அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 2, 2008

யாழ் பொது சன நூல் நிலையம் தொடர்பானவை - 2

13.02.2003.

தமிழ் மக்கள் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் சரி இலங்கை முழுவதும் சரி உலகத்தின் எப்பாகத்திலும் சரி யாழ்ப்பாணப் பொதுசன நூல்நிலையம் எரிக்கப்பட்டதை மறந்திருக்க மாட்டார்கள். அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களின் பின்னணியில் காவல் புரிகின்ற பொலிசாரினால் 01.06.1981ல் அந்தக் கோரமான சம்பவம் நடைபெற்றது. ஆனால் அழிக்கப்பட்ட அந்த நூல் நிலையம் பொதுமக்கள் குறிப்பாக யாழ்ப்பாண அறிவு வளர்க்கும் பெருநோக்குடையவர்களுக்காக மீள நிர்மாணம் செய்யப்பட்டு நூலகத்தின் பிற்பகுதி கோலாகலமாக அன்றைய விசேட ஆணையாளர் தலைமையில் 3 வருடங்கள் 3 நாட்களின் பின் 4.6.1984ல் திறந்துவைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் வாசிகசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நூல்நிலையம் பாரிய வளர்ச்சி கண்டிருந்தது. நகர முதல்வராக இருந்த சாம். சபாபதி அவர்களினால் இருமாடிக்கட்டிடம் அமைக்கப்பட வண.பிதா.லோங் அடிகளின் ஆசீர்வாதத்துடன் அத்திவாரமிடப்பட்ட இந்நூலகம் பூர்த்தியாக்கப்படாத நிலையிலே மக்கள் தேவையறிந்து 1959ம் ஆண்டு பிற்பகுதியில் அன்றைய முதல்வர் அல்பிரட் துரையப்பா அவர்களால் குடிபுகப்பெற்று நூலகம் படிப்படியாக பூரணப்படுத்தப் பட்டது. இது வரலாறு.

ஆழ்ந்து நோக்கும் அறிவுத்திறன் கொண்டவர்கள் இன்று எமது சமூகத்தில் இல்லை என்று விமர்சிக்கும் அளவுக்கு 14.02.2003 நாளை நடைபெறவிருந்த நூலகத் திறப்பு விழா திட்டமிட்டு மக்களின் பெயரால் ஒரு சில அமைப்புக்களினால் நிறுத்தப்பட்டள்ளது. இது வரலாற்றில் ஒரு கறைபடிந்த நிகழ்வாக அமையும். யாழ்ப்பாணத்தமிழன் ஒரு காலத்தில் எவரையும் மிஞ்சி நிற்கும் அளவிற்கு அறிவில் உயர்ந்திருந்தான். ஆனால் கடந்த சில ஆண்டுகள் எமது கல்வியின் தரம் எப்படியிருந்தது என்பது சான்றோருக்குத்தான் தெரியும். நூல் நிலையத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒருபோதும் அது திறக்கப்படுவதை எதிர்க்கமாட்டார்கள். படிக்காத பண்பாடு தெரியாத அறிவில்லாத கூட்டம் ஒன்று இதைச் செய்தது. நூல் நிலையத்தை திறக்கக் கூடாது என்பதில் கங்கணம் கட்டிய வரலாறு என்றும் எமது வாழ்வில் மாறாத வடுவாகவே அமையும்.

தமிழாராய்ச்சி மாநாடு போன்ற சம்பவம் நிகழும் என்றும் ஹர்த்தால் பூரண மறியல் போராட்டம் என்றெல்லாம் எழுதிய குடாநாட்டுத் தமிழ்ப் பத்திரிகைகள் - பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடித்திருந்தால் இந்நிகழ்வை மாற்றியமைத்திருக்க முடியும். ஏம்மால் மாநகர சபை உறுப்பினர்களால் கூறப்பட்ட உண்மையான ஆதாரமான கருத்துக்களை சொற்பிழை தவறாது வரிக்குவரி எழுதியிருந்தால் நிலைமை வேறாயிருக்கும்.


பாதுகாக்கப்பட வேண்டிய நல்லூர் சங்கிலியன் தோப்பு மந்திரிமனை யமுனாரியைப் பற்றிப் பல கருத்தக்கள் முன்வைக்கப்பட்டபோதும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரின் நிதி ஒதுக்கீட்டில் இன்று மந்திரிமனை மாத்திரம் மீள பாதுகாக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன.


தாவீது அடிகளின் உருவப்படம் வைக்கப்பட வேண்டும் எரிந்த நிலையில் இருந்த பழைய நூலகத்தின் மாதிரியை நினைவாக வைக்க வேண்டும் என்று பல தீர்மானங்கள் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்த பின்னர் எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை அங்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பத்திரிகைகளுக்கு தகவல் கொடுப்பவர்கள் முதலில் தமது கருத்துக்களை நூலகருக்கோ அல்லது ஆணையாளருக்கோ அல்லத முதல்வர் மற்றும் உறுப்பினர்களுக்கோ தெரிவித்திருக்கலாம். மேலும் பல மாதங்களுக்கு முன்பாகவே செய்தித் தாள்களில் வெளிவந்த நூலகத் திறப்பு விழா சம்பந்தமான செய்திகளுக்கு இன்று நேரில் வந்த அனைவரும் முன்னரே வந்திருந்தால் இவ்வளவு விரிசல்களையும் நீக்கி இருக்கலாம். காலம் கடந்த விட்டது. கடவுள் விட்ட வழி. இந்தக் காரணங்களில் நாம் கர்த்தர்களாகக் கூடாது என்பதற்காக எமது மாநகரசபை உறுப்பினர்கள் என்ற மக்கள் அளித்த பதவிகளிலிருந்து விலகிக் கொள்கின்றோம்.

நீதி நிலைக்கட்டும்.


தங்க. முகுந்தன்.

No comments: