அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, September 25, 2008

மறைக்கப்படும் வரலாறுகள் - 1

தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழர் விடுதலைக் கூட்டணியைப்பற்றியும் அதன் தலைவர்களைப்பற்றியும் குறிப்பாக மறைந்த தலைவர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் அளப்பரிய பங்களிப்பையும் தற்போதைய காலகட்டத்தில் சரித்திரத்தை எழுதபவர்களும் சரி பத்திரிகை மற்றும் எழுத்தாளர்களும்சரி வேண்டுமென்று திட்டமிட்டுப் புறக்கணிக்கும் காரணத்தால் அவர் ஆற்றிய பணிகள், எடுத்த முயற்சிகள் என்பவற்றை முழுவதும் என்னால் குறிப்பிட முடியாவிட்டாலும் ஓரளவுக்காவது இன்றைய சமூகம் தெரிய வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடரில் சமர்ப்பிக்க இருக்கின்றேன். காலத்தால் அழிக்கப்பட்ட பேச்சுக்கள் கட்டுரைகள் கொண்ட 3 தொகுப்பு நூல்களை நீண்ட தேடுதல்கள் மேற்கொண்டு பெற முடிந்தது. சிலவற்றைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். இதை ஒவ்வொருநாளும் முடிந்தவரை தட்டெழுத்துப் பண்ணி இடுகையிலிட இருக்கின்றேன்.

1. போராடுவோம் என்ற பாராளுமன்ற உரை.(03.08.1978)
2. தமிழீழத்தின் உதயசூரியன் - கொள்கை விளக்க உரைகளின் தொகுப்பு
3. ஈழத்தமிழர் இன்னல் - 19.08.1983ல் சென்னையில் நிகழ்த்திய உரை

முதலில் இன்றைய தேவைகருதி 2வது குறிப்பில் உள்ள தமிழீழத்தின் உதயசூரியன் என்ற நூலில் வெளியான செய்தியை அப்படியே வரிக்குவரி மாற்றாமல் இருந்ததை இருந்ததுபோலத் தருகின்றேன்.

தமிழ் ஈழத்தின் உதயசூரியன்

தமிழ்ப் பேசும் இனத்தின் இன்றைய நிலை, போராட்ட உணர்வும் வழிவகைகளும், எதிர்காலத் திட்டங்கள், கவலைக்குரிய அம்சங்கள்பற்றி தலைவர் அமிர் ஆற்றிய கொள்கை விளக்க உரைகளின் தொகுப்பு.

இரத்தந் தோய்ந்த வரலாறு!
„…மழையிலே, காலிமுகக் கடற்கரையிலே, பச்சைப் புற்றரையிலே நாம் இருந்தோம். எமக்கு எதிராக முதன் முதலாக இனவெறி கட்டவிழ்ந்து விடப்பட்டது. காடையர்களை ஏவிவிட்டார்கள். 300 பேரளவில் நாம் அங்கிருந்தோம். ஆயிரக்கணக்கில் காடையர்கள் வந்தார்கள். எம்மை நாம் வருத்தி, மழையிலேயிருந்து எம்மை வருத்துவதன்மூலம் ஆட்சியாளரும், பெரும்பான்மையினமும் எங்களுக்கு நீதி, நியாயம் வழங்க வேண்டுமென்பதை அவர்களுக்கு உணர்த்தலாம் என்று நாம் அங்கே காந்திய வழியிலே சத்தியாக்கிரகம் செய்தோம்….நான் இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிடுகிறேனென்றால், இப்பொழுது இங்கு இருப்பவர்கள் எல்லாம் அன்று சின்னப்பிள்ளைகளாக இருந்திருப்பார்கள். ஒருவேளை அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இவ்வாறு நாம் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட நேரத்தில் கட்டவிழ்ந்துவிடப்பட்ட காடையர்கள் எம்மைத் தாக்கினார்கள், என்னுடைய உடைகள் கிழித்தெறியப்பட்டன. யாரோ எறிந்த கல் என்னுடைய மண்டையைப் பிளந்தது, எனக்கு நெற்றியிலும் மேல் தலையிலும் இரு காயங்கள் ஏற்பட்டன. பக்கத்திலிருந்த வவுனியா பிரதிநிதி சுந்தரலிங்கம் அவர்களின் கைக்குட்டையினால் எனது தலையிலுள்ள காயத்தைக் கட்டிக்கொண்டு அந்த இரத்தம் தோய்ந்த உடையோடு நான் பாராளுமன்றத்தினுள் சென்றேன்.“ - தலைவர் அமிர்.

இந்நூல் விற்பனையால் வரும் நிதி, செங்கதிர் பத்திரிகை வளர்ச்சிக்கு உரியது.

ஒரு வார்த்தை.

உலகெங்கம் வாழுகின்ற தமிழ்ப்பேசும் மக்களாலும், விடுதலை விரும்பிகளாலும் ஒடுக்கப்பட்ட இனங்களுக்காய் அயராது உழைக்கின்ற போராளிகளாலும் அறியப்பட்ட தலைவர், ஈழத் தமிழரின் நம்பிக்கை நட்சத்திரமான அமிர்தலிங்கம். மாணவனாயிருக்கையில் உணர்ச்சிமிகு பேரார்வத்தோடு அரசியலை நோக்கி, பல்கலைக்கழகத்தில் பயில்கையிலே பங்காளனாய் வளர்ந்த, பல்கலைக்கழகப் படிக்கட்டிலிருந்து எடுத்த காலினை அரசியல் இயக்கத்திலே வைத்து தொண்டனாய் கொள்கையாளனாய் தலைவனாய் மலர்ந்தவர் அமிர். தன் உழைப்பை மட்டுமல்ல, குடும்பத்தையே அரசியல் விடுதலைப் போராட்டத்துக்கு அவர் ஒப்புக் கொடுத்தவர். கல்லடியும் பொல்லடியும் பட்டு செந்நீரால் இயக்கத்தை வளர்த்து இன்றுவரை கட்டிக்காத்து வருபவர் அமிர். தொண்டனாயிருக்கையிலும், நாடாளுமன்ற உறுப்பினனானபோதும், எதிர்க்கட்சித் தலைவனானவேளையும் துப்பாக்கிகளாலும், சிறைச்சாலையாலும், குண்டாந்தடிகளாலும் அச்சுறுத்தப்பட்டபோது புன்னகையோடு இவையெல்லாம் இனவிடுதலைக்கான பரிசுகளே என ஏற்றுக்கொண்ட கொள்கைக் கோமான் எங்கள் தலைவர், தமிழ் ஈழத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது அவரது இலட்சிய வாழ்வு. தன்னுடைய இலட்சியத்தினை அவர் எந்த நெருக்கடியிலும் தளரவிட்டதில்லை. அவரைத் தாக்கவென குண்டர்கள் படையாய் வந்திருக்கின்றனர். நாகரிகமே இல்லாமல் பாராளுமன்றத்தில் அவரைக் கொலைசெய்ய வேண்டும், கழுவேற்ற வேண்டும் என்றெல்லாம் ஆக்ரோஷத்துடன் பேசப்பட்டிருக்கின்றது. இந்த ஆவேச முயற்சிகளெல்லாம் எதற்காக? இவர் தமிழின விடுதலைக்காக உழக்கின்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே!
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தானைத் தளபதியாக தந்தை செல்வா இவரை இனங்கண்டு பொறுப்பளித்தார். அந்த மகோன்னதமான பொறுப்பினை இம்மியும் வழுவாது முன்னெடுத்துச் செல்லும் தலைவரின் சில கருத்துரைகள், காலத்தின் தேவைகருதி இந்நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வேளையில் இதன் பின்னணிபற்றி சிறிது சொல்லவேண்டும்.
தமிழ் ஈழக் கொள்கை வலுவடைந்துவரும் இந்நாளில், அதில் ஆதாயம் தேடவென ஒரு குழுவினர், கோணங்கி நியாயங்களோடு புறப்பட்டுக் குட்டை குழப்பிவருகின்றனர். தென்னம்பிள்ளை காய்க்கும்வரை காத்திருந்தவர்கள், தந்தை செல்வாவைக் காற்சட்டைக் காந்தி என எழுதி மகிழ்ந்த தற்குறிகள்: நிமிஷத்திற்கு ஒன்றாய் எழுதுகிற அரசியல் முட்டாள்கள்: இரண்டு மேடைகளில் ஏறிவிட்டு தலைவரெனத் தம்மை நினைத்துக் கொள்ளுகின்ற வெம்பற் பிஞ்சுகள்: இவர்களின் சுயரூபத்தைத் தமிழ் மக்கள் இன்று இனங்கண்டு வருகின்றனர். இவர்களை - இவர்களின் தவறான வழிமார்க்கங்களை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டியது ஒரு அரசியல் தலைவனின் முக்கிய கடமை. இந்தக் கடமையில் தலைவர் ஈடுபட்டுச் சிந்திய முத்துக்களையே நீங்கள் கையில் வைத்திருக்கின்றீர்கள்.
இன வெறியர்கள் எத்தகைய ஆயுதங்களை அமிருக்கு எதிராகக் கையாண்டார்களோ, அதே ஆயுதத்தையே இந்தச் சிறு குழுவினர் வேறு உருவங்களில் கையாண்டு வருகின்றனர். இந்த ஒற்றுமையை மிக அவதானமாகத் தமிழ்ப் பேசும்மக்கள் ஆழமாகக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இனவாதத்தையே பிறவிக் குணமாகக்கொண்ட லேக்கவுஸ் பத்திரிகைகள், குணசேனாக் கம்பெனியாரின் இதழ்கள், இவற்றின் கடைசிச் சகோதரனான உபாலி நிறுவன வெளியீடுகள் என்பனவற்றில் அமிருக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் எதிராக எழுதப்படுகின்ற விஷமப் பிரச்சாரங்களின் அரைகுறை மொழிபெயர்ப்பு இதழாக ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க இதழினை மாற்றியிருக்கிறது இந்தக் கும்பல். இந்தத் தன்மையே இவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்தவில்லையா? இதனால்தான் எரியூட்டிலிருந்து இவர்கள் தப்பிக்கொண்டனரா? இந்தச் சீர்குலைவுவாதிகள் இன்னும் எத்தனை நாள் வேஷம் கலையாமலிருக்க முடியும்?
ஒருவர் சொல்கிறார் - பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்போம் என்று. தலைவர் தர்மலிங்கமோ அப்படி ஒருவரும் சொல்லவில்லை. கட்டாயம் தேர்தலுக்கு நிற்போம் என்கிறார். இவர்களின் நோக்கம் தான் என்ன? நிச்சயமாகப் பாராளுமன்றக் கதிரைகள் தான். இதை நாளடைவிலே நாங்கள் கண்டு சிரிக்கப் போகின்றோம்.
துள்ளி வருகுது வேல் பகையே சுற்றி நில்லாதே போ என்றான் பாரதி. கொள்கையென்ற வேல், குழப்பங்களை மாய்க்கும். இந்தத் தொகுப்பு – அமிரின் கொள்கை விளக்கும் உரைகள். கூர்நெடுவேலாகி தமிழர் பகையை மாய்க்கும் என்பது உறுதி.
- தொகுப்பாளர்.


கொள்கை விளக்கம்

தேர்தல் பகிஷ்கரிப்பால்
உரிமைகள் கிடைக்குமா?


தம்பிமார்கள் சிலர் தேர்தல் வருகிறது: வருகிறார்கள் என்ற துண்டுப் பிரசுரங்களை இங்கு விநியோகித்தார்கள் என அறிந்தேன். தேர்தல் எப்போது வரும், வராது என்று தம்பிமார்களுக்குத் தெரியாது. இப்படித்தான் நாம் கிராம யாத்திரை மேற்கொண்டபோது மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலுக்கு வருகிறார்கள் எனக் கூறினார்கள்.
சுற்றிச் சுற்றித் தேர்தல் வரும் அதற்காக நாம் மக்கள் மத்தியில் செல்லாமல் இருக்க முடியுமா?
தேர்தலைப் பகிஷ்கரித்தால் உரிமைகள் கிடைத்துவிடுமென தம்பிமார்கள் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். சுற்றிச் சுற்றிச் சுப்பற்றை கொல்லை என யாழ்ப்பாணத்தை மட்டும் பார்க்கக் கூடாது. கிழக்கு மாகாண தமிழ்மக்களின் நிலையை எண்ணிப் பார்க்கவேண்டும். ஏன் அங்கு செல்வான். அருகிலுள்ள மன்னார் வவுனியா முல்லைத்தீவு நிலைமையைப் பார்க்க வேண்டும்.
தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கூடாதென்பதற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டம் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
கந்தளாய்க் குளத்தில் தமிழர்களான புராதன விவசாயிகள் தண்ணீர் பெற்று வந்தனர். 1953இல் 35 ஆயிரம் ஏக்கர்களுக்கு மட்டும் புராதன விவசாயிகளுக்குத் தண்ணீர் வழங்கவதென்றும் மிகுதித் தண்ணீர் குடியேற்ற வாசிகளுக்கு வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. கடைசியாக குடியேற்ற வாசிகள் தண்ணீர்பெற முன்னுரிமை அளிக்குமுகமாக புராதன விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக தமிழ் விவசாயிகள் திருமலை எம்.பியிடம் புகார் செய்ய, நான் ஜனாதிபதியுடன் தொடர்பு கொள்ள, ஜனாதிபதி காணி அமைச்சருக்கு அறிவித்து தீர்வுகாணும்படி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.
ஜனாதிபதியின் கண்டிப்பான உத்தரவினால் காணியமைச்சர் இவ்விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த தனது காரில் எனது வீட்டிற்கே வந்துவிட்டார். உடன் மாநாடு கூட்டப்பட்டு இப்போது கந்தளாய்ப் பகுதியில் உள்ள புராதன குடியேற்ற விவசாயிகள் அனைவருக்கும் சமமான முறையில் தண்ணீர் வழங்க முடிவாகியுள்ளது. இதேபோலத்தான் தமிழ்மக்களுக்கென எம்பிக்கள் இல்லாவிட்டால் என்ன நடக்கும்?
தமிழ்மக்கள் என்றும் எப்போதும் சாதி, சமயமின்றி ஒன்றுபட்டு ஒரு இலட்சியத்தில் நின்று சோஷலிஸ சமதர்ம சமுதாயம் அமைக்கப் பாடுபடவேண்டும். ஒற்றுமைதான் கூட்டணி அரசியலில் ஒரு பெரும் சக்தியாகவும், வெளிநாடுகளில் மதிப்புள்ள இயக்கமாகவும் இருக்கக் காரணமாகும். இந்த ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும்.
பொதுத் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். அப்படி இவர்கள் சொல்வதுபோலக் கேட்டால், யாழ் மாவட்டத்துக்கு வெளியேயுள்ள சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் கணிசமாக வாழும் ஏழு தமிழ் மாவட்டங்களின் நிலை என்னாகும்? அந்தத் தமிழர்களின் நலனை சுதந்திரக் கட்சியும் ஐ.தே.க.வும் கவனிக்கட்டும் என்று விட்டுவிடுவதா? இதனையா ஈழ விடுதலை அணியென்று தங்களை அழைத்தக் கொள்ளும் கோவை மகேசனும், ஈழவேந்தனும், டாக்டர் தர்மலிங்கமும் விரும்புகிறார்கள்?
எமது இலட்சியம் தமிழீழமே. அதனை அடைவதற்கு எம்மிடமுள்ள ஒரே பலம் ஒற்றுமையே. இதை அறியாதவர்கள்பற்றிச் சில விஷயங்களைக் கூறவேண்டிய கட்டம் இன்று தோன்றியுள்ளது. எனவே இங்கு கூறிவைக்கிறேன்.
ஈழவேந்தன் என்ற விடுதலை வீரர் யார் தெரியுமா? தந்தை செல்வாவைப் பிரிந்து சுயாட்சிக் கழகம் நிறுவிய வி.நவரெத்தினம் என்பவரின் கட்சியில் 1966இல் சேர்ந்தவர்தான் இவர்.
இந்தக் கழகத்தில் சேர்ந்துகொண்டு தந்தை செல்வாவை காற்சட்டைக் காந்தி என்று கூறிவந்தவரும் இவர்தான். இப்படிக் கூறியதோடு அவர் நின்றுவிடவில்லை. சுயாட்சிக் கழகத்தின் பத்திரிகையான விடுதலையை விற்றும் வந்தவர்.
பின்னர் 1969ல் எம்முடன் சேர்ந்து உழைத்தார். எம்முடன் சேர்ந்தவர் தலைமைப் பீடத்திற்கு மாறாகச் செயற்பட்டார். இதனால் அவர் nளியேற்றப்பட்டார். இதனைப் பொறுக்க மாட்டாமல்த்தான் இப்பொழுது என்னைத் திட்டிவருகிறார்.
மத்திய வங்கியில் இவர் கடமையாற்றியவந்த காலத்தில், அகலமாபாத்தில் நடைபெற்ற இந்து மாநாட்டுக்குச் சென்றார். அங்கிருந்து திரும்பி வந்தபொழுது இவருக்கு எதிராக வங்கி குற்றம் சுமத்தியது. இதனால் இவரின் வேலைக்கே ஆபத்து நெருங்கிக் கொண்டது. அப்பொழுது என்னிடம் வந்து வேலை பறிபோனால் பென்ஷன் இல்லாமல் போய்விடும். எனவே நிதிமந்திரியுடன் பேசி பென்ஷனை எடுத்துத் தர உதவுங்கள் என்று என்னைக் கேட்டவர். நானும் நிதிமந்திரியுடன் இவர் பற்றிப் பேசி பென்ஷன் கிடைக்க வழி செய்தேன்.
தனது சொந்தப் பிரச்சனை தொடர்பாக அரசாங்க மந்திரியுடன் பேசச்சொன்ன இவர்தான் இன்று தமிழ்மக்களின் பிரச்சனை தொடர்பாக நாங்கள் அரசுடன் பேசுவதா? இது துரோகம் ஆகாதா? என்று திட்டித் தீர்க்கிறார். சொந்தத் தேவையைப்பற்றிப் பேசலாம். தமிழ் மக்களின் பிரச்சனைபற்றித்தான் பேசக் கூடாது. எப்படி நியாயம் கற்பிக்கிறார்கள் கேளுங்கள்.
சுதந்திரன் பத்திரிகையில் என்னால் சேர்க்கப்பட்டவர்தான் இந்தக் கோவை மகேசன். இன்று ஆசிரியராக இருந்துகொண்டு, தந்தை செல்வா வளர்த்த இயக்கத்தையே திட்டித் தீர்க்கிறார். காக்கை திட்டி மாடு சாவதில்லை. எனவே, அவர் நன்றாகத் திட்டட்டும். ஆனாலும் அவர் நினைப்பது ஒருபோதும் நடக்கப்போவதில்லை.
இந்தச்சமயத்தில் எனக்கு மற்றொரு விஷயமும் ஞாபகத்திற்கு வருகிறது.
தேர்தல் தொகுதியொன்றை ஈழவேந்தனுக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்தால் ஒன்றும் நடந்திருக்காது என்று பின்னர் ஒருதடவை சொன்னவரும் இவர்தான். எனவே, மக்கள் இத்தகைய சந்தர்ப்பவாதிகள்பற்றி உஷாராக இருக்கவேண்டும்.
டாக்டர் தர்மலிங்கம் அவர்கள் வைத்திய சேவையிலிருந்து 1960ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அப்பொழுது தந்தை செல்வா அவர்கள் டாக்டர் தர்மலிங்கத்திடம் சென்று ஓய்வுபெற்றுவிட்டீர்களே: இனி எங்கள் இயக்கத்தில் சேர்ந்து உழைக்க வாருங்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர் இப்பொழுதுதான் தென்னங்கன்றுகளை நாட்டியுள்ளேன். அவை இன்னும் காய்க்கவில்லை. அவை காய்க்கத் தொடங்கியவுடன் இயக்கத்திற்குள் வந்துவிடுவேன் என்றார்.
இப்பொழுதுதான் அவர் காய்பறிக்கத் தொடங்கியிருக்கின்றார். நன்றாகப் பறிக்கட்டும்.
தேர்தலைப் பகிஷ்கரியுங்கள் என்று ஒருபுறம் கூறுகிறார்கள். ஆனால் அதேவேளை கடந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கெதிராக விழுந்த வாக்குகள் எத்தனை என்பதை காவலூரிலுள்ள ஒரு அரசியல்வாதியின் வீட்டுக்குள் இருந்து இரகசியமாகக் கணக்கெடுக்கிறார்கள். ஏன் இந்தக் கணக்கெடுப்பு? பொதுமக்கள்தான் கொஞ்சம் விழிப்பாக இருக்கவேண்டும்.
யாழ் மாவட்ட நிலைவேறு: யாழ் மாவட்டத்திற்கு வெளியேயுள்ள தமிழ் மாவட்டங்களின் நிலை வேறு. இவர்கள் கூறுவதுபோல் தேர்தலைப் பகிகரித்தமால் பிறமாவட்டங்களில் வாழும் தமிழர்கள் நலனைப் பாதுகாப்பது யார்? ஐ.தே.க. வா? சு.க. வா? இதனையெல்லாம் அறியாமல் பேசுபவர்கள் பற்றித் தம்பிமாரும் கொஞ்சம் விழிப்பாக இருக்கவேண்டும்.

(மீதி பின் தொடரும்)

No comments: