14.07.1995
மாண்பமிகு ஐனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுக்கு,
நவாலியிலுள்ள தேவாலயத்தின் மீதான படையினரின் விமானத்தாக்குதல் குறித்து வெளிவிவகார அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய செயலாகும் சர்வதேச ரீதியில் இன மத அரசியல் வேறுபாடற்று மனிதாபிமான சேவைகளை மேற்கொண்டுவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சரின் செயலானது சமாதானத்தின் பேரில் தற்போதைய அரசுக்கு வாக்களித்த அனைத்து மக்களையும் கேவலப்படுத்துவது போன்றதாகும்.
கடந்த காலத்தில் அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களினடிப்படையில் அவற்றை வெளிப்படுத்தி விசாரணைகள் மேற்கொண்டுவரும் இன்றைய பொது சன ஐக்கிய முன்னணி அரசின் இம்தனிதாபிமானமற்ற கொடூரச் செயலால் சமாதானத்தின்மீதும் அமைதியின் மீதும் நம்பிக்கை வைத்த அனைத்து மக்கள் மனதிலும் அவநம்பிக்கையும் வேதனையும் எழுந்துள்ளது. விமானத்தாக்குதல் மற்றும் ஷெல்த் தாக்குதல்களினால் ஏற்பட்ட கொடூரமான உண்மை நிலையை வெளிப்படுத்திய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைக்கு அமைச்சரின் கண்டனம் ஏற்கப்படமுடியாது.
அப்பாவிப் பொதுமக்கள் மீதான ஷெல்த் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் கடற்படைப் பீரங்கிக் குண்டுத் தாக்குதல்கள் இவற்றால் அழிக்கப்படும் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இன்றைய அரசு எவ்வகையில் தீர்வுகாண முடியுமென எதிர்பார்ப்பதுடன் உண்மையை மறைக்க முயற்சிக்கும் செயல் ஒருபோதும் சமாதானத்தையோ அன்றி அமைதியையோ ஏற்படுத்த மாட்டாது என்பதையும் நினைவுபடுத்துவNதூடு அமைச்சரின் கண்டனத்திற்கு அமைச்சரும் அரசும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் உடனடியாக மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என வேண்டுவதுடன் தற்போதைய நிலையில் வடபகுதியில் நிலவும் மருத்துவப் பற்றாக்குறைகள் உணவு மண்ணெண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி அப்பாவிப் பொதுமக்களைக் காக்குமாறு மனிதாபிமானத்தின் பேரால் தங்களையும் தங்கள் அரசாங்கத்தையும் வேண்டுகிறேன்.
தங்களுண்மையுள்ள
தங்க. முகுந்தன்
21.09.1999.
மேன்மைதங்கிய ஐனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுக்கு,
வணக்கம்.
கடந்த 15.09.1999 புதன் கிழமை நடைபெற்ற விமானக் குண்டுத் தாக்குதல்களினால் அப்பாவிப் பொதுமக்கள் 22 பேர் பலியானதும் 41 பொதுமக்கள் படுகாயமடைந்ததும் குறித்துத் தாங்கள் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காது இன்றுவரை மௌனமாயிருப்பது குறித்து மிகவும் வேதனையடைந்த நிலையில் தாங்கள் இச்சம்பவம் குறித்து தமிழ்மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் உடனடியாகப் பாதிக்கப் பட்டவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் மனிதாபிமானத்தின் பெயரால் வேண்டுகிறேன்
சிங்கள மக்கள் கொல்லப்பட்டவுடன் கண்டனம் தெரிவித்து அம்மக்களின் இறுதிக்கிரியைகளை அரச செலவில் நடத்தி நிவாரணம் வழங்கிய பொறுப்பு வாய்ந்த கடமையை – ஏன் தமிழ் மக்களுக்குச் செய்ய வில்லை எனவும் வினவ விரும்புகின்றேன்.
இந்நாட்டு மக்களை இனம் பிரித்துக் காணுவதில் முன்னைய அரசு தலைவர்களைப் போலவே தாங்களும் நடந்து கொள்கிறீர்கள். முல்லைத்தீவு மாவட்டமும் தாங்கள் ஐனாதிபதியாகவுள்ள இலங்கை நிர்வாகத்தினுள் அடங்குவதை தங்களுக்கு நினைவுபடுத்துவதுடன் - தமிழ் மக்கள் ஒருபோதும் தங்களை மன்னிக்க மாட்டார்கள் என்பதையும் உறுதியாகவும் தெரிவிக்கின்றேன்.
தங்களுண்மையுள்ள
தங்க. முகுந்தன்
06.11.1999.
மாண்பமிகு ஐனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள்,
அலரி மாளிகை,
கொழும்பு 3
மாண்பமிகு ஐனாதிபதி அவர்களுக்கு
வணக்கம். கடந்த 04.11.1999 தினக்குரல் பத்திரிகையில் "கிபிர் விமானத் தாக்குதலில் வன்னியில் 6 பொதுமக்கள் பலி " என்ற செய்தியைக் கண்ணுற்று மிகுற்த மனவேதனைபுடன் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
6 அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறிப் பலியானதுடன் 7பேர் படுகாயமடைந்துள்ளனர். (புதன்கிழமை பாண்டியன்குளத்தில் நடைபெற்றது) தமிழ் மக்களுக்குப் பிரச்சனை இருக்கிறது என்று கூறி மக்களின் ஆதரவுடன் ஆட்சிப்பொறுப்பேற்ற தாங்கள் மக்களின் அமைதியான வாழ்வுக்கு முயற்சிக்காது மேலும் மக்களைத் துன்பப்படுத்தும் செயலானது எவ்வகையிலும் நியாயமாகாது. முக்களின் நம்பிக்கையை – எதிர்பார்ப்பைப் பாதுகாக்காது கடந்த 5 வருடகாலம் குறிப்பாகத் தமிழ் மக்கள் கடந்த அரசினது செயற்பாடுகளையே தங்களது காலத்திலும் ஏற்றுக்கொண்டீரப்பதை அவதானிக்க முடிகிறது. இன்னுமொரு தேர்தலில் தங்களுக்கு தமிழ்மக்கள் வாக்களிப்பார்கள் என்று கனவிலும் நினைக்க அருகதையற்றுவிட்டீர்கள். வடக்கு கிழக்கு மக்கள் கடந்த 5வருட காலமாக மிகவும் கேவலமான நிலையிலேயே இருக்கின்றார்கள். யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்புறப்பட்ட தாங்கள் இன்று மிருகத்தனமான முறையில் மக்களையும் மக்களின் சொத்துக்களையும் அழிப்பதிலேயே முழுமூச்சாக ஈடுபடுகின்றீர்கள். தங்கள் நடைமுறைகள் காலஞ்சென்ற தங்களின் கணவரின் கொள்கையிலிருந்து விலகி தங்கள் பெற்றோரின் கொள்கை முறைப்படி பின்பற்றுவதை தவிர்க்க வேண்டுமென்று மனிதாபிமானத்தின் பெயரால் தங்களை வேண்டுகின்றேன்.
வணக்கம்.
அப்பாவிப் பொதுமக்கள்
நலனில் அக்கறையில் ஈடுபாடுள்ள,
தங்க. முகுந்தன்.
21.11.1999.
மாண்பமிகு ஐனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுக்கு
வணக்கம்.
நேற்றிரவு நடைபெற்ற தாக்குதல் ஒன்றினால் சுமார் 30க்கும் மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் மடுத் தேவாலயத்தில் கொல்லப்பட்டதுடன் சுமார் 40 பேர்வரையில் படுகாயமடைந்த செய்திகேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்த நிலையில் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.
கடந்த 15வருடத்திற்கு மேலாக அப்பாவித் தமிழ்மக்கள் அரசபடையின் விமானத்தாக்குதல்கள் பீரங்கி மற்றம் ஷெல்த் தாக்குதல்களினால் உயிர்களை இழந்தும் படுகாயமடைந்தும் வருவதுடன் தமது சொத்துக்களையும் இழந்து வருகின்றார்கள்.
தாங்கள் அரச பொறுப்பை ஏற்ற பின்னரும்கூட இத்தாக்குதல்கள் இன்றுவரை தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது. கடந்த 09.07.1995 ல் நவாலியிலுள்ள தேவாலயமொன்றில் தாக்குதல் நடைபெற்தையும் கடந்த 15.9.1999ல ; புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தாக்குதலையும் நேற்று 20.11.99ல் மடுதேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதலையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு எதுவித தாமதமும் இன்றி நஷ்டஈடு வழங்குவதுடன் உடனடியாக அரச படையின் விமான, பீரங்கி, குண்டுத் தாக்குதல்களையும், ஷெல்த் தாக்குதல்களையும் நிறுத்தப் பணிப்புரை வழங்க வேண்டும் எனவும் மனிதாபிமானத்தின்பேரால் கேட்டுக்கொள்கின்றேன்.
தங்களுண்மையுள்ள
தங்க. முகுந்தன்
Friday, September 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment