அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, July 30, 2009

கொலை - மகா பாதகச் செயல் - இதனை ஆதரித்த குற்றத்துக்கு தண்டனை பெறும் தமிழர்கள்! செல்வாவை அடகு வைக்கிறார்கள் சம்பந்தனும் மாவையும் - இறைவா இது நியாயமா?

ஏகப் பிரதிநிதிகள் என்ற ஒரு கோஷத்திற்கு - எந்த உயிரையும் நிந்திக்காத ஈழத்துக் காந்தியின் பெயரையும் அவரது கட்சியையும் அடாத்தாக தம் வசமாக்கிய மாவையரும் - சம்பந்தரும் செய்த பாவச் செயலின் தண்டனைதான் தற்போதைய தமிழ்மக்களின் முட்கம்பிக்கிடையிலான அவல வாழ்க்கை. இதை தெரிந்து பிழைவிட்ட அனைவருமே ஏற்றுக் கொள்ள வேண்டும். எமக்கு மேற்பட்ட சக்தியிலேயே நாம் ஏக உரிமை கொண்டாட முடியாத நிலையில் அறிவற்ற - சிந்தனை சக்தியில்லாத மனிதரை - காகத்தைச் சுடும்போல் சுட்டுக்கொல்லும் ஒரு பயங்கரவாதி இயக்கத்தை முன்னெடுப்பதிலேயே அவர்கள் எவ்வளவு போட்டியாக செயற்பட்டார்கள்.
புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளென்று ஏற்றுக் கொள்வதில் மறுபேச்சுக்கு இடமில்லை - எந்தக் கனவானும் மறக்க முடியாது என்கிறார் சம்பந்தர் என்ற 9.9.2003 தினக்குரல் செய்தி வந்ததும் அந்த முட்டாள் மனிதருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்குப் பின்னரும் 2 கடிதங்கள் எழுதினேன். எந்தப் பதிலுமில்லை. ஒரு கட்சியின் அலுவலகத்தில் பணிபுரிந்த - ஒரு கட்சியின் உறுப்பினன் - ஒரு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் என்ற எந்த விதமான அருகதையும் எனக்குத் தேவையில்லை - அட உண்மையை எழுதுகிறானே அவனுக்கு ஒரு பதில் என்று ஒரு சாதாரண மனிதனாக என்னை நினைத்து எழுதியிருக்கலாம் பாவம் தவறி விட்டார்.
அது நடைபெற்ற பிறகு புலிகளின் மற்றைய ஊதுகுழல்களான மறைந்த ஜோசப் மற்றும் சந்திரநேரு போன்றோர்(அவர்கள் அமரரானாலும் உண்மையை எழுதுவதற்காக அவர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது) புலிகளின் பணிப்பிற்கமைய கட்சித் தலைவர் திரு. ஆனந்தசங்கரியை தலைவர் பதவியிலிருந்த நீக்க மாவட்ட ரீதியாக கிளைகளைக் கொண்டு தீர்மானம் எடுத்தனர். 30.11.2003 கூட்டம் பலத்த சர்ச்சையில் முடிவடைந்த மறுநாள் - தாமும் பதவி விலகுவதாகவும் அவரையும் பதவி விலகும்படியும் சம்பந்தனும் ஜோசப்பும் கலந்து ஆலோசனை செய்திருக்கிறார்கள். விடாப்பிடியாக தமது பிழை என்ன என்று கேட்டு தமது நிலையில் உறுதியுடன் இன்றுவரை தனித்து நிற்கும் சங்கரியின் உறுதி எங்கே? பதவிக்காகவும் தமது தெளிவற்ற அரசியல் நிலைப்பாடுகளாலும் மக்களை நட்டாற்றில் விட்ட அந்த மரமண்டைகள் எங்கே? எனக்கு வரும் கோபத்திற்கு இதை எழுதவேண்டியவனாக இருக்கிறேன். அரசையோ அல்லது இந்த ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டமைப்பையோ யாரும் நம்பாதீர்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள். தமது சக பாராளுமன்ற உறுப்பினரே கைது செய்யப்பட்ட நிலையில் தமக்கு வாழ்வழித்த மக்கள் கழிப்பறைக்கச் செல்லவும் -வாழ்வாதாரத்தின் முக்கிய தேவையான நீருக்கும் வரிசையில் நிற்கும் நிலையில் அம்மக்களிடம் வாக்குகளைப் பெற்று சொகுசாக கொழும்பில் அதுவும் பாதுகாப்புடன் திரியும் இந்த ஜடங்களின் பேச்சை - இனியாவது கொஞ்சம் யோசித்து உங்கள் முடிவுகளைத் தீர்மானியுங்கள்! - அனுபவமுடைய தமிழ் மக்களே! என்பதே எனது பகிரஙக வேண்டுகோள்.

No comments: