இந்தச் செய்தி 21.07.1997இல் எழுதப்பட்டது. இதுவரை எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை.
செய்தி
ஆசிரியர் அவர்களுக்கு,
பொருத்தமான தலையங்கத்தை தாங்களே இடுங்கள்.
நன்றி.
கிழக்கின் விடிவெள்ளிகளான திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. அ. தங்கத்துரை அவர்களும் ஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப் அவர்களும் கொலை செய்யப்பட்டமையால் திருமலை மாவட்டமே சோகத்தில் - இல்லை மனிதாபிமானமுள்ள அனைவரது மனங்களிலுமே இனம்புரியாத கவலையும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. 15 நாட்கள் இடைவெளியில் மக்கள் பிரதிநிதியும் அப்பாவிப் பொதுமக்களும் - இரு சம்பவங்களிலும் ஆறு ஆறுபேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது சிரேஷ்ட செயலார்வமிக்க இனமத பேதமில்லா முக்கியமான தலைவர்களைத் தனித்தனி இழந்து நிற்கிறது. திரு. தங்கத்துரை அவர்களும் இரு பாடசாலை அதிபர்கள் ஒரு துணை அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர் கட்டிடப் பொறியியலாளர் ஆகிய அறுவரும் 5.7.97 சனிக்கிழமை திருமலை நகரில் குண்டுவெடிப்பில் பலியானார்கள். 20.7.97 ஞாயிற்றுக்கிழமை ஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப் அவர்களும் அவரது மெய்ப்பாதுகாவலர் பாடசாலை அதிபர் சாரதி நண்பர் சாரதியின் 3வயதுக் குழந்தை ஆகிய அறுவரும் காலை 10.30 மணியளவில் திருமலை 6ஆம் கட்டையில் படுமோசமாகச் சுட்டும் பின் வாளால் வெட்டியும் கொல்லப்பட்ட கொடுரமான சம்பவம் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.திரு. தங்கத்துரை அவர்கள் கொலைசெய்யப்பட்ட மறுதினம் ஞாயிறு மதியமளவில் திரு. அஸ்வர் பா.உ அவர்களும் திரு. மஹ்ரூப் பா.உ அவர்களும் கூட்டணிக் காரியாலயத்திற்கு வந்து தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களிடம் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து அனுதாபப் புத்தகத்தில் தமது அனுபவங்களையும் கருத்துக்களையும் எழுதி கையொப்பமிட்டுச் சென்றார்கள். 9.7.97 புதன்கிழமை இறுதி ஊர்வலத்திற்கு முன் இடம்பெற்ற இரங்கல் நிகழ்வின்போதும் மஹ்ரூப் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். கட்சிச் சார்பில்லாமல் எல்லோருக்கும் உதவி செய்யும் அவரது இயல்பான தன்மைகளைக் குறிப்பிட்டுப் Nசினார். பாராளுமன்றத்திலும் திரு. தங்கத்துரையின் மறைவு குறித்துப் பாராளுமன்றம் ஒத்திப் போடப்பட்டது. ஆனால் திருமலைப் பாடசாலைகள் அவருக்கு அஞ்சலிக்காக மூடப்படவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
திரு. மஹ்ரூப் அவர்களின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தவர்களுக்கும் அவர் இழப்பால் தவிக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கும் அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன்
சமாதானம் நீதி உண்மை விட்டுக்கொடுக்கும் பரிந்துணர்வு கொண்ட ஒரு சிலர் கோரக் கொலைபுரிபவர்கள் மத்தியில் தொடர்ந்தும் உண்மைகளை உள்ளபடி சொல்லி – தர்மம் தலைகாக்க செயற்படுவார்கள் என்று கூறி நிறைவு செய்கின்றேன்.
தங்க. முகுந்தன்
தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகம்
கொழும்பு – 5.
Tuesday, July 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment