வழமைபோல அதிகாலை 4.30மணிக்கு கைக்கடிகாரத்தில் நேரம் என்னை எழுப்ப காலைக்கடன்களை முடித்துக்கொண்டு 5.48க்கு சரியாக வரும் 21ஆம் இலக்கப் பேரூந்தில் சென்று 6.11க்குவரும் புகையிரதத்தில் போய் 6.28க்கு வரும் அடுத்த 2ஆம் இலக்கப் பேரூந்தில் சென்று 6.34க்கு நான் இறங்க வேண்டிய தரிப்பில் இறங்கி பின் 10 – 12 நிமிடங்கள் நடையில் சென்றால்தான் என்னுடைய வேலைத்தளம்.
இன்று திங்கட்கிழமை வழமைபோல் காலை 7.00 மணியிலிருந்து 11.45 வரை இந் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றான ஜேர்மன் மொழி (டொச்) போதிக்கப்படும். அதன்பிறகு 12.30 தொடக்கம் 4.15 வரை வேலை. இன்று புதிதாக இந்நாட்டின் அரசியல் பூகோள விபரங்களைப் பற்றிப் படிப்பு. இதில் எமக்கு ஒரு பயிற்சிப்படிவம் தரப்பட்டது.
அதில் முதற்பகுதி சுவிற்சர்லாந்தைப்பற்றியது. விடைகளும் அங்கே தரப்பட்டிருக்கும் - எமக்கு மொழிப் பிரச்சனை என்பதால் சிலவேளைகளில் பிழை ஏற்படுவதுண்டு.
இரண்டாவது பகுதி அவரவர் நாட்டைப்பற்றியது. இதில்தான் சுவாரஸ்யம்! எமது வகுப்பில் மொத்தம் 10 நபர்கள் இதில் இன்று வருகை தந்தோர் 8பேர். இதில் நாங்கள் இருவர். எரித்திரியா - 3. போர்த்துக்கல் - 1. ரஷ்யா - 1. குர்தீஷ் - 1. இன்றைய வகுப்பில் முதல் நாமாக தரப்பட்ட வினாத்தாளைச் செய்யவேண்டும். பின்னர் எல்லோரும் சேர்ந்து கருத்தப்பரிமாறி விடைகளை ஒரு ஒழுங்கு முறையில் சொல்வது வழக்கம். முதற்பகுதி முடிந்து இரண்டாவது பகுதி ஆரம்பத்தில் முதலில் எடுத்தக்கொள்ளப்பட்ட நாடு இலங்கை. காரணம் நானும் மற்றவர் 63 வயதுடையவர்( 20வருடங்களுக்கு முன் இங்கு வந்தவர்). இன்றைக்கு நாங்கள் இருவரும் வழமையாக - ப வடிவில் வகுப்பு இருப்பதால் - நாமிருவரும் இரு பக்கத்திலும் முதல் நபர்களாக இருந்தோம். எனவே வலப்பக்கத்தால் தொடங்கினாலும்சரி - இடப்பக்கத்தில் தொடங்கினாலும்சரி இலங்கைதான் வரவேண்டும். முதற்கேள்வி – நாட்டின் பெயர். இரண்டாவது - தலைநகரம் - இதில்தான் நாமிருவரும் மாறுபட்டுப் பெயர்களைக் குறிப்பிட்டோம்! இதிலிருந்து தொடங்கியது பிரச்சனை! வயதில் பெரியவர் என்பதற்காக அவரே சொன்னார் கொழும்பு என்று! பிறகு நான் சொன்னேன் - இல்லை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை என்று – எமது ஆசிரியரும் (அவர் சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் - ஒரு பெண்மணி) இலங்கையின் தலைநகரம் கொழும்புதான் என்றார். நான் விடுவேனா - தொடங்கினேன். 1948இல் சுதந்திரமடைந்தபோதிருந்து இன்றுவரை தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு அரசும் ஏதாவது மாற்றங்களைக் கொண்டுவந்தபடியே இருக்கும். எமது நாட்டில் எல்லாமே மாற்றப்பட்டுக்கொண்டு வருகிறது. தற்போது எமது நாட்டின் தலைநகரமென அரசு அறிவித்திருப்பது கோட்டே எனப்படும் ஸ்ரீ ஜெயவர்தனபுரவைத்தான் என்று மீண்டும் சொன்னேன். அப்போது பழசுகள் என்று எம்மால் சொல்லப்படும் அவரும் உனக்கு ஒன்றும் தெரியாது – நான் சொல்வதுதான் சரி என்றார். நான் உடனேயே ஐயா! நான் வந்து 2வருடங்களும் 2 மாதமும் தான். ஒரு அரசியல் கட்சியில் இருந்தவன் - ஒரு மாநகரசபை அங்கத்தவனாக இருந்த எனக்கு இலங்கையைப்பற்றி உங்களைவிடத் தெரியும் என்று சொல்லி உடனேயே அருகிலிருந்த கணனியில் நான் வழமையாகத் தேடலில் உபயோகிக்கும் விக்கிபெடியாவிலிருந்து தமிழ், ஆங்கிலம், டொச் ஆகிய 3 மொழிகளிலும் எமது நாட்டின் விபரமடங்கிய முதற்பக்கத்தை எடுத்து நேரடியாகவே வகுப்பில் சமர்ப்பித்தேன்! இதில் சுவாரஸ்யமும் - ஆச்சரியமும் என்னவென்றால் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியாக இருக்கும் விடயம் - டொச் மொழியில் மாறி இருப்பதே! இதற்கு மீண்டும் ஒரு தடவை அரச கரும மொழி ஆணைக்குழுவுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டியிருக்கிறது?
ஒரு பேச்சுக்கு உங்களிடம் ஒரு புதிராக இந்த வினாவையே வைக்கிறேன். இலங்கையின் தலைநகரம் எது? கொழும்பு கோட்டை என்பதா? ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே என்பதா?
ஆதாரத்துக்கு விக்கிபேடியாவின் பதிவையும் இணைக்கிறேன்.
ஆங்கிலத்தில்
Capital - "Sri Jayawardenapura-Kotte"
Largest city - "Colombo"
Official language - "Sinhala" , "Tamil"
Language for inter-ethniccommunication - English
Ethnic group (2001) 73.8% - "Sinhalese" 13.9% "Sri Lankan Tamil people"
7.2% "Sri Lankan Moors" 4.6% "Indian Tamils of Sri Lanka" 0.5% Others
தமிழில்
தலைநகரம் - ஸ்ரீ ஜயவர்த்தனபுரம்
பெரிய நகரம் - கொழும்பு
ஆட்சி மொழி(கள்) - சிங்களம், தமிழ்
மக்கள்தொகை 2005 - மதிப்பீடு 20,743,000
2001 குடிமதிப்பு - 18,732,255
ஜேர்மன் மொழியில் (டொச் - Deutsch)
Amtssprache - Sinhala, Tamil
Hauptstadt - Colombo
Regierungssitz - Sri Jayawardenepura
Einwohnerzahl - 20.222.240 ( Stand: Juli 2006)
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு
Official language - Sinhala, Tamil
Capital - Colombo
Government Headquarters - Sri jeyawardanapura
Population 20,222,240 (56th - Last update: July 2006)
(இப்பதிவிடும்போது நேரம் 11.45 இரவு - இலங்கை நேரப்படி 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் சேர்க்கப்ட்டால் 7ஆந்திகதிப் பதிவாக வெளிவரும்)
Tuesday, July 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment