர்கள், நெருங்கவே முடியாதவர்கள் ஆகியோர்கூட அவர் இறந்த பின்னர் அவரைப்பற்றி நூல்களை எழுதி பிழைப்பு நடத்தினார்கள். அதுபோலவே தந்தை செல்வாவை காற்சட்டை காந்தி என எள்ளி நகையாடியவர்கள் அவரின் மறைவுக்குப் பின்னர் அவரைப் போற்றி எழுதியும், உருவப்படத்தைப் பிரசுரித்தும் வயிறு வளர்த்து வருகிறார்கள்.
இளைஞர்கள் வன்செயல்களில் ஈடுபடுவதற்கு அமிர்தலிங்கம்தான் தூபமிட்டு வருகிறார். எனக்கும் இதற்கும் எதுவித தொடர்போ சம்பந்தமோ இல்லை. தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் என்று எழுதிக் கொடுத்துவிட்டு 24 மணி நேரத்தில் வீட்டுக்கு ஓடோடிவந்த மாவீரன் ஒருவரும் தந்தை செல்வா பெயரைக் கூறிவருகிறார்.
70ம் ஆண்டுத் தேர்தலில் தோல்வியுற்ற என்னை மீண்டும் ஆளாக்கி அரசியலில் புகுவதற்கு வழிவகுத்துவிட்டவர் தானே என்று வெளிநாட்டுத் தம்பி ஒருவரின் பெயரில் எழுதியிருக்கின்றார் மற்றத் தம்பி கோவை மகேசன். இது உண்மையென்றால், சரியென்றால் 1952இல் தோல்விகண்ட தந்தை செல்வாவை மீண்டும் வெற்றிபெறச் செய்து தலைவராக்கிய பெருமை யாருக்கு? இதனைத் தம்பி கோவை தனது பத்திரிகையில் எழுதி வெளியிடுவாரா?
மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். இதைக்கூட தமிழக அரசின் முதலமைச்சராகத் தான் ஆக்கிவைத்த காரணத்தாலேயே அண்ணா தன்னைப்பற்றி இப்படிப் புகழ்ந்திருக்கிறாரென்று இந்த மகேஸ்வர ஐயர் எழுதினால் நாம் ஆச்சரியப்படமாட்டோம். பாவம் அவர். அவருக்கு அரசியலைப்பற்றி எதுவும் தெரியாது. ஆண்டவன் அவருக்கு நல்லறிவைக் கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டுமென்பதே என் பேரவா.
தந்தை செல்வா 1956 தொடக்கம் 1977 வரை எத்தனை அரசுகளுடன் எத்தனை முறை எப்படி எப்படி எல்லாம் பேச்சுவார்த்தைகள் நடத்தினார் என்பதை நாம் அறிவோம். நாடறியும். தந்தை செல்வாவின் வழியைப் பின்பற்றித்தான் நாங்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
நாங்கள் போராட்டங்கள் ஏதும் நடத்துகிறோமில்லை என்று தம்பிமார் சிலர் குறைகூறித் திரிவது எமக்குத் தெரியும். நாங்கள் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்துப் போராட்டங்களை ஆரம்பிக்க முயற்சித்த இரண்டுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் அரசு விட்டுக்கொடுத்து நிலைமைகளைச் சரிசெய்திருக்கின்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அரசு விட்டுக் கொடுக்கும்போது வீம்புக்குப் போராட்டங்களை நடத்தி என்ன பயன் வரப்போகிறது?
தந்தை செல்வா எக்காரணம் கொண்டும் பாராளுமன்றத் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கூடாதென்றே எமக்குச் சொல்லிவந்திருக்கிறார். சிறிமா அரசு அவரின் இடைத்தேர்தலை இழுத்தடித்தபோது அத்தேர்தலை விரைவில் நடத்துவதற்காக அவர் ஒரு கட்டத்தில் சிறிமாவைக்கூடச் சந்திக்க விரும்பினார். ஏனென்றால் எமது எதிர்ப்பை- கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடிய ஒரே ஒரு அடமாகப் பாராளுமன்றம்தான் இருக்கிறது என்பதை அவர் மிக நன்றாக உணர்ந்திருந்தார்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - இதுவே விடுதலை மந்திரம்.

தமிழினத்தை இன்று மிகப் பயங்கரமான சோதனைகள் எதிர்நோக்கியுள்ளன. ஆட்சியாளரின் நடவடிக்கைகள் ஒருபுறம். மறுபுறம் எமது இனத்தில் குறிப்பாக, இளைய சமுதாயத்தின் மத்தியில் தோன்றியுள்ள உட்பகை, அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதன்மூலம் மாற்றாரின் துன்புறுத்தல்களிலிருந்து தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால் உட்பகை இன அழிவையே தரும். இதை இளந் தலைமுறையினர் உணர்ந்து பொறுப்போடு செயல்படவேண்டும்.
காலத்துக்குக் காலம் நடைபெறும் கலவரங்களினால் நம்மவர் கொலை செய்யப்பட்டும், உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டும், பெண்களின் கற்பு சூறையாடப்பட்டும் வருகிறது. ஆட்சியாளரின் இராணுவமும் பொலிசும் எமது இளைஞர்களை அடித்தும், துன்புறுத்தியும், இம்சித்தும் வருகிறது. தனித்துவமான விடுதலைபெற்ற சுதந்திரத் தமிழ்ச் சமுதாயமாக எம்மை நாம் ஆக்கிக் கொள்வதன் மூலம் இக்கொடுமையிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம். ஆனால், தமிழனைத் தமிழனே தாக்கும் நிலை, தமிழனைத் தமிழனே காட்டிக் கொடுக்கும் நிலை, தமிழனைத் தமிழனே கொல்லும்நிலை ஏற்பட்டால் அதாவது எமக்கிடையே உட்பகை ஏற்பட்டால் இதிலிருந்து நாம் மீட்சி பெற முடியாது.
சமீபகாலமாக தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக இளம் சந்ததியினரிடையே சில விரும்பத்தகாத சக்திகள் புகுந்து இனத்தின் ஒற்றுமையைக் குலைத்து தமிழ்ச் சமுதாயத்தையே பாழ்படுத்த முனைந்து நிற்கிறது. இளம்வயதில் தூண்டிவிட்டால் எதையும் செய்யலாம். எனவே இளைஞர்கள், பேரறிஞர் அண்ணா கூறியதுபோல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று குணாதிசயங்களையும் தற்போது வலுவாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
அடிமைப்பட்ட இனத்தில் பிறந்துவிட்ட எமக்குக் கடமை அடிமைத்தளையை அறுப்பதே. அதற்காகக் கட்டப்பாடற்ற முறையில் செயற்பட்டால் எமக்கு அழிவுதான் ஏற்படும்.
ஒரு நாட்டின் இராணுவம், நிறைந்த படைபலத்தையும் பெருமளவு ஆயுதங்களையும் கொண்டிருந்தாலும் ஒரு தலைவனுக்குக் கட்டுப்படாவிடின் அது வெற்றிபெற முடியாது. எனவே எந்த ஒரு இயக்கமும் வெற்றிபெற அதன் தலைவனுக்குக் கீழ் கட்டப்பட்டு இயங்க வேண்டும்.
இளைய சமுதாயம் கடந்த ஐந்தாண்டுகளையும் திரும்பிப் பார்க்க வேண்டும். 1977 ஆவணி குழப்பத்தையும், 78இல் திருமலையில் நடைபெற்ற படுகொலைகளையும், 79இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அனர்த்தங்களையும், 81இல் நடைபெற்ற அட்டுழியங்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் தீர்வுகாண எமக்கு சில பாதுகாப்பினை நாம் தேட வேண்டும். தமிழ் மக்களின் பிரதேசம் வரையறுக்கப்பட வேண்டும்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் போன்று கோடிகோடியாக வருமானம் பெறும் இயக்கமல்ல எமது இயக்கம். எரிக்கப்பட்ட எமது அலுவலகத்தைத் திருத்த முடியாத நிலையில் எமது இயக்கம் இன்று இருக்கின்றது.
வள்ளுவன் சொன்னதுபோல தன்வலியும் மாற்றான் வலியும் உணர்ந்து ஏற்ற காலத்தில் களத்தில் இறங்க வேண்டும். 19, 20 வயது மாணவனாக பல்கலைக் கழகத்தில் படித்த காலத்திலிருந்தே நான் தந்தை செல்வாவுடன் இணைந்து இயக்கத்திற்காக உழைத்தேன். கடந்த 35 வருடகால அனுபவம் எனக்கிருக்கிறது. அந்த அனுபவத்தை எமது சமுதாயத்திற்கு பயன்படுத்துவேன்.
எமது இனத்தின் விடுதலை என்ற வடத்தை எல்லோரும் ஒரே சமயத்தில் சேர்த்து இழுக்க வேண்டும்.அவற்றில் சிறுசிறு தோல்விகள் ஏற்படலாம். அத்தோல்விகளை வெற்றியின் படிக்கல்லாக மாற்றி துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் மத்தியில் எதிர்நீச்சல் போட்டு நெஞ்சில் உறுதியுடனும் நேர்மைத் திறத்துடனும் முன்னேற வேண்டும்.

மீதி பின் தொடரும்

No comments: