அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 12, 2009

பெருமைமிக்க பௌத்த நாடாக இருந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குரியதாகி வரும் வேளையில் நான் ஏன் இந்த நாட்டில் பிறந்தேன் என்ற கேள்வி என்னுள்ளே எழுகின்றது!


05-07-2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

இடம் பெயர்ந்த மக்களின் பரிதாபநிலை

இந் நாடு தனது கௌரவத்தையும், மதிப்பையும் பேணி காக்க வேண்டுமாயின் தங்களின் தலையீடு இக்கட்டத்தில் இன்றியமையாதது என்பதை தங்களை நம்ப வைக்கவே இக் கடிதத்தை நம்பிக்கை இழந்த நிலையில் எழுதுகிறேன்.

இந்த நாட்டின் நாணயம் இடம்பெயர்ந்த மக்களில் சில வகையினரை உடனடியாக விடுவிக்க தாங்கள் மேற்கொள்ளும் முடிவிலும் ஏனையவர்களின் விடுதலை பற்றி மறுபரிசீலனை செய்வதிலுமே தங்கியுள்ளது. தாம் மிகவும் கட்டுப்பாடுடைய ஓர் திறந்தவெளி சிறைச்சாலையிலே அன்றி ஓர் நலன்புரி நிலையத்தில் அல்ல என்ற உணர்வுடனேயே நியாயமற்ற முறையில் வலு கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இம் மக்கள் உணர்கிறார்கள். ஆகவே போயா தினமாகிய நாளை மறுநாள் இது சம்பந்தமாக நீங்கள விடுக்கும் அறிவித்தல் மிக முக்கியமானதும், முழு பௌத்த உலகும் நிம்மதி பெருமூச்சு விடும். சம்பவவும் ஆகும்.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நடைபெறும் சில விடயங்கள் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்ற ஊகத்திலேயே நான் செயற்படுகின்றேன். நேரில் காண்பதே நம்;பிக்கை தரும் என்பதால் ‘மெனிக் பார்ம்’ இலுள்ள முகாம்களை தவிர்ந்த வேறு முகாம்களுக்கு நீங்கள் என்றோ விஜயம் மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். தாங்கள் தலைவராக இருக்கும் ஓர் நாட்டில் இத்தகைய சம்பவங்கள் நடக்கவும் கூடாது. நடக்க விடவும் கூடாது. தாம் செய்யாத குற்றத்திற்காக துன்புறும் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுடைய உயிருடன் விளையாட நினைப்பவர்களின் கண்களை தங்களுடைய தீர்வு திறக்க வைக்கும். பெற்றோரால் தம் கைச்செலவுக்கு கொடுக்கப்படும் பணத்தை சேமித்து கசாப்புக்கடைக்கு கொண்டு செல்லப்பட்ட கால்நடைகளை மீட்டெடுக்கும் பிள்ளைகளை கொண்ட பெருமைமிக்க நாடு எங்கள் நாடு. புல்மோட்டையில் இடம்பெயர்ந்தோர் முகாமில் வாழும் ஒரு வயது குழந்தையையும் அவருடைய பேத்தியாரையும் விடுவிக்க மறுக்கப்பட்ட சம்பவமே இக் கடிதத்தை தங்களுக்கு எழுதுவதற்கு என்னைத் து}ண்டியது. வலது கால் துண்டிக்கப்பட்டு ஓர் முகாமில்;; உள்ள இளைஞன் ஒருவனின் குழந்தை அவனுடைய தாயின் அரவணைப்பில் இருக்கிறது. வலது கால் துண்டிக்கப்பட்டு இடது கால் முறிந்து பிணைக்கப்பட்ட நிலையில் வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியுள்ளவரே இக் குழந்தையின் தாயாவார். இது போன்ற சம்பவங்கள் உலகின் எப்பகுதியிலும் நடந்ததில்லை. தங்களுக்கு இச் சம்பவங்கள் பற்றி தெரியும் என்பதை நான் கடுகளவும் நம்பவில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் பல்வேறு முகாம்களில் வாழும் இந்த மூன்று இலட்சம் மக்கள் மத்தியில் நிறையவே நடக்கின்றன.

வன்னியில் அவர்களாக துணிந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைவேர்களேயானால் அவர்களை நன்றாக உபசரித்து பாதுகாப்பு கொடுப்பதாக தாங்கள் உத்தரவாதமளித்துள்ளீர்கள். அவ்வாறு தப்பி வரும் வேளையில் எத்தனை பேர் இறந்தார்கள், கொல்லப்பட்டார்கள் என்ற விபரம் உலகத்துக்கே தெரியும் துரதிஷ்டவசமாக அவர்கள் நன்றாக கவனிக்கப்படவில்லை. அதற்கு முரணாக அவர்களின் உடலும், உள்ளமும் அங்கே நடக்கின்ற சம்பவங்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவ்வாறான அவலங்கள் தம்மீது திணிக்கப்படும் என்று அவர்கள் நினைத்திருந்தால் இந்த அபாயகரமான நடவடிக்கையில் ஈடுபடாது இரு பகுதியினரிடையே நடந்த செல் தாக்குதலில் இறந்த தமது பல உற்றார் உறவினர்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் மடிந்திருப்பர். ஒரு நாளைக்கு மட்டும் இம் முகாம்களின் கதவுகளை திறந்து வைப்பீர்களேயானால் முகாம்களில் ஒருவரேனும் மிஞ்சியிருக்கமாட்டார்கள் என்பதை தாங்கள் நேரில் காண்பீர்கள்.

இச்சம்பவங்கள் பற்றி தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவது எனக்கு மிக மனவேதனையை தருகிறது. நீண்ட நாட்கள் பொறுத்திருந்து எதுவும் நடக்காததினால் என் உணர்வுகள் வரம்பை மீறி செயற்படுவதற்கு என்னை மன்னித்துக் கொள்ளவும். என் நிலையில் நீங்கள் இருந்தால், என்னுடைய உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும். எனது தொகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து முகாம்களுக்கு வந்துள்ளனர். அவர்களுடன் பலகாலம் நான் வாழ்ந்தது பற்றியும் நீண்டகாலம் அவர்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியதும் நீங்கள் அறிந்ததே. ஒருவர் தப்பாமல் ஒவ்வொருவரும் எனக்கு தெரிவிக்கின்ற கதைகள் மிக சோகமானவை. பலர் மனைவியை இழந்தும், வேறு சிலர் கணவன் பிள்ளைகளை இழந்தும் உள்ளனர். அநேகர் தமது பெற்றோரை இழந்துள்ளனர். அப் பெற்றோர் யுத்த முனையில் போராளிகளாக அல்லாமல் அப்பாவி மக்களாக துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி உள்ளனர். அநேகர் பதுங்கு குழிகளுக்குள் உயிரோடு புதைக்கப்பட்டனர். அநேகர் பட்டினியாலும், குழந்தைகள் பல பாலின்றியும் மரணித்திருக்கிறார்கள். பலர் தமது உற்றார் உறவுகளை இன்றும் தேடி அலைகின்றனர்.

முகாம்களில் உள்ளவர்கள் தமது காணாமல்போன உறவினர்களையும் வெளிநாடுகளிலும், வெளியிலும் உள்ளவர்கள் தமது உறவினர்கள் தமக்கு வேண்டியவர்கள் பற்றிய தகவல்களை பெறக்கூடியதாகவும் முகாம்களில் உள்ளவர்களின் பெயர் விபரத்தை வெளியிடும்படி ஆரம்பத்திலேயே கேட்டிருந்தேன். முல்லைத்தீவு சுகாதார இலாகாவை சேர்ந்த திரு தர்மகுலசிங்கம் என்ற அதிகாரி இறந்தவர்கள், காயமுற்றவர்கள் பற்றிய விபரத்தை திரட்டிக்கொண்டிருந்தவேளை அவரே செல் தாக்குதலில் பலியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அத்துடன் அப் பணியும் நின்றுவிட்டது. காணாமல் போன ஒருவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைகூட அறிய முடியாமல் உள்ளது. இனங்காணாத பலரின உடல்கள் பழுதடைந்த நிலையில் ஒரே குழியில் புதைக்கும் சம்பவம் அடிக்கடி நடப்பதுண்டு. நெருங்கிய உறவினர்கள் கூட அவர்களை அடக்கம் செய்யும் வேளையில் பிரசன்னமாக இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஓர் இறந்தவருக்கு கிரியைகளை செய்யவேண்டிய கடமைப்பாடு உண்டு. அவற்றில் சில முக்கியமானதும் கண்டிப்பானதுமாக இருப்பது ஓர் ஆத்மசாந்திக்கு ஏதுவானது என மக்கள் நம்புகிறார்கள். நான் கூறுவது முட்டாள்த்தனமாக இருக்கலாம். ஆனால் முறைப்படி சில கிரியைகள் செய்யாதமை ஆத்மாக்களை அந்தரிக்க வைக்கும் என்று உலகம் பூராகவும் உள்ள மக்கள் நம்புகிறார்கள். இது சாதாரண விடயம் என்று நாம் தட்டிக்கழித்துவிட முடியாது. குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மக்கள் இதை வெளியில் கூறாவிட்டாலும் அவர்கள் மௌனமாக மனதுக்குள்ளேயே அழுகின்றனர். நான் இதை முழுக்க முழுக்க நம்புகின்றேன். நல்லதொரு சிறந்த பௌத்தர் என்ற வகையில் நீங்களும் இதில் நம்பிக்கை வைத்திருப்பீர்கள் என்பதை அறிவேன். நிச்சயமாக எவருக்கும் ஓர் எதிரிக்கு கூட இவ்வாறு நடப்பதை நான் விரும்ப மாட்டேன்.

நான் கேட்டவை, கேட்டுக் கொண்டு இருக்கின்ற பலவற்றில் சில கண்களை கலங்க வைக்கும் சம்பவங்களாகும். காயமுற்றோரும், கர்ப்பிணிகளுமே மிகக் கூடுதலாக துன்பத்தை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு வேண்டிய உடனடித் தேவையோ முறையான கவனிப்போ கிடைப்பதில்லை. முறையான வைத்தியம் இன்றி பலர் இறந்துள்ளனர். அவர்கள் அனுபவிக்கும் சாPர வேதனையிலும் பார்க்க உள்ளத்தால் படும் வேதனைகள் அவர்களை பெருமளவு பாதிக்கின்றன. பல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இருப்பினும் ஓரிரு சம்பவங்களை மட்டும்தான் இங்கே குறிப்பிடுகின்றேன்.

முதலாவது சம்பவம் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல புல்மோட்டையில் ஒரு காலை இழந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரை பற்றியதாகும். சம்பந்தப்பட்ட நால்வரில் எவரிடமிருந்தாவது இந் நாட்டுக்கு எத்தயை அச்சுறுத்தல் இருக்க முடியும்? இவர்களை மாதக்கணக்கில் மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

இன்னோர் சம்பவத்தில் வன்னியில் ஓர் தலைமை ஆசிரியர் செல் தாக்குதலில் அதே இடத்தில் மரணமானதோடு மகள் படுகாயமுற்றார். யாழ்ப்பாணத்தில் அவர்களை பராமரிப்பதற்கோ, அல்லது அவர்களுக்காக அழுவதற்கோ நிறைய உறவினர் உள்ளனர். ஆனால் ஒரு உறவினரோ, நண்பரோ இல்லாத மன்னாரில் தாயார் பிள்ளையுடன் வைத்தியசாலையில் இருக்கின்றார். இக் குற்றத்திற்கு யார் பொறுப்பாளி? இதற்காக நான் தங்களை குற்றம் கூறவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியிருந்தால் அவர்களை கவனிப்பதற்கும் இறந்த கணவருக்குரிய கடமைகளை செய்வதற்கும் நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள்.

தங்களை நான் 40 ஆண்டுகளாக நன்கறிவேன். இத்தகைய சம்பவங்களை தாங்கள் சகித்துக் கொள்ளக்கூடியவரல்ல. ஏறக்குறைய கால் நு}ற்றாண்டுகளுக்கு மேல் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து நித்திய பயபீதியுடன் வாழ்ந்த மக்களுக்கு இத்தகைய தொந்தரவு கொடுப்பது ஏற்கக்கூடிய விடயமல்ல. தங்கள் உயிரை பணயம் வைத்து படுகாயமடைந்த நிலையில் இறந்துபோன உறவினர்கள் அத்தனை பேரையும் விட்டு விட்டு ஜனாதிபதி என்ற முறையில் தங்களிடம் ஆறுதல் கோரி வந்த மக்கள் இதுவரை பட்ட வேதனை போதாதா? நான் ஒருபோதும் தங்களுக்கு தப்பான வழி காட்டியவனல்ல. நான் கூறும் ஆலோசனைகள் நல்லெண்ணத்தோடு ஒரு பௌத்த நாட்டின் நாணயத்தை காப்பாற்ற கொடுக்கப்படுகின்றவொன்றாகும். முன்பு ஒரு தடவை உலகம் எமது நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கிறது என்றும் நான் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இந் நாட்டிலும் வெளியிலும் யாரோ எவராலோ பதியப்பட்டுக் கொண்டிருக்கிறது என எச்சரிக்கை விடுத்திருந்தேன். எதிர்காலத்தில் ஒரு நாள் நானும் நீங்களும் இந்த உலகத்தில் இல்லாதவேளை அல்லது சில சமயம் நீங்கள் இருக்கின்ற காலத்திலேயே எழுந்து பார்க்கின்றபோது பல உண்மைகள் தெரியவந்து முழு உலகும் இலங்கையை குற்றவாளியென தீர்மானிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மேலே ஒருவர் வரவு-செலவு கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றார்.

என்னை நீங்கள் நன்கு அறிவீர்கள். நான் சுயநலன் கருதி எவரையும் முகஸ்துதி செய்பவன் அல்ல. நான் எப்போதும் உள்ளதை உள்ளபடி கூறுபவன். நான் பெருமைமிக்க பௌத்த வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டின் பிரஜையென எப்பொழுதும் வெளிப்படையாக கூறி வந்துள்ளேன். புத்த பகவான் விஜயம் மேற்கொண்ட மகியங்கனைக்கும், பெருமானின் புனித தந்தத்தை கொண்டுள்ள தலதாமாளிகைக்கும் எத்தனை தடவை சென்று தரிசித்து வந்தேன் என்ற எண்ணிக்கையை கூட மறந்துவிட்டேன். பல மகா நாயக்கர்களுடைய குறிப்பாக மிக வணக்கத்துக்குரிய அஸ்கிரிய மல்வத்த மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்தை பல தடவைகள் பெற்றுள்ளேன். இன்று பெருமைமிக்க பௌத்த நாடாக இருந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குரியதாகி வரும் வேளையில் நான் ஏன் இந்த நாட்டில் பிறந்தேன் என்ற கேள்வி என்னுள்ளே எழுகின்றது.

நான் மிக வன்மையாக தங்களிடம் வேண்டுவது எதுவித தாமதமுமின்றி உடனடியாக இடம்பெயர்ந்தோர் முகாமில் காயமுற்றோர், முதியோர், நலிந்தவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகளுடன் கூடிய தாய்மார்கள், நடமாடமுடியாதவர்கள், புத்தி சுயாதீனமற்றோர், மூளை வளர்ச்சி குன்றியோர், அநாதைகள், ஆதரவற்றோர் ஆகியோரை உடன் விடுவிக்கவும் அத்துடன் பல்வேறு முகாம்களில் உள்ள குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர வைத்து மக்களை தத்தம் மாவட்டங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

நான் நாட்டையும், நாட்டில் வாழும் மக்களையும் நேசிக்கும் நாட்டுப்பற்றாளன் ஆவேன். தாங்கள் ஏற்கக்கூடிய வேறு சில நல்ல ஆலோசனைகளுடன் விரைவில் இன்னுமோர் கடிதத்தினை அனுப்பி வைப்பேன்.

தமிழ் மக்களை தாங்கள் வென்றெடுக்க வேண்டுமானால் இதனை முதலில் செய்து அதனைத் தொடர்ந்து மீள் குடியேற்றத்தை செய்ததன் பின்பே அபிவிருத்தியை பற்றி யோசியுங்கள்

நன்றி

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.விகூ

No comments: