ஜனநாயக வழிமுறைகளினூடான தமிழர்களின் உரிமைப் போராட்டம் வெற்றியளிக்காததின் காரணமாக, எமது உரிமைகளை, ஆயுத முறையின் மூலம் நாம் பெற முற்பட்டதின் விளைவாக, எம்மிடம் இருந்த உரிமைகளையும் இழந்து நிற்கின்றோம். அதிலும் குறிப்பாக வன்னியில் இருந்து, கடும் மோதலுக்கு மத்தியில் தப்பிவந்த எமது மக்கள், ஆடு மாடுகளைப் போல் சிறிய இடத்தில், மிகச்சிறிய கூடாரத்தில் கடும் வெய்யிலுக்கு மத்தியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் நாம் பல ஆயிரக்கணக்கான உயிர்களையும், பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது உடல் உறுப்புக்களை, பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் இழந்து அகதிகளாக பரிதாப நிலையில் இருக்கின்றோம்.
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு இனியாவது இந்தியா இதய சுத்தியுடன் செயற்படவேண்டும். விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக தமிழ் மக்களை ஒருபோதும் பழிவாங்க எண்ணக்கூடாது. இணைந்த வடகிழக்கில் இந்திய முறையிலான தீர்வை அமூல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோதலினால் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் தத்தமது சொந்த இடத்தில் காலம் தாமதிக்காது மீள்குடியேற்ற வேண்டும். அத்துடன் அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்கவேண்டும்.
நிராயுதபாணியாக்கப்பட்ட போராளிகளை சமூகத்தில் வாழ்வதற்கான முறையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் அனைத்து ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் முற்றாக களையப்பட்டு, ஆயுத அடக்கு முறைக் கலாச்சாரத்தை ஒழித்து, தமிழ் மக்கள் அச்சமின்றி வாழும்; முழுமையான ஜனநாயக சு10ழல் உருவாக்கப்பட வேண்டும.;
எமக்குள் நாமே அதிகாரப் போட்டியும், பதவி வெறியும் மற்றும் யார் முதன்மையானவர் என்ற போட்டியில் பிளவு பட்டிருக்கும் தமிழ் தலைமைகள் இனியாவது பகைமையை மறந்து மனது விட்டுக் கூடிப்பேசி எமது இனப் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு பொதுத்திட்டத்தில் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.
தமிழ் மக்களின் பொருளாதாரத்தை எவ்வளவு அழித்தாலும் இன்றும் நாம் ஓர் அளவிற்கேனும் நிமிந்து நிற்பதற்கு முக்கிய காரணம் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எம் சகோதரர்களே. தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட, இவர்களும் பக்க சார்பற்ற முறையில், ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடவேண்டும்.
எனவே அனைத்து தமிழ் தலைவர்களும், மக்களும் ஜனநாயக வழிமுறைகளினூடாக ஒருமித்து ஏகோபித்த குரலில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்பட, அரசிடமும் மற்றும் சர்வதேச சமூகத்திடமும் உறுதியாக வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
வாழ்க தமிழ்
நன்றி,
தி. சுரேஷ்.
06-07-2009
Monday, July 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment