அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, July 31, 2009

இப்படியெல்லாம் நடக்கிறது! புதிய எனது அனுபவம்! கிறீஸதவ தேவாலயத்தில் தேவாரமும் - ஜோதிப் பாடலும் பாடிய எனது மறக்க முடியாத அனுபவம்! பாகம் 2


நான் தற்போது இருக்கும் இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ளது இம்மன்சே(Immensee) என்ற இடம். இங்கேதான் எனது இரண்டாவது நிகழ்வு இடம்பெற்றது. 50பேர்வரை அந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர். இதுவும் ஒரு கிறீஸ்தவ தேவாலயத்தில் நடந்தது. லுசேர்னில் இருந்து பரத நாட்டிய நிகழ்வை நடத்த ஒரு நாட்டியக் குழுவினரும் வந்து இருந்தனர். என்னை நிகழ்வுக்கு அழைத்துப்போக (ஏற்கனவே கடிதப்பரிமாற்றங்கள் மூலம்) புகையிரத நிலையத்திற்கு தனது வண்டியில் வந்த காத்திருந்தார் வணக்கத்திற்குரிய பாதிரியார் பௌல் ஏர்லர் (Paul Ehrler)அவர்கள்.
நிகழ்வுகளில் முதல் பாதிரியார் டொச் மொழியில் தனது ஆராதனையை நிகழ்த்திய பின்னர் என்னைப் பாடுமாறு அழைத்தார். இலங்கையிலிருந்து எடுத்தச் சென்ற சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனையில் இருந்து இம்முறை பாடல்களை நான் பாடினேன்! எனது பாடலுக்குப் பின்னர் மீண்டும் அவரது உரை. அதன்பின் நாட்டியம். பின்னர் அவரது உரை. அதன் பின்னர் எனது பாடல். இப்படி மாறிமாறி அந்நிகழ்வு நடைபெற்றது. இதன்பின்னர் மதிய போசனம் இடம்பெற்றது. அதன்பின்னர் என்னை தானே மீண்டும் அழைத்துவந்து வழியனுப்பி வைத்தார் வணக்கத்திற்குரிய பாதிரியார் அவர்கள். நான் விடைபெறும் நேரத்தில் என்னிடம் ஒரு கடித உறையையும் தந்தார். புகையிரதத்தில் ஏறியதும் அந்த உறையைப் பிரித்தேன். அதனுள் அழகான ஒரு நன்றி மடலும் அதனுள் 100 சுவிஸ் பிராங்கும் இருந்தது. உடனேயே அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் எனது ஆத்ம திருப்திக்காகவே இந்நிகழ்வை மேற்கொண்டேன் நான் பணத்தை எதிர்பார்க்கவில்லையே! என்றேன். அதற்கு அவர் நீர் பயணித்த செலவு மற்றும் உமது நேரம் உமது உடல் வலுவுக்கான ஒரு சிறு தொகையே இது என்று சொன்னார்.பொது சேவையாயிருந்தாலும் மனித வலுவுக்கு எமது நாடுகளைப் போலல்லாமல் ஒரு ஊதியத் தொகையை இங்கு கட்டாயமாக வழங்கி வருவது குறிப்பிடத் தக்கது.
முதல் அனுபவத்தைப் பற்றி நான் தேவாரம் பாடிய அந்தப் பெரிய தேவாலயத்தின் பாதிரியார் வணக்கத்திற்குரிய றேரோ முல்லர்(Reto Müller)அவர்களுக்கு ஈமெயிலில் ஒரு செய்தி அனுப்பியிருந்தேன். அவர் என்னைச் சந்தித்துப் பேச ஒரு நாளை அவரது அலுவலகத்தில் ஒதுக்கியிருந்தார். நானும் அவருடன் சுமார் 40 நிமிடங்கள் வரை மனம்விட்டுக் கதைத்துவிட்டு விடைபெறும் சமயம் என்னை ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டேன் - அவர் ஆசீர்வதித்தார். முடிந்ததும் நான் புறப்பட்ட சமயம் எனது கையைப்பிடித்து தான் என்னிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் சொன்னேன் - நான் எமது சமயத்தின் தலைவரல்ல - உங்களுக்கு ஆசீர்வாதம் செய்யும் தகுதி எனக்கு இல்லை என்றேன்! அதற்கு அவர் உமது மனம் தூய்மையானது என்னை நீர் வாழ்த்த முடியும் என்றார். திருமுறைப் பாடல் ஒன்றை இசைத்து அவரது சிரசில் என் இருகைகளை வைத்து வாழ்த்துத் தெரிவித்தேன். இது என் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாகும்.

3ஆவது தடவையாக

இதன் பிறகு ஓரிரு மாதங்களின் முன்னர் முன்னைய கட்டுரையில் குறிப்பிட்ட இராஜன் அண்ணனுடைய தாயார் வவுனியாவில் மரணித்தார். அதற்காக ஒரு ஆத்ம சாந்திப் பிரார்த்தனையை அவர் தமது தேவாலயத்தில் ஒழுங்கு செய்திருந்தார். இதற்கு ஒழுங்குகளை அவர் மேற்கொண்டபோது பாதிரியார் அவர்களே இராஜன் அண்ணனிடம் முகுந்தனையும் ஒரு பாடல் பாட வைக்கலாம் தானே! என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். இராஜன் அண்ணரும் என்னுடன் தொடர்பு கொண்டு என்ன உம்முடைய பாடலில் பாதிரியாருக்கு ஒரு ஆசை உம்மை ஏதாவது பாடட்டாம் என்று சொன்னார். மேலும் பாடும் பாடலின் அர்த்தத்தை முன்கூட்டியே தனக்குத் தரும்படியும் அவர் கேட்டதாகச் சொன்னார் - நானும் ஆத்ம சாந்திக்காக கொழும்பில் என்னைக் கவர்ந்த அருளொளி நிலையத்தின் ஜோதிப் பாடலை அவருக்குப் பிரதிபண்ணிக் கொடுத்தேன். அவர் அதை மொழிபெயர்ப்புச் செய்து கொடுத்தார். குறிப்பிட்ட நாளில் நிகழ்வு இடம்பெற்றது. பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட வணக்கத்திற்குரிய பாதிரியார் அவர்கள் எல்லாம் நிறைவு பெற்ற பின்னர் வருகைதந்த அனைவரையும் தேவாலயத்தில் மெழுகுதிரிகளை ஏற்றச் செய்துவிட்டு - இராஜன் அண்ணனின் தாயாருடைய ஆத்மசாந்திக்கும் - தற்போது ஈழத்தில் நடைபெறும் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கும் - நாட்டில் சாந்தி கிடைக்கவும் இப்போது பிரார்த்தனை நடைபெறும் என்று சொல்லி என்னை அழைத்தது உண்மையிலேயே என்னை ஓர் கணம் நெகிழவைத்தது. சமய தத்துவங்களை அறிந்தவன் என்ற வகையில் அவரது வேற்றுமை கடந்த செயற்பாடுகள் என்னால் மறக்க முடியாத ஒரு ஆனந்த அனுபூதியாகும்.
Note - இந்தப் பதிவிலுள்ள படங்கள் யாவும் சுவிஸ் நாட்டின் படங்களே! முன்னைய பதிவிலுள்ளவை எமது மாவட்டத்திலுள்ள படங்கள்!

No comments: