அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, July 9, 2009

மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற புனிதக் கொள்கைகள் கொண்ட மாமேதைகள் - 2.

கடந்த செப்டெம்பர் 10இல் எழுதிய முதல் கட்டுரைக்கு மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்போது தொடரவேண்டிய அவசியம் எதிர்வரும் யாழ். மாநகர சபைத் தேர்தலே!

எழுதி வைக்கப்பட்டிருந்த இந்தக் கட்டுரை ஏனோ என்னால் பதிவிலிடப்படவில்லை. மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்துவந்த வேதனைகளும் சோதனைகளும் என்னை எமது தலைவர்களை மீள நினைத்துப்பார்க்க விடவில்லை. அவசியம் கருதி இக்கட்டுரை இப்போது வெளியிடப்படுகிறது.

திருமதி. சரோஜினி யோகேஸ்வரனின் மரணச் சடங்குக்கு வருகைதந்தோர் மற்றும் நிகழ்வுகள் Tamilnet.com இல் செய்திகளாக இருக்கின்றன.

பொன் சிவபாலன் அவர்கள் 9ஆந்திகதி யாழ் சென்றார். நானும் இன்னுமொரு மாநகர சபை உறுப்பினருமான கணேந்திரனும் சிவசிதம்பரம் ஐயாவைக் கூட்டிக்கொண்டு இந்தியா போனது 10ஆந்திகதி. 11ஆந்திகதி மதியம் முதல்வரும் மாநகர சபை ஊழியர்களும் அரச படையதிகாரிகளும் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடனேயே கணேந்திரன் திரும்பிவிட்டார். நான் அன்று திருச்சிக்குப் போனதால் உடன் திரும்ப முடியவில்லை. மேலும் சிவாஐயாவுக்கு சிவபாலனின் கொலை தொடர்பான செய்தியைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறியிருந்தும் நான் திருச்சியிலிருந்தபோதே உலகத் தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் இரா. ஜனார்த்தனன் அவர்கள் வந்து செய்தியைத் தெரிவித்ததைத் தொடர்ந்து சுகவீனமுற்ற அவரை மலர் மருத்துவமனையில் அனுமதித்ததால் திருச்சியிலிருந்து திரும்பிவந்து அவரை 2 வார காலம் கவனித்த பின்னர்தான் நாடு திரும்பினேன். நான் கொழும்பிலிருந்திருந்தால் கண்டிப்பாக யாழ்ப்பாணம் சென்றிருப்பேன். காரணம் இந்தியாவிலிருந்து வந்த ஸ்வாமியுடன் ஆத்மகணானந்த மகராஜ் ஸ்வாமியும் அஜராத்மானந்த மகராஜ் ஸ்வாமியும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது மாநகர சபையில் அவர்களுக்கு வரவேற்பொன்றை முதல்வர் நிகழ்த்தியிருந்தார். இது முடிந்த மறுநாளே இத்துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றது. நானும் அங்கு போயிருந்தால் இந்த இருநிகழ்வுகளிலும் கட்டாயம் கலந்து கொண்டிருப்பேன். விதி என்னை இந்தியா செல்ல வைத்தது என்றே கூறலாம். இந்த நிகழ்வின் பின்னர் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் அஜராத்மானந்த மகராஜ் ஸ்வாமி ஒரு அனுதாபச் செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை இன்றுவரை பிரசுரிக்க முடியாது போய்விட்டது.

திருமதி சரோஜினி யோகேஸ்வரன், திரு. பொன். சிவபாலன், அவரது துணைவியார் திருமதி. தவமலர் சிவபாலன் ஆகியோருடன் நானும் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல் அறிவிக்கப்படவிருந்த சமயத்தில் நீண்ட நாட்கள் இடைவெளிக்குப்பின்னர் யாழ்ப்பாணம் சென்றேன். இந்த விடயம் எமது கட்சியின் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் The Island பத்திரிகைக்குத் தெரிவித்தது 1997 நவம்பர் மாதக் கடைசி நாட்களில் நான் சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டிருந்தபோதே இப்பயணம் நடந்தது. (எனது தந்தையார் 1992ல் காலமானபொழுது அவரது மரணச் சடங்கிற்கு வரமுடியாத நிலையில் எனது கடமையை எனது இளைய சகோதரன்தான் செய்த முடித்தான். நானும் எனது மற்றைய சகோதரனும் தந்தைக்குச் செய்யவேண்டிய காரியங்களைச் செய்ய முடியாதுபோனது நாம் செய்த பாவம்). நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியது 1990 ஜனவரியில்.

முதலில் நாம் யாழ்ப்பாணத்திற்குச் சென்று கச்சேரி வீதியில் அமைந்துள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். கொழும்பிலிருந்து வந்து பூட்டிய அறைக்குள் இருந்துகொண்டு எதுவும் செய்யமுடியாது என்று கூறி அடுத்த நாளே திருமதி யோகேஸ்வரன் தனது பயணப் பையை எடுத்தக்கொண்டு கிளம்பி தன்னுடைய நாவலர் வீதியிலுள்ள (கைலாசபிள்ளையார் கோவில் தெற்குவாசலுக்கு முன்னுள்ள) வீட்டிற்குப் போனதும் சில மணி நேரங்களின் பின்னர் நாமும் அவரது வீட்டிற்குச் சென்று அங்கு தங்கினோம். ஏற்கனவே அப்போது மூத்த துணைத் தலைவராக இருந்த ஆனந்தசங்கரி அவர்களது வழிகாட்டலிலேயே நாம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தோம். தலைவர் சிவசிதம்பரம் அவர்கள் கொழும்பிலிருந்தாலும் கூடுதலாக அவரே அனைத்து விடயங்களையும் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் அவர் காட்டிய கரிசனை எனக்கு மாத்திரம் நன்கு தெரியும். ஒவ்வொருநாளும் மகாலட்சுமி ஸ்ரோர்சுக்கு வந்து (மகேஸ்வரன் அவர்கள் அப்போது எந்தவிதமான அரசியலிலும் ஈடுபடாதநேரத்தில் எமக்குப் பெரிதும் உதவியதை இந்த நேரத்தில் நான் குறிப்பிடுவது நன்றியைத் தெரிவிப்பதற்காகவே) தொலைபேசியில் அங்குள்ள விடயங்களை அறிவதுடன் யாழ்ப்பாணத்தில் நடந்த நடக்கின்ற அத்தனை செய்திகளையும் அவருக்குத் தெரிவித்து அவர்குறிப்பிட்ட வேலைகளைச் செய்வது எனது கடமை. சில வேளைகளில் துவிச்சக்கரவண்டியிலேயே மல்லாகத்திலுள்ள ஸ்ரீபாஸ்கரன் அவர்களது வீட்டுக்குச் சென்று உரிய ஆவணங்களைப் பெற்றும் கையளித்தும் வந்தது மறக்கமுடியாதது.

ஒரு தடவை எனது சொந்த ஊருக்குச் சென்ற பொழுது நவாலியிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியில்(இன்றும் பிள்ளையார் கோவிலுக்கருகிலுள்ளது) கடமையிலிருந்த எம்மினத்தைச் சேர்ந்த காட்டிக்கொடுப்பவனால் எனது அடையாள அட்டை பறிக்கப்பட்டது. அன்று நான் திரும்ப யாழ்ப்பாணத்துக்கு வந்து மீண்டும் அடுத்தநாள் திரும்ப அதே பாதையில் அதாவது நாச்சிமார் கோவிலடியால் ஆனைக்கோட்டைச் சந்திபோய் திரும்ப அதே இராணுவ முகாமில் நான் போய் எனது அடையாள அட்டையைக் கேட்டபோது – எப்படி நீ அடையாள அட்டை இல்லாது வந்தாய் என்று அதட்டி - ஊரிலுள்ள எனது வீட்டிலிருப்பவரையும் கிராம சேவையாளரையும் கூட்டிவந்து ஊர் ஜிதப்படுத்த வேண்டும் என்று கூற நானும் மூளாய் போய் எனது வீட்டில் இருந்தவரையும் எமது ஊர்க்கிராம சேவகர் கணேசமூர்த்தியையும் கூட்டிக்கொண்டு திரும்ப நவாலிவந்து அங்கு திரும்ப பெரிய முகாமில்போய் பெரியவரைப் பார்த்துவரவேண்டும் என்று சொல்லவும் திரும்ப ஆனைக்கோட்டைச்சந்திபோய் மானிப்பாய் வீதியிலுள்ள இன்னுமொரு முகாமிற்கப்போய் விபரம் கூறி அதன் பின்னரே எனது அடையாள அட்டையை நான் பெற முடிந்தது. இவ்வளவுக்கும் நான் கறுப்பு வேட்டி கறுப்புச் சட்டை அணிந்திருந்ததும் குறிப்பிடத் தக்கது.

நான் என்னிடத்தில் தரப்பட்ட தேர்தல் வேட்பாளர் படிவத்தை நிரப்பி அதில் ஒரு பிரதியெடுத்து வைத்துக்கொண்டு கச்சேரியில் எமது வேட்பாளர் நியமனப் பத்திரத்தைக் கையளிக்கச் சென்ற சமயம் இருவர் தான் போக முடியும் என்பதற்கிணங்க நான் வெளியே நிற்க சிவபாலனும் திருமதி யோகேஸ்வரனும் கையளித்தவிட்டுவர நானும் சேர்ந்து வீடுபோய்விட்டு திரும்ப 2 மணிக்கு அவர்களிருவரும் ஆட்சேபனை தெரிவிப்பது சம்பந்தமாக தேர்தல் அலுவலகத்திற்கு மீண்டும் சென்றார்கள். திரும்பியவர்கள் வந்து கூறிய செய்தி தலையில் அடித்தாற்போலிருந்தது. அதாவது நாம் கொடுத்த வேட்பாளர் பட்டியலை செல்லாது என நிராகரித்து விட்டார்கள் என்று சொன்னார்கள். உடனேயே மகாலட்சுமி ஸ்ரோர்சுக்குப் பறந்தேன். பதட்டத்தடன் விடயங்களைச் சொன்னேன். சரி நீர் உடனேயே பிரதியுடன் கொழும்புக்கு வாரும் என்று மூத்த துணைத் தலைவர் கூறவும் அடுத்த நாள் நான் கொழும்பில். பத்தரமுல்லையிலுள்ள ஒரு சிங்கள சட்டத்தரணியை நீலன் திருச்செல்வம் ஒழுங்குபடுத்த அவரது வீட்டுக்கும் எமது திம்பிரிகசாய அலுவலகத்துக்கும் என்று ஒரே துவிச்சக்கரவண்டி ஓட்டம்தான். கறுப்பு வேட்டியுடன் பல சோதனைகள் கெடுபிடிகளுக்கு மத்தியில் எனது கடமையை நான் செவ்வனே செய்துவிட்டு ஜனவரியில் இந்தியாவுக்கு நான் பயணமானேன்.
சபரி மலை யாத்திரையைப் பற்றியும் இந்தியாவில் என்னுடைய அனுபவங்களையும் தனியாக ஒரு கட்டுரையில் தர இருப்பதால் இதில் அதிகம் குறிப்பிடவில்லை. ஆனால் நான் சபரிமலைக்கு விரதமிருந்து செல்வது எல்லாம் எனக்காகவல்ல. அம்முறை யாத்திரை எமது யாழ்ப்பாண மக்களின் நல்வாழ்வுக்கு மாநகர சபையில் எமக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதே. தேர்தல் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின்னர் வழக்கில் வெற்றிபெற வேண்டும் என்ற புதிய ஒரு வேண்டுதலும் முன்வைக்கப்பட்டது. யாத்திரை என்றால் நாம் கொழும்பிலிருந்து புறப்பட்ட பின் சபரிமலையில் எல்லாம்வல்ல கருணைத் தெய்வமான ஐயப்பசுவாமியை இருமுடியோடு தரிசனம் செய்து நெய்த் தேங்காய் உடைத்து அபிஷேகம் செய்த பின்தான் நாம் எம்மவர்களுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொள்வது வழக்கம். காரணம் எமது குருசுவாமியினுடைய கட்டளை. ஏனெனில் நாம் தற்சமயம் இடையில் எங்காவதிருந்த தொடர்பு கொள்ளும் போது இன்றுள்ள நாட்டு நிலையிலும் சரி அல்லது பொதுவாகவும் சரி ஏதாவது மரணம் சம்பந்தமான செய்திகள் கிடைத்தால் சுவாமி தரிசனம் செய்ய முடியாது போகும். சபரிமலை தேவஸ்தான வளாகத்திலமைந்துள்ள தபாலகத்திற்குச் சென்று தொலைத் தொடர்பு கொள்வதுதான் சற்றுச் சிரமம். ஏராளமானவர்கள் காத்துக்கிடப்பார்கள். அந்தத் தடவை 1998 ஜனவரியில் நேரே சுவாமி தரிசனம் செய்தபின் முதலில் தொடர்பு கொண்டபோது அலுவலகத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். எல்லாரும் நீதிமன்றத்துக்குப் போய் விட்டார்கள். இன்னும் வரவில்லை. சற்றுப் பொறுத்து எடும் என்று. சரி என்று 2, 3 தடவை எடுத்தப் பார்த்தேன். வரவில்லை. கடைசியாக எடுத்தபோது மூத்த துணைத் தலைவர் சொன்னார். வழக்கில் வென்றுவிட்டோம். 2 சபைகளிலும் போட்டி போடுகிறோம். நீர் எப்ப வாறீர் என்று. நான் சொன்னேன். ஒரு 6, 7 நாட்களில் வந்து விடுவேன் என்று. சரி நாங்கள் புறப்படுகிறோம். நீர் வந்தவுடனேயே அங்கு வரவேண்டும் என்று சொன்னார். நானும் சரி என்றுவிட்டு 21ல் கொழும்பு திரும்பி அன்றே மாலை கழற்றிவிட்டு பின் அடுத்த நாளே யாழ்ப்பாணம் பயணமானேன்.

தேர்தல் பணிகளுக்காக சென்றவர்களில் பலரும் தங்கியிருந்தது யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலமைந்திருந்த குமரன் விடுதிதான். திருவாளர்கள் ஆனந்தசங்கரி மாவை. சேனாதிராசா சிவபாலன் இரவிராஜ் அரவிந்தன் ஆகியோரும் மற்றும் பலரும் அங்கேயே முகாமிட்டிருந்தார்கள். நானும் சென்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.

ஒரு நாள் நான் ஓட்டோவில் பிரச்சாரத்துக்காக கச்சேரியடிப்பக்கம் சென்றபோது எதிரில் வந்த வேறொரு அமைப்பினர் என்னுடன் வாக்குவாதப் பட்டார்கள். தாம் இதுவரை களத்திலிருக்க நேற்றுவந்த நீங்கள் எப்படி மக்கள் முன் செல்ல முடியும் என்ற வினா தொடுத்து கேள்விமேல் கேள்வி தொடுத்தனர். நான் அமைதியாக எல்லாருக்கும் போட்டியிடும் சந்தர்ப்பம் இருக்கிறது. எமது மக்கள் முன்வந்து எமது கட்சியில் போட்டிபோட பெயர்கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே மாநகரசபை எமது வசமிருந்தது. இப்படி பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லி நீங்கள் உங்கள் பிரச்சாரத்தை முடித்துவிட்டுப் போங்கள் பின்னர் நான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த கோவிலுக்கருகில் சற்று நேரம் நின்று பின் எமது ஒலிபெருக்கியில் எமது கட்சிக்கு வாக்குகளைப் போடும்படி வேண்டி சொல்லி எனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தேன். இன்னொரு நாள் திருநெல்வேலிச் சந்தியிலிருந்து கல்வியங்காடு செல்லும் பாதையில் யாழ்ப்பாணத்துக்கு வரும் வேறொரு குறுக்கப் பாதையில் பிரச்சாரம் செய்தபோது ஒரு தோட்டத்தில் களை பிடிங்கிக் கொண்டிருந்த ஒரு வயதுபோன ஐயா எமது ஓட்டோவுக்குக் கிட்ட வந்த சொன்ன வார்த்தைகள் எனக்கு மாநகர சபை தேர்தலில் எமக்கு வெற்றி பெற்ற நிறைவையே தந்தது. அவர் சொன்னார்:- தம்பி நீங்கள் வந்திட்டீங்களெல்லோ. உங்களுக்குத் தான் எங்கட வோட்டு. இந்த அறுவான்கள் செய்யிற அநியாயம் எப்ப முடியும் எண்டு பார்த்துக் கொண்டிருக்கிறம். உங்கட நோட்டீசும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் வீட்டில அதுகள் கிடந்தாலும் உசுருக்க ஆபத்து என்று தனது ஆதங்கத்தை எமக்கு துணிந்து கூறிப் போனார். காரணம் மக்கள் சாப்பாட்டிற்காக மாத்திரம் வாயைத் திறக்க வேண்டியவர் களாக்கப்பட்டுள்ளார்கள். எந்தவிதமான பேசும் சுதந்திரமோ தமது கருத்துக்களை வெளியிடும் சுதந்திரமோ இன்றுவரை வடக்குக் கிழக்கில் வாழும் மக்களுக்கு மாத்திரமல்ல நாட்டின் எப்பகுதியில் வாழும் எந்த மக்களுக்கும் இல்லை என்று என்னால் உறுதிபடத் தெரிவிக்கமுடியும். இந்த வேளையில்தான் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. (குறிப்பு என்ற தலைப்பில் இந்தவிடயம் இக்கட்டுரையின் இறுதியில் தரப்படுகிறது)

அன்றிரவு நாம் சாப்பாட்டுநேரத்தில் கூடிக் கதைக்கும்பொழுது இதைக் குறிப்பிட்டு மனநிறைவடைந்தேன். முதல்வராகப் போட்டியிட்ட திருமதி சரோஜினி யோகேஸ்வரன் தனது இல்லத்தில் தங்கியிருந்தாலும் பிரச்சாரத்தக்கப் போகும் வழியில் எமது தற்காலிக தொடர்பு அலுவலகமான குமரன் விடுதிக்கு வந்துபோவதும் நாம் அவர்களுடைய வீட்டிற்குச் சென்று வருவதும் அடிக்கடி நடப்பதுண்டு. ஜனவரி 29 தேர்தல் இடம்பெற்றது. காலையில் நாம் நடந்தே நல்லூருக்கச் சென்று சுவாமி தரிசனம் செய்து ஆலய உள் வீதியில் ஒரு மணிநேரம் அமர்ந்து ஆலய எசமானருடனும் மற்றும் அடியார்களுடனும் பல ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டடோம். நான் தேரடிக்குச் சென்று எனது வழமையான பிரார்த்தனையை முடித்தக்கொண்டு திரும்பினேன். அன்றிரவு தேர்தல் முடிவுகள் எண்ணுவதை அவதானிப்பதற்கும் அறிவதற்காகவும் எல்லோரும் யாழ் கச்சேரிக்குப் போய் விட்டனர். நான் குமரன் விடுதியில் தங்கி அதிகாலையிலே தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்டேன். முதலில் எமக்கு அதிகப் படியான வாக்குகளும் இரண்டாவதாக புளொட்டுக்கும் மூன்றாவதாக ஈபிடிபியினருக்கும் நான்காவதாக ஈபிஆர்எல்எப் இனருக்கும் ஆசனங்கள் முறையே 9, 6, 6, 2 எனக்கிடைத்த மனத்திருப்தியுடன் கொழும்பு திரும்பினேன்.
…….
குறிப்பு –
முன்னர் இயக்க முரண்பாடுகள் இருந்தபொழுதும், இராணுவமும் பொலிசாரும் வீடுகளைச் சோதனையிட்டுப் பெரிதும் மக்களைக் கொடுமை செய்த காரணத்தாலும் எமது வரலாறுகளுடன் தொடர்புடைய பல முக்கிய ஆவணங்கள் கிழித்து எரித்து அழிக்கப்பட்டதும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதும் வரலாறு. குறிப்பாக எனது பெரியப்பா வீட்டில் அடாத்தாகப் புகுந்து தமது ஒரு முகாமாகப் பயன்படுத்திய விடுதலைப் புலிகள் வீட்டிலிருந்த சகல ஆவணங்களையும் புகைப்படங்களையும் எரித்ததையும் வீட்டிலிருந்த சகல பொருட்களையும் சூறையாடிச் சென்றதையும் சில பொருட்களையும் வீட்டின் கண்ணாடிகளையும் எமக்குக் கோபமூட்டும் வகையில் அடித்து நொருக்கியதையும் இதனால் எனது தாயார் அவர்களைத் திட்டி சண்டை பிடித்ததையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானதெனக் கருதுகிறேன். இவர்கள் இப்படிச் செய்து பழைய வரலாறுகளை அழித்துப் புதிய கட்டுக் கதைகளைச் சேர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய இராணுவம் வந்து யாழ் குடாநாட்டைக் கைப்பற்றிய பின் அந்த வீட்டின் பின்புறமிருந்த எரித்த குப்பைமேட்டின் அடியின் கீழிருந்த சில எரியாத புகைப்படங்களை நாம் எடுத்து கடந்த 2002 ஓகஸ்டில் வெளியான அமிர்தலிங்கம் ஒளியில் எழுதுதல் என்ற சுமார் 290க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட உதவியதையும் - அந்நூலில் முதல் குறிப்பில் ஒரு பந்தியில் இத் தொகுப்பினை முழுமைப்படுத்தவதற்கு பல்வேறு இடங்களிலிமிருந்து புகைப்படங்களைத் தேடி அனுப்பிய திரு. த. முகுந்தன்(யாழ்ப்பாணம்) ……..ஆகியோரின் முயற்சிகள் கௌரவத்தோடு நினைவு கூரப்படுகின்றன எனக் குறிப்பிட்டிருப்பதையும் இங்கு கூற நான் கடமைப்பட்டுள்ளேன். இன்றைய 2வது பகுதியின் ஆரம்பத்தில் வெளியான புகைப்படம் அவரது பவள விழா மலர் வெளியீட்டின்போது எடுக்கப்பட்டது. அமிர்தலிங்கம் நினைவுப் பணிக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் 76வது பிறந்த நாள் நினைவை நாம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தோம்.


கழகத்தின் தலைவர் என்ற வகையில் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படமிது. இதில் திரு. ந. இரவிராஜ் திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி திரு. சாம் விஜேசிங்கா(எனக்குப் பின்னால் மறைந்திருக்கிறார்) டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அல்ஹாஜ் ஏ.எச். எம். அஸ்வர் மசூர் மௌலானா திரு.டி.யூ. குணசேகரா திரு. வாசுதேவ நாணயக்கார பேராசிரியர் சோ:சந்திரசேகரம் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் ஆகியோர் மேடையில் அமர்ந்திருப்பதைக் காணலாம். மேலும் படங்கள் அடுத்த தொடர்களில் இணைக்கப்படும்.

இந்தப்படம் தற்போது அமிர்தலிங்கம் அவர்களின் வலைத்தளத்திலிருந்த எடுத்து வெளியிடப்பட்டது. இதில் சாம் விஜேசிங்க அவர்கள் தெளிவாகத் தெரிகின்றார்.

வாசகர்களிடம் எமது தலைவர்களை அல்லது படுகொலைசெய்யப்பட்ட முக்கிய உறுப்பினர்களைப் பற்றிய ஆவணங்கள் கட்டுரைகள் புகைப்படங்கள் இருந்தால் தயவுசெய்து எனது ஈமெயில் முகவரிக்கு thangamukunthan@gmail.com அனுப்பும்படி அல்லது விபரங்களைத் தெரிவிக்கும்படி தயவாக வேண்டுகிறேன்.

(பின்னர் தொடரும்)

No comments: