அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, September 26, 2008

மறைக்கப்படும் வரலாறுகள் - 2

சிந்தனை வாதமா? சீர்குலைவு வாதமா?

கோட்டே ஸ்ரீ ஜயவர்த்தனபுர பாராளுமன்றத் திறப்புவிழாவன்று ஹர்த்தால் நடத்தப் போவதாக தமிழீழ விடுதலை அணியினர் கூறுவது ஹர்த்தால் என்ற புனித அனுட்டானத்துக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும். இதற்கு முன்னர் இந்நாட்டில் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்ட சந்தர்ப்பங்களை நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும். கொழும்பில் நடந்த பாராளுமன்றக் கூட்டம் கோட்டேயில் நடந்தால் என்ன? கொழும்பில் நடக்கும்போது ஆதரித்துவிட்டு கோட்டேயில் இடம்பெறும்போது பகிஷ்கரிப்பது கேலிக் கூத்தாகும்.
தந்தை செல்வாவின் நினைவுதினமாகிய இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாம் இங்கு கூடியிருக்கும் இவ்வேளையில், எமக்கு மறுமுனையில் போட்டிக் கூட்டமொன்று நடைபெறுகிறது. தான் தோன்றித்தனமாக எதையும் செய்வது தன்னையே அழித்துவிடும் என்று தந்தை செல்வா அடிக்கடி கூறுவார். அன்று தந்தையை ஏசியவர்களே இன்று அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளனர். பிற்பகல் 3 மணிக்கே பிரார்த்தனையுடன் கூட்டத்தை ஆரம்பித்து 5.30மணிக்கு கூட்டத்தை முடிப்பதாக அறிவித்தார்கள். ஆனால் அறிவிப்பையும் மீறி 6 மணிக்குமேல் கூட்டத்தை நடத்துகிறார்கள்.
தந்தை செல்வா அன்று அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை வன்மையாக எதிர்த்துக் கண்டித்தவர் அமரர் கதிரவேற்பிள்ளை. பேச்சுவார்த்தை காரணமாக அவர் விரக்தியடைந்த போதிலும் கட்சிக் கட்டுக்கோப்பை மீறாமல் ஒழுக்கத்துடன் நடந்துகொண்டார். அத்தகைய உதாரண புருஷரின் பெயரை எதிர்த்தரப்பினர் எவ்வாறு உச்சரிக்கமுடியும்?
மாவட்ட அபிவிருத்திச் சபை அமைப்பை அமரர் கதிரவேற்பிள்ளை எதிர்த்தார் என்று இப்போது பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். மாவட்டசபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது இந்தியாவில் திருவாங்கூரில் இருந்த அமரர் கதிரவேற்பிள்ளை இங்குவந்து சட்டமூலத்தை ஆதரித்தப் பேசினார்.
ஈழமாணவர் மன்றம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டள்ளது. இங்குள்ள தம்பிமாரை நான் குறைசொல்ல முடியாது.
ஏனென்றால் லண்டனிலிருந்து இடப்படும் கட்டளையை இவர்கள் நிறைவேற்றுகிறார்கள். தமிழீழம் அமைப்பதற்கு இது வழியல்ல. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த வைகுந்தவாசன் இப்போது தமிழீழத்தில் அக்கறைகொண்டு குறுக்குவழியல் விளம்பரம் தேடப் பார்க்கிறார்.
வங்கதேசத்தில் சுதந்திரப் பிரகடனஞ் செய்யப்பட்டபோது மக்கள் பாகிஸ்தானியக் கடவுச் சீட்டுக்களைக் கிழித்தெறிந்தனர். ஆனால் இங்கு சுதந்திர தமிழீழத்தைப் பிரகடனம் செய்யும் எமது வாலிபர்கள் ஸ்ரீ லங்கா கடவுச்சீட்டையே பாவிக்கிறார்கள்.

தந்தை செல்வா தந்த பாதை

அரசாங்கத்துடன் நாம் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக ஒரு சிலர் திட்டமிட்டு தவறான பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். எவருடனும் நாங்கள் ஒப்பந்தம் செய்யவுமில்லை. செய்யப்போவதுமில்லை. நமது நிலப்பரப்பையும் உயிர் உடமைகளையும் பாதுகாப்பதுடன் மாவட்ட சபைகளுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். அதில் வெற்றியும் கண்டு வருகிறோம்.
தமிழ் ஈழத்தைப் பற்றி அரசாங்கத்துடன் நாங்கள் பேசவில்லை. அதைப்பற்றி பல மாதங்களுக்குப் பின்போடவுமில்லை. வாய்ப்பேச்சில் சுதந்திரம் பாதுகாக்க முடியாது. நமது பலத்தையும் எதிரிகளுடைய பலத்தையும் நிதானமாக உணர்ந்து தமிழ் ஈழ இலட்சியத்தை ஏற்படுத்த வேண்டும். எமது சமுதாயம் விடுதலை பெற தமிழ் தேசிய இனத்தை அமைக்க வேண்டும்.
அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அமைதியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது சகல அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற்று வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது போன்ற நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டள்ளோம்.
தந்தை செல்வநாயகம்: ஜீ.ஜீ. பொன்னம்பலம்: திருச்செல்வம் ஆகியோர் விட்டுச்சென்ற பொறுப்புகளை நாம் ஏற்று அவற்றை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் மனதில் வேரூன்றிய இலட்சியங்களை நாம் தட்டிக்கழிக்கவில்லை. தந்தை விரும்பிய நிலத்தை பாதுகாக்க முயற்சி எடுத்து வருகின்றோம்.
தந்தை செல்வா மாறிமாறி ஆட்சிக்குவந்த இரு அரசாங்கங்களுடனும் பலதடவை பேச்சுவார்த்தை நடத்தினார். உண்மையான சத்தியாக்கிரகிகளுக்குப் பேச்சுவார்த்தையில்தான் நம்பிக்கையுண்டு. அதன்படிதான் இறப்பதற்கு முன்பும் அவர் சிறிமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
திட்டவட்டமான கொள்கையுடன் தந்தை வாழ்ந்து வந்தார். தமிழினம் சுதந்திரமாக வாழ்வதற்கு தாயகம் வேண்டும் என்று சிந்தித்தார். இவற்றை உணர்ந்து அன்று பிரதேச சபையை நிறுவ ஒப்பந்தம் செய்தார். இதற்காக 1960 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து ஐ.தே.க. அரசாங்கத்தை வீழ்த்தினார். 1965ல் ஐ.தே.கட்சி அரசாங்கத்துடன் சேர்ந்து மாவட்ட சபையை அமைக்க முற்பட்டார். நமது பகுதியை முன்னேற்றும் நோக்குடன்தான் அன்று திருச்செல்வத்தை உள்ளுராட்சி அமைச்சராக்கினார்.
1947ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் காங்கிரஸ் வரவேற்பில் தமிழினம் உரிமையுடன் வாழ எமது பிரதேசத்தை ஆளுகின்ற இணைப்பாட்சி வேண்டும் என்று திட்டவட்டமாக எடுத்துக் கூறினார். மக்களுடைய சகல உரிமைப் பிரச்சனைகளிலும் முன்னின்று தந்தை உழைத்துவந்தார்.
தந்தைபற்றி நிறிதேனும் சிந்திக்காதவர்கள் இப்போ தந்தைபற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். தமிழ் மக்களின் எதிர்காலத்தை உணர்ந்த தந்தை 25 வருடங்களாக படிஏறாத திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் வாசஸ்தலத்திற்குச் சென்றார்.

மீதி பின் தொடரும்

No comments: