அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, July 5, 2009

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினருக்கு எழுதிய கடிதம்

இலங்கையில் என்ன நடக்கிறது என்ற தலைப்பிட்ட பதிவை பதிவுசெய்தபின்னர் உடனடியாக மேற்சொன்ன எமது அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினருடைய தலைவர் திரு. ராஜா கொல்லுரே அவர்களுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்த பின் அவர் குறிப்பிட்டதற்கு அமைய எழுத்துமூலமான புகாரை அனுப்பி வைத்துள்ளேன்.

ஏற்கனவே 22.03.1993 இல் அன்றைய ஜனாதிபதி அதி மேதகு ரணசிங்க பிரேமதாசா அவர்களுக்கு தமிழ் மொழி புறக்கணிப்பு என்ற தலைப்பிட்டு 5 விடயங்களைச் சுட்டிக்காட்டி எழுதிய கடிதத்துக்கு அன்றைய அரச கருமமொழி ஆணைக்குழுத் தலைவர் திரு. டெஸ்மன்ட் பெர்ணான்டோ அவர்கள் துரித நடவடிக்கை எடுத்தார். இதுபற்றிய ஒரு செய்தி வீரகேசரியில் 19.04.1993இல் போக்குவரத்துச் சேவைகள், தபால் திணைக்களம், பொதுநூல் நிலையம் தமிழ் மொழி புறக்கணிப்புகளை நீக்க அரச மொழி ஆணைக்குழு நடவடிக்கை என்ற தலைப்பிட்டுச் செய்தி பிரசுரித்திருந்தது.

07.01.1994 அன்றைய ஜனாதிபதி மாண்புமிகு டி பி விஜேதுங்க அவர்களுக்கு ஸ்ரீ லங்கா ரெலிகொம் சம்பந்தமான ஒரு கடிதம் அனுப்பியிருந்தும் எந்த விதமான நடவடிக்கையும் யாரும் எடுத்ததாகவில்லை.

ஆனாலும் இன்று அரச கரும மொழிகள் ஆணைக்குழு இயங்குகின்ற போதிலும் அரச அலுவலகங்களில் தமிழ் தெரிந்த உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையும் குறிப்பாக தமிழ் அதிகாரிகளாலேயே தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவதும் ஒரு பெரிய குறை. தமிழ்மொழியில் நாம் எமது அலுவல்களை நடத்தினால் தானே தமிழ் மொழியில் அலுவல்கள் நடக்கும். எம்மவர்களில் பலர்தமிழில் கருமம் ஆற்றத் தயங்குவதாலேயே தமிழ் கிடப்பில் கிடக்கின்றது!

இன்றைய கடிதத்தின் விபரம்

ஓம்
தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப்போலக் காக்க அறத்தை - யோகர் சுவாமிகள்

Thangarajah Mukunthan
Switzerland.
Tel - + 41 76 293 62 95
email - tulfmukunthan@yahoo.com

திரு. ராஜா கொல்லுரே அவர்கள்
தலைவர் - அரச கரும மொழிகள்ஆணைக்குழு
4ஆவது மாடி – பக்ஷ மந்திரய
341/7, கோட்டே வீதி
ராஜகிரிய.
இலங்கை.

பேரன்புக்கம் பெருமதிப்பிற்குமுரிய ஆணைக்குழுவின் தலைவர் திரு. ராஜாகொல்லுரே அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு வாழும் இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் நாம் எம் தமிழில் எம் தாய்நாடு இலங்கை என்று அழைக்கப்படுவதையே விரும்புகின்றோம்.

சிங்கள மொழியில் லங்கா என்று இருந்ததை ஸ்ரீ லங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை யாவரும் அறிவார்கள். ஆனால் ஆங்கிலத்தில் சிலோன் என்று(Ceylon) குறிப்பிடப்பட்ட பல அரச நிறுவனங்கள் திணைக்களங்கள் இன்று ஸ்ரீ லங்கா (Sri Lanka) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இது எவ்வாறு எப்போது யாரால் அங்கீகரிக்கப்பட்டது என்பதை இலங்கையன் என்ற வகையில் நான் அறிய விரும்புகிறேன்.

குறிப்பாக இலங்கை மத்திய வங்கியின் பெயரும் பரீட்சைத் திணைக்களத்தின் பெயரும் எப்போதிருந்து ஆங்கிலத்தில் மாற்றம் பெற்றது என்பதையும் அறிய விரும்புகிறேன்.

தமிழில் இலங்கை என்று இருக்க வேண்டிய இடத்தில் லங்கா என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் சின்னம் அமைந்திருப்பதால் அதன் பெயரை மாற்ற தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.

தயவுசெய்து தங்களுக்கு எனது கடிதத்தினால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

என்றும் உண்மையுள்ள
தங்க. முகுந்தன்.

No comments: